வெள்ளைப் பனிமலையின் மீதுலாவி...



புதிய தொடர்

உயிர் பயம் என்பதைப் பற்றி பல கதைகளில் விதவிதமான வார்த்தைகளில் விவரித்திருக்கிறேன். ஆனால், வாழ்வில், அதுவும் ஒரு சுற்றுலாப் பயணத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்தது சமீபத்தில்தான். அது இரண்டு முறை ‘ஹாய்...’ சொன்னதால் அனுபவங்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
முதல் ‘ஹாய்’ சொன்ன சூழ்நிலை என்னவென்றால்... இருங்கள். அதென்ன சுற்றுலா, யாரோடு, எங்கே போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். ஆம் / இல்லை என்று ஒற்றை வார்த்தையில் இதற்கு பதில் சொல்ல இயலாதென்பதால் கொஞ்சம் ஆலாபனையில் துவங்குகிறேன்.

பள்ளி நாள்களில் பட்டுக்கோட்டையிலிருந்து இதோ திருச்சிக்கு அருகில் இதோ இருக்கிற கல்லணைக்கும், கத்தி அழைத்தால் கேட்க சாத்தியமுள்ள தூரத்தில் இருக்கும் தஞ்சாவூருக்கும் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது ஜிவ்வென்று இருக்கும். போய் வந்ததும் அந்த அனுபவத்தைக் கட்டுரையாக எழுதச் சொல்லும்போதுதான் கடுப்பாக இருக்கும். 
சில பத்தாண்டுகள் கழித்து ‘சீனா போன பேனா’, ‘ஹலோ ஹாங்காங்’, “Thai’ மண்ணே, வணக்கம்’ என்று என் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுரைத் தொடராகப் பத்திரிகைகளில் எழுதுவேன் என்று அப்போது யோசித்ததில்லை. அமெரிக்கா, கனடா பயணத் தொடர் பாக்கியிருக்க... முந்திக்கொண்டது இந்த உள்நாட்டுப் பயணத் தொடர்.

பல வெளிநாட்டுப் பயணங்கள் வாய்த்த அளவிற்கு பெரிதாக உள்நாட்டுப் பயணங்கள் வாய்க்கவில்லை எனக்கு. தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களிலும் பலமுறை பயணம் செய்தாயிற்று. வட இந்தியாவைப் பொறுத்தவரை மஹாராஷ்ட்ராவில் மும்பாய் மட்டும். 

பிறகு கோவா. தில்லி, ஆக்ரா, ரிஷிகேஷ், ஹரித்வார் என்று டிராவல்ஸ் மூலம் பத்து நாள் போயிருக்கிறேன் (குரூப் பயணங்களில் சக பயணிகள் ஆத்மார்த்த நண்பர்களாகி, விலாசங்கள், எண்கள் பெற்று இனி தொடர்ந்து சேர்ந்து பயணங்கள் செய்வோம் என்று சத்தியம் செய்தபிறகு விடைபெற்ற வேகத்திலேயே மறந்துவிடுவோம்).

வீடு கட்டும்போது ராஜஸ்தானில் பான்ஸ்வாரா என்னும் மார்பிள் தயாராகும் ஊரிலேயே வாங்கினால் செலவு குறையும் என்று சொல்லப்பட்டதால் நானும், நண்பர்கள் சுரேஷ், பாலாவும் சென்ற ஒரு வார ராஜஸ்தான் பயணம் மறக்க முடியாதது. பான்ஸ்வாராவில் பள்ளி நடத்தும் ஒரு தமிழ் நண்பரின் விலாசத்துடன் போனோம். 

அவர் காட்டிய அன்பும்... செய்த உதவிகளும்... அடடா! ஹோட்டலில் தங்கினாலும் தினமும் ஒரு வேளையாவது அவர் வீட்டில் உணவுக்கு வந்தாக வேண்டும். அவரின் திருமதியும் சுடச்சுட பூரியும், ரொட்டியும் சுட்டு எங்கள் மனதைத் தொட்டுவிட... எங்களுக்கு வாங்கும்போது அந்தப் பள்ளியின் முன்பகுதிக்காக மார்பிள் வாங்கித் தந்துவிட்டு வந்தோம்.

