உலகின் Top 10 சாப்பாட்டுக் கடைகள்!



இன்று பலரும் பல நாட்டு உணவுகளைச் சுவைக்க ஆர்வமாக உள்ளனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதில் உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு பல்வேறு நாட்டு உணவகங்கள் இந்தியாவில் கடைவிரித்துள்ளன.போலவே இந்திய உணவகங்களும் மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன. நாடு, மொழி, இனம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நாட்டு உணவுகளும் அனைவருக்கும் பிடித்தமானதாகிவிட்டது.
இந்நிலையில், ‘டேஸ்ட்அட்லஸ்’ என்கிற புகழ்பெற்ற பாரம்பரிய உணவிற்கான இணையதளம், 2024 - 25ம் ஆண்டில் உலகின் சிறந்த நூறு ரெஸ்டாரண்டுகளைப் பட்டியலிட்டுள்ளது. இதில் முதல் 15 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த உணவகங்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஐந்தாவது இடத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பாராகான் உணவகத்தின் பிரியாணியும், ஏழாவது இடத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பீட்டர் கேட் உணவகத்தின் செலோ கெபாப்பும் இடம்பிடித்துள்ளன. இதனுடன் 13வது இடத்தில் ஹரியானாவின் முர்தல் நகரிலுள்ள அம்ரிக் சுக்தேவ் உணவகத்தின் ஆலு பரோட்டா சுவை சேர்க்கிறது.

இதுமட்டுமல்ல. மட்டன் குர்மா சுவைக்காக தில்லியைச் சேர்ந்த கரீம் உணவகம் 59வது இடத்திலும், பட்டர் சிக்கன் புகழுக்காக 77வது இடத்தில் தில்லி குலாட்டி உணவகமும், உப்புமா டேஸ்ட்டிற்காக 78வது இடத்தில் மும்பையைச் சேர்ந்த ராம் ஆஷ்ரயா உணவகமும் இந்தப் பட்டியலில் உள்ளன. இதில் டாப் 10ல் வந்திருக்கும் உணவகங்களை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்.

1. ஃபிக்ல்முல்லர்

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள ஃபிக்ல்முல்லர் உணவகம்தான் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 1905ம் ஆண்டு ஜோஹன் ஃபிக்ல்முல்லர் என்பவரால் சிறிய ஒயின் ஹவுஸாக ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் உணவகமாக மாறியது. இப்போது நான்காம் தலைமுறையினர் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகின்றனர்.

இங்குள்ள, ‘வீயனர் ஷ்னிட்செல்’ என்ற உணவே உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகிறது. ஜெர்மானிய ரெசிபியான இது பன்றியின் இறைச்சி மற்றும் கோழி முட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.முப்பது சென்டிமீட்டர் அகலத்தில் பெரிதாகத் தயாரிக்கப்படும் இந்த பதார்த்தம் உருளைக்கிழங்கு சாலட்டுடன் பரிமாறப்படுகிறது. இதன் சுவைக்கு ஈடு இணை இல்லை என்கின்றனர் உணவுப் பிரியர்கள். அதனாலேயே இது முதலிடம் பெற்றுள்ளது.

2. எல்’ஆன்டிகா பிட்ஸேரியா டா மைக்கேல்

பீட்சா, இத்தாலியின் உணவு. குறிப்பாக அங்குள்ள நேப்பிள்ஸ் நகரிலிருந்து உருவானதாகச் சொல்லப்படும். அந்த நேப்பிள்ஸ் நகரில் 1870ம் ஆண்டு மைக்கேல் காண்டூரோ என்பவரால் தொடங்கப்பட்ட உணவகம், எல்’ஆன்டிகா பிட்ஸேரியா டா மைக்கேல்.

இங்கு, ‘பீட்சா மார்கரிட்டா’ எனும் நியோபாலிடன் பீட்சா உலக அளவில் புகழ்பெற்ற ஒன்று. இது இத்தாலியிலுள்ள சான் மர்சானோ தக்காளி, எருமை மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட மொஸரெல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் சுவை உணவுப் பிரியர்களுக்கு மயக்கத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.

3. ஹோப்ஃப்ராய்ஹவுஸ், மூனிச்

ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள பழமையான பீர் ஹவுஸ் ஹோப்ஃப்ராய்ஹவுஸ். இது 1589ம் ஆண்டு 5வது பவேரியா பிரபு வில்ஹெல்ம் என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் 19ம் நூற்றாண்டில் உணவகமாகவும் மாறியது.

இங்குள்ள ‘ஸ்வைன்சக்‌ஸே’ என்ற உணவு மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இது ரோஸ்ட் செய்யப்பட்ட பன்றியின் லெக்பீஸ் ஆகும். இதன் சுவைக்கு அத்தனை மவுஸ் உள்ளதாகச் சொல்கிறது ‘டேஸ்ட்அட்லஸ்’ இணையதளம்.

4. ஜினோ இ டோட்டோ சோர்பில்லோ

இதுவும் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் உள்ள ஒரு உணவகம்தான். இதுவும் பீட்சாவிற்கு பெயர்போன உணவகமே. ஆனால், இங்கு ‘பீட்சா பெஸ்டோ ஜெனோவீஸ்’ எனும் பீட்சா வகை ஃபேமஸாக இருக்கிறது. இது பெஸ்டோ ஜெனோவீஸ் சாஸுடன், மொஸரெல்லா சீஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது ஒருவகையான சுவையைக் கொடுப்பதால் பீட்சா பிரியர்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

5. பாராகான் ரெஸ்டாரண்ட்

கேரளாவின் கோழிக்கோட்டில் இருக்கிறது பாராகான் ரெஸ்டாரண்ட். இதனை 1939ம் ஆண்டு பி.எம் கோவிந்தன் என்பவர் தொடங்கினார். இது பிரியாணி மற்றும் கடல் உணவுகளுக்கு பிரபலமாக விளங்குகிறது. 

