விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!



சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் என நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செலிபிரிட்டீஸ் என்பதால் அவர்களின் விவாகரத்து அறிவிப்புகள் ஊடகங்கள் மூலம் பரவலான கவனம் பெற்றுவிடுகின்றன; சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றன.ஆனால், சாதாரண தம்பதிகள் விவாகரத்துக் கோரி கோர்ட்படி ஏறி வரும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாகச் சொல்கின்றனர் நிபுணர்கள்.
இதனால், சிங்கிள் பேரண்டிங் என்ற நிலை தமிழ்ச் சமூகத்தில் உயர்ந்து வருவதாகச் சொல்கின்றனர். இதற்கு என்ன காரணம்? விவாகரத்து ஏன் அதிகரிக்கிறது என்பது குறித்து துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்.
முதலில் மூத்த வழக்கறிஞரான கே.சாந்தகுமாரி, ‘‘முன்பெல்லாம் திருமணம் என்பதை புனிதமான பந்தமாக பார்த்தோம். ஆனா, இன்னைக்கு திருமண பந்தங்கள், உறவுகள் சம்பந்தமான விஷயங்கள்ல நிறைய மாற்றங்கள் சிந்தனை ரீதியாக வந்திருக்கு. அதனால் விவாகரத்து கூடியிருக்கு...’’ என்றபடி பேசத் தொடங்கினார்.

‘‘முன்பு அடிச்சாலும் புடிச்சாலும் புருஷன். அவருடன்தான் வாழ்ந்தாகணும். ஏன்னா, அப்ப பெண்கள் வேலைக்குப் போகல. ஆண்கள்தான் பொருளாதார ரீதியாக குடும்பத்தை கவனிச்சாங்க. எனவே, ஆண் இல்லைனா பெண்ணால் தனியாக வாழவே முடியாது. 

குழந்தைகளை வளர்க்க முடியாது. அப்படிப்பட்ட சூழல்ல எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போகிற நிலை இருந்தது.

இப்ப பெண்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருக்காங்க. கேரளாவுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதிகம் படித்த மாநிலமாக தமிழகம் இருக்குது.

இந்தப் படிப்பறிவினால் நல்ல வேலைக்குப் போறாங்க. பொருளாதார ரீதியாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்குறாங்க. அதனால், முன்ன மாதிரி கணவன் அடிப்பதை பொறுத்துக்கிட்டு போவது அவசியமில்லனு நினைக்கிறாங்க.விவாகரத்தை ஒரு பெண், மனைவியாக இருந்து மட்டும் எடுக்கிற முடிவல்ல. நிறைய இடங்கள்ல கணவர்கள் குடிச்சிட்டு வந்து அடிக்கிறது, கெட்டவார்த்தைகள் பேசுறது... இப்படியாக பல சிக்கல்கள்.

இதில் மனைவியுடன் குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க. அவங்க மனநிலையும் பாதிக்கப்படுது. அப்ப அதையும் யோசிச்சு, நாம் பேசாமல் தனியாக வந்துடலாம்னு நினைக்கிறாங்க. இதுல தப்பு இருக்கிற மாதிரி தெரியல.அடுத்து முன்னாடி சில சட்டங்கள் பத்தி நம் மக்களுக்குத் தெரியாது. இப்ப தொடர்ச்சியாக உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அதனுடைய இலவச சட்ட உதவி மையங்கள் மூலம் பயிற்சிகள் கொடுத்து பெண்களுக்குத் தங்கள் உரிமைகள் குறித்து புரிய வச்சிருக்கு.

அப்புறம், புதுப்புது சட்டங்களும் வந்திருக்கு. கணவன் போட்டு அடிச்சார்னா முன்னாடி கேட்க முடியாது. ஆனா, இப்ப குடும்ப வன்முறைச் சட்டம் வந்திடுச்சு. பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டுல ஸ்பெஷலாக இருக்குது. தவிர நிறையச் சட்டங்கள் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்களை கௌரவமான மனிதர்களாக  நடத்தணும் என்றும் நம்முடைய சட்டவியல் கொண்டு வந்திருக்கு.

