வீடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
‘சராசரியாக உலகளவில் சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகள் வீட்டார், உறவினர் மற்றும் குடும்ப நண்பர்கள் மற்றும் ஆண் தோழர்களால் ஏற்படு
கின்றன’ என்று ஓர் அச்சமூட்டம் அறிக்கையை கடந்தவாரம் சமர்ப்பித்து பெண்களின் வயிற்றில் திகிலைக் கிளப்பியிருக்கிறது ஐநா சபை. கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், பல நாடுகளில் பெண்களால் கொண்டாடப்பட்டது. இந்த நாளில்தான் ஐநா சபையின் ஒரு துறை இப்படி ஓர் அறிக்கையை சமர்ப்பித்து பெண்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
‘கடந்த வருடம் எங்களிடம் கிடைத்த தகவலின்படி 51 ஆயிரத்து 100 பெண்கள் உலகளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைகளில் சுமார் 60 சதவீதக் கொலைகள் அந்தப் பெண்களின் வீட்டார், குடும்ப உறவினர்கள், ஆண் தோழர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.நாடுகளைப் பொறுத்தளவில் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பான்மையான கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த நாடுகளில் மட்டுமே சுமார் 21,700 கொலைகள். அதாவது ஒரு லட்சம் ஆப்பிரிக்கப் பெண்களில் சுமார் 2.9 கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. அமெரிக்காவில் அதே ஒரு லட்சம் பெண்களில் 1.6 கொலைகள். ஆசியாவில் 0.8, ஐரோப்பாவில் 0.6’ என்று சொல்லும் அறிக்கை மேலும் சில அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்களைத் தருகிறது. ‘பொதுவாக ஆண்கள்தான் உலகளவில் அதிகமாக கொல்லப்படுகின்றனர். உதாரணமாக கடந்த வருடத்தில் மட்டும் மொத்தக் கொலைகளில் சுமார் 80 சதவீதம் ஆண்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைப் பொறுத்தளவில் வெறும் 20 சதவீதம்தான். ஆனால், என்ன பெரிய கொடுமை என்றால் ஆண்கள் படுகொலை எல்லாமே வெளி ஆட்களால் ஏற்பட்டது.
ஆனால், பெண்கள் கொலையில் 60 சதவீதம் வீடு, குடும்ப உறுப்பினர், குடும்ப உறவினர்கள் மற்றும் ஆண் நண்பர்களால் ஏற்பட்டது’ என்று சொல்லி அதிர்ச்சியூட்டுகிறது இந்த அறிக்கை. பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று சொல்வது எல்லாம் சும்மாதான் போல.
டி.ரஞ்சித்
|