செரியன் நகர் to சான் ஃபிரான்சிஸ்கோ...
உலகக் கோப்பையை வென்ற சென்னை மாணவி!
அமெரிக்காவில் நடந்த ஆறாவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் கோப்பையை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காசிமா.இதில் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்றிலும் தங்கம் வென்று தனி முத்திரையே பதித்திருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல. பதினேழு வயதாகும் காசிமா, இளம்வயதில் இந்த உலகக் கோப்பையை வென்றுள்ள இளம் வீராங்கனையாக மிளிர்கிறார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் இருக்கிறது அவர் வீடு. ஆனால், அந்தப் பகுதியில் அவர் வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. ஏனெனில், காசிமாவின் பெயரைச் சொன்னாலே அவர் வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு உலகக் கோப்பை புகழ் அவரை அடையாளப்படுத்தி இருக்கிறது. அவரின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருக்கின்றனர். குறிப்பாக முதல் பயிற்சியாளரும் தந்தையுமான மகபூப் பாட்ஷா முழு நிலவாய் பிரகாசிக்கிறார்.ஆட்டோ டிரைவரான அவர் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில், ‘செரியன் நகர் கேரம் கோச்சிங் சென்டர்’ என்ற பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அவர் விதைத்த விதையில் விருட்சமாக வளர்ந்து நிற்கிறார் காசிமா. ‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே கேரம் மேல் ஆர்வம். எனக்குனு இல்ல. இந்த வடசென்னை மக்களுக்கே கேரம் உயிர். எந்தத் தெருவுக்குப் போனாலும் கேரம் விளையாடிட்டு இருப்பாங்க.
என் அப்பா கௌஸ் பாட்ஷா கேரம் விளையாடுவார். ஆனா, அவர் பெரிசா மாவட்ட போட்டிகளுக்கு எல்லாம் போகல.
அவரைப் பார்த்துதான் நான் விளையாட ஆரம்பிச்சேன். மாவட்ட அளவில் காலிறுதி வரை வந்தேன். என்னை மேலும் கொண்டு போக ஆளில்ல.பின்புலம் இல்லாததால் குடும்பமே முக்கியம்னு 21 வயசுலயே ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் என் ஆசையைப் பசங்க மேல் வச்சேன். இப்ப அவங்க சாதிச்சிருக்காங்க...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் காசிமாவின் தந்தை மகபூப் பாட்ஷா.
‘‘பள்ளிகளுக்கு ஆட்டோ சவாரி முடிஞ்சதும் நேராக கேரம் கோச்சிங் சென்டருக்கு வந்து பசங்களுக்கு பயிற்சி அளிப்பேன். என்கிட்ட 50 பசங்க பயிற்சி எடுக்கிறாங்க. இதுல சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரை இருக்காங்க. இந்தக் கோச்சிங் சென்டர் அமைய சசிகுமார் என்கிற நண்பர் உள்பட பலர் உதவினாங்க.
எல்லோரும் ஒரு குழுவாக இருந்து செயல்படுறோம்.இப்ப இங்கிருந்து 14 பேர் நேஷனல் போயிருக்காங்க. இங்க லோடுமேன், ஆட்டோ ஓட்டுறவங்க, மீனவர்களின் குழந்தைகள்னு எல்லோரும் படிக்கிறாங்க. அப்பா இல்லாத பசங்களும் இருக்காங்க. அவங்களுக்கு இதைக் கத்துக்கொடுத்திட்டால் பயனுள்ளதாக இருக்குமேனு செய்றோம்.
இதில் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறும்போது அரசு வேலை கிடைக்கும். அப்படியாகத்தான் என் பையன் அப்துல் ரகுமான் பயிற்சி எடுத்தான். அவன் 2016ம் ஆண்டு ஜூனியர் நேஷனல் சாம்பியன் ஆனான். அப்போதிருந்து காசிமா உத்வேகம் ஆகிட்டாங்க...’’ என மகள் காசிமாவின் தலையைக்கோதி சிரிக்கிறார் மகபூப் பாட்ஷா. அவரைத் தொடர்ந்தார் காசிமா.
‘‘எனக்கு அண்ணனைப் பார்த்துதான் கேரம்ல ஆர்வம் வந்தது. அவர் ஜூனியர் நேஷனல் சாம்பியன் ஆனதும் நிறைய பாராட்டுகள் கிடைச்சது. மேடைகளில் பாராட்டும்போது நான் கீழிருந்து கைதட்டி பார்த்திருக்கேன்.
அப்பதான் நானும் இந்தமாதிரி கப் வாங்கணும், பலரும் பாராட்டணும், கைதட்டணும்னு தோணுச்சு. அப்ப எனக்கு ஆறு வயசு. அப்போதிருந்து பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.
ஏழு வயசுல முதல் டைட்டில் வாங்கினேன்.
