சின்ன ஜானு இப்ப பெரிய கவுரி!
கிளாசிக் சினிமாவான ‘96’ வெளியாகி ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் அதில் நடித்த விஜய் சேதுபதி, த்ரிஷா எப்படி ஞாபகத்துக்கு வருவார்களோ, அதுபோல் இளம் வயது த்ரிஷாவாக ஜானு கேரக்டரில் நடித்த கெளரி கிஷனும் ஞாபகத்துக்கு வராமல் இருக்கமாட்டார்.  ‘‘ரசிகர்கள் என்னை ‘ஜானு’ என்று அழைக்கும்போது அவர்களின் அன்பு என்னை உருக வைக்கும். ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்ச நேரமே நீடிக்கும்வகையில், ஜானு கேரக்டருக்குப் பிறகு ரசிகர்கள் மனதில் நிற்கும்படி நான் எதுவுமே பண்ணவில்லையா என்று எனக்குள் கேள்வி வந்து போகும். ஆனால், நான் ஜானுவுக்கும் மேல என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தூரமில்லை...’’ மனம் திறக்கிறார் கெளரி கிஷன். சமீபத்தில் தமிழில் ‘அடியே’, மலையாளத்தில் ‘லிட்டில் மிஸ் ராவுத்தர்’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் கெளரியிடம் பேசினோம்.
 நீங்கள் நடித்த படங்களில் மிகவும் சவாலான படமாக எதைச் சொல்வீர்கள்?
ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒவ்வொரு படமும் சவாலானதுதான். சமீபத்தில் வெளியான ‘அடியே’ படம் மல்டி வாய்ஸ் கான்செப்ட்ல வெளியானது. நடிக்கும்போது இரண்டு உலகத்துக்குமிடையே உள்ள மாற்றங்கள் வேகமாக இயங்கும்.  சில சமயம் இந்த உலகத்தில் இருக்கும். இன்னொரு சமயம் கனவு உலகத்தில் இருக்கும். என்னுடைய கேரக்டர் இரண்டு உலகத்திலும் இருக்கும். அதனால் இரண்டு விதமான மைண்ட் செட்ல இருக்க வேண்டும். ‘நான் லீனியர்’ என்பது வழக்கமான கதைகளிலும் இருக்கும். 
‘அடியே’ மல்டி வாய்ஸ் கான்செப்ட்ல ‘நான்லீனியரா’க இருந்திருக்கும்.அப்படி நடிக்கும்போது சில சமயம் குழப்பமாக இருந்தது. படத்தில், நான் மூன்று ஆண்களை கல்யாணம் பண்ணியிருப்பேன். அது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கணும். அதற்காக முழு அர்ப்பணிப்புடன் நடித்தேன். அந்த அனுபவம்தான் சவாலாக இருந்தது.  அதேபோல் ‘கர்ணன்’ படத்தில் வந்த பொய்லாள் கேரக்டர். அதுவும் சவால் நிறைந்த கேரக்டர். பொய்லாளுக்கு இந்த உலகமே புதுசாக இருக்கும். ஏனெனில், அவளுக்கு அறிமுகம் இல்லாத ஓர் உலகம். குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி பேசணும். அதைப்பற்றிய நாலெட்ஜ் இல்லாததால் முதலில் அதை கற்றுக்கொண்டு அதற்கேற்ற மாதிரி கேரக்டருக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்.  அடுத்து, தோற்றத்திலும் கருமையான மேக்கப், வில்லேஜ் கெட்டப், வில்லேஜ் காஸ்டியூம் கொண்டு வரணும் என்பதால் அப்படி மாறுவதற்கும் சவாலாக இருந்தது. நான், சிட்டியில் வளர்ந்த பொண்ணு. கிராம வாழ்க்கை தெரியாது. அந்தவிதத்தில் கதைக்கேற்ற மாதிரி உடல் மொழி கொண்டு வருவதில் சவால் இருந்தது. படப்பிடிப்பும் சவாலாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மொத்த அனுபவமும் கஷ்டமாக இருந்தது.
 ஒரு பெண்ணாக சினிமாவில் நீடிப்பது எவ்வளவு கடினம்?
கண்டிப்பாக கடினம் இருக்கும். எனக்குத் தெரிந்து முன்பைவிட இப்போது எல்லாமே முற்போக்குத்தனமாக நடக்கிறது. சினிமா என்பது பெண்களுக்கு ஏற்ற துறையாக மாறியுள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவமான கேரக்டர் தருகிறார்கள். இந்த நடைமுறைகள் பெண்களுக்கும் உரிமை, அதிகாரம் அளிப்பதாக இருக்கிறது.  நடிகைகளுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் அதிகம் கிடைத்துள்ளது. இந்த வருடம் அண்ணா சாலை அருகே உள்ள பிரபல திரையரங்கில் ஒரே சமயத்தில் த்ரிஷா மேடம், நயன்தாரா மேடம், ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் படங்கள் திரையிட்டதைப் பார்க்க முடிந்தது. அதுபோன்ற யதார்த்தத்தை இப்போது பார்க்க முடிகிறது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான சர்வைவல் என்பது சரியான வாய்ப்பு அமைவதைப் பொறுத்து உள்ளது. அப்படிப்பட்ட வாய்ப்பு எளிதில் கிடைக்காது. சினிமாவில் சர்வைவல் ஆவதற்கு வாய்ப்புகள் முக்கியம். பெண்களிடம் திறமை நிறையவே இருக்கிறது. கண்டிப்பாக முன்பை விட இப்போது ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுகிறது.
