சிறுகதை - அண்ணி



‘‘டேய்... வேலா... ரமா பெரியம்மா போயிட்டாளாம்...’’காலை பத்து மணிக்கு அம்மாவின் அலைபேசியில் வந்த சேதியைக் கேட்டதும் அதிர்ந்தேன்.‘‘என்னம்மா சொல்ற..? போன வாரங் கூட கல்யாணத்துல பார்த்தமே... ஜம்முன்னு இருந்தாங்களே... எப்படி திடீர்னு..?’’‘‘திடீர்ன்னுதான். 
லலிதா லீவுக்கு புள்ள பசங்கள கூட்டிட்டு வந்திருக்கா போல இருக்கு. கோபி திருவண்ணாமலை  கிரிவலத்துக்குப் போயிட்டானாம்... ஆயாவும், பெரியப்பாவுந்தான் இருந்திருக்காங்க. காலைல டிபனுக்கு தோச ஊத்திட்டு இருந்திருக்கா. மொத தோசய தட்டுல போட்டுட்டுப் போனவள காணும்னு போய் ஆயாதான் பாத்திருக்கு.

ஒரு மாதிரி மூச்சிரைச்சுட்டு கண்ணு சொருகிக் கெடந்தாளாம். சத்தம் போட்டுட்டே போய்த் தொட்டுருக்கு. அப்படியே சாஞ்சுட்டாளாம். பேச்சு மூச்சு எதுவும் இல்லையாம். ஓடிப் போய் மணி டாக்டர கூட்டியாந்துருக்காங்க. வந்து பாத்தவரு ‘போயிருச்சு’ன்னு சொல்லிருக்காரு...’’ நீளமாகப் பேசியவள், ‘‘சாகற வயசா..?’’ என்று  கண்ணீருடன் முடித்தாள்.ரமா பெரியம்மாவுக்கு இப்ப நாற்பத்தெட்டு ஐம்பது வயசிருக்குமா..? இருக்கும். ஆனா, பாத்தா முப்பந்தஞ்சுதான் சொல்ல முடியும். நல்ல உயரம். கம்பீரமான உடல்வாகோட, இரண்டு மூக்குலயும் ஏழு கல் பேசரி போட்டுட்டு நல்ல சிவந்த நிறத்தோட லட்சுமி களையா அம்சமா இருப்பாங்க.

எங்க தாத்தாவுக்கு ஒரே தங்கச்சி. அந்தத் தங்கச்சிக்கு ரெண்டு பசங்க. அதுல மூத்தவர் கோபாலோட சம்சாரம்தான் ரமா பெரியம்மா. கோபாலுக்கு இளையவர்தான் சுரேஷ் சித்தப்பா.
சட்டுன்னு சுரேஷ் சித்தப்பா ஞாபகம் வந்தது. வருவாரா..? யாராவது தகவல் சொல்லிருப்பாங்களா..? இப்ப எங்கியோ திருப்பூர் பக்கம்  ஒரு கம்பெனில வேல பாக்கறதா யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கல்யாணமெல்லாம் ஒண்ணும் பண்ணிக்கலையாம்.

என்னோட சின்ன வயசு ஹீரோன்னா அது சுரேஷ் சித்தப்பாதான். ஸ்டெப் கட்டிங் முடியோட, தொள தொள பாகி பேண்டும் பூப் போட்ட சில்க் சட்டையும் போட்டுகிட்டு லேசான சென்ட் மணத்தோட அவரப் பாக்கறதுக்கே அசப்புல சினிமா நடிகர் மோகனைப் பாக்குற மாதிரியே இருக்கும்.நா படிச்சதெல்லாம் எங்க தாத்தா வீட்டுலங்கறதுனால, லீவு விட்டுட்டா போதும், உடனே காலனில இருக்கற ராஜம் ஆயா வீட்டுலதான் போய் நிப்பேன்.

கோபுவும் நானும் ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சாலும், எனக்கென்னவோ சுரேஷ் சித்தப்பா கூடத்தான் ஒட்டும்.அவரும், ‘‘வேலா... வேலா...’’ன்னுட்டு எம்மேல ரொம்பப் பிரியமா இருப்பாரு. சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாரு. தேரு வந்துட்டாப் போதும். ஒரு வாரமும் பிடிச்ச கைய விடாம திரிவோம் ரெண்டு பேரும்.

அப்பதான் எட்டாவது லீவு விட்டுருந்தாங்க. முழுப் பரீட்சை லீவுக்கு மட்டும் எங்கப்பா அம்மா ஊருக்குப் போயிருவேன். அடிக்கடி உத்தியோக நிமித்தமா மாத்தலாகிப் போறதுனால படிப்பு பாழாயிரும்னு தாத்தா வீட்டுல வுட்டுருந்தாங்க.அந்த வருஷம் லீவுக்குப் போயிட்டு வந்து, ‘‘சுரேஷ் சித்தப்பாவ பாக்கப்  போறேன்’’னு பாட்டிகிட்ட சொன்னேன்.