ஒரு பக்கம் விழிப்புணர்வு; இன்னொரு பக்கம் பெண்களுக்கான சட்டம். இதனால் பெண்கள் விழித்துக்கொண்டு ‘எதற்காக இப்படி நாம் கஷ்டப்படணும்? நமக்கு இந்த இந்த உரிமை இருக்குது’னு நினைக்கிறாங்க. அதனால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறாங்க.

சமீபத்துல ஒரு நடிகர் பரஸ்பர சம்மதத்துல விவாகரத்து கேட்டார். நடிகர் என்பதற்காக சொல்லல. அவங்களும் மனிதர்கள்தான். அவங்களுக்கும் பிரைவைஸி ரைட்ஸ் இருக்கு.
இதை எதற்காகச் சொல்றேன்னா, சரிப்பட்டு வரல என்பதால் பரஸ்பர சம்மதத்துல இருவருமே விலகிடுவோம்னு நினைக்கிற மனோபாவமும் வந்திருக்கு. நிறைய படித்த வர்க்கத்தினர் இப்படிதான் பரஸ்பர சம்மதத்துல விவாகரத்து வாங்கறாங்க.

பொதுவாக மனசு இணைந்தாதான் வாழமுடியும். இல்லனா சிரமம்தான். எந்த வயசுலயும் மனசு இணையாமப் போகலாம். நீங்க காசு வச்சிருந்தாலும், பணம் இருந்தாலும் அதைத்தாண்டி ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழணும்னா மனரீதியாக இணையணும்.

அடுத்து உடல்ரீதியான இணைவு. இன்னைக்கு இருக்கக்கூடிய ஆண்கள்ல குறைஞ்சது பத்து முதல் பதினைந்து சதவீதம் பேருக்கு பாலியல் ரீதியாக செயல்படமுடியாத நிலை இருக்குது.இதுக்கு, மாறிய உணவுப் பழக்கங்கள், இரவு நேர வேலை, எப்பப் பார்த்தாலும் எலக்ட்ரானிக் கேஜட்ஸ் உடன் இருப்பதுனு பல காரணங்கள் சொல்லப்படுது.

முன்பு எப்படியிருந்தாலும் பெண்களைத்தான் திட்டுவாங்க. இப்ப அப்படியில்ல. பெண்களுக்குப் பாலியல் ரீதியான அந்த உரிமை உண்டுனு சமூகம் புரிஞ்சிருக்கு.அப்புறம், இந்தத் தலைமுறை ஆண்கள் ஒரு பெண்ணை கட்டிக்கிட்டு அதற்கு பராமரிப்பு செலவு, குழந்தைக்குக் கல்விக் கட்டணம், அதாவது ஜீவனாம்சம் தருவது என இருக்கிறதைவிடவும் ஒரு பெண்ணோடு ஒப்பந்தம் போட்டு வாழ்ந்திட்டால் நமக்கு இந்தமாதிரியான பொறுப்புகள் கிடையாதுனு நினைக்கிறாங்க.அதனால் இப்ப லிவிங் டு கெதர்ல வாழ்கிற தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரிச்சிட்டு வருது. இந்த முறையில் இருவரும் ஒப்பந்தம் பண்ணிதான் வர்றாங்க. 

முடிஞ்சளவுக்கு சேர்ந்து வாழ்வோம். இல்லனா நண்பர்களாக பிரிவோம்னு இருக்காங்க. இது அதிக எண்ணிக்கை கிடையாதுனாலும் இப்படி வாழ்கிறவர்களும் நம் சமூகத்தில் இருக்காங்க.

அதனால், இன்றைய சமூகச் சூழலில் அவரவர் உரிமையை நிலைநாட்டவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் நிறைய பேர் விவாகரத்து வழக்குகளுக்கு வரவேண்டி இருக்கு. ஆனா, இன்று விவாகரத்து அதிகரித்திருந்தாலும் அது நம் சமூகத்தின் கட்டமைப்பை இன்னும் தகர்க்கல...’’ என்கிறார் வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி.

தொடர்ந்து மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் சுனில் குமார் விவாகரத்து குறித்து விளக்கமாகப் பேசினார். ‘‘பொதுவாக திருமண முறிவு பெண்கள் படிக்கிறதால், சம்பாதிக்கிறதால் நடக்குதுனு சொல்றாங்க.

