பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள்..!



செய்தித்தாள்கள், டிவி செய்திகள் என எதைப் புரட்டினாலும் பெண்கள் மீதான அடக்குமுறை, வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட செய்திகளாகத்தான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு கிராமம் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. 
ஆம். பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நட்டு பெண் குழந்தை பிறப்பை கொண்டாடுகிறது அந்தக் கிராமம். அதுமட்டுமா... இன்னும் நிறைய ஆச்சர்யங்களைக் கொண்டு தனியாக என்பதைக் காட்டிலும் தனித்துவமாக செயல்படுகிறது அந்த மொத்த கிராமமும்.

ராஜஸ்தான் மாநிலம் தெற்குப் பகுதியில் ராஜ்சமந்து நகரத்தை ஒட்டிய கிராமம்தான் பிப்லாந்திரி. நகரமயமாக்கலுக்கு சற்றும் ஒட்டாத ஒரு குக்கிராமம். ஆனால், அனைத்திலும் இந்தியாவின் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாக தங்கள் கிராமப் பெண்களை கையைக் கொடுத்துத் தூக்கிவிட்டு தானும் ஏறிச் சென்று கொண்டிருக்கிறது. 

மொத்தம் 21 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில் எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தை பிறப்பை 111 மரங்கள் நட்டு வரவேற்கிறார்கள். அந்த மரங்களை நடவேண்டியது அக்குழந்தையின் வீட்டார் பொறுப்பு.

தொடர்ந்து ஊர் மக்களிடம் தலைக்கு ரூ.1 வீதம் ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்பட்டு அத்துடன் பெண் குழந்தையின் தந்தையிடம் ரூ.10 ஆயிரம் பெற்று நிலையான கணக்காக வங்கியில்
வைக்கப்படுகிறது. அந்தப் பெண் குழந்தைக்கு வைக்கப்படும் பெயர்தான் அந்த மரங்களுக்கும் வைக்கப்படும். வங்கிக் கணக்கில் வைக்கப்படும் தொகையுடன் பெற்றோர்கள் கூடுதலாக வேண்டுமானால் பணம் போடலாம். 

ஆனால், குழந்தையின் 20 வயதுக்கு முன்  பணத்தை எடுக்க முடியாது. இந்தப் பணம் பெண்ணின் எதிர்கால பொருளாதாரத்திற்காக வைப்பு நிதியாக பராமரிக்கப்படுகிறது. பணம் காரணமாக எந்த நிலையிலும் அந்தப் பெண் வாழ்வில் தடுமாறக் கூடாது என்பதே அக்கிராமத்தின் குறிக்கோள். இது அத்தனையும் துவங்கியது ஷியாம் சுந்தர் பலிவால் என்னும் ஒற்றை மனிதரால்.  

ஷியாம் சுந்தர் பலிவால், பிப்லாந்திரி கிராமத்தின் முன்னால் பஞ்சாயத்துத் தலைவர். 2006ம் ஆண்டு அதீத வறட்சி காரணமாக நிலத்தடி நீர் 700 மீட்டருக்கும் கீழ் சென்றதில் கிராமம் முழுக்க தண்ணீர் பஞ்சம். எங்கு பார்த்தாலும் தண்ணீர் இல்லாமல் மரண ஓலங்கள். 

அதில் உடலின் நீரிழப்புகாரணமாக ஷியாம் சுந்தர் பலிவால் தனது மகளையும் வறட்சிக்குப் பலி கொடுக்கும் சூழல் உண்டானது. தன் மகள் கிரண் நினைவாகத் துவங்கியதே இந்தச் செயல்பாடு. அன்றிலிருந்து கிராமத்தில் எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும் மொத்த கிராமமும் பெண் குழந்தையையும் உடன் சூழலையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.

இப்படி உருவான நடைமுறையால் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் மரங்கள் நட்டு தங்கள் கிராமத்தை ஒரு சோலையாகவே மாற்றியிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மேலும் கிராமத்தில் ஏதேனும் ஒரு பெண் இறந்தால் அதற்கும் 11 மரங்கள் நட்டு பூஜை செய்கிறார்கள் பிப்லாந்திரி மக்கள். 

அந்த ஊர் முழுக்க கற்றாழைச் செடிகளும் காடு போல் வளர்ந்திருப்பதையடுத்து மொத்த ஊர் பெண்களும் அதைக் கொண்டு கற்றாழை ஜெல், ஜூஸ், அழகு சாதன சோப்புகள் உட்பட தயாரித்து கிராமத்தின் பொருளாதாரத்திலும் உதவுகிறார்கள்.

‘‘என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னமும் இந்திய மக்கள் பலரிடமும் ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அதை ஒழிக்கவே எங்கள் கிராமம் பெண்களுக்கான பல திட்டங்களைச் செய்து வருகிறது...’’ என்கிறார் ஷியாம் சுந்தர் பலிவால். 

எந்த பெண்ணும் சட்டப்படியான வயதை எட்டும் முன் திருமணம் செய்து வைப்பதையும் தடை செய்திருக்கிறது பிப்லாந்திரி கிராமம். மேலும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் படிப்பை படித்து முடிக்கவும் ஆவன செய்து கொடுக்கிறார்கள்.

இந்தக் கிராமத்தில் பெண்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். எந்த நேரமும், எக்காலத்திலும் அவர்கள் ஊரில் நடமாட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு யாரேனும் ஆபத்து விளைவித்தால் தண்டனைகளும் கடுமையாகக் கொடுக்கப்படுகின்றன. வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கிராமத்தில்.

ஷியாம் சுந்தரின் இத்தகைய செயல்களை இந்திய அரசு பாராட்டி 2021ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மேலும் ‘சுற்றுச் சூழல்- பெண்ணியத்தின் தந்தை’ (Father of Eco-Feminism) எனகௌரவ பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் ஊரக வளர்ச்சித் திட்டத்திலும் மாடல் கிராமமாக இந்த பிப்லாந்திரி கிராமம் இடம் பிடித்திருக்கிறது.

ஷாலினி நியூட்டன்