மாலாக்கா...ஐ லவ் யூ!



கண்ணம்மா... கண்ணம்மா... அழகு பூஞ்சிலை !
என்னுள்ளே... என்னுள்ளே... பொழியும் தேன் மழை!!


இப்படி ‘றெக்க’ படத்தின் ஒற்றைப்பாட்டில் குச்சியுடன் வகுப்பை எடுத்து கொஞ்சலாக மிரட்டி தமிழ்நாட்டின் அத்தனை இளைஞர்களையும் இப்போது வரை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் சிஜா ரோஸ். 
இப்போதும் ஒரு சீனியர் பெண் மீது ஈர்ப்பு என்றாலே சட்டென ஞாபகம் வரும் பாடலும் காட்சியும் இந்த ‘றெக்க’ படத்தின் ‘கண்ணம்மா...’ பாடல்தான். இதோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில்... ‘ஸ்மைல் மேன்’ படத்தில் போலீசாக நடித்திருக்கிறார் இந்த மலையாளத்து பைங்கிளி.

தமிழ் சினிமா பக்கம் ஆளைக் காணோமே?

‘உடன்பிறப்பே’ படத்தில் சசிகுமார் சாருக்கு மனைவியாகவும், ஜோதிகா மேடமுக்கு அண்ணியாகவும் நடிச்சிருந்தேன். அந்த படக்குழு மிகப்பெரிய டீம். மேலும் கதையும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதனாலயே அந்தப் படம் செய்தேன். தமிழைப் பொறுத்தவரை பெரும்பாலும் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களாதான் நிறைய வந்துச்சு. என் வயதுக்கு மீறி நிறைய கேரக்டர்கள் நடித்ததன் விளைவா அப்படியான கேரக்டர்கள்தான் தேடி வந்துச்சு.

அதனால் ஒரு சரியான பிரேக் எடுத்துக்கிட்டு திரும்பவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் நடிக்கணும் அப்படின்னு முடிவு செய்துட்டேன். அதனாலதான் இந்த இடைவெளி. ‘ஸ்மைல் மேன்’ படத்தில் ஸ்மைல் கேர்ள் ஆன உங்களுக்கு என்ன ரோல்?

செம கிரைம் திரில்லர் படம். படம் முழுக்க சைக்கோ கில்லர் ஆட்டம் பயங்கரமா இருக்கும். அதில் சீனியர் போலீஸ் ஆபீஸராக சரத்குமார் சார். அவருடைய டீமில் நானும் ஒரு ஜூனியர் லேடி இன்வேஸ்டிகேட்டிவ் ஆபீஸராக நடிச்சிருக்கேன். அப்பாடா ஒரு வழியா புடவை, சல்வார் டெம்ப்ளேட்டில் இருந்து வெளியே வந்தாச்சு! சரத்குமாருக்கு ‘ஸ்மைல் மேன்’ 150வது படம்... அவருடன் பணி

புரிந்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?

சாருக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள். 150 படம் நடிச்ச நடிகர் மாதிரியே நடந்துக்க மாட்டார். இப்பவும் அதே சின்சியாரிட்டி, ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கி வசனம் எல்லாம் அவ்ளோ கவனிச்சு உள்வாங்குவார். அதேபோல் எங்கே பார்த்தாலும் ஜாலியாக சிரிச்சுகிட்டு எல்லார் கூடவும் எந்த பந்தாவும் இல்லாம பழகுவார். ஆனால், ஷாட் ரெடி அப்படின்னு சொன்னதும் அப்படியே கேரக்டரா மாறிடுவார்.

அவருடைய புருவம், கண் இமைகள் கூட நடிக்கும். அவர் நடிக்கிறதை பார்க்கிறதே என்னை மாதிரி வளர்ந்து வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய பாடம்தான். அப்புறம் இயக்குநர்கள் ஷியாம் - பிரவீன். முதலில் அவங்க என்னை கேட்டது இனியா மேடம் கேரக்டருக்குதான். ஆனால், திரும்பவும் அதே மனைவி, அக்கா, அண்ணி கேரக்டர் எல்லாம் வேண்டாம், கொஞ்ச நேரம் படத்தில் வந்தாலும் பரவாயில்லை... வேற ஏதாவது வித்தியாசமான கேரக்டரா கொடுங்க அப்படின்னு சொன்னேன்.

