இங்கிலாந்தை திரும்பிப் பார்க்க வைத்த ட்ரூப்பிங் த கலர்!



காரணம், புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் இளவரசி கேத்தரின் இதில் பங்கேற்றார்...

பிரிட்டிஷ் இறையாண்மையின் அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு, ‘ட்ரூப்பிங் த கலர்’. சுமார் 1400 வீரர்கள், 200 குதிரைகள், 400 இசைக்கலைஞர்கள் என பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புடன் செமயாய் களைகட்டும் ஓர் அழகிய நிகழ்வு அது. 
அந்நேரம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்தவாறே அரச குடும்பத்தினர் அனைவரும் இந்நிகழ்வைக் கண்டுகளிப்பர். கடந்த 260 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு சமீபத்தில் கோலாகலமாக லண்டனில் நடந்துமுடிந்தது. இதனை பிரிட்டிஷ் மக்களும் அத்தனை உற்சாகமாகப் பார்த்து மகிழ்ந்தனர்.  

ஆனால், இந்தமுறை அவர்கள் அனைவரின் கண்களும் அந்த அணிவகுப்பின் மீது மட்டும் இருக்கவில்லை. வேல்ஸ் இளவரசி கேத்தரின் மீதும் பார்வை இருந்தது.
ஏனெனில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கான ஆரம்பகட்ட கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருவதாக அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ அறிவிப்பு பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. அதன்பிறகு கேத்தரின் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முன்பே அவர் ஜனவரியில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தார். அதனால், அரச கடமைகளிலிருந்து விலகியே இருந்தார்.

இந்நிலையில் அவர் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்... என்கிற எந்த விவரங்களும் வெளியுலகுக்கு பெரிதாக வரவேயில்லை. கேத்தரின் நன்றாக இருக்கிறார் என்கிற செய்திகளே மருத்துவமனையிலிருந்து வந்தன.அவர் அப்போது வெளியிட்ட வீடியோவிலும்கூட நலமாக இருப்பதாகவும், மனஉறுதியுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் கணவரும் வேல்ஸ் இளவரசருமான வில்லியம்ஸுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தந்தது.

பிறகு அவரும் நானும் இதனை எங்களது மூன்று குழந்தைகளான ஜார்ஜ்,  சார்லோட், லூயிஸ் ஆகியோருக்கு புரியும்படி எடுத்துச் சொல்லியுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.    
இருந்தும் அரச குடும்பத்தின் மீது மதிப்பும், மரியாதையும், விஸ்வாசமும் கொண்ட பிரிட்டன் மக்கள் வருத்தத்திலேயே இருந்தனர். இந்நேரத்தில்தான் கேத்தரின், ‘ட்ரூப்பிங் த கலர்’ நிகழ்வில் கலந்துகொண்டது அனைவரையும் ஆசுவாசப்படுத்தி இருக்கிறது.

1982ம் ஆண்டு லண்டன் அருகே பெர்க்‌ஷயர் கவுன்டியில் உள்ள ரெட்டிங் நகரில், உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் கேத்தரின் மிடில்டன்.தந்தை மைக்கேல் மிடில்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸில் விமான செயல்பாடுகளின் அதிகாரியாக பணிசெய்தார். 

தாய் கரோல் அதே ஏர்வேஸில் விமானப் பணிப்பெண்ணாக இருந்தார்.பள்ளிப் படிப்பு முடிந்ததும் மார்ல்பரோ கல்லூரியில் பயின்றார். பின்னர், ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அங்கு 2001ல் படிக்கும்போதுதான் சகமாணவராக இருந்த இளவரசர் வில்லியமை சந்தித்தார். இருவரும் 2003ல் டேட்டிங்கில் ஈடுபட்டனர்.