அவருடைய சர்வீசுக்குப் போகவேண்டிய காரில் ஜெய்ப்பூர் பயணம். புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே முன்புற கதவின் லாக் புட்டுக்கொள்ள, முழுப் பயணத்திலும் ஒரு கயிறு கட்டி இழுத்துப் பிடித்தபடி பயணித்ததை ஹாரர் அனுபவத்தில் சேர்க்கலாம். பனி மலையை விட்டுவிட்டு ஜல்லியடித்தது போதும். 

ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயணிக்க வேண்டுமென்பது என் நெடு வருட விருப்பம். என் மனக் குரலைக் கேட்டதைப்போல அதே பயணத் திட்டத்துடன் வந்த என் இரண்டாவது மகள் ஸ்வர்ண ப்ரியாவும், மருமகன் ஷ்யாம் சுந்தரும் என்னையும் என் மனைவி சாந்தியையும் தங்களுடன் அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது.

ஒன்பது நாள்கள் பயணத் திட்டம். செல்லும் விமானம், கார், தங்கும் ஹோட்டல்கள், பார்க்கும் இடங்கள் என்று எல்லாமே மாப்பிள்ளையே தன் உறவினருடன் கலந்து வடிவமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்ததால் பயணத்திற்கு பேக்கிங் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை எதுவுமே இல்லை. எட்டு வயது பேத்தி ட்ரிக்கியா வழியில் படிப்பதற்கு ஒரு மூட்டை புத்தகங்களைத் தனியாகப் பார்சல் கட்ட... அது மட்டுமே விமானத்தில் கேபின் லக்கேஜ் அனுமதியான ஏழு கிலோவைத் தாண்டும் அளவிற்கு இருந்தது.

ஐந்து வயது பேரன் சைதன்யா தன் பங்குக்கு ஒரு பையை எடுத்துவந்து அடம் பிடித்தான். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பை போல அவன் உயரத்தையும் தாண்டிய அந்தப் பையில் முழுக்க
பொம்மைகள்! பயணத்தின்போது புதிய பொம்மைகள் வாங்கித் தருவதாக டீல் போட்டேன். 

தன் விருப்பமான கலெக்‌ஷனிலிருந்து இருபத்தைந்து கார்களை மட்டும் கொண்டுவருவேன் என்று பதிலுக்கு டீல் போட்டான்!நாங்கள் தங்கிய ஹோட்டல் அறைகளில் பின்புறம் இழுத்து சர்சர்ரென்று அவன் விடும் கார்களை எல்லாம் அறையின் சகல சாத்திய சந்துபொந்துகளிலும் குனிந்து, படுத்துத் தேடியெடுத்து வைப்பது வெடிகுண்டு தேடும் செயலுக்குச் சமமாகும்.

ஆந்திராவில் ஆதோனியில் ஆயில் (ஆ3) தயாரித்து விற்கும் ராஜேஷ், அவர் மனைவி ஷ்ராவனி, அவர்களின் வாண்டுகள் ஆரவ், ஆரூஷ் சேர்த்து ஆறு பெரியவர்கள், நான்கு குழந்தைகளுடன் மொத்தம் பத்து பேர்களாக இரண்டு மனைவிகளுக்கு ஒரே கணவர்போல பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக செயல்படும் மல்ட்டி டாஸ்க்கிங் சண்டிகாருக்கு (தவிர தனியாகவும் அது ஒரு யூனியன் பிரதேசம்!) விமானத்தில் புறப்பட்டோம்.