ஆனா, உண்மையில் பெண்கள் கல்வி கற்றதால், வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் இது நடக்கல. சூட்சுமமாகப் பார்த்தால் திருமணம் என்பது இங்கே ஜனநாயகமாக இருக்கா என்பதுதான் கேள்வி.காதல், திருமணம், பாலுறவு... இந்த மூன்றையும் எடுத்துப் பார்த்தால் காதலும், காமமுமே இயற்கையானது, இயல்பானது. ஆனா, திருமணம் இயற்கையும் கிடையாது. இயல்பும் கிடையாது. அது மனிதர்கள் உருவாக்கிய ஒரு சமூகக் கட்டமைப்பு.

ஆணாதிக்க சமூகக் கோணத்தில் உருவான விஷயம். பெண்ணால் கட்டமைக்கப்பட்டதல்ல. அதனால் அந்தத் திருமணத்தில் ஒரு பெண் நிறைய அடையாளங்களைத் துறக்க வேண்டியிருக்கு.

திருமணம் ஆனாலும், ஆகலனாலும் ஆணின் பெயருக்கு முன்னாடி மிஸ்டர்தான் போடுறோம். ஆனா, அதே பெண்ணுக்கு மிஸ், அப்புறம் மிஸஸ், கணவர் இனிஷியல்னு அவங்க அடிப்படை அடையாளங்களையே மாற்ற வேண்டி வருது.அதேபோல ஆண்களுக்கு அவர் திருமணமானவரா ஆகாதவரானு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்த்தால் எந்த அடையாளங்களும் இருக்காது.

ஆனா, பெண்கள் நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, காலில் மெட்டினு எத்தனையோ அடையாளங்களை சுமக்க வேண்டி இருக்கு. அப்புறம் பாத்திரம் கழுவுறது, கோலம் போடுறது, சமைக்கிறது இப்படி பல வேலைகள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கு. நம்ம கலாசாரத்தை காப்பாத்துற வேலையும் பெண்களுடையதுதான். 

இப்படி சொல்லப்படாத விதியாக நம் மண்டைக்குள்ளேயே இருக்கு. அதனால், உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு ஆளாகுறாங்க.ஆக, கேள்வி கேட்க வேண்டிய விஷயம் நம் திருமணம் ஜனநாயகமான ஒன்றுதானா என்பதுதான். சமத்துவம் என்கிற விஷயத்தை அந்தத் திருமணம் கொடுக்குதானு பார்க்கணும்.

இப்ப நிறைய பேர்கிட்ட ஒரு தவறான எண்ணமும் இருக்கு. 30 ஆண்டுகள் ஒண்ணாக சேர்ந்து வாழ்ந்து இப்ப அவளுக்கு என்ன பிரச்னை வருதுனு கேட்கறாங்க. பிரச்னை என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.சமீபத்துல ஓர் இசையமைப்பாளரும் அவர் மனைவியும் 29 ஆண்டுகள் கழித்து பிரியறோம்னு சொன்னது வைரலாச்சு. இது, அபிப்ராய பேதம் எப்ப வேண்டுமானாலும் வரலாம் என்பதைத்தான் குறிக்குது. அதனால், நான் என்னிடம் கவுன்சிலிங் வர்றவங்களிடம் திருமணம் பண்ணின நோக்கம் என்னனு முதல்ல கேட்பேன்.

அப்ப நிறைய ஆண்கள் சொல்ற பதில் விநோதமாக இருக்கும். ‘எனக்கு முடி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு, ஊர் எல்லாம் திருமணம் பண்றாங்க, இந்த வயசுல பண்ணிதானே ஆகணும், எனக்கு கொள்ளி வைக்க வாரிசு ஒருத்தன் வேணும், ஃப்ரீயாக பாலுறவு வேணும், திருமணம் பண்ணினால்தான் ஊர் வாயை மூடமுடியும், எப்படா திருமணச்சாப்பாடு போடப்போறனு கேட்டு தொல்லை பண்றாங்க அதனால் பண்ணினேன், எங்க அம்மாவை கவனிக்க, படுக்கையில் இருக்கிற எங்கப்பாவை பார்த்துக்க’னு பலவிதமான பதில்கள் சொல்வாங்க.

