ஒரு படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதையே படமா எடுத்திருக்கோம்!
‘வெங்காயம்’ படத்தின் வழியாக கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராஜ்குமார். இப்போது ‘பயாஸ்கோப்’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்து இவர் இயக்கி நடித்துள்ள ‘ஓன்’ படமும் வெளியாகவுள்ளது. ‘பயாஸ்கோப்’ என்ன மாதிரியான படம்?
இது ‘வெங்காயம்’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. உலகத்தில் முதன் முறையாக ஒரு படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை அடிப்படையாக வெச்சு எடுக்கப்பட்ட படம். ‘ஸ்டோரி ஆஃப் தி ஸ்டோரி’ என்பதுதான் படத்தோட கான்செப்ட். இந்தப் படம் உருவாக மிஷ்கின் சார் ஒரு காரணம். ‘வெங்காயம்’ படத்தின்போது தனியார் டிவிக்காக அதில் நடிச்ச கிராமவாசிகளுடன் இயக்குநர் மிஷ்கின் சார் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்துச்சு.
அப்போது ‘வெங்காயம்’ படத்தை எடுத்த விதத்தைப் பார்த்ததும் அதை ஆவணப் படம் மாதிரியோ, திரைப்படம் மாதிரியோ எடுக்குமளவுக்கு இதுல விஷயம் இருக்குன்னு சொன்னார். ‘வெங்காயம்’ வெளிவந்தபோது ஒருவரால் சுயாதீனமாக படம் எடுத்து வெளியிட முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கு ஏற்படுத்துச்சு. அதாவது தயாரிப்பாளர், நட்சத்திரங்களுக்காக காத்திருக்காமல் கன்டென்ட் இருந்தால் சினிமாவுக்கு அறிமுகமே இல்லாதவர்களை வெச்சு நம்பி படம் எடுக்கலாம் என்ற தாக்கத்தைக் கொடுத்துச்சு.
அது சினிமா கனவுடன் இருந்த பலருக்கு உந்துதலாக இருந்துச்சு. அப்படி ‘வெங்காயம்’ மேக்கிங் பிராசஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சதும் அழகான திரைக்கதையா மாறுச்சு.
‘பயாஸ்கோப்’ கதை என்னனு கேட்கிறீங்க இல்லையா... கிராமங்களில் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுப்பதற்கே கூச்சப்படுவாங்க.
அப்படிப்பட்டவர்கள் எப்படி சினிமா கேமரா முன்னாடி தங்களை தயார்படுத்தி, நடிச்சாங்க... சினிமா கருவிகளை எப்படி ஹேண்டில் பண்ணினாங்க என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளேன்.‘லகான்’ படமும் இப்படியானதுதான். சினிமா அறிமுகம் இல்லாத வெள்ளந்தியான மக்களை கிரிக்கெட் ஆட வைச்சு ஒரு சினிமாவை உருவாக்கியிருப்பாங்க. சத்யராஜ், சேரன் போன்ற ஆளுமைகளுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
உண்மைக் கதையில் யாரெல்லாம் நடிச்சிருந்தார்களோ அவர்கள்தான் இதிலும் நடிச்சிருக்காங்க. டைட்டில் போடும்போது ‘இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே’ என்று போட்டோ கார்டு போடுவாங்க. அது மாதிரி இந்தப் படத்தோட டைட்டிலில் ‘இதுல நடிக்கிறவங்க அனைவரும் நிஜ கதாபாத்திரங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன்.
சத்யராஜ் சார் நடிகராகவும், சேரன் சார் இயக்குநராகவும் வர்றாங்க. நானும் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறேன். ‘சேத்துமான்’ சங்ககிரி மாணிக்கத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்.
சத்யராஜ் சார், சேரன் சார் இருவரும் பிசி நடிகர்கள். அவர்களுடைய ஒவ்வொரு நாள் கால்ஷீட்டும் பல லட்சங்கள் மதிப்புள்ளவை. அவர்கள் தொழில் ரீதியான நடிகர்களாக இருந்தாலும் சமூக நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்களுக்கு அந்த மாதிரி கட்டுப்பாட்டை கொண்டு வருவதில்லை.
அப்படி எனக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் சப்போர்ட் பண்ணினார்கள். அவர்கள் கால்ஷீட், சம்பளம் என கணக்கு பார்த்திருந்தால் எனக்கு கிடைச்சிருக்கமாட்டார்கள். நல்ல படத்தில் இருக்கணும் என்ற நோக்கம்தான் அவர்களுக்கு இருந்துச்சு.சேரன் சார் பற்றி சொல்லணும். அவர் இல்லைன்னா ‘வெங்காயம்’ காணாமல் போயிருக்கும். ஒரு படம் தியேட்டருக்கு வந்துவிட்டால் அதன் விதி அவ்வளவுதான். இப்போது ஒரு படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் ஓடிடி, யூடியூப் என்று பல தளங்கள் இருக்கு. அப்போது அப்படியில்லை.
