Must Watch



லக்கி பாஸ்கர்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘லக்கி பாஸ்கர்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், பாஸ்கர். வங்கியில் கேஷியராக வேலை செய்து வருகிறான். அவனுக்கு மனைவியும், மகனும் இருக்கிறார்கள். 

வங்கியில் கிடைக்கும் வருமானம் பாஸ்கருக்கு போதுமானதாக இல்லை. திறமையான வேலைக்காரனான தனக்குப் பதவி உயர்வு கிடைக்கும், சம்பளம் உயரும் என்று காத்திருக்கிறான்.ஆனால், எதுவும் நடப்பதில்லை. கடன் கொடுத்தவர்கள் வேறு பாஸ்கரை அவமானப்படுத்துகிறார்கள். வங்கியிலும் மேலதிகாரி பாஸ்கரிடம் மோசமாக
நடந்துகொள்கிறார்.

இந்நிலையில் பாஸ்கர் ஒரு முடிவு எடுக்கிறான். வங்கியில் உள்ள ஓட்டைகளை, பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறான். வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தே செய்கிறான். பாஸ்கரின் காட்டில் பண மழை பொழிகிறது. பெரிய பணக்காரனாக மாறுகிறான்.

 பாஸ்கர் மாட்டிக்கொண்டானா அல்லது தப்பித்துவிட்டானா, வங்கியின் பலவீனங்களை எப்படி அவன் தனக்குச் சாதகமாக மாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அப்படியே நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது திரைக்கதை. பாஸ்கராக கலக்கியிருக்கிறார் துல்கர் சல்மான். படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.

அவுட் ஆஃப் மை மைண்ட்

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய ஆங்கிலப்படம் ‘அவுட் ஆஃப் மை மைண்ட்’. இப்போது  ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, மெலோடி ப்ரூக்ஸ். அவளால் பேச முடியாது. சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்து வருகிறாள். ‘ஃபிரண்ட்ஸ்’ எனும் தொலைக்காட்சி தொடரை விரும்பிப் பார்க்கிறாள். பெரிய புத்திசாலியாக இருப்பதால் மெலோடிக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும் என்று அவளது அப்பா நினைக்கிறார்.

பள்ளிக்கூடம் மகளுக்கு உகந்த இடம் இல்லை என்று அம்மா நினைக்கிறார். ஒரு மருத்துவரைச் சந்தித்து, அவரது ஒப்புதல் மற்றும் சிபாரிசுடன் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறாள் மெலோடி.
வகுப்பறையில் மாணவர்களும், ஆசிரியருமே கூட வேண்டா வெறுப்புடன்தான் மெலொடியை அணுகுகின்றனர். வேற்று கிரக வாசியைப் போல பார்க்கின்றனர்.

இந்தச் சூழலை மெலோடி எப்படிச் சமாளித்து, தனது படிப்பைத் தொடர்கிறாள் என்பதே மீதிக்கதை. அதிகளவில் விற்பனையான ‘அவுட் ஆஃப் மை மைண்ட்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இப்படம். இதன் இயக்குநர் ஆம்பர் சீலி.

குமஸ்தன்

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘குமஸ்தன்’. மிகவும் தந்திரமான குமாஸ்தா. ஆனால், வெளியில் அவனைப் பற்றி யாருக்கும் தெரியாது. சட்டம், நீதித்துறை, காவல்துறை என அனைத்திலும் இருக்கிற பலவீனங்களைக் கரைத்துக் குடித்தவன் அந்த குமாஸ்தா.

ஒரு நாள் மனைவியைக் கொன்று விடுகிறான். இந்தக் கொலையைப் பற்றி காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் தெரிய வருகிறது. அந்த குமாஸ்தாதான் மனைவியைக் கொன்றிருப்பான் என்று பலரும் உறுதியாக நம்புகின்றனர். எப்படியாவது அவனை கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றி சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர். 

ஆனால், தனது புத்திசாலித்தனத்தால் நீதித்துறையின் கண்களிலே விரலைவிட்டு ஆட்டுகிறான். குமாஸ்தா மாட்டிக்கொண்டானா? அவனைப் பற்றிய மர்மங்கள் வெளிப்பட்டதா என்பதே திரில்லிங் திரைக்கதை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சஸ்பென்ஸை அப்படியே கொண்டு போயிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் அமல் கே ஜோபி.
அவர் லிட்டில் சீக்ரெட்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘அவர் லிட்டில் சீக்ரெட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.  லோகனும் அவேரியும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அவேரி மீது லோகனுக்கு காதல். தன் காதலைச் சொல்லி ஒருவேளை அவேரி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நட்பு முறிந்துவிடுமோ என்ற பயத்திலேயே காதலைச் சொல்லாமல் இருக்கிறான் லோகன். 

அவேரிக்கு வெளி ஊரில் வேலை கிடைக்கிறது. அவள் ஊருக்குச் செல்வதற்கு முன்பு காதலைச் சொல்கிறான் லோகன். ஆனால், அது தோல்வியில் முடிகிறது. அதற்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்வதே இல்லை.

பத்து வருடங்களுக்குப் பிறகு எதேச்சையாக அவேரியும், லோகனும் சந்தித்துக்கொள்கின்றனர். தங்களது கடந்த காலத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும்படி லோகனை வேண்டுகிறாள் அவேரி. 

லோகன்- அவேரி ரகசியம் வெளிப்பட்டதா? எதற்காக கடந்த காலத்தை ரகசியமாக வைக்கும்படி லோகனிடம் அவேரி சொன்னாள் என்பதற்கான பதிலை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஜாலியாகப் பார்க்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்டீபன் ஹெரெக்.

தொகுப்பு: த.சக்திவேல்