Must Watch



கம் கம் கணேசா

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப்படம், ‘கம் கம் கணேசா’. நண்பன் சங்கருடன் சேர்ந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறான் கணேஷ். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவரும் ஸ்ருதியைக் காதலிக்கிறான். கணேஷும், ஸ்ருதியும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் முதலாளியுடன் ஸ்ருதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நிலைகுலைந்து போகிறான் கணேஷ். ஸ்ருதிக்கு பணம்தான் முக்கியம் என்று நினைத்து, அவளிடம் விரைவிலேயே கோடீஸ்வரன் ஆகிக் காட்டுகிறேன் என சவால் விடுகிறான்.

இன்னொரு பக்கம் சூதாட்டத்தில் கடனாளியாகி, தனது தந்தையின் கடையிலேயே வைரத்தைத் திருடுவதற்கான திட்டத்தில் இருக்கிறான் அருண். இந்த திருட்டு வேலையைச் செய்வதற்காக ஆளைத் தேடிக்கொண்டிருக்கும்போதுதான், அருணுக்கு கணேஷின் அறிமுகம் கிடைக்கிறது. அருணுடன் சேர்ந்து வைரத்தைத் திருடும்போது, எதிர்பாராதவிதமாக அருணின் தந்தையைச் சுட்டுவிடுகிறான் கணேஷ். இதற்குப் பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்தான் திரைக்கதை.வார இறுதியில் ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் உதய் பொம்மிஷெட்டி.

டிரிக்கர் வார்னிங்

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘டிரிக்கர் வார்னிங்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இராணுவத்தின் சிறப்புப்படையில் கமாண்டோவாக இருக்கிறாள், பார்க்கர். தீவிரவாதிகளைப் பிடிக்கும் வேட்டையில் பார்க்கர் இருக்கும்போது, சுரங்கத்திலிருந்து மண் சரிந்து அப்பா இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. உடனே ஊருக்குக் கிளம்புகிறாள் பார்க்கர்.

ஊரிலிருக்கும் பார்க்கரின் முன்னாள் காதலன் ஜெஸ்ஸி, ‘‘அப்பா கொஞ்ச நாளாக ஒரு மாதிரியிருந்தார்; அவர் தற்கொலை செய்திருக்கலாம்...’’ என்கிறான். அப்பா இறந்துகிடந்த சுரங்கத்துக்குச் செல்கிறாள் பார்க்கர். அந்தச் சுரங்கம் அவருக்கு ரொம்பவே பிடித்தமான இடம். அப்பாவின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறாள். தவிர, பக்கத்திலிருந்த இராணுவ முகாமிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதையும் அறிகிறாள்.

அந்த ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக அந்த சுரங்கத்தைப் பயன்படுத்தியதையும், ஆயுதக் கடத்தலுக்குப் பின்னணியில் ஜெஸ்ஸியின் குடும்பம் இருப்பதையும் பார்க்கர் அறிந்துகொள்ள, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எங்கேயும் நிற்காமல் வேகமாகப் பறக்கிறது திரைக்கதை. பார்க்கராக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஜெஸிகா ஆல்பா. படத்தின் இயக்குநர் மோலி சூர்யா.

மஹாராஜ்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘மஹாராஜ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. குஜராத்தில் வாழ்ந்துவந்த வைஷ்ணவ குடும்பத்தில், 1832ல் பிறக்கிறார் ஹர்ஷன். சிறு வயதிலிருந்தே கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பும் முற்போக்குவாதியாக வளர்கிறார் ஹர்ஷன். பெற்றோர்கள் இறந்துவிட, மும்பையிலிருந்து அத்தை வீட்டில் வளர்கிறார். அவரைச் சுற்றி நடக்கும் மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

நன்றாகப் படித்து, பத்திரிகையாளராகிறார். மூட நம்பிக்கை குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் பெரிய ஆளுமைகளின் மத்தியில் பிரபலமாகிறது. இன்னொரு பக்கம் ஜேஜே என்ற சாமியார் மும்பையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஹோலி பண்டிகை வருகிறது. காதலி கிஷோரியைக் காணச்செல்கிறார் ஹர்ஷன்.

கிஷோரியைத் தனிப்பட்ட முறையில் பாத பூஜை செய்வதற்காக அழைத்திருக்கிறார் ஜேஜே. பாத பூஜை என்ற பெயரில் பெண்களைத் தன்னுடைய காம இச்சைகளுக்காக ஜேஜே பயன்படுத்தும் விஷயம் ஹர்ஷனுக்குத் தெரிய வர, அவர் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் மல்கோத்ரா பி.சித்தார்த்.

கில் போரோ

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் நைஜீரியா நாட்டுப் படம், ‘கில் போரோ’. ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது.ஊரையே அடக்கி ஆளும் கேங்ஸ்டர் ஜாக்குவர். ஒரு காலத்தில் ஜாக்குவரிடம் அடியாளாக இருந்தவன், போரோ. ஜாக்குவரிடம் நிறைய கடன் வாங்கியிருக்கிறான். போரோவிற்கு எலிஜா என்ற மகனும், மனைவியும் இருக்கின்றனர். எப்போதும் மனைவி மற்றும் மகனிடம் மோசமாக நடந்துகொள்கிறான் போரோ.  

அடியாள் வேலையைவிட்டு, வேறு வேலை செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறான் போரோ. தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடு அல்லது பணம் எதுவும் வாங்காமல் என்னிடம் சில மாதங்களுக்கு வேலை செய் என்று சொல்கிறார் ஜாக்குவர். இரண்டு மாதத்தில் கடனை அடைத்துவிடுகிறேன், இல்லையென்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்கிறான் போரோ.

இந்நிலையில் ஜாக்குவரின் குழுவினர் போரோவின் வீடு இருக்கும் பகுதிக்கு வந்து, கடனைத் திருப்பி செலுத்தாத எம்மா என்பவரைச் சுட்டுக்கொள்கின்றனர். போரோ எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துகிறான் என்பதே மீதிக்கதை.வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் இப்படத்தின் இயக்குநர் ஒபயுவானா கவரேஜ்.

தொகுப்பு:த.சக்திவேல்