சூரியனை நெருங்குகிறது நாசாவின் பார்க்கர் விண்கலம்..!
சமீபத்தில் சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம் அதன் அருகே சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. சூரியன் ஆய்வில் இது முக்கியமான தருணம் என உற்சாகமாகக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். கடந்த 2018ம் ஆண்டில் நாசா விண்வெளி மையம் பார்க்கர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதன்வழியாக சூரியனின் வெளிப்புற கொரோனா மண்டலத்தை ஆய்வு செய்வது திட்டம். இதற்கான விண்கலத்தை நாசா நீண்ட காலமாக வடிவமைத்தது.
பின்னர் 2017ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தவரும் சூரியன் மற்றும் பிளாஸ்மா பற்றிய வானியல் இயற்பியலாளருமான யூஜின் நியூமேன் பார்க்கரை கௌரவிக்கும் நோக்கில் இந்த விண்கலத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. அப்போது பார்க்கர் உயிருடன் இருந்தார். இதனையடுத்தே விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர். தற்போது சூரியனின் மேற்பரப்பிலிருந்து 60 லட்சம் கிமீ தொலைவில் பார்க்கர் உள்ளது. ஆனால், இதுவே மிக அருகே என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.
ஏனெனில், சூரியனின் அந்த அதீத வெப்பத்தையும், தீவிர கதிர்வீச்சையும் தாங்கிக் கொண்டு வெளிப்புற கொரோனா மண்டலத்தில் பறக்கிறது என்பதால்தான். அதுமட்டுமில்லாமல் இதற்குமுன் 1976ம் ஆண்டு நாசாவும், ஜெர்மன் விண்வெளி மையமும் இணைந்து அனுப்பிய ஹீலியோஸ் 2 விண்கலம் சுமார் 4 கோடி கிமீ தொலைவில் சென்று வந்ததே சாதனையாக இருந்து வந்தது. அதனை பார்க்கர் முறியடித்துள்ளது. அத்துடன் பார்க்கர் ஏற்கனவே சூரியனை 21 முறை நெருங்கிச் சென்றுள்ளது. இந்தமுறை அதையெல்லாம்விட இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் சென்றிருக்கிறது. சரி, ஏன் சூரியனை நெருங்கிச் சென்று ஆய்வு செய்வது முக்கியமானதாக இருக்கிறது?
இதுகுறித்து சூரியன் ஆய்வு குறித்து தொடர்ந்து எழுதி வரும் அறிவியல் எழுத்தாளரும், ‘அறிவியல் பலகை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பா.ஸ்ரீகுமாரிடம் கேட்டோம். ‘‘சூரியன் நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரம். பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரியன் இருக்குது. நாம் சூரியக் குடும்பத்தில்தான் வசிக்கிறோம். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம்.இன்னும் சொல்வதென்றால் சூரியனுள் 13 லட்சம் பூமிகளை உள்ளடக்க முடியும். அந்த அளவுக்கு பிரம்மாண்டமான அமைப்பு சூரியன். ஆனா, பிரபஞ்சமாகப் பார்க்கிறப்ப சூரியனை மீடியம் ஸ்டார்னுதான் சொல்றாங்க. அதாவது நடுத்தர அளவுள்ள ஒரு நட்சத்திரம். அப்படினா இதைவிட பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இந்தப் பிரபஞ்சத்துல இருக்குது. அதனால், சூரியனின் ஆய்வு என்பது ரொம்ப முக்கியமானது. இதன்வழியாக பால்வெளி மண்டலம் உள்ளிட்ட பல விஷயங்களை நாம் தெரிஞ்சுக்க முடியும்...’’ என சூரியனைப் பற்றி ஒரு சிறிய இன்ட்ரோ கொடுத்தவர், பார்க்கர் ஆய்வு குறித்து தொடர்ந்தார். ‘‘சூரியனின் மேற்பரப்பில் 5 ஆயிரத்து 500 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்குது. ஆனால், அதன் புறவெளி கொரோனா மண்டலத்தில் இதைவிட கூடுதலான வெப்பநிலை நிலவுது. இதனை அவுட்டர் கொரோனானு சொல்வாங்க.
ஆங்கிலத்தில் கொரோனா என்றால் கிரீடம்னு அர்த்தம். அதாவது வட்டமாக இருக்கக்கூடிய அமைப்பு. இந்த கொரோனாவை சூரிய கிரகணத்தின்போது பார்த்திருக்கலாம். சூரியன் மறைந்ததும் ஒரு அவுட்டர் லைன் தெரியும். இந்த புறவெளி- கொரோனா மண்டலம் அதிக வெப்பநிலையுடன் காணப்படுது. பொதுவாக மேற்பரப்பைவிட புறவெளியில் வெப்பம் குறைவாக இருக்கணும்... இல்லையா? ஆனா, சூரியனில் இது அப்படியே ரிவர்ஸாக இருக்குது.
மேற்பரப்பில் 5 ஆயிரத்து 500 டிகிரி செல்சியஸும், புறவெளியான கொரோனா மண்டலத்தில் மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவுது. இது ஏன்னு இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு புரியல. ஒரு புரியாத புதிராக விளங்குது. அதனால் இதுக்குக் காரணம் என்னனு யோசிக்கிறாங்க. அதற்கான முக்கியமான ஆய்வாகவே இந்தப் பார்க்கர் விண்கலத்தைப் பார்க்கிறாங்க. பார்க்கர் சூரியனுக்கு மிக அருகில் போகல.
