சிறுகதை-ககன்யாத்ரி



என் மனம் வெதும்பி வெடித்துச் சிதறும் நிலையில் உள்ளதை யாருமே அறியவில்லை. என் பள்ளிக் கால நண்பன் யோகேஷ் இப்படி ஒரு துரோகத்தைச் செய்திருக்கவே கூடாது.
இத்தனைக்கும் இந்த 25 வருடங்களாக அவன் மட்டுமே என் உலகமாக இருந்து வருகிறான். ஒன்றாகப் படித்து பள்ளி முடித்து ஏரோநாட்டிகல் படிப்பை பூனாவில் ஒன்றாக முடித்து ஒன்றாகவே விமானப்படை கமாண்டோக்கள் ஆகி பல்வேறு கட்டங்கள் கடந்து ஒன்றாகவே இந்திய விண்வெளி பயணத்திற்கு தேர்வாகி பயிற்சியில் இணைந்தவர்கள் நாங்கள்.

அமெரிக்காவின் நாசாவில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை மிதக்கும் பயிற்சியின்போது கூட நாங்கள் ஒன்றாகவே  திரிந்தோம். அவனுக்காக... நண்பன் யோகேஷ்... அந்த ஒருவனுக்காக... நான் என்னவெல்லாம் செய்திருப்பேன்!அவனுக்கு அப்பா கிடையாது. அம்மா ஒரு நர்ஸ். கையைப் பிசைந்தபடி கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் அவன் தவித்த போதெல்லாம் நான் இருக்கிறேன் என்று என் அப்பாவிடம் (அரசு அதிகாரி அவர்) கட்டணத்தை இரட்டிப்பாக வாங்கி சில சமயம் அவனுக்கே தெரியாமல் கூட கட்டியிருக்கிறேன்.

இந்திய விண்வெளி பயணத்திற்கு நான் தேர்வானதைவிட அவன் பெயரும் சேர்ந்தே வந்ததை அப்படிக் கொண்டாடியிருந்தேன். நாங்கள் எங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே விண்வெளிவீரர் ஆகும் கனவோடு வளர்ந்தோம். மற்றவர் எப்படி போனாலும் திருச்சிகாரர்களான நாங்கள் மேல்நிலைக்கல்வியில் கணினி இயல் குரூப் படித்ததும் தேசிய மாணவர் படையில் இணைந்ததும் கூட விண்வெளிக் கனவோடுதான்தேசிய பல்கலைக்கழகம்... அதுவே சிறந்த வழி என்று எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்ட ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இரண்டுக்குமே பூனாவில் விண்ணப்பித்தோம்.

எனக்கு ஏரோஸ்பேஸ் உடனே கிடைத்து விட்டது. அது யோகேஷ்க்கு கிடைக்கவில்லை. அவனுக்கு ஏரோநாட்டிகல்தான் கிடைத்தது. ஆனாலும் அவனுக்காக நானும் ஏரோநாட்டிகல் சேர்ந்தேன்.நாங்கள் அங்கிருந்த பேராசிரியர் சங்கரன் சார் வழிகாட்டுதலின் பேரில் ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் நிபுணத்துவ வகுப்புகளிலும் இணைந்தோம். 

என்னுடைய நிழலைப் போல அவனைக் கருதினேன். ஒரு உள்ளாடை வாங்கினால் கூட நண்பா என்று அவனுக்கும் சேர்த்தே வாங்குவேன்.

பிறகு இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு வாய்ப்புகளை அவனுக்காக இரண்டு முறை நான் தவறவிட்டேன். அவனுக்காக... என் நண்பன் யோகேஷ்க்காக. மூன்றாம் முறை அவன் தேர்வு செய்யப்பட்டபோது நானும் இணைந்தேன். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் அப்படிப் செய்தேன்?   

ககன்யான் IV  திட்டத்திற்காக தேர்வான 16 பேர்களின் பெயர்ப் பட்டியல் வெளியான போது கூட என் பெயரை விட யோகேஷ் பெயர் வந்ததில் நான் பெருமிதம் கொண்டேன்.

ச்சீ... எத்தனை பெரிய ஏமாளியாக இருந்துவிட்டேன். வயதில் (எங்களுக்கு 32), உயர அளவுகோள் (நான் 158 சென்டிமீட்டர், யோகேஷ் 157 சென்டிமீட்டர்), உடல் ஆரோக்கியம், சிறந்த பார்வைத்திறன், தசை வலிமை, உயர்வெப்ப சகிப்பு... என 16 பேரை இறுதியாக ஐந்து பேர் ஆக்கினார்கள்.

