அமெரிக்க அதிபரின் பெயரில் ஓர் இந்தியக் கிராமம்!
கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று மரணமடைந்தார் ஜிம்மி கார்ட்டர். அமெரிக்காவின் 39வது அதிபராக, 1977லிருந்து 1981ம் வருடம் வரை இருந்தவர் இவர். அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிக காலம் உயிர் வாழ்ந்த அதிபரும் இவரே. ஆம்; ஜிம்மி மரணமடையும்போது அவரது வயது 100. நூறு வயதைத் தொட்ட முதல் அமெரிக்க அதிபரும் ஜிம்மிதான். அதிபர் பதவிக்குப் பிறகு, ‘கார்ட்டர் சென்டர்’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, மனித உரிமைகளுக்காக பணியாற்றினார். இதற்காக 2002ம் வருடம் ஜிம்மிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. விஷயம் இதுவல்ல. அமெரிக்காவில் கார்ட்டரின் பெயரில் ஊர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் கார்ட்டரின் பெயரில் ஒரு கிராமமே இருக்கிறது. அவரது மரணத்துக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் அந்த கிராமம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர், கார்ட்டர்புரி.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் மாவட்டத்தில் அமைந்திருந்தது, தௌலத்பூர் நஸிராபாத் எனும் கிராமம். ‘பீஸ் கார்ப்ஸ்’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார் ஜிம்மியின் அம்மா லிலியன். இந்த அமைப்பின் சார்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்குப் பயணம் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது லிலியனின் வழக்கம். குறிப்பாக இந்தியாவுக்கு அடிக்கடி வருகை தந்தார். இப்படி 1960களில் தௌலத்பூருக்கு வருகை தந்த போது, அந்த ஊருக்கும் லிலியனுக்கும் இடையில் பெரிய பிணைப்பு உண்டானது. ஊரைப் பற்றித் தனது மகன் ஜிம்மியிடம் சொல்லியிருக்கிறார் லிலியன். ஜிம்மிக்கும் தௌலத்பூருக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு விருப்பமாகவே மாறிவிட்டது.
ஜனவரி 3, 1978ல் தௌலத்பூருக்கு வருகை தந்தார் ஜிம்மி. அந்த கிராமத்துக்கு முதல் தொலைக்காட்சிப் பெட்டியைப் பரிசாகக் கொடுத்ததோடு, மக்களுக்கு வேண்டிய பண உதவியையும் செய்தார் ஜிம்மி. கிராம மக்களும் கார்ட்டருக்குப் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.
கார்ட்டரின் வருகையைக் கௌரவிக்கும் விதமாக, தௌலத்பூரின் பெயர் கார்ட்டர்புரி என்று மாற்றப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஜனவரி 3ம் தேதியும் கிராமத்தினருக்கு விடுமுறை நாள். கார்ட்டர் அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு, கிராமத்தினருடன் கடிதப் போக்குவரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ட்டரின் வருகையின்போது, அவரைப் பார்ப்பதற்காக பக்கத்துக் கிராமங்களிலிருந்து 5 ஆயிரம் பேருக்கும் மேல் வந்திருந்தனர். கார்ட்டரின் பிறந்த நாள் உட்பட அவரது வாழ்வின் முக்கிய நாட்களைத் திருவிழா போல கார்ட்டர்புரியினர் கொண்டாடுகின்றனர். கார்ட்டரின் வருகையை நேரில் பார்த்தவர்கள் கூட இன்றும் அக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் தங்களின் பேரன், பேத்திகளுக்குக் கார்ட்டரின் வருகையை ஒரு கதை போல சொல்கின்றனர்.
இப்படி கார்ட்டரின் வருகை ஒரு கதையாகவே மாறிவிட்டது. கார்ட்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததை பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். அமெரிக்காவில் கூட அப்படியொரு கொண்டாட்டம் இந்திருக்காது. சமீபத்தில் கார்ட்டர் இறந்த போது, தங்களின் குடும்ப உறுப்பினர் மரணித்ததைப் போல துக்கம் அனுசரித்தனர் காட்டர்புரி மக்கள்.
த.சக்திவேல்
|