அண்ணன் பாடலாசிரியர்... தம்பி நடிகர்!



‘‘நாங்க ரெண்டு பேருமே இந்த இடத்திலே நிற்க காரணம் எங்க அப்பா, அம்மா... குறிப்பா எங்க அண்ணன்...’’ உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருசேர சொல்கிறார்கள் நட்சத்திர சகோதரர்களான கார்த்திக் நேதாவும் விவேக் பிரசன்னாவும். 
அண்ணன் கார்த்திக் நேதா @ கார்த்திக் பிரசன்னா, சிறுபத்திரிகை கவிஞர், திரைப்பட பாடலாசிரியர். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘வாகை சூடவா’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘நெடுஞ்சாலை’, ‘டியர் காம்ரேட்’, ‘96’ உள்ளிட்ட 80க்கும் மேலான படங்களின் பாடல் ஆசிரியர்.

‘பெஞ்ச் டாக்கீஸ்’ துவங்கி ‘சேதுபதி’, ‘இறைவி’, ‘மாநகரம்’, ‘மேயாதமான்’, ‘பேட்ட’ உட்பட 35க்கும் மேலான படங்களில் நடித்தவர் நடிகர் விவேக் பிரசன்னா.
அண்ணன், தம்பி இருவருமே தத்தம் துறைகளில் சினிமாவில் பிஸியோ பிஸி.‘‘‘ஊமை என்றால் அதிலொரு அமைதி...’ என நெஞ்சை உருக்கும் ‘மூன்றாம் பிறை’ படத்தில் ‘கண்ணே கலைமானே...’ பாடலில் வரும் வரி எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துச்சு...’’ புன்னகையுடன் பேசத் தொடங்கினார் கார்த்திக் நேதா.

‘‘அப்போ பெரிதாக உலக அறிவு கிடையாது. எட்டாம் வகுப்புல அப்ப இருந்தேன். இந்த வரிகள் ஏற்படுத்தின தாக்கம்தான் தமிழ் மேலே மேலும் ஆர்வத்தை அதிகரிக்க காரணம்.
என்னதான் சிபிஎஸ்ஈ படிப்பு, சமஸ்கிருதம்... இப்படி வாழ்க்கை போயிட்டு இருந்தாலும் தமிழ் மேல அதீத ஈடுபாடும் தேடலும் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருந்துச்சு. 

அப்போதிருந்தே நிறைய படிக்க ஆரம்பிச்சேன். தமிழ் ஈடுபாட்டுடன் சுத்திட்டு இருந்ததால் வீட்டில் டிகிரி முடிக்கணும்னு விரும்பினாங்க. குறைந்தபட்சம் பிஏ தமிழ். ஆனா, அதிலும் நான் பெரிதா ஆர்வம் காட்டலை...’’ என கார்த்திக் நேதா நிறுத்த, தொடர்ந்தார் விவேக் பிரசன்னா.

‘‘எந்த டிகிரி படிச்சா அதிகம் வெளில சுத்தலாம்னு யோசிச்சு ஜர்னலிசம் படிக்கலாம்னு நினைச்சேன். ஆனா, என் நோக்கம் மாறிக்கிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல போட்டோகிராபி மேல ஆர்வம் வந்தது. உடனே விஷுவல் கம்யூனிகேஷன்தான் நமக்கான படிப்புனு முடிவு செய்தேன். படிக்க ஆரம்பிச்சப்ப சினிமாட்டோகிராபி மேல தனி ஈடுபாடும் ஆர்வமும் வந்தது. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் விஸ்காம், பிறகு ராஜீவ் மேனன் சாருடைய இன்ஸ்டிடியூட்டில் சினிமாட்டோகிராபி கோர்ஸ் முடிச்சேன். 

பிறகு ‘நளதமயந்தி’, ‘அரவான்’ சினிமாட்டோகிராபர் சித்தார்த் ராமசாமி சார்கிட்ட சேர்ந்தேன். என்னுடைய பேட்ச் மேட்தான் இயக்குநர் ரத்னகுமார், ‘ஜெயிலர்’ படத்தின் கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன், ‘டாணாக்காரன்’ ‘அயோத்தி’ கேமராமேன் மாதேஷ் மாணிக்கம்... நாங்க எல்லாரும் சேர்ந்து சினிமாவில் வேலை பார்க்க ப்ரொஃபைல் தயார் செய்திட்டு இருந்தோம்.