உடனே எனக்கு இந்த இன்வெஸ்டிகேட்டிவ் ஆபீஸர் ரோல் கொடுத்தாங்க. அவங்க பார்க்கதான் இரட்டை இயக்குநர்கள். ஆனால், ரெண்டு பேருடைய சிந்தனையும் செயலும் ஒரே மாதிரி இருக்கும். எங்கேயும் நம்மை குழப்பவே மாட்டாங்க. அவங்களுக்கு என்ன வேணுமோ அதை சரியா சொல்லி வாங்கும் திறமை அவங்க கிட்ட இருக்கு.

எப்படி நாளுக்கு நாள் இளமையாகிட்டே போறீங்க?

எனக்கு வருகிற கேரக்டருக்கு முதலில் என்னுடைய தோற்றமும் ஒரு காரணம் என்கிறதை நான் உணர்ந்துக்கிட்டேன். முதலில் என்னை நான் உடல்வாகு அடிப்படையில் இளமையா வச்சுக்கணும். போலவே தொடர்ந்து நடிகையாக இருக்க நாமும் நம்மை தயாரா வச்சுக்கணும். அதனால் டயட், வொர்க் அவுட் என கடைப்பிடிச்சிட்டு இருக்கேன். முக்கியமா எதையும் தலையில் போட்டு குழப்பிக்காமல் எனக்கு பிடிச்சதை செய்கிறேன்.

அதனால்தான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகியும் கூட அதிகமான எண்ணிக்கையில் படம் நடிக்காமல் என் மனசுக்கு சரி என்கிற படங்களில் மட்டும்தான் ஓகே சொல்லி நடிக்கிறேன்.
கதை, கதாபாத்திரம் இதெல்லாம் நெக்ஸ்ட்... நான் ஒரு கதை கேட்கும்பொழுது மனதளவில் அந்தக் கதை எனக்கு பிடிக்கணும். இதுதான் ஃபர்ஸ்ட். அப்படிதான் படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க..?

விக்ராந்த் ருத்ரா இயக்கத்தில் கபடி விளையாட்டு வீரர் அர்ஜுன் சக்கரவர்த்தி பயோபிக் படத்தில் நடிக்கிறேன். சுராஜ் வெஞ்சரமூடு சார் நடிப்பில் ‘படக்குதிர’ என்கிற மலையாளப் படத்தில் நடிச்சு முடிச்சிட்டேன். போஸ்ட்ப்ரொடக்‌ஷன் போயிட்டு இருக்கு.

ஹேமா கமிட்டி நடவடிக்கைக்குப் பிறகு மலையாள சினிமாவில் மாற்றங்கள் வந்திருக்கா?

பெரிய அளவில் மாற்றம் வந்திருக்கா என்பதைத் தாண்டி விவாதமாகி இருக்கு. குறைந்தபட்சம் நாங்க எல்லாரும் எங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை தைரியமாக வெளியே சொல்ல ஓர் இடம் இருக்கு என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கு. ஒரு சின்ன நம்பிக்கை இருந்தாலே அதைச் சார்ந்த தைரியமும் நிச்சயம் உருவாகும். மலையாளத்தில் முன்னெடுத்த இந்த நடவடிக்கையால இப்போ எல்லா மொழிகளிலும் எல்லா பெண்களுமே தங்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது சினிமாவில் மட்டும் நடப்பதா சுருக்கிடக் கூடாது. எல்லாத் துறையிலும் தனக்கு நடக்கிற பிரச்னை பத்தி பெண்கள் பேச ஆரம்பிக்கணும். அப்போதான் பெண்களுக்கான பாதுகாப்பு இன்னும் வலிமையாக மாறும். அந்த வகையில் ஹேமா கமிட்டி முன்னெடுப்பை முழுமையா நான் வரவேற்கறேன்.  

ஷாலினி நியூட்டன்