இது துப்பறியும் ஜப்பான்



தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ராஜுமுருகன். ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ என இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. தன் படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வரும் இவர் இப்போது கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தீபாவளி சரவெடியாக வெடிக்கப் போகும் ‘ஜப்பான்’ இறுதிக் கட்ட வேலைக்காக எடிட்டர் பிலோமோன் எடிட்டிங் ஸ்டூயோவில் ஃபைனல் கட் சொல்லிக்கொண்டிருந்த  ராஜுமுருகனை சந்தித்தோம்.

டைட்டில் ஆர்வத்தை தூண்டுகிறதே?

கேரக்டரை முன்னிறுத்தி உருவாகியுள்ள படம் இது. ஹீரோ கேரக்டர் பேர் ஜப்பான். பொதுவாக ஜப்பான், ரஷ்யா என்று நம் ஊர்களில் பெயர் சூட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். அது மாதிரி என்னுடைய ஹீரோ,‘ஜப்பான் - மேட் இன் இண்டியா’ என்று தன்னைப்பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.ஜப்பான் எப்படிப்பட்டவர் என்றால் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காண்பிக்கும் விதத்திலும், அடையாளப்படுத்தும் விதத்திலும் தனித்துவமான கேரக்டர். அந்த கேரக்டரின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படம்.

ரசிகர்களுக்கு என்ன அனுபவம் தரப் போகிறது?

என்னுடைய படங்களில் எளிய மனிதர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கையில் உள்ள காதல், அன்பு, அரசியல் போன்ற அம்சங்கள் கதைக் களமாக இருக்கும். அப்படி இது என்னுடைய படங்களில் இருந்து வேறொரு தளத்தில் இருக்கும். சொல்லப்போனால் எனக்கே இது புது அனுபவமாக இருந்தது.இது முழுமையான பொழுது போக்குப் படமாக இருக்கும். 
படத்தோட பட்ஜெட், கார்த்தி சாருக்கான ரசிகர்கள், வணிகம் என எல்லா அம்சங்களையும் கருத்தில்கொண்டுதான் இந்தப் படம்  உருவாகியுள்ளது. ஒரு படைப்பாளியாக எனக்கான நியாயத்தோடும், கார்த்தி சார் படங்களுக்கான நியாயத்தோடும் படம் பிரமாதமாக வந்துள்ளது.

இந்தப் படத்தை துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். அது வழக்கமான துப்பறியும் கதையாக இல்லாமல் குற்ற உலகத்தைப் பற்றி சொல்வதாகவும் இருக்கும். கடந்த பத்து வருடங்களில் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதர்கள் மீதான மதிப்பீடுகள் மாறியுள்ளன. அப்படி இந்த மாறிவரும் சமூகத்துக்கான பிரதிநிதிதான் ஜப்பான்.

‘தோழா’ படம் கொடுத்த தோழமையில்தான் கார்த்தி படம் செய்ய முடிந்ததா?

சமூகத்துக்கான குரலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். கருத்தியல் ரீதியான என்னுடைய படைப்பை கார்த்தி சார் மாதிரியான பெரிய நடிகர் எடுத்துச் செல்லும்போது அதற்கு பலம் அதிகரிக்கும். அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கார்த்தி சாரிடம் போனேன்.

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவரும் எப்போது சந்தித்தாலும் ‘பெரிய படம் பண்ணுங்க, அதுக்கேற்ற மாதிரி கதை எழுதுங்க’னு சொல்வார்கள். சினிமாவில் இதைப் பண்ணிடணும், அதைப் பண்ணிடணும் என்ற இலக்கு எனக்கு இருந்ததில்லை. என்னை பாதித்தவைகளைத்தான் படமாகப் பண்ணுகிறேன்.

