மாடலிங், அழகிப் போட்டி, நடிகை, பிசினஸ் வுமன்...



கெத்து காட்டும் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் டிரான்ஸ்ஜெண்டர்

நடிகை நமீதாவை தெரிந்தளவுக்கு மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த நமீதா மாரிமுத்துவை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தலைநகரத்தில் பிறந்த இவர் என்ஜினியரிங் பட்டதாரி என்பதோடு உலகளவில் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தேசத்துக்கு பெருமை சேர்த்தவர்.
மாடலிங், பிசினஸ் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் இவர் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. சமுத்திரக்கனி, சசிகுமார் நடித்த ‘நாடோடிகள் 2’ படத்திலிருந்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் குறுகிய காலத்தில் இருபது படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘வள்ளிமயில்’, ‘சைலன்ட்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

யார் இந்த நமீதா மாரிமுத்து?

நான் பிறந்தது சென்னை இராயப்பேட்டைல. அப்பா மாரிமுத்து, மாற்றுத் திறனாளி. பழைய கார்களை வாங்கி விற்கும் பிசினஸ். அம்மா வெண்ணிலா ஹோம் மேக்கர். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. படிச்சது சாப்ட்வேர் என்ஜினியரிங். கடைசி ஆண்டு படிக்கும்போதுதான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். அறுவை சிகிச்சை மூலம் டிரான்ஸ்ஜெண்டரா மாறுவதற்கு வீட்டில் பெரிய போராட்டத்தை நடத்தினேன்.

ஒரு கட்டத்தில் வீட்டில் என்னை புரிஞ்சுக்கிட்டு ‘நீ மத்த திருநங்கைகள் மாதிரி இல்லாமல் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பெருமை சேர்க்கணும்’னு என்னை ஆதரிக்க ஆரம்பிச்சாங்க. அதிலிருந்து என்னுடைய கவனத்தை அழகிப் போட்டி, மாடலிங், சினிமா பக்கம் திருப்பினேன். 2014 லிருந்து சினிமாவில் இருக்கிறேன்.
இந்தியா சார்பாக இருமுறை உலக அழகிப் போட்டிகளில் பங்கேற்று ஜெயித்திருக்கிறேன். 2019ல் ஸ்பெயின்ல நடந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட முதல் திருநங்கை நான் மட்டுமே.

2022ல் தாய்லாந்தில் நடந்த ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகிப் போட்டியில் தங்கம் வென்றேன்.இந்த ஆண்டு பெண்களுக்கான நேஷனல் லெவல் ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியிலும் கலந்துகொண்டேன். முதன் முறையாக பெண்கள் கலந்துகொள்ளும் போட்டியில் திருநங்கைகள் சார்பாக நான் மட்டுமே கலந்துகொண்டேன்.

அழகிப் போட்டியில் கிரீடம் சூட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்துச்சு?

ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பெண்கள் மத்தியில் ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் கலந்துகொள்வது கனவு மட்டுமல்ல, அது நடக்குமா என்று கூட தெரியாது. அப்படி கேள்விக்குறியுடன் இருந்த எனக்கு வாய்ப்பு கிடைச்சதோடு மட்டுமல்லாமல், ஜெயித்ததும் வாழ்நாளில் மறக்க முடியாதது.
நான் பெருமைக்காக சொல்லவில்லை. ரியாலிட்டி ஷோ, அழகிப் போட்டி என்று பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட முதல் திருநங்கை நான் மட்டுமே. ஸ்பெயின் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் திருநங்கை நான் மட்டுமே. மிஸ் இன்டர்நேஷனல் குயின் போட்டியில் பத்து வருடமாக தமிழ்நாட்டிலிருந்து யாரும் கலந்துகொள்ளாதபோது அதையும் முறியடிச்சேன். மிஸ் யூனிவர்ஸ்ல என்னுடைய பேர் பதிவாகியிருக்கு.

அப்படி வரலாற்றில் முதல் சாதனை என்னுடையது என்று நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இந்த சாதனையெல்லாம் எனக்காக மட்டுமல்ல, சமுதாயத்துக்கும் சேர்த்துதான். அப்படி என்னுடைய சாதனைகள் காலம் கடந்து பேசப்படும் என்று நினைக்கும்போது அது பெரிய சந்தோஷத்தை தருகிறது.

இளமைக் காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?

இளமையில் எந்தப் புரிதலும் இல்லாமல் இருந்தேன். எனக்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தேன். அதன்பிறகுதான் இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கும் இடம் உண்டு, அவர்களுக்கும் வாழ்வாதாரம் உண்டு என்பதைத் தெரிஞ்சுக்கிட்டு என் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு ஒரு வழியை தேர்ந்தெடுத்து வாழ ஆரம்பிச்சேன்.  

ஆனால், சமூகம் எனக்கு அவ்வளவு எளிதில் இடம் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் யாரும் என்னைப் புரிஞ்சுக்கல. என்னுடைய புரொஃபஷனை பார்த்து போகப் போக சமூகத்தில் வாழ இடம் கிடைச்சதோடு, என்னை செலிபிரிட்டியாகவும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

சின்ன வயசுலேர்ந்து டான்ஸ்ல ஆர்வம் இருந்ததால நடிகையா வரணும், மாடலிங் துறையில் சாதிக்கணும் என்ற கனவு இருந்துச்சு. ஜெயந்தி மாஸ்டர், கலா மாஸ்டரிடம் டான்ஸ் கத்துக்கிட்டேன். தனியார் டிவி நிகழ்ச்சிகளில் நடந்த பல நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு வாங்கியிருக்கிறேன்.

