இந்தியாவில் வேகமாக விற்கும் நூல்!



இந்தியாவில் இப்போது அதிகமாக விற்கும் புத்தகங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்கப் பிரதி!உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கோபால் சங்கரநாராயணன் யோசனைப்படி தயாரிக்கப்பட்ட Constitution of India கையடக்கப் பிரதியின் முதல் பதிப்பு முற்றிலுமாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்!

இந்தியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆயுதமாக அரசியல் சாசனம் இருந்தது. மத்தியில் 400 எம்பி தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என்று ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாரம் செய்த எதிர்க்கட்சிகள், பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு ஆபத்தானது. அவர்கள் 400 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றால் இந்திய அரசியல் சாசனத்தையே மாற்றி விடுவார்கள் என்று பிரசாரம் செய்தனர்.

‘இது இந்திய அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான தேர்தல்’ என்ற முழக்கத்தை அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. மிக முக்கியமாக காங்கிரஸ்
எம்.பி. ராகுல் காந்தி, தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் கருப்பு - சிவப்பு நிறத்தில் உள்ள Constitution of India (இந்திய அரசியல் சாசனம்) கையடக்கப் பிரதியை கையிலேந்திச் சென்றார்.

எதிர்க்கட்சிகளின் இந்த பிரசாரம் காரணமாக அரசியல் சாசன புத்தகத்துக்கு மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி தனது பிரசாரங்களில் காட்டிவந்த அரசியல் சாசன கையடக்கப் பிரதி புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்ததாக அதை வெளியிட்ட லக்னோ நகரைச் சேர்ந்த ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) தெரிவித்துள்ளது.இந்த தேர்தல் சமயத்தில் மட்டும் 5,000த்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாகவும், தற்போது ஸ்டாக் தீர்ந்துவிட்டதால் அடுத்த பதிப்பு இன்னும் அச்சிடப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

20 செ.மீ நீளம், 10.8 செ.மீ அகலம், 2.1 செ.மீ தடிமன் கொண்ட இந்த புத்தகத்தை 2009 முதல் ஈஸ்டர்ன் புக் கம்பெனி வெளியிட்டுவருகிறது. இதுவரை 16 பதிப்புகள் வெளியாகி

யிருக்கின்றன.

இதுகுறித்து பேசியிருக்கும் ஈஸ்டர்ன் புக் கம்பெனியின் இயக்குநர் சுமீத் மாலிக், “இந்திய அரசியலமைப்பின் பாக்கெட் சைஸ் பதிப்பிற்கான யோசனை மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனிடமிருந்து வந்தது. அதன்படி, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் எளிதாக மேற்கோள்காட்டக்கூடிய வகையிலான பதிப்பை வெளியிட்டோம். 2009ல் சுமார் 700 முதல் 800 பிரதிகள் விற்கப்பட்டன.

பல ஆண்டுகளாக, 5,000 முதல் 6,000 என சராசரியாக நேர்த்தியான அளவில் பிரதிகள் விற்பனையானது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளின்போது இந்த புத்தகத்தைக் குறிப்பிட்டபோது, இதன் விற்பனையும், தேவையும் அதிகரித்ததைக் கவனித்தோம்...” என்கிறார்.

“இந்திய அரசியல் சாசனம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் கையடக்கப் பிரதியைக் கொண்டுவரத் திட்டமிட்டோம். இப்போது அதன் பிரதிகள் அதிகமாக விற்பனையாவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் இந்திய அரசியல் சாசனம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது...” என்கிறார் கோபால் சங்கரநாராயணன்.

ஜான்சி