ஹாலிவுட் 2025



ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் படங்களுக்கு எப்பவுமே தனி மவுசு. 2024ல் வெளியான ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் தோல்வியைத்தான் சந்தித்தன. அதை ஈடுகட்டும் அளவுக்கு இந்தப் புது வருடம் ஹாலிவுட்டுக்கு நன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு 2025ல் வெளிவரக் காத்திருக்கும் இப்படங்களே சாட்சி.

*அவதார் : ஃபயர் அண்ட் ஏஷ்திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலை உண்டாக்கிய படம், ‘அவதார்’. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ‘அவதார்’தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து, இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரோன். ‘அவதார்’ மாபெரும் வெற்றியடைய, ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ எனும் இரண்டாம் பாகத்தை எடுத்து, 2022ல்தான் வெளியிட்டார்.

இப்படமும் வசூலில் சக்கைப்போடு போட்டது. உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது இப்படம். இரண்டாம் பாகம் எடுக்கும்போதே, மூன்றாம் பாகமான ‘அவதார் : ஃபயர் அண்ட் ஏஷ்’ஷின் படப்பிடிப்பையும் நடத்திவிட்டார் ஜேம்ஸ். ரூபாய் 2000 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படம், உலகம் முழுவதும் இந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாகிறது.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஏஷ்’ வெளியாக இன்னமும் இவ்வளவு நாட்கள்தான் இருக்கின்றன. ரசிகர்கள் தினமும் நாட்களை எண்ண ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் புது வருடத்தில் திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

*ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலைக் குவித்த அனிமேஷன் படம், ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’. இதன் லைவ் - ஆக்‌ஷன் ரீமேக்தான் இந்தப் படம். ‘டிரீம்வொர்க்ஸ்’ நிறுவனத்தின் முதல் ரீமேக் மற்றும் முதல் லைவ்- ஆக்‌ஷன் படமும் இதுதான். டிராகனை வேட்டையாடுவதற்காகச் செல்லும் வைக்கிங் இனத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், டிராகனுக்கும் இடையில் ஏற்படும் நட்புதான் படத்தின் மையம். வருகிற ஜூன் 13ம் தேதி வெளியாகிற இப்படத்தை டீன் டெப்லாயிஸ் இயக்கியிருக்கிறார்.

*ஜூடோபியா 2

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளை அள்ளிய அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. இதன் இரண்டாம் பாகம் இது. ‘படி காப்’ என்ற வகைமையில் முக்கியமான அனிமேஷன் படமாக ‘ஜூடோபியா’ கருதப்படுகிறது. ‘படி காப்’ வகைமைப் படங்களில் முன்னுக்குப் பின் முரணான ஆளுமையைக் கொண்ட இரண்டு பேர் சேர்ந்து ஒரே வேலையில் ஈடுபடுவார்கள்.

அவர்கள் போலீஸாகவோ அல்லது துப்பறிவாளர்களாகவோ இருப்பார்கள். இரண்டு பேரும் சேர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள். ‘ஜூடோபியா 2’விலும் இரண்டு வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட துப்பறிவாளர்கள் சேர்ந்து ஆபத்தான ஒரு வழக்கை விசாரிப்பதுதான் கதை. வரும் நவம்பர் 26ம் தேதி வெளியாகிறது.

*மைக்கேல்

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனான மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம். மைக்கேலின் குழந்தைப் பருவத்திலிருந்து அவரது மரணம் வரையிலான வாழ்க்கையையும், இசைப்பயணத்தையும் சித்தரிக்கிறது இந்தப் படம். மைக்கேலின் சகோதரரின் மகனான ஜாஃபர் ஜாக்சன்தான் மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். 

வரும் அக்டோபர் 3-ம் தேதி வெளியாகும் இப்படத்தை, ஆண்டோன் ஃபூக்வா இயக்குகிறார். மைக்கேல் ஜாக்சனின் இருபதுக்கும் மேலான பாடல்கள் படத்தில் இடம் பெறும் என்று தயாரிப்பாளர் சொல்லியிருப்பதால், மைக்கேலின் ரசிகர்களுக்கு செம இசை விருந்து காத்திருக்கிறது.

*சூப்பர்மேன்

‘டிசி காமிக்ஸின்’ சூப்பர் ஹீரோ படம் இது. மட்டுமல்ல, புதிதாக உருவாகியிருக்கும் டிசி யுனிவர்ஸின் முதல் படமும் இதுவே. சூப்பர்மேன் பட வரிசைகளில் புதிய தொடக்கமும் இந்தப் படம்தான். அதனால் இப்படத்துக்கு டிசி காமிக்ஸின் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களின் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

பெரும் பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படத்தை ஜேம்ஸ் கன் இயக்கியிருக்கிறார். தனது தந்தையின் மரணம்தான் இப்படத்துக்கான திரைக்கதையில் முக்கிய தாக்கத்தைச் செலுத்தியிருப்பதாக ஜேம்ஸ் சொல்லியிருக்கிறார். அதனால் அவரது தந்தையின் பிறந்த நாளான ஜூலை 11ம் தேதி வெளியாகிறது, ‘சூப்பர்மேன்’.

