8 வயது உலக சாம்பியன்!



இரண்டு வருடங்களுக்கு  முன்பு நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.
ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார். அவரை எதிர்த்து விளையாடுவதற்குத் தயாரானான் ஒரு சிறுவன். பெரிய அளவில் ஃபிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்த அவனுக்கு வயது 6.

அச்சிறுவனின் ஒவ்வொரு நகர்வுகளும் குகேஷை வியப்பில் ஆழ்த்தியது. குகேஷை அவனால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் குகேஷிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றான்.
‘‘அந்தப் பையன் விளையாடியது ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது; உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...’’ என்கிறார் குகேஷ். அந்தச் சிறுவன் இன்னொரு இந்திய சதுரங்க ஜாம்பவானான அர்ஜுன் எரிகசையுடனும் விளையாடினான். குகேஷ் மாதிரியே அர்ஜுனும் அச்சிறுவன் விளையாடுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அந்தச் சிறுவனுக்கு இப்போது வயது 8. அவன் பெயர், திவித் ரெட்டி. சமீபத்தில் இத்தாலியில் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தங்கப்பதக்கத்தை வென்று, உலக சாம்பியனாகியிருக்கிறார் திவித். கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனான அனிஷை சதுரங்க உலகம் கொண்டாடியது; இந்த வாரம் இன்னொரு இந்தியச் சிறுவனான திவித். எதிர்கால சதுரங்க விளையாட்டில் இந்தியர்களின் ஆதிக்கம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 1784 புள்ளிகளுடன் இருக்கிறார் திவித். உலக சாம்பியன்ஷிப்பில் நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார் திவித். அதுவும் அவரைவிட, அதிக புள்ளிகளுடன் இருக்கும் இரண்டு பேரை வென்றிருக்கிறார் திவித் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று வயதிலேயே திவித்தின் சதுரங்க பயணம் ஆரம்பித்தது. ஆங்கில செய்தித்தாள்களில் வரும் புதிர் விளையாட்டுகளில் திவித் ஆர்வத்துடன் இருப்பதை அவரது தந்தை மகேஷ் கவனித்திருக்கிறார்.

‘‘ஆரம்பத்தில் புதிர் விளையாட்டுகளின் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தான். புதிர்களைச் சரி செய்வதுதான் அவனுக்குப் பிடித்த ஒரே விளையாட்டு. நாளுக்கு நாள் அந்த விளையாட்டின் மீது அவனுக்கு ஆர்வம் அதிகமானது. அதனால் உள்ளூரில் இருந்த புதிர் விளையாட்டுக்கான அகாடமியில் திவித்தைச் சேர்ந்துவிட்டோம். அந்த நேரத்தில் திவித்துக்கு சதுரங்கமும் அறிமுகமானது...’’ என்கிற மகேஷ், மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.

புதிர் விளையாட்டைவிட, சதுரங்கம் திவித்தை அதிகம் ஆக்கிரமித்தது. திவித்தின் சதுரங்க ஆர்வத்தைப் பார்த்து , ராம கிருஷ்ணா என்ற சதுரங்கப் பயிற்சியாளரிடம் திவித்தைச் சேர்த்து
விட்டார் மகேஷ். நேரடியாக இல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பயிற்சி பெற்றார் திவித். கொரோனா வந்தது ஒருவிதத்தில் திவித்துக்குச் சாதகமாக அமைந்தது. 

ஆம்; ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரம் முழுவதும் சதுரங்கப் பயிற்சியில் ஈடுபட்டார் திவித். ஒரு கட்டத்தில் திவித்துக்கு இருக்கும் திறமையைப் பார்த்து, மகன் சதுரங்க விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தட்டும்; பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால் படிப்பை விட, சதுரங்கத்தில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்தார் திவித்.

‘‘தந்திரமாக விளையாடுவதுதான் திவித்தின் தனிச் சிறப்பு. காஸ்பரோவ்தான் அவனுக்கு ஆதர்சம். காஸ்பரோவ் போல அடித்து ஆடுவதுதான் திவித்துக்குப் பிடிக்கும். இப்படி ஆடுவது பெரும்பாலான நேரங்களில் தோல்வியைக் கொண்டு வரும். ஆனாலும் அவனுக்கு அதுதான் பிடித்திருக்கிறது...’’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார் மகேஷ். ஆரம்ப நாட்களில் திவித் விளையாடியது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆம்; அவர் பங்கு பெற்ற முக்கியப் போட்டிகளில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தார்.

7 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் ஏழாவது இடத்தைத்தான் திவித் பிடித்தார். ஆனாலும், துவண்டு போகாத திவித், ஒரு வருடம் கடுமையான பயிற்சி செய்து உலக சாம்பியன் ஆகியிருப்பது மற்றவர்களுக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த அபிமன்யு மிஸ்ரா என்பவர் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருக்கிறார். தான் பிறந்து 12 வருடங்கள், நான்கு மாதங்கள், 25 நாட்களில் கிராண்ட்மாஸ்டரானார் அபிமன்யு. இந்தச் சாதனையை திவித் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.சக்திவேல்