தில்லி அல்ல... வெயில் தாக்கத்தில் சென்னைதான் முதலிடம்!



பொதுவாக வெயில், வெக்கை, காற்று மாசு என்றாலே பலபேர் தில்லியைத்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவார்கள். ஆனால், கடந்தவாரம் வெளியான ஓர் ஆய்வு, சென்னைதான் வெக்கையில் வேகும் முதன்மையான நகரம் என்று பச்சை குத்துகிறது.
தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆய்வு நிறுவனம் ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கல்வி அமைப்பு’ (Centre for Science and Environment). இந்த அமைப்பு கடந்த மே மாத இறுதியில் ஓர் ஆய்வை வெளியிட்டது. இந்த ஆய்வில்தான் தில்லி, மும்பை, கல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்தைவிட சென்னைதான் வெக்கையில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறது.

இந்த ஆய்வின் தலைப்பு ‘இந்திய நகரங்களின் வெயில் குறியீட்டை எப்படி புரிந்துகொள்வது’ (வெயில் குறீயீடு - Heat Index). வெயில் குறியீடு என்பது வெயிலின் அளவு (உதாரணம் டிகிரி, செல்சியஸ்) மற்றும் காற்றின் ஈரப்பதம் (ஹியூமிடிட்டி- Humidity) சேர்ந்தது என்றும் விளக்கம் சொல்கிறது அந்த ஆய்வு. 

இந்த ஆய்வு 2001 மற்றும் 2011க்கு இடைப்பட்ட காலத்தின் வெயில் குறியீட்டுடன் 2014 மற்றும் 2023 உடன் ஒப்பிட்டுப் பேசினாலும் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2014 முதல் 2023 வரை இந்த குறியீடு எப்படி மாற்றமடைந்திருக்கிறது என்று சொல்கிறது.

இதன்படி கடந்த பத்து ஆண்டுகளில் ஏப்ரல், மே, ஜூன் 15 வரையிலான சம்மர் உச்சக்கட்டக் காலத்தில் மட்டுமே சென்னை சராசரியாக 37.4 டிகிரி செல்ஷியசைக் கடந்து மற்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி கடைசியில் முதலிடத்தில் வந்திருப்பதாக முகத்தில் அறைகிறது.

இந்த 37.4 வெயில் குறியீட்டு அளவில் சுமார் 6.9 டிகிரி செல்ஷியல் ஈரப்பதமும் சேர்ந்துகொண்டதால்தான் சென்னை மற்ற நகரங்களைவிட வெயில் அரக்கனின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது ஆய்வு. ஈரப்பத அதிகரிப்பால் பகலில் அடிக்கும் வெயில்கூட இரவிலும் வெக்கையாக வெந்து தகிக்கிறது என்று சொல்கிறது இந்த ஆய்வு. சுற்றுச்சூழல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த பிரபாகரனிடம் இந்த ஆய்வு தொடர்பாக பேசினோம்.

‘‘இந்த ஆய்வின்படி, கடந்த 10 வருடத்தில் சென்னையின் வெயில் 0.5 டிகிரி அதிகமாகியிருக்கிறது. இத்தோடு ஈரப்பதத்தின் அளவை எடுத்துக் கொண்டால் கடந்த 5 வருடத்தில் சுமார் 5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 0.1 டிகிரி வெயில் உயர்வு என்றாலே சிக்கல்தான். 

இந்நிலையில் 0.5 டிகிரி உயர்வு என்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்...’’ என்று சொல்லும் பிரபாகரன் இந்த ஆய்வின் சில சூட்சுமங்கள் பற்றி சொன்னார்.‘‘இந்த ஆய்வில் சென்னையின் வெயில் குறியீடு 37.4 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளுக்குமான வெறும் சராசரிதான். 10 ஆண்டில் மொத்தம் 10 சம்மர்களை சென்னை கண்டிருக்கும்.

சம்மர் நாட்களிலும் வெயில் குறியீடு ஒவ்வொரு சம்மரிலும் எத்தனை நாட்கள் நீடித்தது என்று கணக்குப் போட்டால் அது இப்போது 3 மடங்கு நாட்கள் நீடிப்பதாக சொல்லலாம்.
உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் வெறும் 30 நாட்கள்தான் சம்மர் இருந்தது என்றால் இப்போது 90 நாட்களாவது நீடிக்கிறது...’’ என்று சொல்லும் பிரபாகரன், வெயில் குறியீட்டுக்கு இன்னொரு பெயரும் இருப்பதாக விளக்குகிறார்.

