24 வருடங்களா சினிமாவுல உயிர்ப்போடு இருக்கேன்...



‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ஸ்டூடன்ட் நம்பர் 1’  உள்ளிட்ட பல படங்களில் கிரெடிட் இல்லாமல் ஒரு சின்ன ரோலில் நடிக்கத் துவங்கி இன்று விருதுகள் மற்றும் சர்வதேச விழாக்களுக்கு செல்லும் படங்களின் ஹீரோ என்ற இடத்தில் இருக்கிறார் நடிகர் விதார்த்.

இத்தனை வருடங்களில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

24 வருடங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. முழுமையா நான் கத்துக்கிட்டேன்னு தெரிஞ்சாலே இந்த இடத்தை விட்டு என்னைக்கோ காலி செய்து இருப்பேன். கலையை முழுமையாக கத்துக்கிட்டவன் யாருமே இருக்க முடியாது. அப்படித்தான் நானும்.

‘லாந்தர்’?  

படம் முழுக்கவே ஒரே இரவில் நடக்கும் கதை. அதிலே வெளிச்சம் தரக்கூடிய லாந்தர் போன்ற ஏதோ ஒன்று கதையை இயக்கப் போகுது. நான் ஒரு போலீஸ் அதிகாரி. ஆனாலும் மற்ற படங்களில் வருகிற மாதிரி அதிரடி ஆக்ஷன் இப்படி எல்லாம் எதுவும் அல்லாத ஒரு சாதாரண மனிதன். அவனுக்கு வரும் பிரச்னை... அதை பிராக்டிக்கலாக அணுகும் கேரக்டர்.
எந்த ஹீரோயிசமும்  படத்தில் இருக்காது. ஆக்சுவலி இந்த கதைக்கு முதலில் தேர்வான நடிகர் வேறொருவர். ஆனால், ஒரு சில காரணத்தால் அவர் நடிக்காமல் போக இந்த கதை என்கிட்ட வந்தது.

இயக்குனர் ஷாஜி சலீமுடன் ஏற்கனவே ‘விடியும் வரை காத்திரு’ படத்தில் ஒண்ணா வேலை செய்திருக்கேன். ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இன்னும் ஒரு ஏழு நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது.

நடிக்க வரும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

இன்னைக்கு யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டிய தேவையே இல்லை. சரியாக சொல்லிக் கொடுத்தால் சின்ன குழந்தைகள் அவ்வளவு அற்புதமாக நடிப்பாங்கன்னு சொல்லுவாங்க. நானே கண்கூடாக பார்த்திருக்கேன். இன்னைக்கு வருகிற அத்தனை பேரும் அவ்வளவு திறமைசாலிகளாகவும் சினிமானா என்னன்னு தெரிந்தும் வராங்க. 

அவங்க கிட்ட இருந்துதான் நான் நிறைய கத்துக்கணும். ஹீரோ, வில்லன், வயதான அரசியல்வாதி... இப்படி கண்டிஷன் இல்லாமல் கதைகளை தேர்வு செய்வது ஏன்? எனக்கு ஒரு பழக்கம் உண்டு. செய்ததையே திரும்பத் திரும்ப செய்தால் போர் அடிச்சுரும். எனக்கு நடிப்பதற்கு புதிதாக என்ன இருக்கு? இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தால் நிச்சயமாக அந்த படத்தில் நடிச்சிடுவேன்.

அதேபோல் இந்த கதை நமக்கு வொர்க் அவுட் ஆகும் என்கிறதை புரிஞ்சிக்கிற அளவுக்கு இப்போது பக்குவ நிலை வந்திருக்கு. முதலில் கதை... அதில் எனக்கு என்ன பங்கு... என்னுடைய கேரக்டர் படத்தில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தால்... அது 10 நிமிட கேரக்டரா இருந்தாலும் யோசிக்காமல் செய்வேன்.

‘அஞ்சாமை’ போன்ற படங்களில் நடிக்கும் போது எப்படிப்பட்ட பலன் கிடைக்கிறது?

வெகுஜனங்களுடன் வாழ்கிறேன். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அப்போ ஒருவர் வந்து ‘படம் பார்த்தேன். படத்தில் காண்பித்த அத்தனை கஷ்டங்களும் கடந்து கிட்டத்தட்ட தற்கொலை வரை சென்றுவிட்டு இன்னைக்கு என் தங்கை டாக்டரா இருக்காங்க’னு அவர் சொல்லும் போது சமூகம் சந்திக்கிற ஏதோ ஒரு பிரச்னையை நாம படத்தில் சொல்லியிருக்கோம் என்கிற திருப்தி கிடைத்தது.

அவர் என்கிட்ட சொல்லும் பொழுதே என்னை ஒரு நடிகர் என்கிறதை தாண்டி தன்னுடைய கஷ்டத்தை பங்கு போட்டுக்கொண்ட இன்னொரு மனிதராகத்தான் அவர் என்கிட்ட பேசினார்.
சர்க்கார் வெறும் படத்தின் கேரக்டர் அல்ல. தன்னுடைய மகனோ அல்லது மகளோ மருத்துவராக வரணும்னு கனவு காண்கிற அத்தனை தந்தையின் அடையாளமாதான் நான் பார்த்தேன். இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்பொழுதுதான் பொதுமக்கள் கிட்ட சுலபமா நெருங்க முடியும்; என்னை நானே கனெக்ட் செய்துக்க முடியும்.  

உங்களைப் பொறுத்தவரை சினிமா நடிப்பு என்றால் என்ன?

தொழில், கனவு, ஆசை... இதையெல்லாம் தாண்டி எனக்கான  ஆழமான பந்தம் சினிமாதான். ஏதாவது சாதிக்கணும்னு ஆர்வமும் ஆசையும் ஒருசேர சினிமாவிற்குள் வந்தவன் நான். என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிற சக்தி சினிமாதான். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் நான் என்ன கேரக்டரை ஏற்று நடிக்கிறேனோ அந்த கேரக்டரில்தான் இருப்பேன். முதல் படத்தின் கேரக்டரை என்னிடமிருந்து எடுக்கணும்னா அடுத்த படத்தின் கேரக்டர் எனக்கு வந்தாகணும்.

இப்படி படத்திற்கு படம் ரியல் வாழ்க்கையிலும் கூட அந்த கேரக்டர் என்கிட்ட தாக்கத்தை உண்டாக்கிக்கிட்டே இருக்கும். அந்த அளவிற்கு சினிமா எனக்கு மிகப்பெரிய பந்தம்.
விதார்த் என்கிற நடிகனா என்னை கூப்பிடுவதைவிட சர்க்கார், சுருளி, அரவிந்த்... இப்படி படத்தின் கேரக்டர்களில் என்னை கூப்பிடும் பொழுது இன்னும் நான் உயிர்ப்பா உணர்றேன். ஒரு நடிகனா எனக்கு கிடைக்கிற அங்கீகாரம் அதுதான்.

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?

ஒருசில ப்ராஜெக்ட் ஷூட்டிங் போயிட்டு இருக்கு. தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’ படத்தின் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் ‘காகங்கள்’ படம் முடிஞ்சிடுச்சு.
இந்தப் படங்கள் இல்லாமல் ‘வைப்பர்’, ‘மூன்றாம் கண்’, ‘சீமதண்ணி’, ‘காட்டுமல்லி’ உள்ளிட்ட படங்கள் ப்ரொடக்‌ஷனில் இருக்கு. இன்னும் சில படங்களின் அறிவிப்பு விரைவில் வரும்.  l

ஷாலினி நியூட்டன்