2025 முதல்... இனி போர்களில் AI?



இப்படியொரு குண்டைத் தான் உலகத்தின் தலையில் போட்டிருக்கிறது உக்ரைன்.ஆம். எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையிலான போர்களில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும். இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சாப் பொருள் இப்பொழுது உக்ரைனிடம் உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், 3வது ஆண்டை நெருங்குகிறது. இந்நிலையில் உக்ரைனால் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட மில்லியன் மணிநேரங்களுக்கும் மேலான காட்சிகள் உள்ளனவாம். கண்ணைக் கசக்காதீர்கள். சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். மில்லியன் மணி நேரங்களுக்கு மேலான காட்சிகள்!

இந்தக் காட்சிகளைக் கொண்டு புதிய ஏஐ மாதிரியை பழக்கப்படுத்த முடியும் என் கடந்த ஆண்டு இறுதியில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.ஏற்கெனவே நடந்துவரும் போரில் இலக்குகளை அடையாளம் காணவும், மனிதர்களை விட வேகமாக புகைப்படங்களை ஆராயவும் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கேற்ப உக்ரைனின் போர் முனைகளில் 15,000த்துக்கும் மேலான ட்ரோன் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கவும் இவற்றின் வீடியோ பதிவுகளை ஆராயவும் OCHI என்ற நிறுவனம் உதவுகிறது.

இதன் நிறுவனரான ஒலெக்சாண்டர் டிமிட்ரிவ் அசால்ட்டாக தங்களது அமைப்பு 2 மில்லியன் மணிநேரங்களுக்கான - அதாவது 228 ஆண்டுகள் நீளமான - போர் காட்சிகளை கைவசம் வைத்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்.

இந்தக் காட்சிகள் -  அதாவது 228 ஆண்டுகள் நீளமான காட்சிகள் - ஏஐயை பழக்கப்படுத்துவதற்கான அளவு தரவுகளை விட அதிகமாம்!

இந்த தரவுகளை அளித்து உருவாக்கப்படும் ஏஐ, போர் யுத்திகளை வகுக்கவும், இலக்குகளைக் குறிவைக்கவும், ஆயுத அமைப்புகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய பயன்படுத்தவும் உதவும்.

‘‘இதற்கு அடிப்படையாக போர் அனுபவங்களை கணிதமாக மாற்றும் வேலையை செய்ய வேண்டும்...’’ என்கிறார் டிமிட்ரிவ்.

ஆக இனி ஆயுதங்களை எந்த இடத்தில் பயன்படுத்தினால் அதிக பலன் கொடுக்கும் என்பதை ஏஐ முடிவு செய்யும்.தொடக்கத்தில் OCHI நிறுவனம் போர் வீடியோக்களை ஆராய்ந்து கள நிலவரத்தை உக்ரைன் கமாண்டர்களுக்கு எடுத்துரைக்கும் வேலையைச் செய்து வந்தது.

ஒருகட்டத்தில் போருக்குப் பிறகும் ட்ரோன் காட்சிகள் ஏஐ-க்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற உண்மை தெரிய வந்ததால் அதனைச் சேமிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.அப்படியாக 2022ம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஒவ்வொருநாளும் சராசரியாக 5 முதல் 6 டெராபைட் அளவுள்ள ட்ரோன் காட்சிகள் சேமிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் போர்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த முயற்சிகளில் இருக்கின்றன.உக்ரைனிடம் இருக்கும் தரவுகள் அடிப்படையில் உருவாகும் ஏஐ, ரஷ்யாவுடன் போரிட போதுமானதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவுக்கு பசிபிக் கடலில் சீனாவை சமாளிக்கும் ஏஐ-யை உருவாக்கும் தேவை இருக்கிறது.

ஏற்கனவே பல விஷயங்களுக்காக செயற்கை நுண்ணறிவை உக்ரைன் போரில் பயன்படுத்தி வருகிறது. ஆளில்லா ட்ரோன்கள் மனிதர்களின் துணையில்லாமலேயே ஏஐ மூலம் இலக்குகளைக் கண்டறிந்து வருகின்றன. 

ஒரு ட்ரோனை மட்டுமல்லாமல் ஒரு ட்ரோன் தொகுப்பை மொத்தமாக கட்டுப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது.இவை எல்லாம் இனி அதிகரிக்கும்... மனிதன் நினைத்துப் பார்க்க முடியாத சாத்தியங்களை யுத்தத்தில் ஏஐ ஏற்படுத்தும்; உருவாக்கும்.ரஷ்யாவும் போர்களில் தொடர்ந்து ஏஐ-யைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜான்சி