இந்தியாவில் இருவகை ராஜநாக இனங்கள் இருக்கின்றன..!



கண்டுபிடித்திருக்கிறார் 20 ஆண்டுகளுக்கு முன் ராஜநாகத்தால் கடிபட்டு உயிர் பிழைத்தவர்

ராஜ நாகம்... ஆங்கிலத்தில் கிங் கோப்ரா. பெயரைக் கேட்டாலே உலகமே அதிரும். காரணம், ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட ராஜ நாகத்தின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியிருக்கிறார் கெளரி ஷங்கர்.

இவர் உயிர் பிழைத்தது எப்படி?

விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன் ராஜ நாகம் குறித்து அப்டேட் செய்து கொள்வது நல்லது.இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் ஏற்படக் காரணமாக இருப்பவை நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே. அப்படித்தான் நம் நாடு இதுநாள் வரை கருதி வருகிறது.நாகம், கட்டுவிரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன்... இந்த நான்கு வகைப்பாம்புகளால்தான் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கின்றன. 
எனவே, இந்தியாவில் இந்த நான்கு பாம்புகளின் நஞ்சுக்கு மட்டுமே மருந்துகள் உள்ளன. அதுவும், அனைத்துக்குமே கூட்டுமுறையில் பயன்படுத்தக் கூடிய நஞ்சுமுறி மருந்துகள். மேலே குறிப்பிட்ட நான்கு பாம்புகள் தவிர, இந்தியாவில் ராஜநாகம் கடித்தும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். என்றாலும், ராஜநாகக் கடிக்கென தனியாக நஞ்சுமுறி மருந்து இந்தியாவில் இல்லை. அதற்கான மருந்து தாய்லாந்தில் இருந்தே இப்பொழுதும் வரவழைக்கப்படுகின்றன. ராஜநாகத்தின் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதால் இந்தியாவில் அதற்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதில் யாரும் போதிய அளவுக்கு கவனம் செலுத்தவில்லை.

பெயரளவில் ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும், அவை அறிவியல் ரீதியாக நாகப் பாம்பு என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும் வெவ்வேறு பேரினத்தைச் சேர்ந்தவை.
ஆம். ராஜநாகம் - நாகப் பாம்பு ஆகிய இரண்டுக்குமான வாழ்விடம், வாழ்வுமுறை, நடத்தை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன.நாகப் பாம்புகள் நாஜா (Naja) என்ற பேரினத்தின் கீழ் வருகின்றன; ஆனால், ராஜநாகம் ஓபியோஃபேகஸ் (Opiophagus) என்ற பேரினத்தின் கீழ் அறிவியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உடல் அளவிலேயே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நாகப்பாம்பு 6 முதல் 8 அடி வரை வளரும். ஆனால், இந்தியாவில் காணப்படும் ராஜ நாகம் அதிகபட்சம் 14 அடி வரை வளரக்கூடியது.நாகப் பாம்பின் உடல் முழுக்க ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால், ராஜ நாகத்தின் உடலில் சீரான இடைவெளியில் வெளிர்நிறப் பட்டைகள் இருக்கும். அந்தப் பட்டைகளின் தன்மை ராஜ நாக வகைகளுக்கு இடையே உள்ள வேறுபட்டாலும் இருக்கும்.

நாகம் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தென்படும். ஆனால், ராஜ நாகம் பெரும்பாலும் அடர்ந்த, உயரமான காடுகளில் வாழக் கூடியது. அதோடு, சமீப காலமாக மலையடிவாரப் பகுதிகளிலும் தென்படுகின்றது.நாகப்பாம்புகளைப் பொருத்தவரை, சில தருணங்களில் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தென்பட்டுள்ளன. ஆனால், ராஜ நாகம் வாழ்விட எல்லைகளை வகுத்து வாழக்கூடியது.இவைபோக, இரண்டின் இனப்பெருக்கம், உணவுமுறை ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உள்ளன.

ராஜநாகம் தனது உடலால் சருகுகளைக் குவித்து, கூடு அமைத்து, அதில் முட்டையிடக்கூடிய பழக்கம் கொண்டது. குட்டிகள் பிறக்கும்வரை, கூட்டில் இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. நாகப் பாம்புகளும் முட்டைகளைப் பாதுகாப்பதை அவதானித்து இருந்தாலும், கூடு அமைக்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை.