அதன்பிறகு நேஷனல் லெவல்ல பத்து தங்கப்பதக்கங்கள் வென்றேன். சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படிச்சுக்கிட்டே சின்சியரா பயிற்சி எடுத்தேன். பள்ளியில் நிறைய சப்போர்ட் செய்தாங்க. அப்புறம், ராயபுரம் செயின்ட் ஆண்டனி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். அங்கேயும் விளையாட்டு ஆசிரியர், தலைமையாசிரியர்னு எல்லோரும் சப்போர்ட் செய்தாங்க. அதனால், நிறைய போட்டிகளுக்குப் போக முடிஞ்சது. இப்ப எஸ்ஐஇடி கல்லூரியில் பி.ஏ கார்ப்பரேட் எகனாமிக்ஸ் முதலாமாண்டு படிக்கிறேன். செமஸ்டர் அப்பதான் இந்த உலகக் கோப்பை நடந்தது. இப்ப எனக்காக தனியாக தேர்வு வைக்கிறாங்க. அந்தளவுக்கு இங்கேயும் சப்போர்ட் பண்றாங்க...’’ என அவர் சந்தோஷமாகச் சொல்ல, காசிமாவின் வெற்றிக் கதையைத் தொடர்ந்தார் மகபூப் பாட்ஷா.
‘‘ஆரம்பத்துல காசிமா நல்லா விளையாடுறாங்கனு மாவட்ட அளவில் என்ட்ரி கொடுத்தோம். அவங்க விளையாடிய முதல் மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாவதாக வந்தாங்க. அப்புறம், மாநில அளவில் 12 வயது பிரிவில் போனாங்க. அதிலும் இரண்டாவதாக வந்தாங்க. மாநில அளவில் வின்னர், ரன்னருக்கு மட்டும்தான் தேசிய அளவில் போக வாய்ப்பு கிடைக்கும். அப்படியாக அந்த ரன்னரை வச்சு தேசிய அளவில் போனாங்க. அங்கேயும் இரண்டாவதாக ரன்னர்அப் ஆனாங்க.
பிறகு, சிறப்பாக பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சோம். சென்னை மாவட்ட கேரம் சங்கம், தமிழ்நாடு கேரம் அசோஸியேஷன் எல்லோரும் சப்போர்ட் செய்தாங்க. அப்புறம், மாநில, தேசிய அளவில் கலந்துக்கிட்டாங்க. 14 வயசுல சப் ஜூனியர் பிரிவுல விளையாடினாங்க. அதுல குழுவுல தங்கப்பதக்கம் வாங்கினாங்க. தனிநபர் பிரிவுல வெண்கலம் வென்றாங்க. அடுத்து அண்டர் 18 ஜூனியர் பிரிவில் விளையாடினாங்க. அதுல ஒரு தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் ஜெயிச்சாங்க.
அப்புறம், காசிமா விளையாட்டு சிறப்பா இருக்குனு சீனியர் பிரிவுல ஆட வச்சோம். அப்படியாக ஆந்திராவில் நடந்த சீனியர் பெடரேஷன் போட்டியில் வின்னர் அடிச்சாங்க. அந்தப் பாயிண்ட் பயனுள்ளதாக இருந்தது.
அடுத்து அதே சீனியர் பிரிவுல டில்லியில் நடந்த போட்டியில் எட்டாம் இடம் பிடிச்சாங்க. பிறகு குவாலியரில் மூன்றாம் இடம் கிடைச்சது. இந்த மூணு போட்டிகளிலும் எடுத்த பாயிண்ட்தான் அவங்கள சர்வதேச போட்டிக்கு முன்னேற வச்சது.
இது முதல் சர்வதேச வாய்ப்பு. இதுக்கு முன்னாடி மாலத்தீவு போனாங்க. ஆனா, அது சுவிஸ் லீக்னு குழுப்போட்டி. இப்பதான் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி மூணிலும் கலந்துக்கிட்டாங்க. மூன்றிலும் தங்கப்பதக்கம் வாங்கி நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்காங்க. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடந்த இந்தப் போட்டியில் 18 நாடுகள் கலந்துக்கிட்டாங்க.
இந்தியாவுல இருந்து நான்கு பேர் போனாங்க. இதுல தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க மூணு பேர். இதுல காசிமாவும், நாகஜோதியும் சென்னையைச் சேர்ந்தவங்க. மித்ரா மதுரைக்காரங்க. இவங்களுக்கு தமிழ்நாடு கேரம் அசோஸியேஷன் செயலாளரும், அர்ஜுனா விருது வென்றவருமான மரிய இருதயம் சார் பயிற்சி கொடுத்தார்.
அவர் கேரம்ல 16 முறை மாநில சாம்பியன். 9 முறை தொடர்ந்து தேசிய சாம்பியன். இரண்டு முறை உலகச் சாம்பியன். அவர் இந்திய பயிற்சியாளராகப் போனார். பொதுவாக கேரமை எல்லோரும் கேஷுவல் கேம்னு நினைப்பாங்க.