‘‘சித்தப்பாவாவது... பெத்தப்பாவாவது... அவன் எங்கியோ ஓடிப்போயிட்டான். இப்ப ஆயா வூட்டுல இல்ல...’’ன்னு நொடிச்சாங்க பாட்டி.விக்கி விக்கி அழுகை வந்தாலும், காரணம் புரியாம திகைச்சுப் போயி கெடந்தேன். நாளாவட்டத்துல சித்தப்பா வந்துருவாரு, எப்படியாவது பாத்துறலாங்கற நம்பிக்கையெல்லாம் தேஞ்சுபோயி ஞாபக அடுக்குல கீழ போயிட்டாரு சுரேஷ் சித்தப்பா.

ஆனா, வளர வளர தெரிஞ்சுக்கிட்டேன். சித்தப்பாவுக்கும், ரமா பெரியம்மாவுக்கும் எதோ தவறான தொடர்பு இருந்ததாகவும், அது ராஜம் ஆயாவுக்குத் தெரிஞ்சுபோயி சத்தம் போட்டதாகவும் அதுனால கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டே போயிட்டதாகவும் பலபேர் பேசிக்கிட்டாங்க.

ஆனா, ரமா பெரியம்மா வீட்டுல எப்பவும் போலதான் எல்லோரும் இருந்தாங்க. ராஜம் ஆயா மட்டும் எப்பப்பாரு பெரியம்மாவ எதாவது அசிங்கமான சொல்லடையோட திட்டிட்டே இருக்கும். பெரியம்மா எதுவும் பேசாம அமைதியாகவே போயிடுவாங்க. கோபால் பெரியப்பா காதுல விழுகாத மாதிரியே நடந்துருவாரு.

போறப்ப எல்லாம் ராஜம் ஆயா இப்படிக் கேவலமா பேசுறதக் கேக்க பிடிக்காம நானும் ஆயா வீட்டுக்குப் போறதையே நிறுத்திட்டேன்.அப்பதான் நா காலேஜ்ல ‌படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு புரோகிராமுக்காக திருப்பூர் கம்பெனி ஒண்ணுக்கு போயிருந்தோம். அங்கதான் சுரேஷ் சித்தப்பாவ மறுபடியும் பாத்தேன். 

அந்தக் கம்பெனில சூப்பர்வைஸரா இருந்தார் .அந்த பழைய மினுக்கு எல்லாம் போயி, ஆளே அடையாளந் தெரியாம இளச்சுப் போயிக் கெடந்தாரு. என்னயப் பார்த்தொன்னிமே... ‘‘டேய் வேலா...’’ன்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு அவ்வளவு சந்தோஷப்பட்டாரு.

இராத்திரிதான் தனியாப் பேசிக்கவே சந்தர்ப்பம் கிடைச்சது. கம்பெனிக்குப் பக்கத்துலயேதான் ரூம் எடுத்துத் தங்கிருந்தாரு.‘‘என்ன சித்தப்பா..?’’ன்னேன்.‘‘டேய்... வேலா... அண்ணி எனக்குத் தெய்வம் மாதிரிடா. இன்னொரு அம்மா மாதிரி. அவங்களைப் போய் எங்கூட... எங்கூட...’’ன்னு சொன்னவருக்கு குரல் தழுதழுத்து கண்ணீர் வந்துருச்சு.‘‘அப்புறம் எப்படிச் சித்தப்பா..?’’ன்னேன்.‘‘அதாண்டா விதி. 

அன்னிக்கு வெளிய போயிட்டு வந்து கதவைத் தட்டினேன். ஆயா எங்கியோ வெளிய போயிருந்துச்சு. ரமா அண்ணி குளிச்சிட்டு இருந்திருக்கு. நா கதவைத் தட்டினவுடனே சேலய மேலாப்புடி சுத்திட்டு ஓடி வந்து கதவுத் தாழ்ப்பாளத் திறந்து வுட்டுட்டு உள்ரூமுக்கு வேகமாகப் போயிருச்சு.

நா திண்ணைத் தூண்ல அப்புடியே சாஞ்சுகிட்டு ரேடியோவ டியூன் பண்ணிட்டு இருந்தேன். திடீர்ன்னு உள்ரூம்லேர்ந்து வினோதமா ஒரு சத்தங் கேட்டுச்சு. ‘அண்ணி... அண்ணி...’ன்னு கத்திட்டே ஓடினேன். நல்லவேளையா கதவு ஒருக்களிச்சு சாத்திருந்துச்சு. 