ஆனா, பெண்கள் பெரும்பாலும் சொல்றது ‘எனக்கு வயசாகிடுச்சு, நான் திருமணம் பண்ணினால்தான் என் சகோதர, சகோதரிகளுக்குத் திருமணம் நடக்கும்’னு சமூகத்தையும், வயதினையும் காரணிகளாக முன்வைப்பாங்க.  அதனால் நம்மூர்ல ஏன் திருமணம் பண்றோம் என்கிற தெளிவு ரொம்பக் குறைவாகவே இருக்கு. 

அப்புறம், திருமணத்தை யாரும் ஒரு கமிட்மெண்ட்டாக பார்க்கல. அதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கல. எப்ப உறவைப் பேணிப் பாதுகாக்கறமோ அப்பதான் அந்த உறவு வளரும். அதைவிடுத்து இந்த உறவு நம்மைவிட்டு எங்க போகப்போகுது என்கிற நினைப்புடன் திருமணத்தை அணுகினால் அந்தத் திருமணம் கண்டிப்பாக முறிவுலதான் போய்முடியும்.

இன்னைக்கு விவாகரத்து அதிகமாகி இருப்பதற்கு பெண்கள் விழிப்பாகிட்டாங்க. இதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அவங்க உரிமை அவங்களுக்குத் தெரியுது.
அப்புறம், அவங்க பாதுகாப்பு பத்தி யோசிக்கிறாங்க. அவங்களுக்கு சில மாண்புகள் இருக்குனு பார்க்கறாங்க. அப்ப பெண்கள் அவங்களாக முடிவெடுக்கிற இடத்துக்குப் போறாங்க.

பொருளாதார ரீதியாகவும் மேம்பட்டு வர்றதால இந்தத் திருமண உறவு எனக்கு எதுக்குனு கேட்கறாங்க. அது பத்து ஆண்டுகள் கழித்தோ இல்ல இருபது ஆண்டுகள் கழித்தோகூட இருக்கலாம்.

அதேபோல இன்றைய தலைமுறைக்குத் திருமணம் பண்ணிக்கிற விருப்பம் குறைஞ்சிருக்கு. ‘அந்த உறவினை பரிசோதனை செய்யணும். அவனைப் பத்தி ரெண்டு ஆண்டுகளாக பயணிச்சு அந்த உறவு எனக்கு சரிப்பட்டு வருமானு பார்த்து அப்புறம்தான் திருமணம் பண்ணிப்பேன்’னு ஆணும், பெண்ணும் நிக்கிறாங்க.

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர், தாலி புனிதமானது என்பதை இப்போதுள்ள தலைமுறை பெரிசா கொண்டாடல. ஆனா, திருமணத்திற்கு சமூக மதிப்பு இருக்கு என்பதில் அவங்களுக்கு மாற்றுக் கருத்து இல்ல.

அதனால், இப்போதுள்ள தலைமுறை திருமணத்தை நிராகரிக்கல. அவங்க பெரும்பாலும் உளவியல் சிக்கலால்தான் விவாகரத்து முடிவை எடுக்கறாங்க.உறவுச் சிக்கல் உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல  தனிமனிதனின் உளவியல் சிக்கல் அவன் உறவில் விரிசலை உண்டாக்கும். இது ரெண்டு பேருக்கும் பொருந்தும்.

உதாரணத்திற்கு, பெண்கள் தன்னுடைய கணவன் இப்படித்தான் இருக்கணும்னு நினைப்பாங்க. அவங்களுக்கு உண்மைத்தன்மை ரொம்ப முக்கியம். என்கூட மட்டும் இருக்கணும். யார் கூடவும் இருக்கக்கூடாதுங்கிற உளவியல் கட்டமைப்பிற்குள் அவங்க போயிடுவாங்க.இதுக்கு அவங்க சிறுவயது அனுபவங்கள், அவங்க அப்பா அம்மாவின் தாக்கங்கள், அவர்களிடையே இருந்த உறவுச் சிக்கல்கள் எல்லாம் கூட்டிக்கழிச்சு ஒரு உளவியலை உருவாக்கி இருப்பாங்க.

இந்த உளவியல் சிக்கல் உறவில் சிக்கலை ஏற்படுத்திடும். அதேமாதிரி உளவியல் பிரச்னை எதுவும் இல்ல... ஆனா, உறவுச் சிக்கல் இருக்குது என்கிற கேஸும் உண்டு. அப்ப மனஅழுத்தம், மதுபோதை பழக்கம், தற்கொலை எண்ணம்னு உளவியல் சிக்கலுக்குள் போறாங்க.இதன் அல்டிமேட் இடம்தான் விவாகரத்து. அதனால், விவாகரத்தை ஒரே ஒரு காரணியில் நிறுத்தமுடியாது. அதை நாம் தனிநபர், சமூகம், பொருளாதாரம், கலாசாரம்னு நான்கு காரணிகள்ல பார்க்கணும்.