‘‘சராசரி வெயில் குறியீடு என்பது வெக்கையின் மொத்த பாதிப்பையும் குறிக்காது. இதனால்தான் இப்போது எல்லாம் ‘வெயில் இத்தனை டிகிரி’ என்றாலும் ஃபீல்ஸ் லைக் (feels like) என்று ஒரு அளவைத் தருகிறார்கள். உதாரணமாக, குறிப்பிட்ட நாளில் வெயிலின் அளவு 32 டிகிரி செல்ஷியல் என்றாலும் ஃபீல்ஸ் லைக் அதாவது நீங்கள் உணரும் வெப்பத்தின் தாக்கம் 42 டிகிரி செல்ஷியஸ் என்று பல தட்பவெப்ப அறிவிப்பு இணையதளங்கள் அறிவிக்கின்றன.

இந்த ஃபீல் லைக் டிகிரி செல்ஷியசும் உண்மையில் வெயில் இண்ெடக்ஸ் குறியீடு போன்றதுதான். எடுத்துக்காட்டாக, இதிலும் வெயில் அளவு மற்றும் ஈரப்பதத்தின் அளவை வைத்துதான் வெப்பத்தின் தாக்கத்தை சொல்கிறார்கள். உண்மையில் 41 டிகிரி செல்ஷியஸ் என்பதை உலகளவில் ஓர் ஆபத்தான வெப்ப சூழலாக கணித்திருக்கிறார்கள். உதாரணமாக, சென்னையில் கடந்த மே மாத வெயில் காலங்களில் இந்த வெயில் குறியீடு அல்லது ஃபீல்ஸ் லைக் டிகிரி செல்சியஸ் 49 வரைக்கும்கூட சென்றது.

இன்னொரு விஷயம்... தில்லியில் சென்னையைவிட வெயில் குறைவு, ஈரப்பதம் குறைவு என்றாலும் வெப்பத்தால் மரணம் எனும் செய்திகள் தில்லியில் இருந்து வருகிறது. சென்னையில் அப்படி ஒரு கணக்கீடு எல்லாம் செய்யப்படுகிறதா என்று தெரியாது...’’ என்று சொல்லும் பிரபாகரன், சென்னையின் வெப்பத்துக்குக் காரணமான இங்குள்ள ஈரப்பதத்தின் அளவின் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் வெக்கைதான் என்கிறார்.

‘‘தில்லி போல் இல்லாமல் சென்னை கடலை ஒட்டிய பிரதேசம். பொதுவாகவே கடலை ஒட்டிய பிரதேசம் என்றாலே ஓரளவுக்கு காற்றில் ஈரப்பதம் இருக்கும். ஆனால், சென்னையில் வெயில் அளவு அதிகமாகும்போது சென்னையின் கடல் நீர், ஆற்று நீர் மற்றும் தரை நீர் எல்லாம் ஆவியாகி காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். காற்றில் ஈரப்பதம் இருக்கும்போது மனிதர்களிடம் வியர்ப்பது குறைவாக இருக்கும். வியர்க்காதபோது மனிதனின் உடல் சூடாகும்.

இதுதான் ‘ஹீட் ஸ்ட்ரஸ்’ (Heat Stress). இது மனிதனுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது. தலைவலி, தலைசுற்றல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு இது
காரணமாகிவிடும். கடைசியில் வெயிலில், வெக்கையில் வேலை செய்யும் விளிம்பு நிலை மக்கள், உணவு பறிமாறும் இளைஞர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள்தான் மிகவும் பாதிப்படைவார்கள். வெயிலை கட்டுப்படுத்தாமல் ஈரப்பதத்தை நம்மால் கட்டுப்படுத்தமுடியாது.

உதாரணமாக, சென்னையின் இரவு கூலாவது குறைவாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆய்வின்படி, சென்னையின் கட்டடங்கள் கடந்த 20 வருடத்தில் 30 சதவீதத்தில் இருந்து 73.5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக சென்னை ஒரு கான்கிரீட் வனமாக மாறிவிட்டது. அதேபோல சென்னையின் கிரீன் கவர் எனும் பசுமைப் பரப்பு அதே ஆண்டுகளில் 34 லிருந்து 20 ஆக குறைந்திருப்பதாக ஆய்வு சொல்கிறது.

வெயிலைத் தடுக்க கார்பன் உமிழ்வு தடுப்பு போன்ற நடவடிக்கைகள்தான் முதன்மையானவையானாலும், இரவு வெக்கையைத் தடுக்கும் திறன் இந்த கட்டடம் இல்லா சென்னை, பசுமைக் காடுகளுக்கே உண்டு.இன்றைய தமிழக அரசும் வெப்ப அலைகள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கேள்விப்படுகிறேன். ஆலோசனையோடு அரசு களத்திலும் இறங்கி செயல்பட்டால் விரைவில் சென்னை பற்றிய இந்த ஆய்வு முடிவுகள் சில ஆண்டுகளில் மாறலாம்...’’ நம்பிக்கையோடு சொல்கிறார் பிரபாகரன்.

டி.ரஞ்சித்