புலிகள் காப்பக ரோந்துப் பணியில் பெல்ஜியன் மெனாய்ஸ் நாய்கள்!
போலீஸ், இராணுவத்தில் நாய்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. குறிப்பாக கொலை, கொள்ளை நடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதை படங்களிலும் நேரிலும் நாம் பார்த்திருக்கிறோம். அதுமட்டுமின்றி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டால் உடனடியாக அந்த இடத்திற்கு சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுவதும் வழக்கம்தான்.
இதற்கெல்லாம் ஒரே காரணம் நாய்களுக்கு அதிகமாக மோப்ப சக்தி இருப்பதுதான். இதனாலேயே இந்தப் பணிகளில் நாய்கள் காலம் காலமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இப்படி வெடிகுண்டு, கொள்ளை, கொலை சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் வனத்துறையிலும் நாய்களின் பங்களிப்பு முக்கியமாக மாறியுள்ளது.
ஆம். இதன் ஒருபகுதியாக வனத்துறையில் பயிற்சி பெற்ற நாய்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட வட இந்தியாவுக்கு நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன; வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சார்பில் முதன் முறையாக வனத்துறையில் ஈடுபடவிருக்கும் நாய்களுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இதற்கென சிறப்புப் பயிற்சி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முதற் கட்டமாக ஒரு வருடத்தில் 10 முதல் 12 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். வருங்காலங்களில் கூடுதலாக பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
இந்தப் பயிற்சி மையத்தில் நாய்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது? கர்நாடக வனத்துறை அதிகாரியும் மைசூரு புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைமை அதிகாரியுமான டாக்டர் பி.ரமேஷ்குமார் ஐ.எப்.எஸ் விளக்கத் தொடங்கினார். ‘‘நமது காட்டுப்பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. குறிப்பாக புலிகள் அதிகம் வசிக்கின்றன. மட்டுமல்ல... யானைகளும் அதிகம் உள்ளன.
சாதாரணமாக எந்தக் காடுகளில் புலிகள் அதிகம் காணப்படுகிறதோ, அந்தப் பகுதிகளில் மான் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படும். அந்த காடுகள் வளமாகவும் காட்சி யளிக்கும்.இதன் காரணமாக மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகளின் தோல், இறைச்சிக்காக அவற்றை வேட்டை ஆடும் கும்பலும் அதிகரித்துள்ளது.குறிப்பாக கோடைகாலங்களில் வேட்டை கும்பலின் நடவடிக்கை அதிகரிக்கிறது. அடர்ந்த காட்டிற்குள் நுழையும் வேட்டைக் கொள்ளையர்கள் யானைகளையும் விட்டு வைப்பதில்லை. அவற்றையும் தந்தம் உள்ளிட்டவற்றுக்காக வேட்டை யாடுகின்றனர்.
இது போன்ற செயல்களைத் தடுப்பது எங்களுக்கு சவாலாக இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து கொள்ளையர்களைத் தடுத்து வன விலங்குகளை காக்கும் பணியில் அர்ப்பணிப்பு மனதுடன் ஈடுபட்டு வருகிறோம்.தினந்தோறும் ரோந்து சென்று, வன நண்பர்கள் குழுவினருடன் கலந்துரையாடி அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலும் அளித்து வருகிறோம். அப்படி இருந்தாலும் வன விலங்குகள் வேட்டையை 100 சதவீதம் தடுக்க முடியவில்லை.
எனவே, ரோந்துப் பணியில் ஈடுபடும் வனக் காவலர்களுக்கு உதவியாக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரோந்துப் பணியில் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு வட இந்தியாவில் இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுவந்தன.இதற்காக நாய்களை வட இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது, அங்கே பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் இங்கே கொண்டு வருவது... என்பதெல்லாம் மிகவும் சிரமமாக இருந்தது.
அதுமட்டுமல்ல... அங்கே பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு நமது வனப்பகுதிக்கு அந்த நாய்கள் வந்தபின் சில நடைமுறைச் சிக்கல்களையும் சந்தித்தோம்.எனவே, கர்நாடகாவில் வனப்பணிக்காக நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். அதன்படி புதிதாக நாய்களுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது .பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் ஒரு வருடத்தில் 10 முதல் 12 நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புலித்தோல், மான் தோல், இறைச்சி கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்கும்; சந்தன மரம் கடத்துபவர்களைப் பிடிக்கவும்; எலக்ட்ரிக் ஷாக் அமைத்திருந்தால் அதை கண்டு பிடிக்கவும், காட்டிற்குள் மனிதர்களின் நடமாட்டம் இருந்தால் அதை கண்டு பிடித்து எங்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த மையத்தில் நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம். மோப்பம் பிடிப்பது மட்டுமின்றி குற்றவாளிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து அடிப்படை பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் வனக்காவலர்களுக்கு இணையாக மெனாய்ஸ் நாய்கள் செயல்படும்.
இது தவிர வெடிகுண்டு கண்டு பிடிப்பது உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளும் நாய்களுக்கு இங்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக கர்நாடக மாநிலத்திலுள்ள ஐந்து புலிகள் காப்பகத்தில் பெல்ஜியம் மெனாய்ஸ் நாய்கள் பயன்படுத்தப்படும்.
கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினர் விரும்பினால் அவர்களுக்குத் தேவையான நாய்களுக்கும் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்.மட்டுமல்ல, பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலுள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற நாய்களை தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பயன்படுத்த முடியும்...’’ என்கிறார் டாக்டர் பி.ரமேஷ்குமார். ஒன்மேன் ஆர்மி!
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மெனாய்ஸ் வகை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதற்குக் காரணம் இந்த வகை நாய்களின் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதே. அத்துடன் எந்தப் பருவ நிலையையும் எதிர்கொள்ளும் ஜெர்மன் ஷெப்பர்டுடன் ஒப்பிட்டால் பெல்ஜியன் மெனாய்ஸ் வகை நாய்கள் மிகவும் சிறப்பானதாகும். நமது கால நிலைக்கு ஏற்றவை. குட்டை முடிகளுடன் நெருங்கிப் பழகும் தன்மை உடையது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இது ஒன்மேன் ஆர்மி!
பாதுகாப்பு வசதிகள், பயிற்சி அளிக்க ஏற்ற நிலம்
காட்டிற்குள் பயிற்சி அளிக்கும்போது நாய்களின் பாதுகாப்பிற்காக தனி கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக வனவிலங்குகளால் நாய்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
அதேபோல் வனத்திற்குள் பயிற்சி அளித்த பிறகு இதற்கென தயாரிக்கப்பட்ட கூண்டில் அந்த நாய்களை பாதுகாக்கிறார்கள். 24 மணி நேரமும் இவற்றைக் கண்காணிக்க வசதியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் பந்திப்பூரில் ஏற்கனவே இருப்பதால், நாய்களுக்கான பயிற்சி மையத்தை இங்கே உடனடியாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏரல் எஸ். பட்டுராஜ்
|