‘வெங்காயம்’ படம் எடுத்தபோது எங்களுக்கு ரிலீஸ் எப்படி பண்ணணும்னு தெரியாமதான் ரிலீஸ் பண்ணினோம். தியேட்டர் தரப்பிலிருந்து பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. ஆனால், மீடியா கொண்டாடினாங்க.ரோகிணி மேடம் சேரன் சாரிடம் ‘வெங்காயம்’ படத்தைப் பற்றி சொன்னதும் தியேட்டரில் இருந்த படத்தை நிறுத்தி, ‘பெரியளவில் புரொமோஷன் பண்ணித் தருகிறேன்’ என்று பிரம்மாண்டமாக புரொமோஷன் செய்து கொடுத்தார்.
சேரன் சாரிடமிருந்து சினிமாவைக் கற்றுக்கொள்வதைத் தாண்டி நல்ல படத்தை எப்படி மக்களிடம் சேர்ப்பது என்ற அம்சத்தையும் கற்றுக்கொண் டேன்.தாஜ்நூர் மியூசிக்ல ‘வட்ட வட்ட பொட்டு வெச்சு...’ பாடல் பிரமாதமாக வந்திருக்கு. ஒளிப்பதிவு முரளி கணேஷ். இன்ஸ்டிடியூட் மாணவர், டெக்னிக்கலான பர்சன். தயாரிப்பு சந்திர சூரியன், பிரபு சுப்ரமணி, பெரியசாமி.
அடுத்த படம் செய்வதற்கு ஏன் இந்த இடைவெளி?
‘வெங்காயம்’ படத்துக்குப் பிறகு என்னுடைய அடுத்த படம் வெளியாகவில்லை என்றாலும் சினிமா சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தேன்.
இதற்கிடையே ‘ஓன்’ என்ற படத்தை எடுத்தேன். தனி ஒருவனாக படம் எடுக்க முடியும் என்ற நோக்கத்தில் எடுத்த படம் அது.பத்து நாடுகளில் ஷூட் நடந்துச்சு. நான்கு வருட பிராசஸ் அது. ‘வெங்காயம்’ படம் எப்படி சுயாதீன படமாக பேசப்பட்டதோ அதுமாதிரி ஒருவர் மட்டுமே உள்ள படமாக ‘ஓன்’ படம் எடுத்தேன். கூத்துக் கலையை வெச்சு நீங்க செய்த கின்னஸ் சாதனையைப் பற்றி சொல்லுங்க..?
என்னுடைய தாத்தா கூத்துக் கலைஞர். அப்பா மேடை நாடகக் கலைஞர். நான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் ஒவ்வொரு வேலையைச் செய்யவும் ஒவ்வொரு துறை இருக்கும். கூத்து அப்படி அல்ல. காஸ்டியூம், மேக்கப், மியூசிக் என எல்லா வேலையையும் ஒருவரே செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யும்போதுதான் அது எவ்வளவு வலிமையான கலை என்று தெரிஞ்சது. அது ஏன் தெருவுடன் நிற்க வேண்டும் என்று யோசித்தேன். சினிமாவில் ஒரு நாள் சரி வரவில்லை என்றால் அடுத்த நாள் எடுக்கலாம். கூத்து விடிய விடிய ஆடணும். தூரத்தில் இருக்கிற மக்களுக்கும் கேட்கும்படி சொந்தக்குரலில் பாடணும்.
அப்படியொரு கலையை உலக அரங்கத்துக்குக் கொண்டு போகணும் என்று யோசித்தேன். அப்படி அமெரிக்காவில் கூத்து நடத்த ஒரு வாய்ப்பு கிடைச்சது.
சினிமாவில் எப்படி என் முழு பலத்தையும் சேர்த்து படம் எடுத்தேனோ அது மாதிரி முழு பலத்துடன் நாட்டுப்புறக் கலையை மக்களிடம் சேர்க்க முடிவு பண்ணினேன். கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணாம கூத்துக் கலையை மக்களிடம் சேர்க்க முடிவு பண்ணினேன்.
அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு கூத்துக் கலையைப் பயிற்றுவித்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடத்தினேன். ரோஸ்மாண்ட் என்ற தியேட்டரில் ஒரே சமயத்துல 5000 பார்வையாளர்கள் முன்னிலையில் 1000 பேர் கூத்து பண்ணினார்கள்.
கூத்துக் கலைக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
‘அவதாரம்’ படத்துக்குப் பிறகு ‘வெங்காயம்’ படத்துல கூத்துக் கலையை விவரமாக காட்டினோம். அதன் பிறகு நிறைய படங்களில் கூத்து கலையை யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. வரும் காலங்கலில் தியேட்டரிக்கல் ஆர்ட்டுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.
எஸ்.ராஜா
|