ஆனால், இன்றைய தேதி வரை நடிகைகள் சினிமாவில் ஜெயிப்பது கடினமாக இருக்கிறது. மார்க்கெட் மதிப்பீடு, சாட்டிலைட் உரிமை போன்ற வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகள் எல்லாமே ஹீரோக்கள் இருந்தால் மட்டுமே நடக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இதெல்லாம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த ஓர் இடத்தை மட்டும்தான் ஹீரோயின்களால் ரீச் பண்ண முடியவில்லை.
சம்பள விஷயத்திலும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். ஹீரோவுக்கு கொடுப்பதுபோல் ஹீரோயினுக்கு கொடுப்பதில்லை. ஒரு படத்துக்காக ஹீரோ சந்திக்கும் எல்லா ரிஸ்க்கையும், அசெளகரியங்களையும் ஹீரோயின்களும் சந்திக்கிறார்கள். படத்துக்கான உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தாலும் ஹீரோக்களுக்கு அதிகம் சம்பளம் தருகிறார்கள்.
மார்க்கெட் வேல்யூ, ரசிகர்களை யார் தியேட்டருக்கு அழைத்து வருகிறார்கள் என்ற அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி, சினிமாவில் மாறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. நாளடைவில் அதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். நீங்கள் எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தீர்கள். அப்போது என்ன மாதிரியான சவால்கள் இருந்தன?
இண்டஸ்ட்ரியில் எனக்கு யாரையும் தெரியாது. ஆடிஷன் மூலம் ‘96’ வாய்ப்பு கிடைத்தது. சவால்கள் என்றால், ஸ்டீரியோ டைப் கேரக்டர்ஸை தவிர்க்க முடியவில்லை. எல்லோரும் ‘96’ ஜானு மாதிரி ஹோம்லி கேரக்டருடன் வருகிறார்கள். நீங்கள் க்ளாமர் பண்ணாதீங்க. ஹோம்லிதான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே மாதிரி முத்திரை குத்தப்படுவதை உடைப்பதில் கஷ்டம் இருக்கிறது.
அதைத் தவிர்த்து, சினிமா வாய்ப்புக்காக இண்டஸ்ட்ரியில் இருக்கும் செக்ஸிசம். அது தினந்தோறும் எதிர்கொள்ளும் சவால். எந்த செட்டுக்கு போனாலும் அந்த மாதிரியான கட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆண்களுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை பெண்களுக்கு கொடுப்பதில்லை.தனிப்பட்ட விதத்தில் சொல்வதாக இருந்தால், வித்தியாசமான வேடங்கள் வருவதில்லை. பத்துல பாதி படங்கள் ‘ஜானு’ மாதிரி ஒரே மாதிரியான வேடங்கள்தான் வருகிறது.
ஜானுவுக்கும் மேலாக என்னால் நடிக்க முடியும் என்பதை சமீபத்தில் வெளியான படங்களில் வெளிப்படுத்தியுள்ளேன். அப்படி ‘அடியே’ செந்தாழினி கேரக்டரை சொல்லலாம்.என்னைப் பொறுத்தவரை த பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
உங்கள் பார்வையில் வெற்றி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?
வெற்றி முக்கியம். நல்ல படங்கள் கிடைக்கும்போது சந்தோஷத்தோடும், ஆர்வத்தோடும் வேலை செய்ய முடியும். அமைதி, சந்தோஷம் இழக்காமல் வெற்றி அடைவது கடினம்.
அதே மாதிரி வெற்றி என்ற இடத்துக்குப் போன பிறகு எதையும் அனுபவிக்காமல் இருந்தால் அதுவும் வெற்றி கிடையாது என்று சொல்வேன்.
எப்போதும் சந்தோஷமாக இருக்கணும். வாழ்க்கை எளிமையாக இருக்கணும். அப்பா, அம்மா, என நம்மைச் சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். நட்பு பாராட்ட வேண்டும். அதுதான் வாழ்க்கை. அப்படி இருப்பதுதான் உண்மையான வெற்றி. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக வேலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சாப்பிடமால், தூங்காமல் உழைத்தால் அது உடல் நலத்துக்கு மட்டும் அல்ல மன நலத்துக்கும் கேடு. வேலை, ரிலேஷன்ஷிப் என எல்லாத்துக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்து சரிசமமாக பேலன்ஸ் பண்ணணும். அப்படி யார் ஒருவர் இருக்கிறாரோ அவரைவிட உலகத்தில் மகிழ்ச்சியான மனிதர் யாரும் இருக்க முடியாது.