கார்த்தி சாருடன் நீண்ட நாட்களாகப் பழகி வருகிறேன். அந்த நட்பு ‘தோழா’ டைம்ல அதிகமானது. கார்த்தி சார் பரந்த மனப்பான்மையுடன் பழகுபவர். ‘உழவன்’ என்ற அமைப்பை நடத்துகிறார். பெரிய நடிகராக இருந்தாலும் பரீட்சார்த்த ரீதியான படங்களும் செய்கிறார். அவருக்கான வணிகம் சார்ந்த இடம் இருந்தாலும் அதற்குள் கருத்தியல் ரீதியாகவும் படங்கள் செய்கிறார்.

ஆரம்பத்தில் ‘ஜோக்கர்’ அவருடன் பண்ணுவதாக இருந்தது. அந்தக்  கதையின் முந்தைய வடிவத்தை அவரிடம்தான் சொல்லியிருந்தேன். கார்த்தி சாருக்கு கதை பிடித்திருந்தாலும் அவருக்கான பிசினஸ் எல்லைக்குள் இல்லாததால் அப்போது எங்களால் சேர்ந்து படம் பண்ண முடியவில்லை.பிறகு, கார்த்தி சாரை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன். 

அது அவருக்கு செட்டாகவில்லை. அடுத்ததாக ஹீரோவை மனதில் வைக்காமல் ஒரு கதையை எழுதினேன். அதை ட்ரீம் வாரியர்ஸுக்கு கொடுத்தேன். அவர்கள் எனக்குத் தெரியாமலே கார்த்தி சாரிடம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

‘இந்தக் கதை பிடிச்சிருக்கு. நான் பண்றேன்’னு கார்த்தி சார் சொல்லிட்டார். அதுதான் ‘ஜப்பான்’.அவர் சிறந்த புத்தக வாசிப்பாளர். என்னுடைய ‘வட்டியும் முதலும்’ படித்துவிட்டு சிலாகித்துப் பேசினார். அவருடன் வேலை செய்தது சிறந்த அனுபவம். தேர்ந்த நடிகராக அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். அத்துடன் இன்றைய சினிமாவை புரிந்துகொள்வதற்கும் உதவியாக இருந்தார்.

கார்த்தி யாருடன் டூயட் பாடுகிறார்?

இதுல ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதைப் புரிஞ்சு பண்ணும் இடத்தில் அனு இம்மானுவேல் சரியாக இருந்தார். கார்த்தி சார், அனு இருவருக்கும் லவ், டூயட் உண்டு. ஆனால், அது ஆடியன்ஸ் நினைக்கிற மாதிரியான காதலாக இருக்காது.

‘ஜெயிலர்’ சுனில் முக்கியமான கேரக்டர் பண்றார். காமெடி, வில்லன், குணச்சித்திர வேடம் என சுமார் 600 படங்கள் பண்ணியவர். எளிமையாக பழகுவார். அனுபவம் ஒருவரை கனிவுள்ளவராக மாற்றிவிடும். அதை அவரிடம் பார்த்தேன். நல்ல மனிதருடன் பழகினோம் என்ற திருப்தி கிடைச்சது.

கேமராமேன் விஜய் மில்டன் சார் போலீஸ் கேரக்டர்ல வர்றார். பல வருட நண்பர். சினிமாவில் அவர் மாதிரி தன்மையான ஒருவரைப் பார்ப்பது அரிது. வாகை சந்திரசேகர் சார் 300 படங்கள் பண்ணியவர். அவரை வேறு ஒரு கோணத்தில் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அவரும் அதைப் புரிஞ்சு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பவா செல்லதுரை இலக்கிய வட்டார நண்பர். அவர் குரல் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. அவரையும் வழக்கமாகக் காண்பிக்காமல் வேறு ஒரு கோணத்தில் காண்பித்துள்ளேன். அந்தக் கேரக்டரில் பவா சார் நடித்தால் எப்படி இருக்கும்னு முதலில் கார்த்திக் சார்தான் கேட்டார். ஜித்தன் ரமேஷ் கேரக்டர் ஆச்சர்யப்படுத்தும்.