அதில் எங்கள் பெயர்களும் இருந்ததை கொண்டாடுவதற்கு அவனுக்கு மிகவும் பிடித்த காஷ்மீர் புலாவ் வாங்கி இருவருமாக அன்று  ருசித்து சாப்பிட்டோம்.ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை காஸ்மோநாட் என்று அழைத்தது. இந்திய மண்ணில் இருந்து முதலில் விண்ணில் பறந்த  ராகேஷ் ஷர்மா ஒரு காஸ்மோநாட் ஆவார்.

ஆனால், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆஸ்ட்ரோநாட் என்று அழைக்கப்படுகிறார்கள். கல்பனா சாவ்லாவும் சுனிதா வில்லியம்சும் ஆஸ்ட்ரோநாட்டுகள். நாங்கள் இந்திய விண்வெளி வீரர்கள் ககன்யாத்திரிகள் என்று அழைக்கப்படுகிறோம்.

ககன்யாத்திரிகள் என்று அழைத்தபோது ஏற்பட்ட பெருமிதம்... ஆனால், 39 வாரங்கள், 220 உரைகள்... கடுமையான தேர்வுகள்... 75 வகையான உடல் பயிற்சிகள் என தேர்வாகி ரஷ்யாவின் ககாரின் விண்வெளிப் பயண பயிற்சி நிலையத்திற்கு ஐந்து பேரில் நாங்கள் மூவர் மட்டுமே  சென்றோம்.அதில் நான், என் நண்பன் யோகேஷ் மற்றும் பஞ்சாபின் தேகா சிங். அன்று நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கிடைத்த இரண்டு நாள் விடுப்பில் ஒரு நாள் என் வீட்டிலும், ஒரு நாள் நண்பன் யோகேஷ் வீட்டிலுமாக  சுவையான விருந்து. ஊரே திரண்டு வந்து எங்களை வாழ்த்தியபோதுகூட என் நண்பனால்தான் இவ்வளவும் கிடைத்தது என்று உணர்ச்சிவசப்பட்டேன் நான்.

எல்லாம் போய்விட்டது. ஏன் இப்படி ஆனது? இறுதியாக ஒரே ஒரு விண்வெளி வீரர் என்றார்கள். அப்போது அவன்... யோகேஷ்... என்னிடம் கேட்டிருந்தால் கூட நான் கண்டிப்பாக விட்டுக்கொடுத்திருப்பேன்.  ஆனால், போட்டியிலிருந்து தேகா சிங் குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி விலகிய போதும் நான் நினைக்கவில்லை இப்படி நடக்குமென்று.
இப்போது என்ன... இன்னும் 3 மணி நேரத்தில் யோகேஷ் விண்வெளிக்குப் பறந்து வரலாறு படைக்க இருக்கிறான். உலகமே அவனைப் பற்றி பேசப்போகிறது.

அது இயல்பாக நடந்திருந்தால் நானும் அவனை வாழ்த்தி யிருப்பேன். ககன்யான் IV திட்டத்தின் கணினி துறை வல்லுனர் கௌசல்யா பென்னட் அம்மையாரை சந்திக்காமல் போயிருந்தால் நானும் ஏமாளியாக நம்பித்தான் இருப்பேன்.உண்மையில் தேர்வானது நான்தான். 400 கிலோமீட்டர். மூன்று நாள் புவி விண் சுற்று ஒத்திகையின்போது கூட ஏறக்குறைய ஊர்ஜிதமாகிவிட்டது.

ஆனால், விடிவதற்குள் அவன் பெயர் வந்துவிட்டது. நான் எதேச்சையாக நடந்தது என்று நினைத்தேன். என் அப்பாவைக் கூட அவனுக்கு வாழ்த்து சொல்லுமாறு அழைத்தேன். எனக்கான விண் பயணம் வருவதற்கு மேலும் ஓர் ஆண்டு ஆகலாம் அல்லது வராமலும் போகலாம்.