இன்று முதலாளித்துவமும், நவதாராளக் கொள்கையும் வந்தபிறகு எல்லாம் மாறிடுச்சு. விவசாயம் சார்ந்து கூட்டுக்குடும்பமாக முதல்ல இருந்தது. அப்புறம், தொழில்சமூகமாக மாறினப்ப தொழிலுக்காக நகரங்களுக்கு படையெடுத்தாங்க.அப்ப கூட்டுக்குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைஞ்சது. 

ஒரு நகரத்தை நோக்கி குடிபெயர்ந்தாங்க. தனிக்குடும்பம் பெருகியது. இப்ப தொழில்சார்ந்து இருக்கிற காலம் மாறி கணினி சார்ந்த காலம் வந்திடுச்சு. அடுத்து ஆட்டோமேஷன் சார்ந்த காலத்திற்குள் போகப்போறோம்.

இப்ப தனிக்குடும்பத்திலிருந்து சிங்கிள் பேரண்டிங்காக பலர் வாழ்ந்திட்டு இருக்காங்க. ஆக, குடும்ப அமைப்புகளும், அங்க மனிதனின் இயல்பும் மாறிட்டே இருக்கிறதுதான் உண்மை.
மனிதனின் இந்த இயல்பு மாறுவதற்கு முதலாளித்துவமும் நவதாராளக் கொள்கையுமே காரணம். இவை பொருளாதார ரீதியான, கொள்கை ரீதியான மாற்றங்களால் நடந்தவைதானே தவிர மனிதன் தன்னிச்சையாக, ‘நான் கூட்டுக்குடும்பத்துல இருக்கமாட்டேன். தனியாகப் போறேன்’னு அவனே முடிவெடுக்கல.

அதனால் விவாகரத்து பெறாமல் வாழணும்னா, முதல்ல திருமணம் ஏன் பண்றோம்னு திருமணம் ஆனவங்களும், ஆகாதவங்களும் சுயபரிசோதனை செய்து பாருங்க. அப்புறம், இந்தக் குறிப்பிட்ட பார்ட்னரை பண்ணிக்கக் காரணம் என்னனு யோசிங்க. 

இதுவும் விநோதமாகவே இருக்கும். ‘அழகா இருந்தாங்க; சாந்தசொரூபியாக இருந்தாங்க; குடும்பமும், அவங்க கலாசாரமும் நல்லா இருந்தது’னு பல பதில்கள் இருக்கும். அப்போ உளவியல் ரீதியான ஏதோ ஒரு கட்டமைப்பை பலமாக வச்சுக்கிட்டு அதன்வழியாக அதுல ஃபிக்ஸ் ஆகற மாதிரியான பார்ட்னரைத் தேடியிருப்பாங்க. இது நல்லதல்ல.

ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவமானவன் என்கிற உண்மையைப் புரிஞ்சுக்கணும். ஒவ்வொரு ஆண், பெண்ணுக்குள்ளும் உணர்ச்சிகள் வேறுபடும். இந்த உணர்ச்சிகளே பெரும்பாலும் உறவுகளைச் சிதைக்குது.அடுத்து உறவைக் கெடுக்கக்கூடிய விஷயம் விமர்சனம். நம்ம பார்ட்னரை சிறுமைப்படுத்துவோம். 

அல்லது கிண்டலடிப்போம். இதுமாதிரி நம் உறவைக் கெடுக்கக்கூடிய அணுகுமுறை என்னனு தம்பதிகள் இருவரும் ஆய்வு பண்ணி சரிசெய்யணும்.பொதுவாக நம் உறவுல ரிப்பேர்கள் வரும். அதை சரி செய்யணும். ஒரு கார் ஓட்டுறோம். அது ரிப்பேர் ஆனால் சரி செய்றோம் இல்லையா... அதுமாதிரிதான் உறவும்...’’ என்கிறார் டாக்டர் சுனில்குமார்.