சுமார் 60 லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வருது. இந்த விண்கலத்தில் சக்திவாய்ந்த கருவிகள் எல்லாம் பொருத்தப்பட்டிருக்கு. இதனை அதிக வெப்பத்தையும், கதிர்வீச்சையும் தாங்கும்படி செய்து புறவெளியில் நடக்கும் விஷயங்களை கவனிக்க செய்திருக்காங்க.
அதன் அறிக்கை வந்தபிறகு நமக்கு நிறைய விஷயங்கள் புலப்படும். இந்த ஆய்விற்கான இன்னொரு காரணம், சூரியனில் இருந்து வெடித்துச் சிதறும் அலையினால்தான் அந்த வெளிப்புற கொரோனா மண்டலத்தில் வெப்பம் அதிகரிக்குதோனு யோசிக்கிறாங்க. அதாவது சூரியன் என்பது தீப் பிழம்பு கிடையாது.
அது ஒரு மின்னேற்றம் பெற்ற கூழ்மம். அதனுள் ஹைட்ரஜனும், ஹீலியமும் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்குது. அதனாலேயே வெப்ப உமிழ்வு நடக்குது. இது இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குத் தொடரும்னு சொல்றாங்க.
இந்த ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களின் வினையால் ஏற்படக்கூடிய வெப்பம், ஒரு நொடிக்கு ஆயிரம் டன் வெடி வெடிக்கிறமாதிரி இருக்கும். அந்த வெடிப்பு சிதறும்போது தீப் பிழம்பு வெளியே வருது. அதனால் புறவெளி கொரோனா மண்டலத்தில் இவ்வளவு வெப்பம் இருக்குதானு கவனிக்கிறாங்க.
இதிலிருந்து நமக்கு தரவுகள் கிடைச்சால் எதிர்காலத்தில் நம்முடைய செயற்கைக்கோள்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். ஏன்னா, இந்த சூரிய வெடிப்பின் தாக்கம் செயற்கைக்கோள்களிலும், அதன் தகவல் தொடர்பிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். சமீபத்தில் சூரிய வெடிப்பு ஏற்பட்ட போது கனடாவில் ஒருநாள் முழுவதும் மின்சாரம் பாதிக்கப்பட்டுச்சு. இதையெல்லாம் தெரிஞ்சுக்கதான் பார்க்கரை அனுப்பியிருக்காங்க.
முன்னாடியே சொன்னதுபோல் சூரியன் ஒரு பெரிய பிரம்மாண்ட அமைப்பு. அதைச் சுற்றி வரணும். அதுக்கிடையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இன்னும் பார்க்கர் சிக்னல் தரல. ஆனா, சூரியன் அருகே போன உலகின் முதல் விண்கலம் என்ற பெயரை பார்க்கர் பெற்றிருக்கு...’’ என்ற ஸ்ரீகுமாரிடம், சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் ஆதித்யா எல்1 குறித்து கேட்டோம். ‘‘கடந்த 2024 ஜனவரி மாதம் சூரியனின் ஆய்விற்காகத்தான் ஆதித்யா எல்1 விண்கலம் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டது. இது சூரியனின் ஒளிவட்டப் பாதையில் எல்1னு சொல்லப்
படும் லெக்ராஞ்சே 1 பாயிண்ட்டில் இருந்து ஆய்வுகளைச் செய்யுது. இதுவும் முக்கியமான ஆய்வுதான்.இதிலும் சூரியனின் வெடிப்பு, எவ்வளவு வெப்பம் வருது உள்ளிட்ட கணக்கீடுகளை தூரத்திலிருந்து மேற்கொள்றாங்க.
நாசா அனுப்பிய விண்கலம் அருகில் போய் செய்யுது. அவ்வளவே வித்தியாசம். எல்லா கோள்களையும் ஆய்வு செய்றதுதான் விண்வெளித் திட்டங்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சூரிய ஆய்வில் முன்னணியில் உள்ளன. இப்ப நாமும் ஆதித்யா எல்1 அனுப்பியதால் அந்த ரேஸில் இருக்கோம். இதுதவிர, ப்ரோபா 3னு சூரியனை ஆய்வு செய்யும் மற்றொரு திட்டமும் நடக்குது. இந்தத் திட்டத்தின் வாயிலாக சமீபத்தில் நம் ஹரிகோட்டாவிலிருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தினாங்க. இதன்படி செயற்கையாக ஒரு சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனின் கொரோனா படலத்தை ஆய்வு செய்ய இருக்காங்க. ஆனா, பார்க்கர்தான் பெரிய ஆய்வு.
பொதுவாக 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய வெடிப்பு அதிகம் தென்படும். அது 2024-25ல் நடக்க இருக்கு. கடந்த செப்டம்பரில் வெடிப்பு நிகழ்ந்தப்ப கனடாவில் மின்சாரம் தடைபட்டது. அதனால் சூரிய வெடிப்பு, சூரிய புயல், சூரியனில் என்ன நடக்குது, புறவெளியில் அதிக வெப்ப உமிழ்வு ஏன் உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்யவே பார்க்கர் போயிருக்கு. அது தகவல்கள் தந்தால் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்...’’ என்றார் பா.ஸ்ரீகுமார்.
பேராச்சி கண்ணன்
|