அப்ப ரத்னகுமார் ஆரம்பிச்ச படம்தான் ‘மேயாத மான்’. முதன் முதலில் ஒரு முழுமையான கேரக்டர் கொடுத்தார் ரத்னகுமார். அதுக்கு முன்னாடி நண்பர்கள் ஷார்ட் ஃபிலிம் எடுக்கும்போது நடிச்சிருக்கேன்.‘மேயாத மான்’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் எல்லாமே என் நடிப்புக்காக வந்தவை. இந்தப் புள்ளில தொடங்கின பயணம்... இதோ இப்ப நடிகரா உங்க முன்னாடி நிக்கறேன்...’’ தம்பி விவேக் பிரசன்னா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் நேதா தொடர்ந்தார்.

‘‘அப்பா ரத்தினம், அம்மா ஜெயமணி. அப்பா வக்கீல், அம்மா கிராம சுகாதார செவிலியர். அரசு நர்ஸ். அப்பா, அம்மா இரண்டு பேருமே படிப்பு மேல ஆர்வம் கொண்டவங்க. அதற்கேற்ப எங்களுடைய அண்ணன் அசோக் பிரசன்னா நல்லா படிச்சு வெளிநாட்டில் வேலைல இருக்கார். அண்ணன்தான் முழுப் பொறுப்பு எடுத்து எங்க இரண்டு பேர் கனவுக்கும் பக்க
பலமா இருந்தார். எங்களுக்கு சேலம் சின்னனூர்தான் சொந்த ஊர். எங்க ஊர்ல ‘தீபம்’ என்கிற ஒரு கையெழுத்துப் பிரதி வெளியிடுவாங்க. அங்க என் மாமா உட்பட நிறைய பேர் ஒன்று சேர்ந்து ஞாயிறுல ஒரு சந்திப்பு நடத்துவாங்க.

அவர்களுடைய தமிழ் ஈடுபாடு என்னை அவர்களுடன் முழுமையா இணைச்சது. எல்லோருமே ஏதோ ஒரு தொழில் செய்துட்டு இருந்தாங்க. ஒருத்தர் பன் வியாபாரம், இன்னொருத்தர் போஸ்ட் மேன். இப்படி ஏதோ ஒரு தொழில்ல இருந்தாலும் ஞாயிறு சந்திப்பை தவறவிட மாட்டாங்க.இந்தக் கூட்டத்தில் பிரபாத் என்கிற மாமா, அருமையா ஓவியம் வரைவார். அவர் ஒரு பக்கம் ஓவியம் வரைய இன்னொரு பக்கம் அதற்கு நான் கவிதை எழுதணும்னு பயிற்சி கொடுத்தார்.

இந்தப் பயிற்சிக்கு இடைல நிறைய கவிஞர்களுடைய புத்தகங்களை வாசிப்பாங்க. ‘வானம்பாடி’ கவிஞர்களின் கவிதைகளை நிறைய படிப்போம். என்னுடைய இயல்பு மெய்யியல்னு எழுத்துப் பயிற்சில புரிஞ்சுகிட்டேன். கண்ணதாசன்ல ஆரம்பிச்சு புதுக்கவிதை எழுதற எல்லாரையும் படிக்க ஆரம்பிச்சேன். சென்னை வந்தேன். திரைப்படப் பாடலாசிரியர் என்கிற துறை இருப்பது தெரிய வந்தது. கொஞ்ச நாள் இருந்துட்டு ஊர் திரும்பிட்டேன். திரும்பவும் சின்ன இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்தேன்.

அப்ப என் ரூம் மேட்தான் நடிகர் சூரி. அவர் ஒரு சினிமா ப்ரொடக்‌ஷன் புத்தகம். எந்த ப்ரொடக்‌ஷன் கம்பெனி எங்க இருக்கு... எப்ப போனா வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்திருக்கும்னு சரியா சொல்லி என்னை அனுப்புவார்.அப்படித்தான் தாணு சார் தயாரிப்பில் இருந்த ‘தொட்டி ஜெயா’வுக்கு அனுப்பி வைச்சார். 