இந்த உணவகத்தின் ஐகானிக் என்பது பிரியாணிதான்.இதன் சுவைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக சிக்கன் பிரியாணியை பலரும் விரும்பி உண்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு 11ம் இடத்தில் இருந்த இந்த உணவகம் இப்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றால் இதன் சுவையை அறிந்து கொள்ளலாம்.

6. கஃபே டி டகுபா

மெக்ஸிகோ நகரில் இருக்கிறது இந்த உணவகம். 1912ம் ஆண்டு டான் டியோனிசியோ மொலினெடோ என்பவர் ஆரம்பித்தார். இங்குள்ள ‘என்சிலாடாஸ்’ என்ற உணவுப் பதார்த்தம் பலரால் விரும்பப்படும் ஒன்று.இந்த என்சிலாடாஸ் என்பது சோளத்தில் செய்யப்படும் டார்ட்டிலா எனும் ரொட்டியுடன் சிலி நாட்டின் சாஸ் சேர்க்கப்படுகிறது. 

பின்னர் அதனுடன் இறைச்சி அல்லது மீன் வகைகள் உள்ளே நிரப்பப்பட்டு அடுப்பில் சுடப்படுகிறது. பின்னர் ரோல் செய்யப்பட்டு வெங்காயம், பீன்ஸ், சீஸ் எல்லாம் வைத்து என்சிலாடாஸ் உண்பதற்குத் தரப்படுகிறது. இதற்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது டேஸ்ட்அட்லஸ் இணையதளம்.

7. பீட்டர் கேட்

இந்தியாவின் கொல்கத்தா நகரில் இருக்கிறது பீட்டர் கேட் உணவகம். இங்கு பரிமாறப்படும் ‘செலோ கெபாப்’ உணவினை ரசனையுடன் தேர்ந்தெடுக்கின்றனர் வாடிக்கையாளர்கள். காரணம், அவ்வளவு சுவை கொண்ட உணவு என்கின்றனர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த உணவு அங்கே பரிமாறப்பட்டு வருகிறது. 

இது ஈரானிய உணவு வகையாகும். ஒரு தட்டில் சோறுடன் வெண்ணெய் திட்டுகள், அரைத்த இறைச்சியைக் கொண்டு செய்யப்படும் ஷீக் ெகபாப், மட்டன் கெபாப், முட்டை ஆகியவை சேர்த்து தரப்படுகிறது.

8. காட்ஸ் டெலிகேட்டஸ்ஸன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது காட்ஸ் டெலிகேட் டஸ்ஸன் உணவகம். 1888ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தின் சிக்னேச்சர் உணவு Pastrami on rye எனும் சாண்ட்விச். கம்பு தானியத்தில் ரொட்டி செய்யப்பட்டு அதனுடன் கடுகு, வெள்ளரி ஊறுகாய் ஆகியவை சேர்த்து தரப்படுகிறது. தவிர, இறைச்சியும் வைத்துப் பரிமாறப்படுகிறது. இதனால் பலராலும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது.

9. கர்னே கரிபால்டி சாண்டா தேரே

மேற்கு மெக்ஸிகோவில் உள்ள குவாடலஜாரா நகரில் இருக்கிறது இந்த கர்னே கரிபால்டி சாண்டா தேரே உணவகம். இங்கு பாரம்பரியமான மெக்ஸிகோ உணவாக ஜொலிக்கிறது கார்னே என் சு ஜூகோ எனும் பதார்த்தம். வாயில் நுழையாத பெயர்தான். 

இதற்கு அர்த்தம் மாட்டிறைச்சி சூப் என்பதாகும்.இந்த சூப்பில் சிறிது பூண்டு, வெங்காயம், பன்றி இறைச்சி உள்ளிட்டவையும் சேர்க்கப்படுகிறது. இந்த சூப் முதன்முதலாக 1950களில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து இப்போதுவரை இதனை பலரும் ரசித்து குடித்து வருகின்றனர். இது டேஸ்ட்அட்லஸில் 9வது இடம் பிடித்துள்ளது.

10. எல் பிம்பி

ஸ்பெயினின் மலாகா நகரில் இருக்கிறது பிம்பி உணவகம். ஒருகாலத்தில் மலாகா துறைமுகத்திற்கு வந்த படகுகளின் பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் உதவிய மலாகா நகரின் பிரபலமான கதாபாத்திரமே பிம்பி.அதனை உருவகப்படுத்தும் விதமாக 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உணவகத்திற்கு பிம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு பிரிங்கா எனும் டிஷ் வெகுபிரபலம். 

இது ரோஸ்ட் செய்யப்பட்ட மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் மோர்சில்லா அல்லது சோரிஸோ சாஸ் சேர்க்கப்படுகிறது. இந்த இறைச்சி பதமான சூட்டில் நீண்டநேரம் சமைக்கப்படுவதே இதன் சுவைக்குக் காரணமாக இருக்கிறது.

பேராச்சி கண்ணன்