விண்வெளியில் பெட்ரோல் பங்க்! அசத்தும் தமிழக இளைஞர்



இந்தியாவும் மற்ற நாடுகளும் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. இதில் தகவல் தொடர்பியலுக்கு, பூமியை கண்காணிப்பதற்கு, கடல் அறிவியலுக்கு, தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு, ராணுவத்திற்கு, மாணவர்களுக்கு, ரேடார் இமேஜிற்கு எனப் பல்வேறு காரணங்கள் அடங்கும்.

இப்படி அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட காலம் வரை விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு எரிபொருள் தீர்ந்ததும் அது விண்வெளியில் குப்பையாக உலவிக் கொண்டிருக்கும். 

ஒருவேளை எரிபொருள் இருந்திருந்தால் அது இன்னும்கூட விண்வெளியில் தன் பணிகளை மேற்கொண்டிருக்கும்தான்.ஆனால், விண்வெளிக்குச் சென்று அந்த செயற்கைக்கோளுக்கான எரிபொருளை யார் நிரப்புவது? இதை கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது. ஆனால், இந்த மில்லியன் டாலர் கேள்வியே இளைஞர் சக்திகுமாரைத் துரத்தியிருக்கிறது.

நீண்ட தேடலுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகு இதற்கென ‘OrbitAID’ என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கினார். அதன்வழியே அவரும் அவரின் குழுவினரும் இணைந்து விண்வெளியில் செயற்கைக்கோளுக்கான எரிபொருள் நிரப்பும் ‘ரீஃபியூவல் டேங்கர் சாட்டிலைட்’டை வடிவமைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்ல. இந்த ஸ்டார்ட்அப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இவர்களின் நிறுவனத்தில் தமிழக அரசு 4.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதிக முதலீடு பெற்ற முதல் ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட்அப்நிறுவனமும் இதுவே.

‘‘விரைவில் ரீஃபியூவல் டேங்கர் சாட்டிலைட்டின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை விண்வெளியில் நடத்த இருக்கோம். இதன்மூலம் விண்வெளியில் செயற்கைக்கோளுக்கான ஆயுளை நீட்டிக்க முடியும்னு உலகிற்குக் காட்ட இருக்கோம்...’’ என நம்பிக்கை விதைக்கும் சக்திகுமார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்.

‘‘சொந்த ஊர் பெரம்பலூர் பக்கத்துல வடக்கலூர்னு ஒரு கிராமம். அப்பா ராமச்சந்திரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா சந்திரா. எனக்கு ஒரு அண்ணனும், அக்காவும் இருக்காங்க.

சின்ன வயசுல இருந்தே விண்வெளி மீது ஆர்வம். கிராமத்துல வளர்ந்ததால் வீட்டுக்கு வெளியில்தான் படுத்துறங்குவோம். அப்ப வானத்தைப் பார்க்கிறது, நட்சத்திரங்களை கவனிக்கிறதுனு எல்லாம் இருப்பேன்.இரவுல தூங்கும்போது நமக்கு நேராக இருக்கிற நிலவு காலையில் பின்னாடி போயிருக்கும். 

அப்ப நாம சுத்துறோமா அல்லது நிலா சுத்துதானு கேள்வி எல்லாம் வந்தது. அடுத்து, சூரிய கிரகணம் ஏற்படும்போது வெறும் கண்களால் பார்க்கக்கூடாதுனு ஊர்ல சொல்வாங்க. அப்ப கலர் பேப்பரை வச்சுப் பார்ப்போம். இந்தமாதிரி சின்னச் சின்ன ஆர்வங்கள் என்னை விண்வெளி படிப்பை நோக்கிக் கொண்டு போனது.

அடுத்து பிளஸ் டூ படிக்கிறப்ப அப்துல்கலாம் அய்யா ஜனாதிபதியாக இருந்தார். அவர் என்னைப்  போன்ற இளைஞர்களுக்கு பெரிய உத்வேகம் தந்தார். பிறகு, பிஇ ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்புல சேர்ந்தேன்.அந்நேரம்தான் தமிழ்நாட்டுல ஏரோநாட்டிக்கல் படிப்பும் நிறைய கல்லூரிகள்ல வந்தது. இந்தப் படிப்பு விமானங்கள் சம்பந்தமானது. ஆனா, அதுல சின்னதாக ஒரு பகுதி விண்வெளி சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இதைப் படிச்சபிறகும் எனக்கு திருப்தி ஆகல. அதனால், ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் விண்வெளி பொறியியல் மற்றும் ராக்கெட் துறையில் மாஸ்டர்ஸ் முடிச்சேன்.அப்புறம், பெங்களூர்ல இருக்கிற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கழகத்துல ஒரு ஆய்வாளராக சேர்ந்தேன். 