‘சர்தார்’ வெற்றி, கார்த்தியின் 25வது படம்... என படத்தின் மீதான எதிர்பார்ப்பு அழுத்தம் கொடுத்ததா?

படம் பண்ணும்போது அது தெரியாது. தனிப்பட்ட விதத்தில் எண்ணிக்கையைத் தாண்டி படைப்புக்கான நேர்மையுடன் செய்ய நினைப்பேன். 25 என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு நம்பர். அது நான் இயக்கும் படமாக அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. மற்றபடி அழுத்தம் எதுவும் இல்லை. கார்த்தி சார் என் மீது நம்பிக்கை வைத்தார். அதைக் காப்பாற்றணும் என்ற கவனம் மட்டுமே இருந்தது. கார்த்தி சாரும் ரசிச்சுப் பண்ணினார். அதெல்லாம் சேர்ந்து 25வது படத்துக்கு நியாயம் செய்திருக்கிறது.

ரவிவர்மன் ஒளிப்பதிவாளரானதால் உங்கள் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதா?

இயக்குநராக சிறப்பான கதையை நான் எழுதியிருந்தாலும் அதைக் காட்சிப்படுத்துவதில் ஒளிப்பதிவாளருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு உலகத் தரத்தில் இருக்கணும்னு முடிவு பண்ணினோம். அப்போதுதான் அது எல்லோருக்குமான படமாக இருக்கும். அதன்படி கார்த்தி சார், தயாரிப்பு நிறுவனம் என எல்லோருமாகச் சேர்ந்து ரவிவர்மன் சார் பண்ணினால் நல்லா இருக்கும்னு முடிவு எடுத்தோம்.

ரவிவர்மன் சார் சிறப்பாக எழுதக் கூடியவர். அதனால் அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அவருக்கு என்னுடைய எழுத்துக்கள் பிடிக்கும். ரவிவர்மன் செலக்டிவ்வாக படம் பண்ணுபவர். என் மீது அன்பும், மரியாதையும் உண்டு. அவரை எந்த நோக்கத்துக்காக அழைத்தோமோ அது முழுமையாக நிறைவேறியது.

ஜி.வி.பிரகாஷ் மியூசிக் தெரிஞ்சதுதான். ‘ஜிப்ஸி’ கதையை அவருக்கும் சொல்லியிருந்தேன். அப்போதிலிருந்து அவருடன் நட்பு தொடர்கிறது. அவருடைய சமூக அக்கறை எனக்குப் பிடிக்கும். அவருடன் சுதந்திரமாகப் பணிபுரிய முடிந்தது. நான்கு படங்கள் நடிக்கிறார், எட்டு படங்களுக்கு மியூசிக் பண்றார். லைவ் கான்சர்ட் பண்ணுகிறார். துபாய், சென்னை, கோயமுத்தூர் என எப்போது எங்கே இருப்பார்னு தெரியாது.

அந்த பிசியிலும் எப்போது போன் பண்ணினாலும் அட்டெண்ட் பண்ணி எனக்கான வேலைக்கு நேரம் ஒதுக்கி பண்ணிக்கொடுத்தார். சின்சியராக வேலை பார்த்துள்ளார். பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ்.

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் ஆகியோர் என்னுடைய தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல. நண்பர்கள். ‘ஜோக்கர்’ அவர்களுக்கு பண்ணினேன்.என்னுடைய எல்லா ஸ்கிரிப்ட்டையும் நட்பின் அடிப்படையில் அவர்களிடம்  கொடுப்பேன். படம் பண்ணவில்லையென்றாலும் தொடர்ந்து நட்பு பாராட்டுவோம்.

பிரகாஷ் சார் வாசிப்பு பழக்கம் உள்ளவர். அது எங்களை மேலும் இணைத்தது. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது, தெரியாத இடங்களில் வழிநடத்தியது என எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

கார்த்தி 40 நிமிடங்கள்தான் வருகிறார் என்றொரு செய்தி உலாவுகிறதே?

