வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டும் கெத்தாக வலம் வரும்
உலக அழகி!
கடந்த சில நாட்களுக்கு முன் மெக்சிகோவில் 73வது உலக அழகிப் போட்டி நடந்தது. இதில் 125 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இதில் டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா என்ற இளம் பெண் உலக அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார். விஷயம் இதுவல்ல. இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட லோஜினா சலா என்ற பெண் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் திருப்பியிருக்கிறார்.
வெண்புள்ளி எனும் விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டவர் இவர். எழுபது வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட விட்டிலிகோவால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் இவரே. மட்டுமல்ல, 125 பேர் பங்குபெற்ற உலக அழகிப் போட்டியில் டாப் 30 இடங்களுக்குள் வந்திருக்கிறார்.
யார் இந்த லோஜினா சலா?
எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரில், 1990ம் வருடம் பிறந்தார் லோஜினா சலா. இவருடைய தந்தை எகிப்திய இராணுவத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.
லோஜினா பிறக்கும்போதே அவரது உடலில் விட்டிலிகோவுக்கான அறிகுறிகள் இருந்தன. லோஜினா வளர, வளர அவரது உடலின் பல்வேறு பாகங்களில் விட்டிலிகோ பரவ ஆரம்பித்தது. பள்ளியில் படிக்கும்போது அவரது சக மாணவர்கள் லோஜினாவின் விட்டிலிகோ குறித்து கிண்டலும், கேலியும் செய்தனர். இதனால் மனமுடைந்த லோஜினா, பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே இருந்திருக்கிறார்.
தானும் அழகுதான் என்று நிரூபிக்க வேண்டும் என்ற மன உறுதி அவரது குழந்தைப்பருவத்திலேயே மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. பள்ளிப்படிப்பை முடித்ததும், நியூயார்க்கில் உள்ள பெவர்லி இன்டர்நேஷனல் பியூட்டி ஸ்கூலில் அழகுக்கலை குறித்த படிப்பைப் படித்தார்.
2013ம் வருடம் ஒப்பனைக் கலைஞராகத் தனது முதல் வேலையைத் தொடங்கினார். இதுபோக ‘மேக் மி கிளாமரஸ்’ என்ற மேக் அப் சலூனையும் ஆரம்பித்தார். ஐந்து வருடங்கள் ஒப்பனைக் கலைஞராக வேலை செய்த அனுபவத்தை மற்றவர்களின் மத்தியில் பகிர வேண்டும் என்று நினைத்தார்.
இதற்காக சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் கணக்கைத் தொடங்கி, மேக் அப் சம்பந்தமான பதிவுகளைப் பதிவு செய்ய, லோஜினாவுக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
அழகு சம்பந்தமான லோஜினாவின் பதிவுகள் வைரலாக ஆரம்பித்தன. அத்துடன் அவரது அழகுக் குறிப்புகளை ஆயிரக்கணக்கான பெண்கள் பின்பற்றத் தொடங்கினர். 2017ம் வருடம் ‘கோகோ’ என்ற ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். இவரது ஆடை நிறுவனத்தை விளம்பரப் படுத்துவதற்காக பிரபல மாடலிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார். அந்த மாடலை போட்டோஷூட் எடுப்பதற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அந்த மாடல் வரவில்லை. தானே மாடலாக மாறினார் லோஜினா. விட்டிலிகோ பாதிக்கப்பட்ட முகத்துடன் அந்த போட்டோஷூட் நடந்தது. அந்தப் புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவுக்குரல்களும், பாராட்டுகளும் கிடைக்க, புது மனுஷியாக மாறினார். ஆம்; ஒருவித தாழ்வு மனப்பான்மையில்தான் போட்டோஷூட் செய்திருக்கிறார் லோஜினா.
அத்துடன் குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட அவமதிப்புகள் அவரை விட்டு விலகவே இல்லை. சமூக வலைத்தள பாராட்டுகள் லோஜினாவுக்கு பெரும் உந்துதலைக் கொடுத்தது. எகிப்தைவிட, துபாய்தான் லோஜினாவின் திறமைக்கு உகந்த இடம் என்று அவரது ரசிகர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையில் ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் திருமணம் செய்து, விவாகரத்தும் பெற்றுவிட்டார். லோஜினாவுக்கு லாரா என்று ஒரு மகள் இருக்கிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மகளுடன் துபாய்க்குக் குடிபெயர்ந்த லோஜினா, அங்கே அழகுக்கலை சார்ந்த நிறுவனத்தைப் பிரமாண்டமாக ஆரம்பித்தார். துபாய்க்கு வருவதற்கு முன்பே, அங்கே லோஜினாவுக்கு ரசிகர்கள் இருந்தனர். அதனால் மிகுந்த நம்பிக்கையுடன் அங்கே அவரால் செயல்பட முடிந்தது.
துபாயில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் நிருபராகப் பணிபுரியும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. நிருபர் பணியைச் செய்துகொண்டே, பிசினஸையும் நிர்வகித்தார்.
இன்னொரு பக்கம் சிங்கிள் மதராக மகளையும் பொறுப்புடன் வளர்த்தார். மட்டுமல்ல, துபாயில் நடந்த பல நிகழ்வுகளில் தன்னம்பிக்கை பேச்சாளராக அழைக்கப்பட்டார்.
லோஜினாவின் பேச்சுகள் பலரது மனதில் நம்பிக்கையை விதைத்தது. அத்துடன் அவரது புகழும் பரவியது. இதுபோக பல ஃபேஷன் ஷோக்களில் மாடலாகப் பங்கேற்று, முன்னணி பத்திரிகைகளின் அட்டைப்படத்திலும் இடம் பிடித்தார்.
விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மிஸ் எகிப்து ப்யூட்டி போட்டியில் பங்கேற்றார். போட்டியில் பங்கு பெறுவது மட்டும்தான் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், அவரே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக ‘மிஸ் எகிப்து ப்யூட்டி’ பட்டத்தை தட்டினார்.
இந்த வெற்றி மூலம்தான் எகிப்து சார்பாக உலக அழகிப் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பும் லோஜினாவுக்குக் கிடைத்தது. இன்று ஒப்பனைக் கலைஞர், சமூக வலைத்தள இன்ப்ளூயன்ஸர், மாடல், லைஃப் கோச் எனப் பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக வலம் வருகிறார் லோஜினா சலா.‘பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது’, ‘ஆசிய ஃபேம் விருது’, ‘கிரியேட்டிவ் வுமன் பிளாட்ஃபார்ம் விருது’ உட்பட ஏராளமான விருதுகளைத் தன்வசமாக்கியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேர் லோஜினாவைப் பின் தொடர்கின்றனர்.
த.சக்திவேல்
|