‘அங்கே இளங்கோனு நண்பர் இருக்கார். அவர்கிட்ட சொல்லி இருக்கேன். நீ போ’னு சொன்னார்.இளங்கோதான் படத்துக்கு வசனகர்த்தா. தொடர்ந்து இயக்குநர் துரை சார் சந்திப்பு, பிறகு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் சார் சந்திப்பு... தொடர்ந்து ‘இந்த ஊரு...’ பாடல் எழுதும் வாய்ப்பு.

இப்படியே ஆரம்பித்து ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ‘படபட...’ பாடல் அங்கீகாரத்தை கொடுத்துச்சு. நேதாஜி மேல ஈடுபாடு அதிகம். ஆனா, ‘ஜி’யை சேர்த்துக்கற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என்பதால் ‘நேதா’வை மட்டும் என் பெயருடன் சேர்த்துஎழுத ஆரம்பிச்சேன்...’’ என கார்த்திக் நேதா கண்சிமிட்ட, தொடர்ந்தார் பிரசன்னா. 

 ‘‘எனக்கு ‘சேதுபதி’ படம்தான் பெரிய அங்கீகாரம். அதுவரை நடிப்பு ஒர்க் அவுட் ஆகுமானு தெரியாம குழம்பிட்டு இருந்தேன். ‘சேதுபதி’ நல்ல வழியைக் காட்டிடுச்சு. தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வரவே நடிகரா தொடர்வதுனு முடிவு செய்தேன்.

எல்லா தயாரிப்பு நிறுவனங்கள்லயும் போட்டோஸ் கொடுத்து தேடலைத் துவங்கி சின்னதோ பெரியதோ எந்த கேரக்டரா இருந்தாலும் நடிக்க ஆரம்பிச்சேன்...’’ என விவேக் நிறுத்த, தொடர்ந்தார் கார்த்திக். ‘‘இப்ப வரை நிலையாமை குறித்து எப்படியாவது மனிதர்களுக்குள்ள மாற்றங்களை உண்டாக்கணும்னுதான் எழுதிட்டு இருக்கேன். அதாவது இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது... எதற்கும் நிலையான உருவம் கிடையாது.

இதை மனிதர்கள் இயல்பா கடந்து போகணும்னு முடிந்தவரை என் எழுத்தில் கொடுத்துகிட்டே இருப்பேன். உன்னைச் சுற்றி இப்ப இருப்பது நிஜம். இந்த நிஜத்தை மட்டும் நம்பு. ஆனா, இதுவும் நிலையானது கிடையாது. இதைத்தான் என் தம்பிக்கும் சொல்லிக்கிட்டே இருக்கேன். அவர் நடிகர். அதனால தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்க சமூக வலைத்தளத்தை பயன்படுத்தறார்.
எனக்கு அப்படியான நிலைப்பாடு கிடையாது. பெரிதாக என்னை விளம்பரப்படுத்திக்க எனக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் என் பெயரை மறந்திடுவாங்க. தம்பிதான் கூப்பிட்டு சொல்வார்.

‘உன்னை நீ ப்ரொமோட் செய்துக்கோ’னு தம்பி சொல்லிக்கிட்டே இருப்பார். என் இயல்பை தொலைச்சுட்டு அந்தச் சிக்கல்ல சிக்கிக்க எனக்கு விருப்பமில்லை...’’ என்ற கார்த்திக் நேதாவை இடைமறித்தார் விவேக். ‘‘இதுதான் எதிர்காலம், இதைச் செய்தால்தான் நமக்கான வாய்ப்புகள் தேடி வரும் என்கிற புரிதல் எனக்கு. 

அதேசமயம் அண்ணனுடைய பொறுமையும் பக்குவமும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கு. அவருடைய பொறுமை, அமைதி, தன்நிலை அறிதல்... இதெல்லாம் பார்த்து வியந்திருக்கேன். ஆனா, அந்த வாழ்க்கைக்குள்ள என்னால போக முடியாது. நாம இருக்கிறது கலர்ஃபுல் சினிமா உலகம். இங்க நம்மை நாமே கொஞ்சமாவது கலர்ஃபுல்லா வச்சுக்கிட்டா இன்னும் நமக்கான இடம் பெரிதாகும் என்பது என்னுடைய எண்ணம்.