ஆனா, அப்படியில்ல. இதை எல்லோராலும் விளையாட முடியாது. எப்போ கவனமாக விளையாடுறாங்களோ அப்ப பதட்டமாகிடுவாங்க. அந்த பதட்டத்தை விரல்கள் காட்டிக் கொடுத்திடும். அதைத் தவிர்த்துவிட்டு நம்பிக்கையோடு விளையாடணும். அந்தத் துணிச்சலை நாம் வளர்த்துக்கணும். விரல்களில் பதட்டம் தெரியாமல் மன தைரியத்துடன் எப்படி ஸ்கோர் செய்யலாம், பாடி பொசிஷன் எப்படி வச்சால் ஸ்கோர் பண்ணமுடியும் உள்ளிட்ட பல டிப்ஸ்களை மரிய இருதயம் சார் சொல்லித் தந்தார். அப்புறம், சென்னை மாவட்ட சங்கத்தின் செயலாளர் அமுதவன் சாரும் நிறைய உத்வேகம் கொடுத்தார். இப்ப தமிழ்நாட்டில் இளவழகிக்குப் பிறகு காசிமாதான் இரண்டாவது சாம்பியன். காசிமா இறுதிப்போட்டியில் ராஷ்மி குமாரினு டில்லியைச் சேர்ந்தவருடன்தான் மோதினாங்க.
அவங்க மூன்று முறை உலக சாம்பியன். 12 முறை தேசிய சாம்பியன். அவங்களுக்கு 40 வயசு இருக்கும். அவங்களுக்கு நிறைய நுணுக்கங்களும் தெரியும். அவங்களுடன் ஆடி 17 வயதில் காசிமா வெற்றி பெற்றிருக்காங்கனா அதுக்கு கடவுள்தான் காரணம்.
அந்த இறுதிப் போட்டியை நம்ம சென்டர்லயே பெரிய திரை போட்டு என் மனைவி மும்தாஜ், மூத்த மகள் அசினா, மகன் அப்துல் ரகுமான், இங்குள்ள மக்கள்னு எல்லோரும் சேர்ந்து லைவ்வாக பார்த்தோம். அப்ப எல்லோருமே காசிமாவுக்காக பிரார்த்தனை பண்ணினாங்க. ஒரு செட்டுக்கு 25 பாயிண்ட். மூணு செட் விளையாடணும். கடைசி செட்ல அவங்களும் 24 பாயிண்ட், காசிமாவும் 24 பாயிண்ட். அந்த ஒரு பாயிண்ட் யார் எடுக்குறாங்க என்பதில் விறுவிறுப்பு கூடுச்சு. கடைசியா காசிமா பக்கம் கடவுள் இருந்தார்...’’ என ஆனந்தமாகச் சொல்லும் மகபூப் பாட்ஷா, ‘‘இதுக்காக நான் பலருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்...’’ என்கிறார்.
‘‘முதல்ல தமிழக அரசுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி சாருக்கும் நன்றி சொல்லணும். ஏன்னா, இந்த உலகக் கோப்பையில் கலந்துக்க விசா, விமானக் கட்டணம், போட்டிக்கான கட்டணம், தங்குற செலவுனு எல்லாவற்றுக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணும். நான் ஆட்டோ ஓட்டுறதால என்னால் இவ்வளவு தொகை செலவிடமுடியாது.
அந்நேரம்தான் சென்னை மாவட்ட கேரம் சங்கத்திடம் கேட்டோம். அவங்க தமிழ்நாடு கேரம் சங்கத்திடம் சொல்லி விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரை பார்க்கலாம்னு சொன்னாங்க. உடனே மனு எழுதி அனுப்பினோம்.
அடுத்த நாளே துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி சார் கூப்பிட்டார். காசிமா, நாகஜோதி, மித்ரா, பயிற்சியாளர் மரிய இருதயம் சார் ஆகிய நான்கு பேருக்கும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் தந்தார்.
அத்துடன், ‘வெற்றி பெற்றுவிட்டு வந்து என்னை பாருங்க’னு வாழ்த்தி அனுப்பினார். அவரின் வாழ்த்து நிறைவேறியிருக்கு. அவருக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்...’’ என மனநிறைவாக மகபூப் பாட்ஷா சொல்ல, தந்தையின் கைகளைப் பிடித்தபடி காசிமா தொடர்ந்தார். ‘‘என்னுடைய நோக்கம் உலகக் கோப்பையாக இருந்தது. அதை இப்ப வென்றிருக்கேன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் நடக்க இருக்கு. அதுல பங்கெடுத்து வெற்றி பெறணும். இப்போதைக்கு என் இலக்கு அதுதான்...’’ என நம்பிக்கையாய் தம்ஸ்அப் காட்டுகிறார் காசிமா.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|