உலகின் லேட்டஸ்ட் மரண முகாம் இதுதான்!
கடந்த டிசம்பர் 8ம் தேதி மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி, 24 ஆண்டுகளாக ஆண்டு வந்த அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்றினர். பின்னர் அவர்கள் முதல்கட்ட நடவடிக்கையாக செய்தது செட்னயா சிறையிலிருந்து கைதிகளை விடுவித்ததுதான். ஏனெனில் அந்தளவுக்கு சித்ரவதைக் கூடமாக விளங்கியது இந்தச் சிறைச்சாலை.
பிரிட்டனைச் சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இதனை, ‘மனித படுகொலைக்கூடம்’ என்று அழைக்கிறது. இந்நிலையில் செட்னயா சிறைச்சாலை குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வந்தபடி இருக்கின்றன.எத்தனை பேர் இந்தச் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர், காணாமல் போனவர்கள் என்னவாகி இருப்பர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்ல. கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியிலிருக்கும்போதே, ‘செட்னயா சிறைச்சாலை கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் சங்கம்’ என்ற ஓர் அமைப்பும் உருவாகி செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தச் சங்கம் செட்னயா சிறையிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இணைந்த கூட்டணியால் உருவாக்கப்பட்டது. இவர்களின் முக்கிய குறிக்கோள், கருத்துக்கள் அல்லது அரசியல் செயற்பாடுகள் காரணமாக சிறைக்காவலில் வைக்கப்பட்டவர்களை வெளிக்கொணர்வதும், அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் ஆகும். இதனுடன் சிறையில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரிக்கும் பணிகளைச் செய்கிறது. அதனாலேயே கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதும் முதல் செயலாக இந்தச் சிறைச்சாலையிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தனர். இந்நிலையில் இந்தச் சிறைச்சாலை குறித்து வந்த தகவல்களைப் பார்க்கலாம்.
செட்னயா சிறைச்சாலை
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் செட்னயா நகருக்கு அருகே உள்ளது இந்தச் சிறைச்சாலை. இதனால் இது பொதுவாக செட்னயா சிறைச்சாலை என்றே சொல்லப்படுகிறது.இதனை 1981ம் ஆண்டு சிரியா பாதுகாப்பு அமைச்சகம் கட்டத் தொடங்கியது. 1986ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்தச் சிறைக்கூடம் சிரியா ராணுவ காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.
1987ம் ஆண்டு முதல் இங்கே கைதிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சிறைச்சாலை வெள்ளை கட்டடம், சிவப்புக் கட்டடம் என இரண்டு சிறைக் காவல் மையங்களைக் கொண்டது. ஒவ்வொரு மையத்திலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கைதிகளை காவலில் வைக்வமுடியும். இதில் ‘எல்’ வடிவ சிவப்புக் கட்டடம் பொதுமக்களை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டனர். வெள்ளை கட்டடம் மெர்சிடீஸ் வீல் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அதன் தோற்றம் அவ்வாறாக இருப்பதுதான். அதாவது ஒரு வட்டமான இடம், அதிலிருந்து மூன்று தனித்தனியாக நீண்ட சாலைகள் போல் பிரியும் தாழ்வாரங்கள் உள்ளன. இதில் சிறைக்கூடங்கள் இருந்தன.
இந்த வெள்ளைக் கட்டடத்தில் ஆட்சிக்கு விசுவாசம் இல்லாமல் எதிராகச் செயல்பட்ட ராணுவ ஊழியர்கள் அடைக்கப்பட்டனர். இவையெல்லாம் 2011ம் ஆண்டுக்கு முன்புவரையிலான நடவடிக்கை. சிகப்புக் கட்டடத்தில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவினர் தண்டனைப் பிறகு விடுவிக்கப்படுவதோ அல்லது வேறு சிறைக்கூடத்திற்கு அனுப்பப்படுவதோகூட 2011ம் ஆண்டு முன்புவரை வாடிக்கையாக இருந்தது.
ஆனால், 2011ம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நடந்த சிரியா உள்நாட்டுப் போருக்குப் பிறகு எல்லாமும் மாறிப்போனது. இந்த இடத்தில் சிரியா அதிபர் பஷர் அல் அசாத் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். பஷர் அல் அசாத்
சிரியாவின் 18வது அதிபரான ஹஃபீஸ் அல் அசாத்தின் மகன்தான் பஷர் அல் அசாத். ஹஃபீஸ் அல் அசாத் 1971ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு அவர் இறக்கும்வரை 29 ஆண்டுகள் சிரியாவின் அதிபராக இருந்தார்.