அங்க விமானம், விண்வெளி, ராக்கெட் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் நடக்கும். அதுல எரிபொருளுக்குத் தேவையான விஷயங்கள் எப்படினு எல்லாம் பார்க்கலாம். அங்கிருந்து எரிபொருள் மேல் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆச்சு. அங்க 2011ல் இருந்து 2020 வரை பத்தாண்டுகள் பணி செய்தேன். அப்ப செயற்கைக்கோள் பற்றி நிறைய ஆர்வம் ஏற்பட்டுச்சு...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘பொதுவாக இஸ்ரோ பிஎஸ்எல்வி லாஞ்ச் பண்ணினதும் ராக்கெட் ஏவப்பட்டது; செயற்கைக்கோள் சுற்றுவட்டாரப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதுனு செய்திகள்தான் வரும்.
ஆனா, நிலைநிறுத்தப்பட்டதுல இருந்து முடிவுக்கு வருகிற வரை அது என்ன பண்ணுது என்கிற தகவல்கள் ஆய்வாளர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 இது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டுச்சு.அப்புறம், அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஒரே ஒருமுறைதான் விண்வெளியில் உபயோகப்படுத்தப்படுது. ஏன் பலமுறை உபயோகப்படுத்தப் படுறதில்ல என்கிற கேள்வியும் எழுந்தது.

அப்ப யாரும் யோசிக்காத விஷயங்களை நாம் யோசித்து செய்யணும்னு முடிவெடுத்தேன். அந்நேரம் செயற்கைக்கோள்ல எரிபொருள் தீர்ந்திடுச்சுனா அது அப்படியே விண்வெளியில் குப்பையாக உலவும்னு தெரிஞ்சது.அதனால், இப்படி குப்பையாவதைத் தடுக்க என்ன செய்யலாம்னு யோசிச்சு 2014ல் இருந்து இதற்கான ஆய்வுகளைப் பண்ண ஆரம்பிச்சேன். குப்பையாகும் செயற்கைக்கோளின் வாழ்நாளை நீட்டிப்பதற்கான வழிகள் இருக்கானு தேடினேன்.

அப்பதான் பெட்ரோல் பங்க் கான்செப்ட் மனசுக்குள்ள ஓடியது. அதாவது நாம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை போறோம். இடையில் விழுப்புரத்துல பெட்ரோல் தீர்ந்திடுது. உடனே அங்குள்ள பெட்ரோல் பங்க்ல போய் நிரப்புவோம்.அப்புறம் திருச்சியோ, மதுரையோ போகிறபோது பெட்ரோல் காலியானா மறுபடியும் இன்னொரு பங்க்கிற்குப் போவோம். இதேமாதிரி செய்தால் என்னனு யோசிச்சேன்.  

அதாவது விண்வெளியிலேயே ஒரு எரிபொருள் நிலையத்தை உருவாக்கிட்டால் என்னனு தோணுச்சு. அது விண்வெளியில் சாத்தியமாங்கிற ஆய்வுல இறங்கினேன்.நிறைவில் நானும் என் குழுவினரும் சேர்ந்து இந்த ரீஃபியூவல் டேங்கர் சாட்டிலைட்டை கண்டுபிடிச்சோம். அதுமட்டுமல்ல. 

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் சேமிக்கப்படும்...’’ என்கிற சக்திகுமார் அதன் மாதிரியை நம்மிடம் காட்டினார்.‘‘இதற்காகவே 2021ல் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிகில் பாலசுப்ரமணியன், மனோ பாலாஜி உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து தொடங்கினேன்.

ஆரம்பத்துல இதற்கு, ‘சாட்டிலைட் எய்டு’னு பெயர் வைக்கலாம்னு நினைச்சோம். ஆனா, அது செயற்கைக்கோளுக்கு மட்டுமே பொருந்தும். உண்மைல ஆர்பிட் என்கிற சுற்றுவட்டப் பாதைக்குத்தான் நிறைய உதவிகள் தேவைப்படுது. அதனால், எல்லோரும் சேர்ந்து ‘OrbitAID’னு ஸ்டார்ட்அப்பிற்கு பெயர் வச்சோம். 

