டாக்டர் to நடிகை Via சோஷியல் மீடியா!
சோஷியல் மீடியா கொடுத்த புகழ் வெளிச்சத்தில் சினிமாவுக்கு வந்தவர் பாடினி குமார். சோஷியல் மீடியாவில் பல லட்சம் பேர் பின்தொடருமளவுக்கு பிரபலமானவர். இப்போது நட்டி நடராஜ் நடித்து வெளிவந்துள்ள ‘சீசா’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அடிப்படையில் கார்டியோ டெக்னாலஜிஸ்ட்டான இவர் சினிமா மீதான பேஷன் காரணமாக மருத்துவத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். படத்துக்கான வரவேற்பு பாசிட்டிவ்வாக கிடைத்த நிலையில் பாடினி குமாரிடம் பேசினோம். பதினெட்டு பேர் சேர்ந்து உங்களுக்கு பேர் வெச்சதாக சொல்றாங்களே?
பாடினி என்பது தமிழ் புலவியின் பேர். ‘காக்கைப் பாடினியார்’ என்பவர் சங்க கால பெண்பால் புலவர்களில் ஒருவர். ஒட்டக்கூத்தனார், ஒளவையார் காலத்தில் அந்தப் பெயர் பரவலாக அறியப்பட்டது. ‘மாணவர் நகலகம்’ அருணாச்சலம் ஐயா தலைமையில் பதினெட்டு தமிழ் அறிஞர்கள் சேர்ந்து எனக்கு பேர் வெச்சாங்க. அப்பா, அம்மாவுக்கு தனித்துவமாக பேர் வைக்கணும்னு ஆசை. நாங்கள் சாதி, மதம் பார்ப்பது கிடையாது என்பதால் அப்பா பேரை இணைத்துக்கொண்டேன். இதய சிகிச்சை நிபுணர் எப்படி நடிகையாக மாறினார்?
சின்ன வயசுலேர்ந்து நடிகையாக வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்துச்சு. அதைவிட ஏரோ ஸ்பேஸ் என்ஜினியர் ஆகணும் என்பதுதான் என்னுடைய மிகப் பெரிய ஆசையாக இருந்துச்சு.
அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரளவுக்கு படிக்கும் மாணவி என்பதால் மருத்துவம் சார்ந்து படிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.அப்படி கார்டிேயா டெக்னாலஜி படிச்சேன். இது அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவுல வரும். இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்புதான் இந்தப் படிப்பை கொண்டு வந்தாங்க. சினிமா மீது ஆர்வம் இருந்ததால் சினிமா சான்ஸ் தேட ஆரம்பிச்சேன். நான் நினைச்ச மாதிரி அவ்வளவு சீக்கிரத்துல வாய்ப்பு அமையல. பல இடங்களில் அடிபட்டு, கஷ்டப்பட்டுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்.என்னுடைய முதல் கேமரா அனுபவம் என்றால் கேமராமேன் பாலு சார் தயாரிச்ச ‘திருமணம்’ என்ற சீரியல். கதாநாயகியா நடிச்ச படம் ‘டேக் டைவர்ஷன்’.
அந்தப் படத்துக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கம்பெனிகளின் ஆடிஷனில் கலந்துகிட்டேன்.
ஆனால், ஒரு படத்திலும் எனக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. அதுல ஒரு நன்மையும் இருந்துச்சு. ஆடிஷன்லதான் நான் ஆக்டிங் கத்துக்கிட்டேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் எங்கும் ஆக்டிங் கத்துக்கவில்லை. நட்டியுடன் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?
‘சீசா’ பட வாய்ப்பும் தேடல் வழியாக கிடைச்சதுதான். இயக்குநர் குணா சுப்பிரமணியம் சாரிடம் என்னுடைய சில இன்ஸ்டா ரீல்ஸை காண்பிச்சேன். என் மேல நம்பிக்கை வெச்சு வாய்ப்பு கொடுத்தார். படத்துல வந்த மாளவிகா கேரக்டர் என்னுடைய முதல் படத்தைவிட முற்றிலும் வித்தியாசமான கேரக்டர். ஏனெனில், முதல் படத்தில் ஜெனிலியா பண்ணும் சில துறுதுறு ரோல்களைவிட பத்து மடங்கு அதிகமா இருந்துச்சு. ஓவர் ஆக்டிங்ன்னு சொல்லுமளவுக்கு பெர்ஃபாமன்ஸ் காட்ட வேண்டிய ரோல்.
‘சீசா’வைப் பொறுத்தவரை சீரியஸான கேரக்டர். மன நலம் பாதிக்கப்பட்ட கணவனை ஹேண்டில் பண்ணணும். நட்டி சாருடன் புரொமோஷன் சமயத்தில்தான் பழக முடிஞ்சது. நட்டி சார் பெரிய கேமராமேன், சிறந்த நடிகர் என்று பேர் வாங்கியவர். ஆனால், அவரிடம் பந்தாவுக்கு இடமிருக்காது. மிக எளிமையான அணுகுமுறை கொண்டவர். எனக்கு ஜோடியாக நடிச்ச நிஷாந்த் ரூசோவும் பழகுவதற்கு இனிமையானவர். இப்போது ‘ஹார்ட் பீட் 2’, ‘வேற மாதிரி ஆபீஸ் 2’னு இரண்டு புதிய வாய்ப்புகளுடன் இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியாக துவங்கியிருக்கு.