இவை போக, உணவுமுறையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் உள்ளது. எலி, பெருச்சாளி போன்றவற்றையும், பறவைகள், நீர்நில வாழ்வியல் உயிரிகளான தவளை, தேரை ஆகியவற்றையும் நாகப் பாம்புகள் உணவாகக் கொள்கின்றன.

ஆனால், ராஜ நாகங்கள் மற்ற பாம்புகளையே தனது உணவுப் பட்டியலில் முதன்மையாக வைத்துள்ளன. சிறிய அளவு மலைப் பாம்பு, நாகம், பச்சைப் பாம்பு, சாரை, நீர்க்கோலி, விரியன் போன்ற பல வகைப் பாம்புகளை அவை அதிகம் உண்ணுகின்றன.

ராஜநாகங்கள், ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு நிலவியல் அமைப்பில் ஒரேயொரு வகை ராஜ நாகம் மட்டுமே வாழும். உதாரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருவேறு வகைகளைச் சேர்ந்த ராஜ நாகங்கள் வாழாது. ஒரே வகை ராஜ நாகம்தான் இருக்கும்.

ராஜ நாகம், பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும்.
அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கின்றது.அத்தகைய ஒரு சூழ்நிலையின்போது, ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005ல் ராஜ நாகம் கடித்தது. ஆமாம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்புதான்.

கௌரிஷங்கர் ராஜநாகத்தால் கடிபட்டபோது அவரது உடல் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நஞ்சுமுறி மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இந்தியாவில் கிடைக்கும் கூட்டுமுறை நஞ்சுமுறி மருந்தும் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ஆனாலும் கெளரிஷங்கர் பிழைத்துக் கொண்டார். இதுதான் ஆண்டுகள் கடந்தும் பேசுபொருளாக இருக்கக் காரணம்.

“என்னைக் கடித்த பாம்பு முழு வீரியத்துடன் கடிக்கவில்லை. அதனால், நஞ்சின் அளவு குறைவாகவே என் உடலில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ராஜநாகத்தின் நஞ்சால் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகள் எனக்கு ஏற்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாகவே இருந்தன; என் உடலில் வெளிப்பட்டன. நஞ்சுமுறி மருந்துகள் சரிவர வேலை செய்யாத நிலையில், பாம்புக் கடியால் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் எனக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதன்பிறகே ராஜநாகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.இத்தனை ஆண்டுகளாக ‘ஓபியோஃபேகஸ் ஹன்னா’ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரேயொரு வகை ராஜநாகமே இந்தியா முழுக்க வாழ்வதாகக் கருதப்பட்டது.

ஆனால், தற்போது எனது பத்தாண்டு கால ஆய்வின் மூலம், அந்தக் குறிப்பிட்ட ‘ஓபியோஃபேகஸ் ஹன்னா’ ராஜநாக இனம், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதையும்; அந்த ராஜநாகமும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் ராஜ நாகமும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை எனவும் கண்டுபிடித்துள்ளோம்.உத்தர கன்னடா போன்ற பகுதிகளைச் சுற்றி வாழக்கூடிய பூர்வகுடி சமூகங்கள் ராஜநாகங்களை அச்சமூட்டக்கூடிய உயிரினமாகப் பார்ப்பதில்லை.

அவர்களைப் பொறுத்தவரை அவை மிகவும் அவசியமான, விரும்பத்தக்க உயிரினம். காரணம், ராஜநாகம் தங்கள் பகுதிகளில் இருப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
நாகம், சாரை, வரையன், நீர்க்கோலி என இதர வகைப் பாம்புகளை அவை சாப்பிடுவதும் இதற்கொரு முக்கியக் காரணம். அதன்மூலம், மற்ற நச்சுப் பாம்புகளால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ராஜநாகத்தின் இருப்பை அவர்கள் அவசியமானதாகக் கருதுகின்றனர்.

இந்தியாவில் ராஜநாகத்தின் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவை சமீப காலமாக கிராமப் பகுதிகளிலும் அதிகம் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, நஞ்சுமுறி மருந்து தயாரித்துக் கொள்வது அவசியம்...” என்கிறார் கௌரிஷங்கர்.

என்.ஆனந்தி