பொதுவாக விண்வெளியில் பல லட்சம் கோடி மதிப்புமிக்க செயற்கைக்கோள்கள் எரிபொருள் இல்லாமல் குப்பையாகிக் கிடக்குது. இவற்றில் பல செயற்கைக்கோள்கள் தம்முடைய செயல்பாடுகளை முடிக்காமலும், சில செயற்கைக்கோள்கள் வந்த பணியை நிறைவேற்றிட்டும் குப்பையாகி இருக்கு.

இதன் செயல்பாடுகளை இன்னும் செய்ய வைக்கமுடியும். அதற்கு எரிபொருள் தேவை. எரிபொருள் இல்லாததால் அது வேலை செய்யாமல் வீணாகிடுது. இதனால், அதே செயல்பாட்டிற்காக புதுசாக செயற்கைக் கோளை அதிகப் பொருள் செலவில் சம்பந்தப்பட்ட விண்வெளி நிறுவனங்கள் உருவாக்கி அனுப்பிட்டு இருக்காங்க.இப்படி அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களே இப்ப பூமியின் சுற்றுவட்டப் பாதையில் அதிகளவு இருக்குது. இதை மாற்று செயற்கைக்கோள்னு சொல்வாங்க.

எங்களுடைய இந்த ரீஃபியூவல் டேங்கர் சாட்டிலைட் வந்திடுச்சுனா மாற்று செயற்கைக்கோளின் தேவைகள் குறைஞ்சிடும். தவிர, ஒரு பணிக்காக அனுப்பப்படுகிற செயற்கைக்கோளை அந்தப் பணி முடிக்கிற வரை சிறப்பாக செயல்பட வைக்கலாம். அதன்பிறகு தேவைனா பயன்படுத்தலாம். 

ஒரு செயற்கைக்கோளை மூன்று ஆண்டுகள், பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகள்னு நிர்ணயித்து அதற்கேற்ப டிசைன் பண்ணி அனுப்புவாங்க. இந்த ரீஃபியூவல் டேங்கர் வந்தால் அந்த செயற்கைக்கோள்களை இன்னும் நிறைய ஆண்டுகளுக்கு டிசைன் பண்ணலாம்...’’ என்கிறவர், எரிபொருள் நிலையம் பற்றி விவரித்தார்.

‘‘நாங்க ஒரு பெரிய ரீஃபியூவல் டேங்கர் செயற்கைக்கோளை விண்வெளியில் அமைக்கப்போறோம். இது ஒரு பெட்ரோல் பங்க் மாதிரி செயல்படும். இதுதவிர, நிறைய பெட்ரோல் பங்க்குகள் கட்ட இருக்கோம். அதுவே எங்க டார்கெட்.எந்த இடத்துல செயற்கைக்கோள்கள் அதிகமாக இருக்கோ - அதாவது எந்த சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் அதிகம் இருக்கோ அதுக்குத் தகுந்தமாதிரி அந்த இடத்துல டேங்கர் சாட்டிலைட்டை வைச்சிடுவோம். அதாவது முழுமையாக எரிபொருள் நிறைந்த ஒரு செயற்கைக்கோளை அங்க நிறுத்தி வைப்போம்.

அந்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்கள் எரிபொருள் தீர்ந்துச்சுனா இந்த டேங்கர் சாட்டிலைட்ல இருந்து எரிபொருளை நிரப்பிக்கலாம்.ஒருவேளை இந்த டேங்கர் சாட்டிலைட்ல எரிபொருள் தீர்ந்திடுச்சுனா இங்கிருந்து ஒரு எரிபொருள் செயற்கைக்கோளை அனுப்பி அதை மறுநிரப்புதல் செய்வோம். அதுக்கான மாடல்களையும் பண்ணியிருக்கோம். அதனால், எப்பவும் டேங்கர் சாட்டிலைட்டில் எரிபொருள் இருக்கும்.  

இந்த ஸ்டார்ட்அப்பில் உலகில் இரண்டு பேர்தான் இருக்காங்க. அதில் ஒண்ணு நாங்க. அமெரிக்காவில் இன்னொரு நிறுவனம் இருக்காங்க. ஆனா, அவங்களைவிட நாங்க தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் முன்னணியில் இருக்கோம். அப்புறம், பொதுவாக ஒரு செயற்கைக்கோளை தாழ்வான சுற்றுவட்டப் பாதை, உயர்வான சுற்றுவட்டப் பாதை, நிலையான சுற்றுவட்டப் பாதைனு எங்க நிலைநிறுத்தணுமோ அதைப் பார்த்து அனுப்புவாங்க. இதைப் பொறுத்தே செயற்கைக்கோள் எரிபொருள் இருக்கும்.

