குடிப்பழக்கமும் மோதிர விரலும்!



உண்மையில் இப்படியெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஏனெனில், ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விரல்களின் நீளத்திற்கும் குடிப்பழக்கத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருப்பதுதான்!
இந்த ஆய்வின்படி, உங்கள் விரல்களின் நீளம் உங்கள் குடிப்பழக்கத்திற்கு ஒரு முக்கிய குறிப்பைக் கொண்டிருக்கலாம் எனத் தெரிய வந்திருக்கிறது. இதனை வேல்ஸ் நாட்டின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து செய்துள்ளனர்.

இதன்மூலம் மகப்பேறு காலத்தில் பாலியல் ஸ்டீராய்டுகள் - அதாவது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றின் அளவே ஒருவரின் மது நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத்து
கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வினை ‘அமெரிக்க ஜர்னல் ஆஃப் ஹியூமன் பயாலஜி’ என்ற ஆன்லைன் இதழ் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து பேசும் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் மேனிங், ‘‘இன்று ஆல்கஹால் நுகர்வு என்பது ஒரு பெரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. அதனால், மதுபானம் ஏன் தனிநபர்களிடையே கணிசமான வேறுபாடுகளைக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது...’’ என்கிறார்.

இந்த ஆய்வு 258 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 169 பேர் பெண்கள். 89 பேர் ஆண்கள். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் அதிகம் மது அருந்துவதும், அதனால், அதிக இறப்பு விகிதம் ஆண்களிடம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

அத்துடன் மகப்பேறு காலத்தில் டெஸ்டோஸ்டிரோன் அதிகளவு வெளிப்படுதல், மது அருந்துவதில் அதிக நாட்டம் கொள்ள வைப்பதாகவும், இவர்களுக்கு மோதிரவிரல் ஆள்காட்டி விரலைவிட நீளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

மாறாக ஈஸ்ட்ரோஜனின் அதிகளவு வெளிப்படுதல் ஆள்காட்டி விரலை நீளமாகக் கொண்டிருக்கும் என்கிறது. அதாவது மதுவில் அதிக விருப்பம் உள்ளவர்களுக்கு மோதிர விரல் நீளமாகவும், விருப்பம் குறைவாக உள்ளவர்களுக்கு ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்கும் எனச் சொல்கிறது.

பேராச்சி கண்ணன்