பின்னர் 2004ல் ஒரு சின்ன பிரிவு. பிறகு 2007லிலும் ஒரு பிரிவு. ஆனால், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டனர். தொடர்ந்து 2010ல் கென்யாவின் உயரமான மலைத்தொடரான மவுண்ட் கென்யாவில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது தனது தாய் டயானாவின் மோதிரத்தை கேத்தரினுக்கு அணிவித்தார் வில்லியம்.2011ல் இங்கிலாந்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. 2013ல் முதல் குழந்தை ஜார்ஜ் பிறந்தார். 2015ல் இரண்டாவது குழந்தையான மகள் சார்லோட்டும், 2018ல் மூன்றாவது குழந்தையான லூயிஸும் பிறந்தனர்.

இதற்கிடையே கேத்தரின் பல்வேறு அரச கடமைகளைச் செய்து வந்தார். கூடவே அறக்கட்டளை பணிகளையும் முன்னெடுத்தார். 2022ல் ராணி எலிசபெத், இறந்ததும் வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் 2023ல் அரசராக அரியணை ஏறினார். இதனால், 2022ல் அவரின் மகன் வில்லியம், வேல்ஸ் இளவரசர் ஆனார். 

கேத்தரின் வேல்ஸ் இளவரசி என்ற பட்டத்தை பெற்றார். இந்நிலையில்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கென்சிங்டன் அரண்மனையின் செய்திக் குறிப்பு, இளவரசி கேத்தரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து லண்டன் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும், அரச பணிகளையும் தள்ளிவைத்தார். இதனால் பல்வேறு சந்தேகங்களும் வதந்திகளும் உலா வந்தன. அதன்பிறகே மார்ச் 22ம் தேதி அறுவை சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனையில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாக வீடியோ வெளியிட்டார். இப்போது அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். 

கேத்தரின் ரொம்பவே ஆக்டிவ்வாக இருப்பதாகச் சொல்கின்றன சில தகவல்கள். ‘‘கேட் முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார். அவரால் பலரைப் பார்க்கமுடியவில்லைதான். ஏனெனில், அவர்களின் ஆறுதலும், இரக்கமும் மேலும் தன்னை நோயாளியாக்கிவிடுேமா என்கிற பயமே காரணம்’’ என்கின்றன அந்தத் தகவல்கள்.

எப்போதும் கேத்தரின் தன் கணவர் வில்லியம் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவழித்தார். தானே அவர்களுக்கு உணவு சமைத்துத் தருவதைக்கூட ஒரு விருப்பமாக வைத்திருந்ததாகச் சொல்கின்றன செய்திகள்.கணவர் வில்லியமும் அவருமாகச் சேர்ந்து கோைடகால விடுமுறையை குழந்தைகளுடன் பல இடங்களுக்குச் சென்று கழித்தனர். அத்தனை உற்சாகமாக குடும்பத்தைப் பார்த்து வந்தார் கேத்தரின்.

அவரின் நெருங்கிய உள்வட்டம் என்பது மிகச்சிறியது. அம்மா கரோல், சகோதரி பிப்பா ஆகியோர் மட்டும்தான். அவர்களே எப்போதும் உடனிருப்பார்கள். அவர் இந்த ‘ட்ரூப்பிங் த கலர்’ ஒத்திகை நிகழ்ச்சிக்குக்கூட வரவில்லை. அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். 

அவர் அரச பணிக்குத் திரும்புவாரா, பொது நிகழ்வில் பங்கேற்பாரா என்கிற கேள்விகள் இருந்து வந்தன. இப்போது, ‘ட்ரூப்பிங் த கலர்’ நிகழ்வுக்கு வந்ததன் மூலம் அந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இளவரசி கேத்தரின். இதனால், இங்கிலாந்து மக்கள் உற்சாகமாகியுள்ளனர்.இருந்தும் அவரின் உடல்நிலையைப் பொறுத்தே பொதுநிகழ்வில் கலந்துகொள்வதும், அரச கடமைகளும் அமையும் என்கின்றன செய்திகள்.  

பேராச்சி கண்ணன்