எந்தத் துறையில் பேர் வாங்கணும்னு நினைக்கிறீங்க?
மெடிக்கல் என்னுடைய குடும்பத்துக்காக செலக்ட் பண்ணி படிச்சது. சினிமா என்னுடைய ஆல் டைம் விருப்பம். அப்பாவுக்கும் சினிமா பிடிக்கும். என்னுடைய கனவு அப்பாவின் கனவுடன் இணைந்துபோனதால சினிமாவுக்கு வர முடிஞ்சது.அந்த வகையில் நல்ல நடிகை என்று பேர் வாங்குவதுதான் என்னுடைய லட்சியம். அதே சமயம் நான் படிச்ச படிப்புக்கு நியாயம் சேர்க்கும்விதமா அந்தத் துறையிலும் பேர் வாங்கணும்.
சோஷியல் மீடியாவில் எதைப் பற்றி அதிகம் பேசுவீங்க?
சோஷியல் மீடியா நல்ல தளம். நம் கருத்துக்கள் மக்களிடம் சேரும் என்ற நிலையில் அதை யூஸ் பண்ணலாம். நிறைய சமயங்களில் எதிர்பார்க்குமளவுக்கு ரீச் கிடைக்காது. ஃபன்னியாக ரீல்ஸ் போடும்போது அதற்கு ரீச் கிடைக்கும். என்னுடைய வீடியோவைப் பொறுத்தவரை பல லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்பதால் சமூக பொறுப்போடு அவசியமான வீடியோக்களைப் போடுவேன்.
மருத்துவம் சார்ந்து பல வீடியோக்களைப் போட்டுள்ளேன். சினிமா சார்ந்தும் சில வீடியோக்கள் ஷேர் பண்ணியுள்ளேன். பெண்கள் எப்படி கடினமாக உழைக்கிறார்கள் என்பதை சொல்லும் விதமாக நிறைய வீடியோக்கள் ஷேர் பண்ணியுள்ளேன். ஒரு துறையை மட்டும் சார்ந்தில்லாமல் இன்னொரு துறையிலும் பெண்களால் இயங்க முடியும் என்பதை என் வழியாக கற்றுக்கொண்டதாக பல பெண்கள் கமெண்ட்ஸ்ல சொல்லியிருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்குமளவுக்கு நான் இன்னும் வரவில்லை என்றாலும் வேறு ஒரு துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பது சிலருக்கு உத்வேகம் கொடுத்திருப்பதை அறியும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு.
எந்த ஹீரோவுடன் ஸ்கிரீன் ஷேர் பண்ணணும்னு ஆசையா இருக்கீங்க?
நல்ல கேரக்டர் வரும்பட்சத்தில் எந்த நடிகர் நடிக்கிறார் என்று பார்க்காமலேயே நடிக்கலாம். ஒவ்வொரு நடிகைக்கும் கனவு நாயகன் என்று ஒரு நடிகர் இருப்பார். அப்படி என்னுடைய கனவு நாயகனாக விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களைச் சொல்லலாம். கமல் சார் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும்.
நடிக்க விரும்பும் கேரக்டர்?
என்னுடைய குறுகிய வட்டத்திலிருந்து விலகி நடிக்கணும்னு நினைக்கிறேன். சில இயக்குநர்கள் இது கஷ்டமான கேரக்டர், இந்த நடிகையைத்தாண்டி வேறு யாரையும் யோசிக்க முடியலை என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி சவாலான கேரக்டரை எடுத்துப் பண்ணணும்னு நினைக்கிறேன்.
புது வருட சபதம் எதாவது?
பாடினி என்றால் சிலருக்கு தெரியும். இந்தப் பேரை நேஷனல் அளவுக்கு தெரியப்படுத்தணும். பான் இந்திய நடிகையாக, எல்லோராலும் அறியப்பட்ட நடிகையாக வரணும் என்பதுதான் புத்தாண்டு சபதம். அதுமட்டுமல்ல, என்னுடைய கனவு ரொம்ப பெருசு. எனக்கு விருது வழங்கப்படுகிறது என்றால் அடுத்து அதைவிட உயர்ந்த விருது எதுவோ அதை அடையுமளவுக்கு என்னுடைய தேடல் இருக்கும்.
சினிமாவுல உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?
நிறையப் பேர் இருக்கிறார்கள். சின்ன குழந்தையிடமிருந்தும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்வேன்.
உங்களைப் பற்றி அறியாத சீக்ரட்?
நான் திறந்த புத்தகம். கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்தால் மொத்த உண்மையையும் சொல்லிவிடுவேன்.
ஆண்களிடம் பிடிச்சது?
அமைதியாக அதே சமயம் உரிமையுடன் கேர் எடுக்கும் ஆண்களைப் பிடிக்கும். ஆட்டிடியூட் ஆண்களைப்பிடிக்காது.
எஸ்.ராஜா
|