தமிழில் ஜெயித்த வுடாலங்கடி!
கடந்த ஆண்டு - 2024ல் - கோலிவுட்டில் பல படங்கள் வெளியாகி வெற்றியடைந்திருந்தாலும் மற்ற மொழித் திரைப்படங்களையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர். ஒரு ஷார்ட் ரீவைண்ட்...
மஞ்சும்மல் பாய்ஸ்
மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, டப்பிங் செய்யப்படாமல் அப்படியே தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் ‘குணா’ குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு...’ பாடலை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
படத்திலிருந்த தமிழ் கனெக்ட்டும் இளையராஜா மற்றும் கமல்ஹாசனுக்கு ட்ரிபியூட் செய்யும் வகையிலிருந்த மேக்கிங்கும் இந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக மாற்றியது. இதனால் தமிழகத்தின் இரண்டாம்கட்ட நகரங்களில் கூட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. பிரேமலு
கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லீன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘பிரேமலு’.
மலையாள வெர்ஷனிலேயே பிற மொழி ரசிகர்களைக் கவர்ந்த இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.
வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த மமிதா பைஜு, இப்போது ஹெச்.வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் படத்திலும் நடித்து வருகிறார். ஆவேஷம்
‘ரோமஞ்சம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிய படம் ‘ஆவேஷம்’. இந்தப் படத்தில் ரங்காவாக பட்டையைக் கிளப்பி இருந்தார் பகத் ஃபாசில். இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றன. அதிலும் குறிப்பாக ‘இலுமினாட்டி...’ பாடல் பலராலும் கொண்டாடப்பட்டது. படத்தின் பாடல் காட்சிகளும் பகத் ஃபாசிலின் ரியாக்ஷன்களும் இன்ஸ்டாவில் ரீல்ஸ்களாக வைரலாக, தமிழக ரசிகர்களும் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்.
ஆடுஜீவிதம்
இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், பிரித்விராஜ் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பிரமாண்ட மலையாள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ என்கிற ‘The Goat Life’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு திரையில் வெளியானது.
அரபு நாட்டுக்குப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளைப் போன்று வாழ்ந்த துயரக் கதையை மையக் கருவாகக் கொண்ட இப்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு உலகத்தரத்தைச் சேர்த்திருந்தது.
கிஷ்கிந்தா காண்டம்
2024ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் படம் இது. கோலிவுட், டோலிவுட் என அத்தனை இடங்களிலும் கவனம் பெற்றது. இயக்குநர் டின்ஜித் அயத்தன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட்டானதுக்கு முக்கிய காரணமே இப்படம் பின்பற்றிய புதிய வடிவிலான த்ரில்லர் ஃபார்முலாதான். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
கல்கி 2898 AD
நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான தெலுங்கு திரைப்படம் ‘கல்கி 2898 AD’. தமிழிலும் இப்படம் டப் ஆனது.நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது இப்படத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. புராணக் கதையை நவீனத்தோடு கலந்து Fusion ஆகக் காட்டிய இந்தப் படத்தின் திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
லக்கி பாஸ்கர்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் வெளியான தெலுங்கு திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இதே பெயரில் தமிழிலும் வெளியானது.தீபாவளியை ஒட்டி வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘நாமும் வாழ்க்கையில் பாஸ்கராகி சாதிக்க வேண்டும்’, ‘நம் வாழ்க்கையிலும் ஆண்டனிபோல ஒரு வழிகாட்டி வரவேண்டும்...’ என்பது மாதிரியான மீம்ஸ்களும் இணையத்தை வட்டமடித்தன. ‘அமரன்’, ‘ப்ளடி பெக்கர்’ போன்ற நேரடி தமிழ்ப்படங்களுடன் வெளியான போதும் ‘லக்கி பாஸ்கர்’ நல்ல கலெக்ஷனை அள்ளியது. புஷ்பா - 2
கடந்த 2021ம் ஆண்டு ‘புஷ்பா - 1’ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சொல்லப்போனால் இந்திய அளவில் கலெக்ஷனில் இப்படம் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தி இருக்கிறது.
காம்ஸ் பாப்பா
|