உதாரணத்திற்கு உயர் சுற்றுவட்டப் பாதைக்கு ஆயிரம் கிலோ எரிபொருள் எடுத்திட்டுப் போவாங்க. தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு நூறு கிலோ எடுத்திட்டுப் போவாங்க. இப்படி ஒவ்வொரு சுற்றுவட்டப் பாதைக்கும் எரிபொருள் எடை மாறுபடும்.இதனால் என்னவாகும்னா, ஆயிரம் கிலோ எரிபொருள் எடுத்திட்டுப் போறப்ப அந்தச் செயற்கைக்கோள் கொண்டு போகிற payload குறைஞ்சிடும். Payload என்பது விண்வெளி ஆய்வுக்காகக் கொண்டு செல்லப்படும் தொழில்நுட்பக் கருவிகள்.

தொழில்நுட்பக் கருவிகள் குறைவாகக் கொண்டு செல்லும்போது ஆய்வுகளும் அதைச் சார்ந்தே அமையும். இப்ப நாங்க என்ன சொல்றோம்னா,  payload நிறைய எடுத்திட்டுப் போங்க. ஆய்வுகளை சிறப்பாக செய்யுங்க. எரிபொருள் தீர்கிற போது நாங்க ஃபில் பண்ணித் தர்றோம். எரிபொருளுக்காக தொழில்நுட்பத்துல காம்ப்ரமைஸ் பண்ணாதீங்கன்னு சொல்றோம்.
நாங்க சாதாரண திரவ எரிபொருள் நிலையத்தை அமைக்கத் தயாராகிட்டோம். இப்ப தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்துல ராக்கெட் ஏவுதளம் கொண்டு வந்திருக்காங்க. தமிழக அரசும் விண்வெளிப் பூங்கா அமைக்கப்போறாங்க.

அப்புறம் இந்தியாவிலும், உலக அளவிலும் நிறைய செயற்கைக்கோள்கள் அனுப்ப இருக்காங்க. அப்ப ரீஃபியூவல் டேங்கர் தேவையும் அதிகமிருக்கும். இதுவரை மொத்தமாகப் பார்த்தால் கடந்த நாற்பது ஆண்டுகள்ல ஏழாயிரம் செயற்கைக்கோள்கள்தான் அனுப்பியிருக்காங்க. இனி அடுத்த பத்தாண்டுகள்ல 25 ஆயிரம் செயற்கைக்கோள்கள் வரப்போகுது.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் செயற்கைக்கோளுக்கான எரிபொருள் எப்பவும் தேவைப்படும். ஆக, ரீஃபியூவல் டேங்கர் சாட்டிலைட்டின் தேவையும் அதிகரிக்கும். அப்ப, ‘OrbitAID’ முன்னோடியாக விளங்கும்.

இதுமட்டுமல்ல. இப்ப நாங்க விண்வெளியில் டேட்டா டிரான்ஸ்ஃபர் பண்ணும் வேலைகளும் செய்ய இருக்கோம். அப்புறம், ஒரு செயற்கைக்கோளுடன் இன்னொரு செயற்கைக்கோளை அசெம்பிள் பண்ணும் பணிகளையும் மேற்கொள்ளப் போறோம். அதாவது, ஏற்கனவே அனுப்பிய செயற்கைக்கோளுடன், அதை அனுப்பிய நிறுவனம் புதிதாகக் கண்டறிந்த ஒரு சிறிய செயற்கைக்கோளை இணைக்கணும்னு நினைப்பாங்க. அதை நாங்க செய்து தருவோம்.

இதுக்காக அவங்க கோடிக்கணக்கில் செலவு பண்ணி தனியாக ஒரு செயற்கைக்கோள் அனுப்பணும்னு தேவையில்ல. இதனுடன் லூனார் கேட்வேனு சொல்வாங்க. அதாவது நிலா அருகே வரும் சுற்றுவட்டப் பாதை. அங்க எரிபொருள் நிலையம் அமைக்க ப்ளான் பண்றோம். அதாவது, வெவ்வேறு கோள்கள்ல ஆராய்ச்சி செய்றவங்களுக்கும் பயன்படும் வகையிலான சாத்தியமான எரிபொருள் நிலையம் உருவாக்க நினைக்கிறோம். இதுதான் எங்களின் எதிர்காலத் திட்டம்...’’ என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் சக்திகுமார்.   

பேராச்சி கண்ணன்