சிதறுகிறதா மெகா ஃபேமிலி..?



இதுதான் சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களைத் தாண்டி இந்தியா முழுக்க பேச்சாக இருக்கிறது.கிசுகிசுவில் தொடங்கி இப்பொழுது ‘அப்படித்தான்’ என்னும் அளவுக்கு செய்தி இறக்கை கட்டிப் பறக்கிறது.

என்ன விஷயம்?

தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை அங்கே குடும்பங்களின் ராஜ்ஜியம்தான். சிரஞ்சீவி குடும்பம், அல்லு அரவிந்த் குடும்பம், ராமா நாயுடு குடும்பம், கிருஷ்ணா குடும்பம், மோகன் பாபு குடும்பம், என்.டி.ராமாராவ் குடும்பம், நாகேஸ்வர ராவ் குடும்பம்... என இந்தக் குடும்பங்களின் பெரிசுகளும் வாரிசுகளும்தான் தெலுங்கு சினிமா. இவர்களைத் தாண்டி தனியொருவனாக ஒரு நாயகன் உதயமாவது டோலிவுட்டில் அவ்வளவு சுலபமல்ல.

இந்தக் குடும்பங்களில் சிரஞ்சீவி குடும்பமும், அல்லு அரவிந்த் குடும்பமும் நெருங்கிய உறவு. இதனால் இந்த இரண்டு குடும்பத்தையும் சேர்த்து மெகா குடும்பம் என செல்லமாக அழைக்கிறார்கள்.

இந்த மெகா குடும்பத்தில்தான் இப்போது பிரச்னை என்கிறார்கள். அதாவது ஒன்றாக இருந்த இரண்டு குடும்பங்களுக்குள் தனித்தனியாக சிதறிப் போகுமளவிற்கு மனஸ்தாபம் உருவாகி இருக்கிறதாம்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது அல்லு அரவிந்த் மகனான அல்லு அர்ஜுன்.நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனுடன் கூட்டணி வைத்த, சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாருமான பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை விட அதிக இடங்களை வென்றிருக்கிறது.

இதையடுத்து பவன் கல்யாணின் வெற்றியை சிரஞ்சீவியின் ‘கொனிடேலா குடும்பம்’ ஆரவாரமாகக் கொண்டாடியது. பவன் கல்யாண் சட்டமன்ற உறுப்பினராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற விழாவில் முக்கிய தெலுங்கு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், கொனிடேலா குடும்பம் என கலந்து கொண்டார்கள்.ஆனால், அங்கே சிரஞ்சீவியின் மைத்துனரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய குடும்பங்களுள் ஒன்றுமான ‘அல்லு’ குடும்பம் கலந்துகொள்ளவில்லை.

இதுதான் பஞ்சாயத்து. ஒரு டுவீட். ஒரு பிரசாரம். ஒரு வெற்றி. இந்த மூன்றும் சேர்ந்து இரு குடும்பங்களையும் முகம் பார்த்துப் பேசவிடாமல் செய்துவிட்டதாம்.சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது, அல்லு அர்ஜுன், பவன் கல்யாணுக்கு ஆதரவாக ஒரு டுவீட் செய்தார். ஆனால், அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பவன் கல்யாண் போட்டியிடுகையில், ஜன சேனா கட்சிக்கு எதிராக களத்தில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் போட்டியிடும் தனது நண்பர் நந்தியாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அதாவது பவன் கல்யாணுக்கு பிரசாரம் செய்யாமல், போட்டிக் கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் செய்த பிரசாரம், சிரஞ்சீவியின் தம்பியும் பவன் கல்யாணின் அண்ணனுமான நாக பாபுவுக்கு கோபத்தைக் கிளறிவிட்டது.ஒரு டுவீட் தட்டிவிட்டார். ‘நம்ம குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட அவர்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது’ என்று கொஞ்சம் கறாராகவே அல்லு அர்ஜுனுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்தார் நாகபாபு. ஆனால், என்ன நடந்ததோ, கொஞ்ச நேரத்திலேயே அந்த டுவீட்டை நாக பாபு சமூக ஊடகத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இதற்குப் பிறகு மெகா குடும்பமான அல்லு - கொனிடேலா குடும்பங்களுக்கு இடையே என்ன நடந்தது என யாராலும் ஊகிக்க முடியவில்லை. கொனிடேலா குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சாய் தரம் தேஜ், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா ரெட்டியை சமூக ஊடகத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார்.

அதேநேரம் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ்ஷை இப்பொழுதும் அதே சமூக ஊடகத்தில் பின் தொடர்கிறார் சாய் தரம் தேஜ்.இதுதான் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. அல்லு அர்ஜுன் செய்த பிரசாரம் இரு குடும்பங்களுக்கு இடையே விரிசலை உண்டாக்கி இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.                 

என்.ஆனந்தி