அண்ணனுடைய பாதை வேறு. அவர் எப்போதுமே தனக்கு இன்னொரு முகம் போர்த்திக்கிட்டு வாழறதை விரும்ப மாட்டார்...’’ அண்ணனைப் பார்த்து பெருமையாக சிரித்தவாறு பேசினார் விவேக் பிரசன்னா.

‘‘நாங்க இருவருமே சேர்ந்து வியந்து பார்க்கிறது எங்களுடைய மூத்த அண்ணன் அசோக் பிரசன்னாவைத்தான். அவர்கிட்ட இருந்துதான் பொறுமையும் அமைதியும் எனக்கு வந்துச்சுனு சொல்லுவேன். அதேபோல தன்னுடைய வாழ்வியல் அடிப்படையில் தன்னை எப்படி வளர்த்துக்கணும்... இந்தக் காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க என்ன தகுதி வேண்டும்... இப்படி அத்தனையும் புரிந்து தன்னைத்தானே வளர்த்துக்கிட்டு எங்களையும் சேர்த்து வழிநடத்தி கூட்டிச் செல்பவர் அவர்தான்.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் இருக்கார். அப்பா, அம்மா, அண்ணா கொடுத்த வாழ்க்கை தான் இது. சகிப்புத்தன்மையை அவர்கிட்ட இருந்துதான் நாங்க கத்துக்கிட்டோம்...’’ என கார்த்திக் நேதா நிறுத்த, தன் திருமண வாழ்க்கை குறித்து விவேக் பிரசன்னா சொல்லத் தொடங்கினார். ‘‘எங்கள் குடும்பமே காதல் குடும்பம். சாதி மறுப்பு திருமணத்தை அப்பா துவங்கி இப்போது நான் வரை கடைப்பிடிக்கிறோம். அம்மா பெருமாள் பக்தை. அதனால ‘பிரசன்னா’ என்கிற பெயரை என் பேருல சேர்த்தாங்க. தொடர்ந்து அது குடும்பப் பெயர் மாதிரி
மாறிடுச்சு.

என் மனைவி பெயர் ராஜி விவேக் பிரசன்னா. காதல் திருமணம்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கல்லூரி நாட்களில் இருந்து என் கூட பயணிக்கும் காதலி. கம்ப்யூட்டர் துறையில் ப்ரொபஸரா இருக்காங்க. பையன் நிரஞ்சன் பிரசன்னா...’’ முகமெல்லாம் மலர சொல்கிறார் விவேக். ‘‘என் மனைவி கீதா கார்த்திக் நேதா. ஊரில் ஸ்கூல் டீச்சராக வேலை செய்தவங்க. நல்ல அறிவாளி. திருமணத்துக்குப் பிறகு குடும்பம் குழந்தை என நான் முழுமையா மாத்திட்டேன். அந்த சின்ன குற்ற உணர்வு இருக்கு எனக்கு. சீக்கிரம் அவங்களை மீண்டும் ஆசிரியராக பார்க்கணும். அதற்கான முயற்சியும் செய்துட்டு இருக்கேன்.

அவங்களும் கவிதை, கதைகள் எழுதக்கூடியவங்க. வீட்டில் நான்தான் கடைசியாக திருமணம் செய்துகிட்டேன். நிலையாமை குறித்து நிறைய யோசிக்கறதால திருமணம் வேண்டாம்... யாரையும் இழந்து தவிக்கக்கூடாது என்கிற மனநிலையில் இருந்தேன். பிறகு காதல், திருமணம்... இப்படி வாழ்க்கை மாறிடுச்சு. என் பையன் பெயர் குரு மௌனி பிரசன்னா. அசோக் அண்ணன் குழந்தைகள் பெயர் கபிலன் பிரசன்னா, அகிலன் பிரசன்னா.

அம்மா எந்த அளவுக்கு பெருமாள் பக்தையோ... அதே அளவுக்கு அப்பா பெரியார் ஆர்வலர். கருத்தியல்ல இருவருமே இருவேறு துருவங்களா இருந்தாலும் அவங்களுக்குள்ள இருந்த காதல் இப்ப வரைக்கும் அப்படியே இருக்கு...’’கார்த்திக் நேதா முடிக்க, அண்ணனைக் கட்டி அணைத்தார் விவேக் பிரசன்னா.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்