சதுரங்க ராணி!



இந்திய சதுரங்கத்தின் பொற்காலம் இது. பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற இளம் வீரர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இவர்களைப் பார்த்து உலகின் முன்னணி சதுரங்க வீரர்கள் எல்லாம் பயந்து போயிருக்கின்றனர் என்றால் அது  மிகையாகாது. இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் திவ்யா தேஷ்முக்.

யார் இந்த திவ்யா தேஷ்முக்?

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் பிறந்து, வளர்ந்தவர் திவ்யா தேஷ்முக். பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். தந்தையிடமிருந்து திவ்யாவிற்கு சதுரங்க விளையாட்டு அறிமுகமாகியிருக்கிறது.
முதன் முதலாக தந்தையை எதிர்த்துத்தான் சதுரங்கம் விளையாடியிருக்கிறார். ஆறு வயதிலிருந்தே சதுரங்கம் ஆடி வரும் திவ்யா, 2012ம் வருடம் புதுச்சேரியில் நடந்த இந்திய அளவிலான ஏழு வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.

அப்போதிருந்தே இந்திய சதுரங்க வட்டாரத்துக்குள் கவனிக்கத்தக்க ஒரு பெயராக மாறியது திவ்யா தேஷ்முக். இன்று இந்தியாவே பிரியத்துடன் உச்சரிக்கும் ஒரு பெயராக மாறியிருக்கிறது.
ஆம்; சமீபத்தில் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் உலகளவிலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டியிருக்கிறார் திவ்யா.

இதில் புகழ்பெற்ற பல சர்வதேச வீராங்கனைகள் போட்டியிட்டிருந்தனர். குறிப்பாக பல்கேரியாவின் கிராண்ட் மாஸ்டரான பெலோஸ்லவா கிரேஸ்டேவாவைத் தோற்கடித்து சாம்பியனாகியிருக்கிறார் திவ்யா. கொனேரு ஹம்பி, ஹரிகா டுரோனவள்ளி, சௌமியா சுவாமிநாதனுக்குப் பிறகு இருபது வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டம் வெல்லும் நான்காவது பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

தவிர, கடந்த 15 வருடங்களாக இருபது வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், திவ்யா சாம்பியன் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்கம் விளையாடுபவர்கள் பல நாடுகளுக்கும், உள்நாட்டிலேயே பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும்.

அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கு  செலவு அதிகம். திவ்யாவிற்குப் பெரிதாக எந்தவிதமான ஸ்பான்சர்ஷிப்பும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் கொடுக்கின்ற பொருளாதார ஆதரவு மற்றும் பரிசுத் தொகையைக் கொண்டு செலவுகளை நிர்வகிக்கிறார் திவ்யா. இந்த சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, தனக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

மட்டுமல்ல, 2014ம் வருடம் உலகளவிலான பத்து வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியிலும், 2017ம் வருடம் உலகளவிலான பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக எட்டு  வயதிலேயே ‘வுமன் எஃப்ஐடிஇ’ மாஸ்டர், 13 வயதில் ‘வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டர்’, 16 வயதில் ‘வுமன் கிராண்ட்மாஸ்டர்’, 18 வயதில் ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ போன்ற பட்டங்களைத் தன்வசமாக்கிவிட்டார்.

தவிர, 2022ம் வருடம் பெண்களுக்கான இந்தியன் செஸ் சாம்பியன்ஷிப், அதே வருடத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம், 2020ம் வருடம்  ஆன்லைனில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம், 2023ம் வருடம் ஆசியப் பெண்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் என பல பதக்கங்களை வென்றிருக்கிறார்.

மட்டுமல்ல, இந்தியாவின் சதுரங்க வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் நடந்த டாடா ஸ்டீலின் இந்திய செஸ் போட்டியில், ‘ரேபிட்’ பிரிவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தப்போட்டியில் ஹரிகா டுரோனவள்ளி, வன்திகா அக்ரவால், கொனேரு ஹம்பி, சவிதா , ஐரினா கிருஷ், நினோ பட்சியாஸ்விலி போன்ற புகழ்பெற்ற சதுரங்க வீராங்கனைகளைத் தோற்கடித்திருக்கிறார்.

அத்துடன் பெண்களுக்கான சதுரங்கத்தில் உலக சாம்பியன்களாக வலம் வரும் ஜு வென்ஜுன், அன்னா உஷேனினாவுடனான போட்டிகளை டிரா செய்திருக்கிறார். போலினா சுவாலோவாவுடன் மட்டும் தோற்றுவிட்டார்.  18 வயதுக்குள்ளேயே இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடந்த பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகளில் பங்கு பெற்று 21 தங்கம், ஏழு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இப்போது ஓப்பன் ஸ்கூலிங் முறையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் திவ்யா, தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்; வருகின்ற செப்டம்பரில் ஹங்கேரியில் நடக்கப்போகிற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கிறார் திவ்யா தேஷ்முக்.

த.சக்திவேல்