ஹெல்மெட் நிச்சயதார்த்தம்



சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள ஜர்வாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேந்திர சாஹு. இவர் கடந்தவாரம் அங்கே ஜோதி சாஹுவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போதுதான் இந்த ஹெல்மெட் மாற்றும் சம்பவம் நடந்தது.  

இதுகுறித்து பேசும் பிரேந்திர சாஹு, தன்னுடைய தந்தை பஞ்ச்ராம் சாஹு கிராம பஞ்சாயத்துச் செயலாளராக இருந்ததாகவும், கடந்த 2022ம் ஆண்டு ஒருநாள் பைக்கில் வரும்போது விபத்து ஒன்றில் தலையில் அடிபட்டு இறந்துவிட்டதாகவும், அவர் இறப்பிற்குக் காரணம் ஹெல்மெட் அணியாததுதான் என்றும், அன்றிலிருந்து தனது குடும்பம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்து வருவதாகவும் சொல்கிறார்.

அதுமட்டுமல்ல. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ஹெல்மெட்டை பிரேந்திர சாஹுவின் சகோதரர் தர்மேந்திர சாஹு வழங்கியுள்ளார்.இந்தச் சகோதரர்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதத்தை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்விற்கும், இலவச ஹெல்மெட்டிற்கும் செலவழிக்கின்றனர்.

பி.கே.