மூன்று மணி நேரப் பயணத்தில் இண்டிகோ நிறுவனத்தின் பணிப்பெண்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் லிப்ஸ்டிக் போட்ட புன்னகையுடன் குடிக்க தண்ணீர் மட்டும் கொடுத்தார்கள். விமானப் பயணிகளுக்கு சாக்லேட், பிஸ்கெட், குட்டியாக குளிர் பானம் என்றெல்லாம் இலவசமாகக் கொடுத்ததெல்லாம் முன்னொரு கறுப்பு வெள்ளை காலத்தில்தான். (இப்போதும் வெளிநாட்டுப் பயணங்களில் மட்டும் அவை உண்டு. கட்டணத்துடன் மறைமுகமாக பெரிய தொகை தாளித்துவிடுவதால்).இங்கே விளம்பர இடைவேளை மாதிரி விலகிப் போய் ஒரு சமூகப் பிரச்னையைத் தொட்டுவிட்டு வந்துவிடலாம்.  
அதாகப்பட்டது... இணையம் வழியாக ஹோட்டல்களில் அறை புக் செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த அநியாய மோசடி தெரியும். இணையத்தில் உலாவி ஓர் அறையைத் தேர்வு செய்கிறீர்கள். எதற்கும் ஒப்பிடலாமே என்று இன்னும் சில ஹோட்டல்களின் தளங்களுக்கும் போகிறீர்கள். முதலில் தேர்வு செய்த ஹோட்டலுக்கே திரும்ப வருகிறீர்கள். உங்களுடன் கைகுலுக்க ஓர் அதிர்ச்சி காத்திருக்கும். முதலில் காட்டிய கட்டணம் இப்போது எகிறியிருக்கும். அப்படியாக அல்காரிதம் செட்டப் செய்திருப்பார்கள்!

அதேபோலவேதான் விமானக் கட்டணங்களும். அவை பங்கு மார்க்கெட் புள்ளி மாதிரி அவ்வப்போது ஏறி இறங்கிக்கொண்டிருக்கும். குறிப்பாக வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணங்களில் அநியாயத்திற்கு ஏற்ற இறக்கம் இருக்கும். குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி என்று இலவசமாகக் கற்றுத்தரும் சில யூ டியூப் வீடியோக்கள்கூட வந்துவிட்டன.

ரயில், பேருந்து கட்டணங்கள் போல விமானக் கட்டணங்களையும் மாறாமல் நிலையானதாக அமைப்பதே அறம். இது பொருள், இன்பம் இரண்டுக்குமான உலகமாகிவிட்ட பிறகு அறத்தை ஜெயமோகனின் புத்தகத்தில் மட்டுமே தேட வேண்டும்.சண்டிகாரின் ஷாகீத் பகத்சிங் சர்வதேச விமான நிலையத்தில் (ஷாகீத் என்றால் வீர மரணமடைந்த என்று பொருள்) இறங்கி நம் உடைமைகளை பெல்ட்டில் சேகரிக்கக் காத்திருக்கும் நேரத்தில் அங்கேயே நிற்கும் அலங்காரமான தள்ளுவண்டியில் விற்கும் பானி பூரி சாப்பிடலாம்.

விமான நிலையத்திலேயே இருக்கும் வசதியான அறைகளில் தங்க நாள் வாடகை ரூபாய் 1,500/- மட்டுமே என்கிற அறிவிப்பு பேனர் பார்த்து வியந்தோம். இது தெரியாததால் ஒன்பது நாள் பயணம் முடிந்து மீன்டும் சென்னைக்கு அதே சண்டிகாரிலிருந்து புறப்படுவதற்காக ஏழு கிலோ மீட்டர் தள்ளி அதிகமான வாடகையில் அறைகள் பதிவுசெய்திருந்தோம். அங்கிருந்து விமான நிலையம் வர டாக்ஸி செலவு வேறு தனியாக! இதனால் சகல பயணிகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சண்டிகார் விமான நிலையத்தில் கிடைக்கும் சலுகை வசதிகளைப் பயன்படுத்தி பணத்தைச் சேமிப்பீர்களாக!

முதல் வரியில் குறிப்பிட்ட இரண்டு உயிர் பயங்களில் ஒன்றை நான் சந்தித்தது பயணம் துவங்கிய மறுநாளிலேயே! அதாவது... அடடா... 700 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாரே... ஏற்கெனவே 737 ஆகிவிட்டதால்...

... தொடரும் (739!)

- பட்டுக்கோட்டை பிரபாகர்