அது உண்மை இல்லை. படம் முழுவதும் கார்த்தி சார் வருவார். ‘ஜப்பான்’தான் படம். ஜப்பான் கேரக்டரைச் சுற்றித்தான் கதை நகரும். ஜப்பான், கார்த்தி சாருக்கான படமாக இருக்கும்.

உங்களுக்கு நற்பெயர், வசூலில் பாதிப்பு எனும் நிலையில் எப்படி உணர்வீர்கள்?

சினிமாவில் எனக்கு இலக்கு இல்லை. சினிமாவை இலக்காக வைத்து நான் சென்னைக்கு வரவில்லை. யுகபாரதி, சரவணன் அண்ணன்கள் மூலம் எழுத்து வாய்ப்புக்காக சென்னை வந்தேன். இடதுசாரி சிந்தனையோடு தொழிற்சங்கத்தில் வளர்ந்தவன்.எனக்குள் சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியவர் சார்லி சாப்ளின். சினிமா மூலம் சமூக அவலங்களைப் பேச முடியுமா என்ற ஆச்சர்யம் எழுந்தது. பத்திரிகைக்கு அடுத்து சினிமாவிலும் நம்முடைய கருத்துக்களைச் சொல்ல முடியும் என்ற நிலை வந்தபோது சினிமாவுக்கு வந்தேன்.

சினிமாவில் சம்பாதிக்கணும், நிறைய படங்கள் பண்ணணும் என்ற இலக்குகள் இல்லாததால் கவலைகளும் இல்லாமல் இருந்தேன். என்னைப் பாதித்தவைகளை படங்களாக எடுத்தேன்.
வசூலை மையப்படுத்தி படம் பண்ணியதில்லை. ஆனால், என்னுடைய படங்கள் குறைந்தபட்ச வசூலைக் கொடுத்துள்ளது. அப்படி என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்காதளவுக்கு குறைந்தபட்ச லாபத்தை ஈட்ட வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்து படங்கள் பண்ணுகிறேன்.

‘ஜப்பான்’ மாதிரியான பெரிய படங்கள் பண்ணும்போது என்னுடைய பொருளாதாரம் மேம்படுகிறது. அதன்மூலம் சமூகத்தில் நல்ல விஷயங்கள் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ‘காம்ரேட் டாக்கீஸ்’ அமைப்பு நடத்துகிறேன். அதற்கு பொருளாதாரம் தேவைப்படுகிறது. அதற்கு நான் தன்னிறைவு அடையவேண்டும். பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என மாறி மாறி பண்ணும் ஐடியா இருக்கிறது.

பத்திரிகையாளர் ராஜு முருகன், இயக்குநர் ராஜு முருகனிடம் என்ன கேள்வி கேட்க விரும்புகிறார்?

எனக்கு எளிய மனிதர்களின் வாழ்க்கையை எழுதுவது பிடிக்கும். அந்தவிதத்தில் ‘உனக்குப் பிடித்த மாதிரியான அரசியல் படத்தை எப்போது எடுக்கப் போகிறாய்’ என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருக்கும்.நான் எழுத ஆரம்பித்தாலே அதுல அரசியல் வந்துவிடும். என்னுடைய எழுத்தில் காதல், அன்பு, அரசியல் இருக்கும். அதுதான் என்னுடைய இயல்பு.

மக்களுக்கான அரசியல் பேசணும் என்று நினைப்பேன். நான் எழுத ஆரம்பித்தாலே சென்சார் அனுமதிக்குமா என்ற கேள்வியும் வரும். என்னுடைய சிந்தனையை முழுமையாக சினிமாவில் கொண்டுவருவது என்பது கடினமாகத் தோன்றுகிறது. அப்படி என்னுடைய கருத்துக்களை முழுச் சுதந்திரத்துடன் எப்போது எடுக்கப்போகிறேன் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கிறது.   

எஸ்.ராஜா