சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை!
வழிகாட்டுகிறதா ஆஸ்திரேலியா..?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. உலகில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைக்கான முதல் சட்டம் இதுவே. இதன்படி தடையை மீறி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட் உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தினால் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.அதாவது இந்திய மதிப்பில் 255 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதனால் பலரின் ஆதரவைப் பெற்ற இந்த மசோதா சில எதிர் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதுகுறித்து பேசும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ‘‘இது ஒரு முக்கியமான சீர்திருத்தம். இருந்தும் சில குழந்தைகள் தடைகளைத் தகர்க்கத் தீர்வுகளை கண்டுபிடிப்பார்கள். ஆனால், அவர்களின் செயலை நீக்க நாங்கள் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறோம்...’’ என்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஃபிரான்ஸ் நாடு 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றோரின் அனுமதியின்றி ஆன்லைன் சேவைகளை அணுகுவதைத் தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்பெயின் 16 வயதுகுட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை செய்யும் சட்டத்தை முன்மொழிந்தது. பிரிட்டனும், நார்வேயும் இதுகுறித்து பரிசீலித்து வருகின்றன.
ஆனால், சட்டமாக நிறைவேற்றியது இதுவே முதல்முறை என்கின்றன தகவல்கள். ஆனால், குழந்தைகள் நலன் மற்றும் இணைய நிபுணர்கள் சிலர் இந்தத் தடை ஆன்லைன் சமூக வலைப்பின்னல்களில் இருந்து பதின்ம வயதினரை தனிமைப்படுத்தும் எனக் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல யுனிசெஃப்பைச் சேர்ந்த ஆஸ்திரேலியரான கேட்டி மஸ்கீல், இந்தச் சட்டம் குழந்தைகளை சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பதற்கான தீர்வாகாது என்றும், அவர்களை மறைவான மற்றும் கட்டுப்பாடற்ற ஆன்லைன் இடங்களுக்குத் தள்ளும் என்றும் கூறுகிறார். இதுகுறித்து பேசும் ஆஸ்திரேலியா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மிச்செல் ரோலண்ட், இந்தச் சட்டத்தின் நோக்கம் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதல்ல. அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டே உருவாக்கப்பட்டது என நம்பிக்கையாய் சொல்கிறார்.
மேலும் அவர், ‘‘அரசின் ஆய்வுப்படி 14 முதல் 17 வயதுடைய ஆஸ்திரேலிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் போதைப்பொருள் துஷ்பிரயோகம், தற்கொலை அல்லது சுய-தீங்கு மற்றும் வன்முறை சார்ந்த உள்ளடக்கம் என மிகவும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை ஆன்லைனில் அதிகம் பார்த்துள்ளனர். தவிர, நான்கில் ஒரு பகுதியினர் பாதுகாப்பற்ற உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அத்துடன் ஆன்லைன் பாதுகாப்பே பெற்றோருக்கு பெரிய சவாலாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். அதனாலேயே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்...’’ என்கிறார். ஆனால், கல்வி, மெசேஜிங், கேமிங் மற்றும் மனநலம் சார்ந்த பயனுள்ள விஷயங்களை அளிக்கும் சில நிறுவனங்களுக்கு - அதாவது கூகுள் கிளாஸ் ரூம், வாட்ஸ்அப், கூகுள் யூடியூப் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் பயனுள்ளதாக இருக்குமா என்பது போகப்போகவே தெரியும்.
பி.கே.
|