சமூக வலைத்தளங்களில் உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
நியாயமான விமர்சனமாக இருக்கும்போது அதை எப்போதும் ஏற்றுக்கொள்வேன். ஒரு நடிகையாக ரசிகர்களின் விமர்சனங்கள் வேண்டாம் என்று இருந்ததில்லை. ஏனெனில், ரசிகர்களுக்காகத்தான் படம் நடிக்கிறோம்.அந்த வகையில் ரசிகர்கள் தரும் விமர்சனங்கள் மதிப்புக்குரியவைகளாக இருக்கும். அதனால் ரசிகர்கள் தரும் விமர்சனங்களுக்கு மதிப்பு கொடுப்பேன்.
மற்றபடி, தர்மசங்கடத்தை ஏற்படுத்தாத ஜாலியான கமெண்ட்டுகளை, நம்முடைய வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவாத உருவக்கேலி போன்ற கமெண்டுகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன்.
சமூக வலைத்தளங்களில் வரும் கமெண்ட்டுகளை அதிகம் படிக்கமாட்டேன். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது ரொம்ப விரோத மனப்பான்மையைத் தூண்டும் விதமாக இருக்கும். என்னுடைய ப்ரொஃபஷனுக்கு முக்கியமாக தேவைப்படும் விஷயங்களை எடுத்துக்கொள்வேன். மற்றபடி நெகடிவ் கமெண்ட்களை கண்டுகொள்ளமாட்டேன்.
பத்திரிகை, ஆன்லைன் தளங்களில் உங்களைக் குறித்து எழுதப்படும் செய்திகளை படிக்கும் பழக்கம் உண்டா?
ஏற்கனவே சொன்னமாதிரி சமூக வலைத்தளத்தில் வரும் கமெண்ட்களை அவ்வளவாக படிக்கமாட்டேன். பத்திரிகை, ஆன்லைன் கட்டுரைகளை படிப்பேன்.ஜர்னலிஸ்ட் ஸ்டூடண்டாக இருந்ததால் எது நேர்மையான ஜர்னலிசம், எது நேர்மை இல்லாத ஜர்னலிசம் என்பது தெரியும். நேர்மையான ஜர்னலிஸம் எந்த தளத்தில் வந்தாலும் ஃபாலோ பண்ணுவேன்.
மிக நேர்த்தியாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படிப்பேன். சென்சேஷனுக்காகவும், ஆபாசமாகவும் எழுதப்படும் கட்டுரைகளைப் படிக்கமாட்டேன். அதிர்ஷ்டவசமாக என்னைப் பற்றி இதுவரை எதுவும் தவறாகவும், வெறுப்புணர்ச்சியையும் யாரும் காண்பிக்கவில்லை. சில சமயம் என்னைப்பற்றிய அவதூறு செய்திகளாக இருந்தால் ப்ளாக் செய்துவிடுவேன். அந்த மாதிரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கமாட்டேன். வுமன் சென்ட்ரிக் படங்கள் வெளிவரும் இந்தச் சூழ்நிலையில் சினிமாவில் பெண்களுக்கு இது சரியான நேரம் என்று சொல்வீர்களா?
ஆமாம். பெண்களுக்கு சினிமாவில் இப்போது நல்ல நேரம் என்று சொல்லலாம். ஓடிடி வந்தபிறகு பெண்களை மையப்படுத்தி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதைகள் எழுதப்படுகிறது. அது வரவேற்க வேண்டிய விஷயம்.உலகளவில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது சிறப்பு. பெண்களுக்கான கேரக்டரை அழகாகவும், கதைக்கு திருப்புமுனை கொடுக்குமளவுக்கும் எழுதுகிறார்கள்.
அதே சமயம் ஹீரோயினை டான்ஸுக்காகவும், கதைக்கு வண்ணம் சேர்ப்பதற்காகவும் கூப்பிடும் வழக்கமும் தொடர்கிறது. பெண்களுக்கும் கமர்ஷியல் படங்கள் பண்ண ஆசையாக இருக்கும். அதுமாதிரி படங்கள் வரும்போது பெண்களின் சொந்தத் திறமையைப் பார்க்க முடியும்.
கெளரியை அடுத்து எப்படிப்பட்ட கேரக்டரில் பார்க்கலாம்?
சிம்புதேவன் சார் இயக்கத்தில் ‘போட்’ படம் பண்ணுகிறேன். பீரியட் படம் என்பதால் வித்தியாசமான கெளரியைப் பார்க்கலாம். யோகிபாபு லீட் பண்றார். ‘அடியே’ விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அந்தாலஜி படம், பிரபல ஓடிடி நிறுவனத்துக்கு வெப் சீரீஸ், மலையாளத்தில் வெப் சீரீஸ் என அடுத்தடுத்து நல்ல படங்கள் கைவசம் உள்ளன.
எஸ்.ராஜா
|