உள்ள அண்ணி, புருஷனத் தவிர எந்த வேத்து ஆம்பளையும் பாக்கக் கூடாத கோலத்துல கெடந்தாங்க. சேைலயும் ஜாக்கெட்டும் பாவாடையும் திக்காளுக்கொண்ணா கெடக்குது. அதெல்லாம் உணர்ற நிலையில அண்ணி இல்ல.வேகமா மூச்சிரைக்குது. கண்ணெல்லாம் மேலா சொருகிக்கிட்டு கண்ணுல கண்ணாமுழியே தெரியாம கெடக்காங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியாம திக்கிச்சு நின்னுட்டேன்.

அப்புறமா சுதாரிச்சிக்கிட்டு பக்கத்துல கெடந்த சேலைய எடுத்து மேல போத்திவுட்டுட்டு ‘அண்ணி... அண்ணி...’ன்னு கன்னத்துல தட்டுனேன்.ஊஹும். கண்ணத் தொறக்கவே இல்ல. சரின்னு சமையல் ரூம்ல போயி தண்ணி எடுத்தாரலாமுன்னு வேகமா கதவைத் தாண்டி ஒரு எட்டு வக்கறேன். 

அப்பதான் சரியா வாசக்கதவு தெறந்து அம்மாவும் இன்னும் ரெண்டு மூணு சொந்தக்காரங்களும் உள்ள நுழைஞ்சாங்க.‘என்னடா சுரேஷா... இந்நேரத்துலயே வந்துட்ட’ன்னு கேட்டுட்டே ‘அண்ணி எங்கடா... குளிக்கிறாளா..?’ ன்னு  கொல்லப்புறமா எட்டிப் பாத்துட்டு வந்தவ நேரா உள்ரூமுக்குள்ள நுழையறா. அந்த நேரத்துக்கு அண்ணிக்கு மயக்கந் தெளிஞ்சு போத்துன சேைலய கட்ட ஆரம்பிச்சுருப்பாங்க போல... பாத்த அம்மா தப்பா புரிஞ்சு, ‘அடித் தரங் கெட்டவளே...’ன்னு ஆரம்பிச்சு பேசக் கூடாத வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிச்சாங்க. என்னையும் கன்னாபின்னான்னு பேசிட்டே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

கூட இருந்த சொந்தக்காரங்களுக்கும் விஷயம் பரவிருச்சு. என்ன ஒரு வேதனைன்னா, பேச முடியலையோ இல்ல பாக்கக் கூடாத கோலத்துல கொளுந்தன் நம்மளப் பாத்துட்டானேங்கற வேதனையோ... அதிர்ச்சியோ ரமா அண்ணி வாயத் தொறக்கவே இல்ல. 

கண்ணுல மட்டும் அருவியாட்டம் கண்ணீரு கொட்டிட்டே இருந்துச்சு.அதுக்கப்புறம் நா எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். காலில் விழுந்து கதறிப் பாத்தும் யாரும் நம்பல. என்னயப் பாக்கறதுக்கே அண்ணி கூச்சப்பட்டுகிட்டு முன்னாடியே வரல்ல. வீட்ல எல்லாருமே விரோதி மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க.

என்னயப் பாக்குற போதெல்லாம் எச்சா அண்ணிய அம்மா திட்ட ஆரம்பிச்சுருச்சு. ஒருவேளை எங்கப்பா உசுரோட இருந்திருந்தா என்னைய நம்பிருப்பாரோ என்னவோ..? சரி. தம்பி... தம்பின்னு வாய் நிறையக் கூப்பிட்ட அண்ணிக்கு நம்மால எதுக்குக் கஷ்டம்ன்னு ஊர விட்டே வந்துட்டேன்...’’சொல்லி முடிச்சுட்டு ஒரு பெருமூச்சு விட்டவர, என்ன சொல்றதுன்னே தெரியாம பாத்துக்கிட்டு இருந்தேன்.அப்புறமா வீட்டுக்குத் தெரியாம போன்ல பேசவும், ரெண்டு மூணு தடவை நேர்ல போயி பாத்துட்டு வந்துட்டும் இருந்தேன். அப்புறமா மேல்படிப்பு , வேலைன்னு போனதுல நேர்ல சந்திக்கிறது, பேசறது எல்லாம் அருகிப் போயி தொடர்பே விட்டுப் போச்சு.

யாராச்சும் சொல்லிருப்பாங்களோ இல்லையோன்னு நினைச்சுக்கிட்டே எங்கிட்ட இருந்த பழைய நம்பருக்கே சித்தப்பாக்கு கால் பண்ணினேன். நல்லவேளையா நம்பர் மாத்தலை. விஷயத்தைச் சொன்னதும் நிமிஷ நேரம் அந்தப் பக்கத்தில இருந்து சத்தமே இல்ல.அப்புறமா... ‘‘ம்ம்...’’ன்னு சொல்லிட்டே கட் பண்ணிட்டார்.

