தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்...
எம்.டி.வாசு தேவன் நாயர் மறைந்தார். மலையாள இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவர். தகழியும் பஷீரும் சென்றபின் உருவான தலைமுறை. அவர்களுடன் இணைந்து வளர்ந்தவர். மலையாள இலக்கியத்தில் ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்’ என எம்.டி கருதப்படுகிறார். எம்.டி.யின் நாவல்கள், சிறு கதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும்கூட முக்கியமானவை. சுவாரசியமாக வாசிக்க முடியாத ஒரு வரிகூட அவர் எழுதியதில்லை.
மலையாளத் திரைப்படத்தில் இடைநிலைப் படம் என்பது ஒருவகையில் எம்.டி.வாசுதேவன் நாயரின் தனிப்பட்ட உருவாக்கம் என்றே சொல்லிவிடலாம். எண்ணிக்கையிலும் தரத்திலும் மட்டுமல்ல வணிக வெற்றியிலும் அவை சாதனைகள். அவருடைய நிர்மால்யம் மலையாளக் கலைப்படங்களின் உச்சங்களில் ஒன்று. ஆனால், ஒருபோதும் சினிமா சார்ந்து எந்தப் புகழ்மொழிகளையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை.
எம்.டி எந்த ஒரு படைப்பாளியும் முன்னுதாரண வடிவமாகக் கொள்ளத்தக்கவர். நீண்டகாலம் ‘மாத்ருபூமி’ வார இதழின் ஆசிரியராக இருந்த எம்.டி. அடுத்தடுத்த மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு வளர்த்தெடுத்தவர்.
ஓ.வி.விஜயன், சக்ரியா முதல் இன்றைய இளையபடைப்பாளிகள் வரை பலர் அவரால் கண்டடையப்பட்டவர்களே.முதுமையிலும் கூட எம்.டி புதிய இலக்கியங்களை வாசித்துக் கொண்டிருந்தார். புதியதாக எழுதவரும் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார். ஒருபோதும் காலத்தால் பின்னகர்ந்தவராகத் திகழவில்லை.
எம்.டி மாபெரும் அமைப்பாளர். கேரள இலக்கியத்தின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சன் பேரில் துஞ்சன் பறம்பு என்னும் பண்பாட்டு இலக்கிய அமைப்பை தன் பணத்தாலும், பின்னர் நன்கொடைகளாலும் மாபெரும் நிறுவனமாக உருவாக்கி நிலைநிறுத்தினார். அங்கே இலக்கிய விழாக்களை நடத்தினார்.
எம்.டி போல இலக்கியத்திலும் வாழ்விலும் வெற்றிபெற்ற இன்னொருவர் மலையாளத்தில் இல்லை. ஞானபீடம் உட்பட எல்லா விருதுகளும் வந்துள்ளன. சினிமாவால் மட்டுமல்ல நூல்களின் விற்பனையின் வருமானத்தாலும் அவர் செல்வந்தராகத் திகழ்ந்தார். எழுபதாண்டுகளாக மலையாளிகளின் நான்கு தலைமுறையினர் மிக அதிகமாக வாசித்த படைப்பாளி அவரே. ஆகவே எப்போதும் எளிய பொறாமைகளுக்கு ஆளாகி வசைபாடப்பட்டும் வந்தார். எம்.டி. தன் நீண்ட ஆயுளில் ஒருமுறைகூட அவற்றை பொருட்படுத்தி ஏதும் சொன்னதில்லை. அவற்றை அவர் அறிந்திருந்தாரா என்றுகூட நாம் அறியமுடியாது.மலையாள எழுத்தாளர் என்னும் ஆளுமையின் வெளிப்பாடு எம்.டி. எந்த அரசியல்வாதி முன்னரும், எந்த அதிகாரபீடம் முன்பிலும் அவர் ஒரு கணமும் வணங்கியதில்லை. அவர்கள் தன்னை வணங்கவேண்டும் என எண்ணுபவராகவே நீடித்தார்.
எம்டியின் ‘ஆணவம்’ புகழ்பெற்றது. சென்ற ஆண்டு அவருடைய 90வது ஆண்டுவிழாவை கேரள அரசு ஒரு மாநில விழாவாகவே கொண்டாடியது. பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால், அவ்விழாவிலேயே முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படையாகக் கண்டிக்க அவர் தயங்கவில்லை. ஆனால், அதே எம்.டி மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்களின் கால்தொட்டு வணங்கும் பணிவுகொண்டவராகவும் நீடித்தார்.
1992ல் எனக்கு ‘ஜகன்மித்’யை கதைக்காக கதா விருது கிடைத்தபோது மலையாளத்தில் ‘கொச்சு கொச்சு பூகம்பங்கள்’ என்னும் கதைக்காக எம்.டி. விருதுபெற்றார். டெல்லியில் நான் அவரைச் சந்தித்தேன். அன்றுமுதல் தொடர்ச்சியாக பழக்கமிருந்தது. இறுதியாக அவருடைய பிறந்தநாள் விழா துஞ்சன்பறம்பில் நிகழ்ந்தபோது நான் ஒரு பேச்சாளன். அப்போது நாங்கள் முதலில் சந்தித்த நாளைப் பற்றி துல்லியமாக நினைவுகூர்ந்தார்.
நான் எண்ணிப்பார்க்கிறேன், அவருடைய ஆளுமையில் ஒரு குறைபாடு, ஒரு சிறு பிழை என எதையாவது கண்டிருக்கிறேனா என. சிறுமைகள், காழ்ப்புகள், பகைமைகள்? இல்லை. எழுத்தாளனுக்குரிய நிமிர்வு மட்டுமே கொண்டு ஒவ்வொரு கணமும் வாழ்ந்தவர்; வெற்றிகளையும் சாதனைகளையும் மிக இயல்பாக நிகழ்த்தி முன்சென்றவர்.
எம்.டி.யை எப்போதுமே யானை என்றே எண்ணி வந்திருக்கிறேன். பேருருவம், பேராற்றல். ஆனால், சிற்றுயிர்களுக்கும் தீங்கிழைக்காதது. காடதிர நடந்துசெல்கையில் எந்த உயிரும் அதை அஞ்சவேண்டியதில்லை. கேரளக்காடுகளின் அரசன் யானையே.அஞ்சலி.
ஜெயமோகன்
|