பஷர் அல் அசாத், 1988ம் ஆண்டு மருத்துவம் முடித்தார். பின்னர் சிரியாவில் ராணுவ மருத்துவராக பணியாற்றினார். தொடர்ந்து லண்டன் சென்று மேற்படிப்பாக கண் மருத்துவம் படித்து பயிற்சி எடுத்தார். அப்போதுவரை, தான் எதிர்காலத்தில் சிரியாவின் அதிபராக வருவோம் என அவர் நினைத்திருக்கவில்லை. ஏனெனில், பஷர் அல் அசாத்தின் அண்ணன் பாஸல் அல் அசாத், ஹஃபீஸின் அரசியல் வாரிசாக உருவாகிக் கொண்டிருந்தார். அவர் 1994ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் இறந்துபோக, பஷர் அல் அசாத் சிரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அவரை அடுத்த அதிபர் ஆக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.இந்நிலையில் 2000ம் ஆண்டு ஹஃபீஸ் மரணமடைய 34 வயதான பஷர் அல் அசாத் அதிபராக்கப்பட்டார். அதிபர் ஆவதற்கு 40 வயது வேண்டும் என்பதை மாற்றி அவருக்காக 34 வயது இருந்தால் போதுமென அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டது.
அப்போதே ‘டமாஸ்கஸ் வசந்தம்’ என அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலாசார செயல்பட்டாளர்கள், உள்ளிட்ட பலரும் ஆட்சியாளருக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்னைகள் வெடித்தன. இருந்தும் பத்தாண்டுகள் வரை பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
2011ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் அரபு வசந்தம் என ஆட்சியாளர்களை எதிர்த்து நடந்த பொதுமக்களின் போராட்டம் சிரியாவில் உள்நாட்டுப் போராக வெடித்தது. இதனால், செட்னயா சிறைச்சாலையில் கைதிகள் மூன்று மடங்காகப் பெருகினர். ஒரு மருத்துவர் சர்வாதிகாரியாக மாறினார். ஆட்சியை விமர்சித்தவர்கள், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படுபவர்கள் எல்லாம் அரசியல் கைதிகளாக இங்கே அடைக்கப்பட்டனர். மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2015ம் ஆண்டு டிசம்பர் வரை, 5 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரம் பேர் வரை செட்னயா சிறைச்சாலையில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்கிறது. இன்னும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது. இதனாலேயே பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இதனை மரண முகாம் என வர்ணிக்கின்றன.
அதுமட்டுமல்ல. பிரிட்டனிலுள்ள மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் எனும் அமைப்பு செட்னயாவில் 30 ஆயிரம் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அங்கிருந்து உயிர்பிழைத்த சிலர் சொன்ன தகவல்களின்படி, நள்ளிரவுக்குப் பிறகு சிவப்புக் கட்டடத்திலிருந்து வெள்ளைக் கட்டடத்திற்கு சில கைதிகள் மாற்றப்படுவார்களாம். ஏனெனில் வெள்ளைக் கட்டடத்தின் அடித்தளத்தில் மரணதண்டனை அறை இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
கண்ணைக் கட்டிக் கொண்டு அழைத்து வரப்படும் கைதிகள் இங்குள்ள கயிறுகளில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த அறையில் பத்து கயிறுகள் கொண்ட ஒரு தளம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது 2012ல் விரிவுபடுத்தப்பட்டு 20 கயிறுகள் கொண்டு இரண்டாவது தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படியாக அந்த அறையில் மூன்று செல்கள் இருந்துள்ளன. இதில் நூறு கைதிகள் வரை தூக்கிலிடப்பட்டுள்ளனர். இவர்களை புதைப்பதற்காக ஒரு இடமும் கட்டப்பட்டதாக 2017ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டியது.
இதனுடன், சிறைப்படுத்தியவர்களை பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர். அடித்தல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குதல், பட்டினி போடுதல், குடிக்க தண்ணீர் தராமல் வஞ்சித்தல் என சொல்லமுடியாத பல்வேறு கொடுமைகள் இருப்பதை ‘செட்னயா சிறைச்சாலைக் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் சங்கம்’ சுட்டிக் காட்டுகிறது.
இவையெல்லாம் உயிர்பிழைத்தவர்கள் சொன்னவைதான். இதனாலேயே புதிராக விளங்கிய செட்னயா சிறைச்சாலையை உலகமே உற்று நோக்கியது.
இங்கு காணாமல் போனவர்கள் ஏராளம். சிறையிலிருப்பவர்களை கிளர்ச்சிப்படையினர் வெளியில் விட்டதும் தங்கள் சொந்தங்களை வேதனையுடன் தேடி உறவினர்கள் பலரும் அலைந்தனர்.
ஒரு தாய் ஏழாண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட தன் மகனைத் தேடுவதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் கிடைக்கவில்லை. அவன் இறந்துவிட்டனா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பதாவது தனக்குத் தெரிய வேண்டும் என்றார் கண்ணீருடன்.
தற்போது இங்கு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் மீதமுள்ள கைதிகள் இருக்கலாம் என்றும் பலரும் தெரிவித்தனர். இதனால், மக்கள் படை உள்ளே சென்று அலசி ஆராய்ந்தது. ஆனால், அப்படி ஒன்று இல்லை என்பது தெரிய வந்தது. ரத்தம் தோய்ந்த தூக்குக் கயிறுகள் நிறைய கண்டறியப்பட்டன. எனவே பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கவலைமேலோங்கி நிற்கின்றது.
பேராச்சி கண்ணன்
|