*எஃப் 1

முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வகைமை திரைப்படமாக ‘எஃப் 1’ இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர். தொண்ணூறுகளில் பிரபலமான ஃபார்முலா ஒன் கார் ரேஸ் டிரைவர் சன்னி. ஒரு விபத்துக்குப் பிறகு சன்னியை வலுக்கட்டாயமாக ஃபார்முலா ஒன் ரேஸிலிருந்து ஓய்வு பெற வைக்கின்றனர்.

ஓய்விலிருந்து வெளிவந்து, இளம் வீரனுக்கு சன்னி வழிகாட்டியாக மாறுவதுதான் படத்தின் மையம். சன்னியாக பிராட் பிட் நடித்திருக்கிறார். ஹான்ஸ் ஷிம்மரின் இசையில் படத்தை இயக்குகிறார் ஜோசப் கோசின்ஸ்கி. உலகமெங்கும் வரும் ஜூன் 25ம் தேதி வெளியாகிறது.

*கராத்தே கிட் : லெஜண்ட்ஸ்

‘த கராத்தே கிட்’ பட வரிசையில் வெளியாகும் ஆறாவது படம் இது. இதற்கு முந்தைய படமான ‘த கராத்தே கிட்’ வெளியாகி, 14 வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் ‘கராத்தே கிட் : லெஜண்ட்ஸு’க்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.

முக்கியமான கதாபாத்திரத்தில் 70 வயதான ஜாக்கி சான் நடிப்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் இன்னமும் அதிகமாகியிருக்கிறது. ஜாக்கி சானைத் தரிசிப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்துக்காகக் காத்திருக்கின்றனர். ஜொனாதன் எண்ட்விசில் இயக்கத்தில், மே 30ம் தேதி வெளியாகிறது இப்படம்.

*மிஷன்: இம்பாசிபிள் த ஃபைனல் ரெக்கோனிங்

கடந்த 28 வருடங்களாக ‘மிஷன்: இம்பாசிபிள்’ படங்களுக்குத் தனி மவுசு. இப்பட வரிசையில் வெளியாகும் எட்டாவது படம் இது. இப்படத்தின் நாயகனான ஈதன் ஹண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார் டாம் க்ரூஸ். ‘மிஷன் : இம்பாசிபிள்’ பட வரிசையின் முதல் பாகத்தில் நடிக்கும்போது டாமிற்கு வயது 33. 

எட்டாவது பாகத்தில் நடிக்கும்போது 62 வயது.ஒரு பட வரிசையின் எட்டு பாகங்களிலும் முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் ஒரே நடிகர் நடிப்பது ஆச்சர்யம் என்கின்றனர். இந்த வயதிலும் ஆக்‌ஷனில் அட்டகாசம் செய்திருக்கிறார் டாம். இதற்கு சமீபத்தில் வெளியாகியிருக்கும் டிரெய்லரே சாட்சி. பல ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் கூட டாம் போடவில்லையாம். கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில், மே 23ம் தேதி வெளியாகிறது இப்படம்.

*கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு

‘மார்வல் காமிக்ஸில்’ இருந்து வெளியாகும் சூப்பர் ஹீரோ படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம். ‘கேப்டன் அமெரிக்கா’ பட வரிசையில் வெளியாகும் நான்காவது படம் இது.
அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு சர்வதேச சம்பவம் என இந்த இரண்டு நிகழ்வுகளையொட்டி கதை பின்னப்பட்டிருக்கிறது. 

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் அந்தோணி மேக்கி நடித்திருக்கிறார். வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜூலியஸ் ஒனாஹ்.

*பிளைட் ரிஸ்க்

‘பிரேவ் ஹார்ட்’, ‘அபோகலிப்டோ’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய மெல் கிப்சனின் இயக்கத்தில் வெளியாகப்போகும் படம் இது.

பெரிய தாதாவுடன் தொடர்பில் இருக்கும் ஒருவரை விசாரணை செய்ய விமானத்தில் அழைத்துச் செல்கின்றனர். உடன் மார்ஷலும் பயணிக்கிறார்.

அவரைக் கொல்வதற்காக ஒரு ஹிட்மேனை ஏற்பாடு செய்கின்றனர். அந்த ஹிட்மேன் விமானத்தின் பைலட்டாக இருந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை.  
உலகம் முழுவதும் ஜனவரி 24ம் தேதி வெளியாகிறது.

த.சக்திவேல்