ரமா பெரியம்மாவுக்கு சொந்த ஊர் ‘சிமோகா’ங்கறதுனாலயும், திடீர்  சாவுங்கறதுனால அவங்க ஊர்க்காரங்க, அங்காளி பங்காளின்னு எல்லாரும் வர்றதுக்கு எப்படியும் ஒரு ராத்திரியாகுங்கறதுனாலயும் அடுத்த நாள் தகனம் வச்சிருந்தாங்க.

‘‘சுரேஷானுக்கு சொன்னாங்களா... வருவானாங்கற...’’ பேச்செல்லாம் காதுல குசுகுசுன்னு கேட்டுட்டேதான் இருந்துச்சு.நானும் அதே கேள்வியோடதான் காத்துட்டே நின்னுட்டு இருந்தேன்.

அடுத்த நாள் பத்துமணிக்கு பெருந்துறை எரிவாயு மயானத்துக்கு தேதி வாங்கிருந்தாங்க. எட்டு மணிங்கறப்ப கசகசன்னு பேசிட்டு திடீர்னு அமைதியா யிட்டாங்க.என்னன்னு பாத்தா... சுரேஷ் சித்தப்பா பெரிய ரோஜாப்பூ மாலையோட வந்துட்டு இருந்தார். 

வந்தவர் யாரு முகத்தையுமே நிமிர்ந்து பார்க்காம நேரா ஃப்ரீசர் பாக்ஸ் மேல மாலைய போட்டவர் கீழ வச்சிருந்த உதிரிப் பூவை எடுத்து கொஞ்சமாத் தூவினவரு, கை கூப்பி கண்ணை மூடி அப்படியே நின்னுட்டாரு.அப்பதான் ‘‘டேய் சுரேஷா...’’னு ஒரு கதறல் கேட்டுச்சு. ராஜம் ஆயாதான் கத்திட்டே வந்து அப்படியே சுரேஷ் சித்தப்பா காலுல வுழுகுது. சுத்தி இருந்தவங்க எல்லாம் திக்கிச்சுப் போய் பாக்குறாங்க. சித்தப்பா பதறிப் போனாலும் ஆயாவத் தொட்டுத் தூக்கவே இல்ல.

‘‘டேய்... உங்கண்ணி தன்னைய மட்டுமல்ல... உன்னையும் நிரூபிச்சுட்டுத்தான்டா போயிருக்கா. ‘நா குத்தம் செய்யலைம்மா’ன்னு அன்னிக்கு காலுல வுழுந்து கதறுன. அவளுந்தான் மூச்சிரைச்சிட்டேதான் எடுத்துச் சொன்னா. 

ஆனா, நாந்தான் எதையுமே ஏத்துக்காம உங்க ரெண்டு பேத்து மேலயும் சேத்த வாரிப் பூசி உங்க சந்தோஷத்தக் கெடுத்து வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டேன்.நேத்து உயிர் போற நேரத்துல ‘அன்னிக்கும்... அன்னிக்கு... இதே மாதிரிதான்... காப்பாத்த வந்த தம்பிய... நீங்க... நீங்க... தப்பா... தப்பா...’ன்னு உங்க அண்ணி திணறுனப்பதான் நா நெசத்தையே புரிஞ்சுகிட்டேன். என்ைனய மன்னிச்சுருடா...’’ன்னு மறுபடியும் கதற ஆரம்பிச்சாங்க.

ஆனா, சித்தப்பா முகத்துல எந்த சலனமும் இல்லை. ஆயா புடிச்சிருந்த காலை விலக்கினவரு அமைதியா வெளிய போய் நின்னுட்டாரு. யாரும் அவர் பக்கத்துல போகவும் இல்ல. அவரும் யார்கிட்டேயும் வரவும் இல்ல. நான் உள்பட.இதோ குளிப்பாட்ட ஆத்துத் தண்ணி வந்து, எல்லா அபிஷேகமும் பண்ணி தென்னம் பாடைல ரமா பெரியம்மாவ படுக்க வச்சு சாமி கும்பிட்டு தூக்க ஆரம்பிக்கிறாங்க.அதுவரைக்கும் ஒதுங்கி நின்ன சுரேஷ் சித்தப்பா ஓடிவந்து முதல் ஆளா மூங்கிலப் பிடிச்சு பாடைய சுமக்க ஆரம்பிக்கறாரு‌.

மாலையோட ரமா பெரியம்மாவோட முகம் மேலாகத் தெரிஞ்சது. எனக்கென்னவோ அந்த முகம் அமைதியா புன்னகையோட போற மாதிரியே இருந்தது.வாழும்போது கிடைக்காத நிம்மதி இறந்தபிறகாவது கிடைச்சதேன்னு கண்ணுல நீர்த்துளியோட பாத்துட்டே நடக்கறேன் நான்.

- விஜி முருகநாதன்