வேறு போட்டிகளின் அடிப்படையில் அவன்... யோகேஷ்... தேர்வாகியிருந்தால் அற்புதம் என்று வாழ்த்தலாம். அவன் செய்தது மோசடி. கௌசல்யா பென்னட் மேடம் என்னை அருகில் அழைத்தார். மனதாரப் பாராட்டி கைகுலுக்கினார்.‘இது மிக மிக சிறப்பு சார். நண்பனுக்காக வாழ்க்கையில் ஒரே ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். 

இதுதான் உண்மையான நட்பு...’ என்று பாராட்டிய போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.என்னுடைய மெயில் ஐடியில் இருந்து நான் எழுதுவது போல அவனுக்கு விண்வெளிபயணத்தை நான் விட்டுக் கொடுப்பதாக என் பெயரில் மோசடியாக கடிதம் எழுதி... அதை மேலிடத்திற்கு அனுப்பியும் இருக்கிறான்.

ராஸ்கல்... ஒளிவு மறைவு இல்லாமல் பழகியது என் தவறு.இப்போது என்ன... நாடு போற்றுகிறது. யோகேஷ்... யோகேஷ் என்று பள்ளிக் குழந்தைகள் முதல் தாத்தா பாட்டிகள் வரை யோகேஷ்தான்.நான் முயற்சி செய்தபோதெல்லாம் அவன்... துரோகி... தனியே பேசவோ என் கண்களைப் பார்த்து உரையாடவோ வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் எப்போதும் யாரோ உடன் இருப்பதை உறுதி செய்தான்.

ஆயிற்று. விண்வெளி உடை அணியும் அந்த நிமிடம் வந்துவிட்டது. நான்தான் அவனுக்கு ஸ்டாண்ட் பை. அதாவது அவனுக்கு கடைசி நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால் நான்.    
அந்த துரோகி இருக்க வேண்டிய இடத்தில் நானும், நான் இருக்க வேண்டிய இடத்தில் அவனும் இப்போது இருக்கிறோம். இதைக் கேட்க நாதி இல்லை. 

ஏதாவது செய்து நான் அவனது பயணத்தை நிறுத்திவிட அவனுடைய சதியை அம்பலப்படுத்தியாக வேண்டும் என்று யோசித்த நொடியில் என்னைக் கட்டிக்கொண்டான். ‘வருகிறேன் நண்பா...’ அவன் கண் கலங்குவது போலிருந்தது. இந்த நாடகத்துக்கு குறைச்சலில்லை. சீய்ய்ய்.  

கவுண்ட் டவுன் தொடங்கிய போது எனக்கு ரத்தம் கொதிக்கிறது.  துரோகத்தை எண்ணி எண்ணி மனம் வெதும்பி மயக்க நிலை போல நான் தடுமாறினேன்.

விண்வெளி உடையில் யோகேஷ். ராக்கெட் கேப்சூலில். நுழைந்தபோது ஏதோ அவசரம் என்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டேன்.ராக்கெட் டேக் ஆஃப் நடந்த பிறகு என் பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள்.

‘யோகேஷ் உங்ககிட்ட குடுக்கச் சொன்னாரு...’ ஒரு கடித உறையை செக்யூரிட்டி உடையில் இருந்த ஒருவர் என்னிடம் நீட்டினார்.ஆத்திரத்தோடு அதை வாங்கிப் பார்த்தேன்.‘நண்பா என் மீது கோபமா...’ கடிதம் தொடங்கியது.‘அனேகமாக இந்தக்கடிதத்தை நீ வாசித்து முடிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். செக்யூரிட்டி... பிரீச் நண்பா. இந்தியாவுக்கு எதிரிகள் அதிகம். அண்டை நாடோ அல்லது தீவிரவாதமோ ஏதோ ஒன்று சதி செய்துள்ளது.

இந்த விண் மிஷன் ஏவுகணை தாக்குதல் குண்டு அல்லது ஏதோ ஒன்றால் தகர்க்கப்படும் என்று உளவுத்துறை அறிக்கை ஒன்றை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தது.

ராக்கெட் ஏவுவதை தள்ளிவைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அதனால்தான் இப்படி. நண்பா... நீ உயிரோடு இருக்க வேண்டும்.

 உன்னால் உயர்ந்த நான்... நான் போகலாம்... தவறில்லை. விடை கொடு நண்பா. ஜெய் ஹிந்த்...’பதறியபடி நான் வாசித்த அந்த நொடியில் வானில் யோகேஷ் சென்ற ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஆயிஷா இரா.நடராசன்