இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர்!



சமீப நாட்களில் விளையாட்டு சம்பந்தமான பத்திரிகைகளிலும், ஆன்லைன் செய்தித் தளங்களிலும் அடிக்கடி இடம்பிடிக்கும் ஒரு பெயர், ஐஸ்வர்யா பிஸே.
இந்தியாவின் சர்க்யூட் அண்ட் ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள் ரேஸராக வலம் வரும் பெண் இவர். சத்தமே இல்லாமல் பைக் ரேஸில் பல சாதனைகளைச் செய்து வருகிறார். இத்தனைக்கும் பெரிதாக இந்தியப் பெண்கள் ஈடுபடாத ஒரு விளையாட்டுத்துறை இது.

மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு மோட்டார் ஸ்போர்ட்ஸில் மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. 
‘இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்ஸின் முன்னோடி’, ‘வழிகாட்டி’ என ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகள் இவரைப் புகழ்ந்து வருகின்றன.  பத்து வருடங்களுக்கு மேலாக பைக் ரேஸில் ஈடுபட்டு, பல சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும், மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டு, அடையாளம் காணப்படாத ஒரு வீராங்கனையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா என்பது வருத்தத்துக்குரியது.

கடந்த மாதம் பெண்களுக்கான எஃப்ஐஎம் பஜாஸ் வேர்ல்டு கப் என்ற மோட்டார் சைக்கிள் போட்டி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த பல ரேஸர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. இதற்கு முன்பு இதே மாதிரி இரண்டு உலக சாம்பியன் பட்டங்களையும் வென்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் பெங்களூரு சாலைகளில் பொழுதுபோக்காகத்தான் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. அப்போது அவரது வயது 18.  

நேரம் போகவில்லை என்றால் தனது பைக்கை எடுத்துக்கொண்டு, இலக்கின்றி எங்கேயாவது கிளம்பிவிடுவது அவரது வழக்கம். இப்படி ஒவ்வொரு வார இறுதியில் மட்டுமே பைக்கை ஓட்டியவர், தினமும் ஓட்ட ஆரம்பித்தார்.  

வேகமாகச் செல்வது அவருக்குப் பிடித்துப்போகவே, ரேஸிங் பக்கம் ஐஸ்வர்யாவின் கவனம் திரும்பியது. பிறகு ரேஸிங்கில் பங்குபெறுவதற்காக முறைப்படியான பயிற்சிகளைப் பெறத் தொடங்கினார். ஓரளவுக்கு நன்கு பயிற்சி பெற்ற பிறகு உள்ளூரில் நடந்த போட்டிகளிலிருந்து, தேசிய அளவிலான போட்டிகள் வரை பங்கேற்று, வெற்றி பெற்றார். 

பொதுவாக இந்தியாவில் பெண்கள் பைக் ரேஸில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஐஸ்வர்யாவுக்குக் கவலையைக் கொடுத்தது. மற்ற பெண்களையும் பைக் ரேஸில் ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக, தான் இருக்க வேண்டும் என்ற இலக்குடன் இயங்க ஆரம்பித்தார்.

2018ல் நடந்த விபத்து அவரை முடக்கியது. ஐஸ்வர்யாவின் பைக் ரேஸ் வாழ்க்கை அவ்வளவுதான் என்று சுற்றியிருந்தவர்கள் அவரை முடக்கப் பார்த்தனர். ஆனால், புது பலத்துடன் திரும்பி வந்தார் ஐஸ்வர்யா. 

ஆம்; 2019ம் வருடம் நடந்த பெண்களுக்கான உலகளாவிய மோட்டார் சைக்கிள் பந்தயமான எஃப் ஐ எம் பஜாஸ் வேர்ல்டு கப்பில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் உலகளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸில் வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் உலகளவிலான பைக் ரேஸில் கலந்துகொண்டு, வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நான் ரேஸிங்கில் ஈடுபட ஆரம்பித்தபோதுதான் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். பைக் ரேஸில் ஒரு தடகள வீரரின் திறமையும், நுட்பமும்தான் முக்கியம் என்பதுதான் அந்த விஷயம்.

எப்போது ஹெல்மெட்டை அணிந்து வண்டியை எடுக்கிறேனோ அப்போது ஒரு தடகள வீரராக மாறிவிடுவேன்...” என்கிற ஐஸ்வர்யா, பிளஸ் 2  தேர்வில் தோல்வியடைந்தவர். இந்த தோல்வியால் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையில் கூட பிரச்னை உண்டாகியது.

ஆனால், பிளஸ் 2 தோல்வியை நேர்மறையாக எடுத்துக்கொண்டார். ஆம்; படிப்பைத் தாண்டி மற்ற துறைகளில் ஈடுபட ஆரம்பித்தார். இதில் ஒன்றுதான், பைக் ரேஸ்.  
மட்டுமல்ல, பெங்களூருவில் பிறந்து, வளர்ந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் யாருமே பைக் ரேஸில் ஈடுபட்டதில்லை. ஐஸ்வர்யா பைக் ரேஸில் ஈடுபடுவதிலும் அவரது குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை. சுயம்புவாக பைக் ரேஸில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இப்போது ஐஸ்வர்யாவின் வயது 29.

உலகப்புகழ் பெற்ற மோட்டார் வாகன பந்தயம் டாகர் ராலி. 2026ல் நடக்கப்போகிற டாகர் ராலியில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார் ஐஸ்வர்யா. இதில் வென்றால் டாகர் ராலியில் வெற்றிபெற்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிடுவார்.

த.சக்திவேல்