பெரியவங்க சொல்வதுபோல், வாழ்க்கையில் ஓர் அடி எடுத்து வெச்சா அடுத்த அடிக்கு  வழி கிடைச்சுடும் என்பதுபோல் எனக்கான வழி கிடைக்க ஆரம்பிச்சதால சினிமாவில் என்னுடைய பயணத்தைத் தொடர முடிஞ்சது. தமிழ் சினிமாவில் இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.

உங்களுடைய ரோல்மாடல் யார்?

என்னுடைய அம்மா வெண்ணிலா. மாற்றுத்திறனாளியான என்னுடைய அப்பாவைத் திருமணம் செய்துகொண்டு தைரியமா இந்த சமூகத்தை எதிர்கொண்ட விதம் எனக்குள் தாக்கத்தைக் கொடுத்ததோடு இல்லாமல் நானும் சமூகத்தை தைரியமா எதிர்கொள்ள இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு.

உலகளவில் மாற்றுப் பாலினத்தவருக்கான வாழ்வாதாரம் எப்படி உள்ளது?

அழகிப் போட்டிகளுக்காக பல நாடுகளுக்கு சென்றுள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளுடன் பழகி உள்ளேன். நம்முடைய நாட்டில் வாக்குரிமை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வேலை வாய்ப்பு முழுசா கொடுக்கவில்லை. வேலைக்கான உத்தரவாதம் இருந்தால் திருநங்கைகள் படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பாக இருக்கும். ஏனெனில், பல இளம் திருநங்கைகள் படிப்பில் ஆர்வமாக இருப்பதோடு பல்வேறு துறைகளில் சாதிக்க விரும்புகிறார்கள்.

ஒரே பாலின திருமணத்தை நம் நாட்டில் சட்டபூர்வமாக்கவில்லை. பல நாடுகளில் ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். நம் நாட்டில் அது மாதிரி சட்டம் வந்தால் திருநங்கைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை, திருநங்கைகள் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுவது போன்ற குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
தமிழ் நாடு அரசு இலவச வீடு, இலவச கல்வி என பல சலுகைகள் கொடுத்துள்ளது. திருநங்கைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு வலுவான சட்ட பாதுகாப்பு வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இளம் திருநங்கைகள் பலர் வீட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலையும் இருக்கிறது. அதை தடுப்பதற்கு பெற்றோருக்காகவும் முறையான கவுன்சிலிங் மையம் திறக்கப்பட வேண்டும்.  
உலகளவில் பல திருநங்கைகள் வாழ்வாதரம் மேம்பட்ட நிலையில் உள்ளதையும் பார்க்க முடிகிறது. தாய்லாந்தில் வசிக்கும் திருநங்கை ஹனி பல உலக அழகிப் போட்டிகளை நடத்துகிறார். மிகப் பெரிய பில்லியனர்.

‘சைலண்ட்’ படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

கணேஷா பாண்டி இயக்கி நடித்துள்ளார். அதில் ஒரு பாடலுக்கு பெர்ஃபாம் பண்ணியிருக்கிறேன். திருநங்கைகள் வாழ்க்கையில் ஜெயித்து சந்தோஷத்தைப் பகிரிந்துகொள்வதுபோல் சிச்சுவேஷன். எனக்கு காஸ்டியூம் டிசைனிங் தெரியும் என்பதால் அந்தப் பாடலுக்கு நானே காஸ்டியூம் பண்ணினேன்.

‘வள்ளிமயில்’?

என்னுடைய சினிமா வாழ்க்கையில் பெரிய வாய்ப்பு அது. சுசீந்திரன் சார் முக்கியமான கேரக்டர் கொடுத்தார். விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் என பெரிய ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பு அது. வள்ளி என்ற கேரக்டர் பண்ணியிருக்கிறேன். சுசீ சார் ஆர்ட்டிஸ்ட்களிடம் இருக்கும் டேலன்ட்டை வெச்சு நேச்சுரலா படமாக்குவார்.

சமுத்திரக்கனி உங்களுக்கு நிறைய உதவி செய்திருப்பதாக கேள்விப்பட்டோம்?

சசிகுமார், சமுத்திரக்கனி இருவருடன் நடிச்சதை வரமா நினைக்கிறேன். ஏனெனில், ‘நாடோடிகள் 2’ படம் செய்து பல வருடங்கள் ஆனாலும் சசி சாரும், கனி சாரும் எனக்கு பல விஷயங்களில் உதவி செய்துள்ளார்கள். கனி சாரிடம் எதாவது தேவை என்று ஃபோன் பண்ணினால் உடனே ஹெல்ப் பண்ணுவார். மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்காக ஸ்பெயின், தாய்லாந்து செல்வதற்கு உதவி செய்தார். சமீபத்தில் பெண்களுக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளவும் உதவினார்.

இதெல்லாம் ஹெல்ப் என்பதைவிட என்னைப் போன்றவர்கள் சமூகத்தில் ஜெயித்துக் காண்பிக்கும்போது அது மற்றவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரும் என்ற கோணத்தில் தொடர்ந்து சப்போர்ட் பண்ணுவது மனசுக்கு நிறைவாக இருக்கிறது. கொரோனா காலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள் வாங்கிக்
கொடுத்தார்.