தாராவி மறுசீரமைப்புத் திட்டம்... ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...



சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றி அதானி குழுமத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கவுதம் அதானி குழுமம் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் மும்பையின் இதயப் பகுதியாக விளங்கும் தாராவியை மறுவடிவமைக்கும் பணியை கையில் எடுத்திருப்பதுதான்.  
எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே, சிவசேனா தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி இதை எதிர்த்து வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆசியாவின் மிகப்பெரிய சேரியை அதானி குழுமத்திடமிருந்து மீட்பதாகவும், இந்தத் திட்டம் முழுவதையும் கைவிடுவதாகவும் உறுதியளித்தது. ஆனால், தேர்தலில் பாஜக வெல்ல அதானி குழுமம் உற்சாகமாகி இருக்கிறது.

தாராவி

மும்பையின் இதயப் பகுதியில் ஒன்று தாராவி. உலகின் மிகப்பெரிய சேரிப் பகுதியும்கூட. இங்கு சுமார் 7 முதல் 10 லட்சம் மக்கள் வரை வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட சேரிப் பகுதியாகவும் உள்ளது. சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது இந்தப் பகுதி. 19ம் நூற்றாண்டின் நிறைவில் பிரிட்டிஷ் காலத்தில் தாராவி உருவானது. அப்போது மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு வேலை நிமித்தமாக பலர் குடியேறினர்.

தொடர்ந்து குஜராத்திகள், தமிழர்கள், தெலுங்கர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் அங்கு வேலைக்காக வந்தனர். தற்போது இங்கே வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது.

இங்கு வசிப்பவர்கள் தோல் பதனிடுதல், அதிலிருந்து பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் செய்தல், டெக்ஸ்டைல் மற்றும் டெய்லரிங் பணியில் ஈடுபடுதல், உணவு உற்பத்தி தொழில் செய்தல், கழிவுப் பொருட்களை ரீசைக்கிள் பண்ணுதல், மட்பாண்டங்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேரிப் பகுதியாக விளங்கும் இதை மறுசீரமைப்பு செய்ய கடந்த இருபது ஆண்டுகளாக பேசி வருகிறது மகாராஷ்டிரா அரசு. அதுவே இப்போது வேகம் கண்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு வீடு ஒதுக்கப்படுமா என தாராவி மக்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.  

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்

கடந்த 2004ம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு தாராவியை ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட நகராக மறுவடிவமைப்பு செய்ய முடிவு செய்தது. பின்னர் மறுசீரமைப்புக்கான செயல்திட்டத்திற்கு அரசு தீர்மானம் மூலம் ஒப்புதல் அளித்தது. மேலும், தாராவியை வளர்ச்சியடையாத பகுதியாக அறிவித்தது. பின்னர் அதன் வளர்ச்சியை கண்காணிக்க சிறப்பு திட்டமிடல் ஆணையத்தை உருவாக்க அரசு முடிவு செய்தது. தொடர்ந்து மறுசீரமைப்பிற்கு டெண்டர் கோரப்பட்டது.

பின்னர் அரசு, 2000ம் ஆண்டுக்கு முன்பே தாராவியில் வசிப்பவர்களுக்கு 300 சதுர அடியில் இலவச குடியிருப்பு வழங்கப்படும் என்றும், 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தாராவியில் செட்டில் ஆனவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் குடியிருப்புகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. 

இந்நிலையில் எதிர்ப்புகள் கிளம்பின.  பின்னர் 2011ம் ஆண்டு மாநில அரசு அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்தது. இதற்கான புதிய மாஸ்டர் பிளானை உருவாக்கியது. தொடர்ந்து 2018ம் ஆண்டு பாஜக-சேனா அரசு தாராவிக்கு ஒரு special purpose vehicle எனும் தனி சட்ட நிறுவனத்தை உருவாக்கி மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்தது. பின்னர், உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது.

2019ம் ஆண்டு துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன், டெண்டரில் அதானிக்கு எதிராக வென்றது. ஆனால், மறுவடிவமைப்பு திட்டத்தில் ரயில்வே நிலத்தை சேர்க்கும் முடிவால் அந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 2020ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசு, இந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்றது.

இந்த டெண்டரை ரத்து செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக ரயில்வே நிலத்தை தருவதில் மத்திய அரசு தாமதப்படுத்தியதாகக் கூறியது. இதனையடுத்து 2022ம் ஆண்டு வந்த ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜ கூட்டணி அரசு, தாராவி மறுவடிவமைப்பு திட்டத்திற்கு புதிய டெண்டருக்கான அழைப்பை விடுத்தது. 

அப்போது அதானி குழுமம் அந்த டெண்டரைக் கைப்பற்றியது.இதன்படி, தாராவி மறுசீரமைப்பு திட்ட பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகள் அதானி குழுமத்திடமும்,  மீதமுள்ள 20 சதவீத பங்குகள் மாநிலத்தின் குடிசைப்பகுதி மறுவாழ்வு ஆணையத்திடமும் இருக்கும்.

இந்நிலையில், அதானி குழுமம் குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தல் வர, எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாகக் கூறினர். 

அது நடக்காததால் தாராவி மறுசீரமைப்புத் திட்டம் வேகமெடுக்கும் என்கின்றன தகவல்கள்.
தற்போதைய நிலவரப்படி 2000ம் ஆண்டுக்கு முன்பே குடியேறி இப்போது வரை தாராவியின் தரைத்தளத்தில் வசிப்பவர்களுக்கு 350 சதுர அடியில் இலவச குடியிருப்புகள் அங்கேயே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டுக்குப் பிறகிலிருந்து 2011ம் ஆண்டுக்குள் தரைத்தளத்தில் குடியேறியவர்களுக்கு 300 சதுர அடியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டப்படி இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் வேறு இடத்தில் வீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, 2011ம் ஆண்டுக்குப் பிறகு அல்லது மாடிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மும்பையின் பிற இடங்களில் வாடகைக்கோ அல்லது 2.5 லட்ச ரூபாய் மானியத்திலோ 300 சதுர அடி வீடு ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி தாராவியில் வசிக்கும் 40 சதவீத மக்களே பயனடைகின்றனர். மீதமுள்ள 60 சதவீதத்தினருக்கு வீடுகள் கிடைக்காது. இதனால் அவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினை எதிர்த்து வருகின்றனர். இதுமட்டுமல்ல. 2000க்கு முன்பிருந்த குடியிருப்பாளர்களுக்கு வீடு கிடைக்கும் என்றாலும், அவர்களில் பலர் மறுசீரமைப்பிற்குப் பிறகு வாடகை மூலம் வருமானம் வராது என்கிற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

ஏனெனில், தாராவியில் தனித்து வாழும் பெண்கள், கணவனை இழந்து வாடும் பெண்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமே வருமானம் பார்த்து வந்தனர். அதன்வழியாக குடும்பத்தை நடத்தினர். இனி அந்த வருமானம் வராது என்கிற பயம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இப்படி எல்லாமும் கலந்த வேதனைக் கலவையாக தாராவி மறுசீரமைப்புத் திட்டம் வேகமெடுத்துள்ளது. இதனால் மிகுந்த கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் தாராவிவாசிகள்.ஆனால், இதில் பயனடையப் போவது அதானி குழுமமும் அவர்களுக்காக விதிகளைத் தளர்த்தியவர்களும்தான் என்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.

பேராச்சி கண்ணன்