டார்க்நெட்



19.கருத்து சுதந்திர ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டதே டார்க்நெட்!

குழப்பமாக இருக்கிறதா? ஒன்றும் பிரச்னையில்லை. குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும். அப்படித்தான் இந்த அத்தியாயமும்.ஒரு ரேன்சம்வேர் (Ransomware) தாக்குதலை யாரோ ஒருவரின் மொபைல் அல்லது கணினியில் நடத்த வேண்டும் என நீங்கள் தீர்மானித்தால், அதற்கு முதல்படியாக உங்களிடம் ஒரு சிறப்பு மால்வேர் (Malware) இருக்க வேண்டும்.   

ஒரு ரேன்சம்வேர் முறை கண்டுபிடிக்கப்பட்டு அதை தடை செய்திருந்தால், அதே ரேன்சம்வேர் முறையில் மீண்டும் நீங்கள் கணினிகளை முடக்கி பணம் கேட்க முடியாது. புதிய முறை - புதிய ரேன்சம்வேர் - ஒன்று வேண்டும்.

இங்குதான் டார்க்நெட் வருகிறது.  தொழில்நுட்பம் நன்கு தெரிந்த சைபர் கிரிமினல்கள் புதிது புதிதான ரேன்சம்வேர் மென்பொருட்களை உருவாக்கி அதை டார்க்நெட்டில் சந்தைப்
படுத்துகிறார்கள்.  ஒரு ரேன்சம்வேர் முறை தெரிந்து விட்டால், டார்க்நெட்டில் போய் புதிய ரேன்சம்வேர் முறையை நீங்கள் காசு கொடுத்து வாங்கி விட்டால் போதும். உலகம் முழுவதும் அதை பரப்பி பணம் பார்த்து விடலாம்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மென்பொருளும் கணினி நிரல்களால் உருவாக்கப்பட்டவைதான். அதில் ஏதோ ஒரு ஓட்டை இருக்கத்தான் செய்கிறது. அந்த ஓட்டையை சைபர் க்ரைம் கண்டுபிடித்து விட்டால் அதை வைத்து மிக எளிதாக கணினிகளை ஹேக் செய்துவிடலாம். தங்கள் மென்பொருளில் உள்ள ஓட்டைகளை நிறுவனம் முன்பே கண்டுபிடித்து விட்டால் அதற்கான பாதுகாப்பு நிரலை புதிதாக உருவாக்கி பயனாளர்களுக்கு கொடுத்து விடும். அதைத்தான் நாம் சைபர் பாதுகாப்பு அப்டேட் என்கிறோம்.

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஐபோன்களில் அவ்வப்போது அப்டேட்களை செய்யச் சொல்லி நோட்டிபிகேஷன் வரும். பல நேரங்களில் நாம் வைத்திருக்கும் ஆப்(app)களுக்கு இவையே சைபர் பாதுகாப்பு அளித்து அப்டேட்களை செய்து கொள்ளும்.இந்த அப்டேட்டுகளுக்கான நோட்டிஃபிகேஷன் உங்களுக்கு வந்திருக்கிறது என்றால் நீங்கள் பயன்படுத்தும் செயலியில் எங்கோ ஒரு சைபர் பாதுகாப்பு ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... அதற்கான தீர்வை அப்டேட் ஆக உங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று பொருள்.

பொதுவாக சைபர் செக்யூரிட்டியில் நாம் ஹேக்கர்களை இரு விதமாக பிரிக்கிறோம். ஒன்று பிளாக் ஹார்ட் ஹேக்கர் எனும் சைபர் குற்றவாளிகள்; மற்றொன்று வைட் ஹேட் ஹேக்கர் எனும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்.ஒரு பக்கம் சைபர் கிரிமினல்கள் ஒவ்வொரு செயலியிலும் உள்ள பாதுகாப்புக் குறைபாடு களைக் கண்டுபிடித்து அதை டார்க்நெட்டில் விற்பதன் மூலம் பணம் பார்க்கிறார்கள்.  

மற்றொரு பக்கம் நிறுவனங்களால் பணியில் அமர்த்தப்படும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தாங்கள் உருவாக்கிய மென்பொருளில் உள்ள சைபர் பாதுகாப்பு ஓட்டைகளை முன்பே கண்டுபிடித்து அதை தீர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.இந்த ஒரு நிமிடம் சைபர் வெளி பாதுகாப்பாக இருக்கிறது. நீங்கள் நிம்மதியாகப் பணப்பரிமாற்றம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் ஹேக் செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நொடியும் சைபர் கிரிமினல்களுக்கும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கும் ஒரு போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை புரிந்து கொள்ளுங்கள்.

இரவு பகலாக ஒரு சைபர் கிரிமினல் உங்களைத் தாக்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கொள்வோம். இப்படிப்பட்ட சூழலிலும் ஒரு சைபர் பாதுகாப்பு வல்லுநர் உங்களைப் பாதுகாக்கும் பணியில் அதே இரவும் பகலுமாக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.பாதுகாப்பு ஓட்டைகளைக் கொண்டு ஒருவரால் மிக மேம்படுத்தப்பட்ட மால்வேர்களை உருவாக்க முடியும். இங்கு மால்வேர்கள் என்றால் வைரஸ்கள் என்று கூட நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  

இத்தகைய கணினி வைரஸ்கள் மால்வேர்களை உருவாக்கி... அதை சந்தைப்படுத்தி அதன் மூலம் லாபம் ஈட்டுவதில் டார்க்நெட் மிகப்பெரிய கூடாரமாக விளங்குகிறது.
இந்தத் தொடரில் நாம் திரும்பத் திரும்ப புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்... டார்க்நெட் ஒருவரின் அடையாளங்களை மறைத்து விடுவதால் அடையாளம் அற்ற கருஞ்சந்தையில் அவர் எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான்.

அப்படி என்றால் இந்த சைபர் கிரிமினல்களிடம் இருந்து நமக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கிறது?

ஏன் டார்க்நெட்டை இன்னும் அனுமதித்து வைத்திருக்கிறார்கள்?

இந்த இரு கேள்விகளும் நம் முன் நிறுகிறது.

முழுக்க முழுக்க கருத்துச் சுதந்திர ஆர்வலர்களால் டார்க்நெட் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் அகோரிசம் எனும் கருத்துச் சுதந்திர ஆர்வலர்கள் அதிகம். லாபத்திற்காக இயங்கும் தனியார் நிறுவனங்களும் அரசும் மக்களை கண்காணிப்பதை முழு வேலையாகச் செய்கின்றன.  இந்த இரண்டு நிறுவனங்களுமே மக்களின் தனிமனித சுதந்திரத்தைத் தாக்குகின்றன. இணையம் என்பது மக்களை கண்காணிக்கவும் அந்த கண்காணிப்பில் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு லாபம் ஈட்டவுமே உதவுகிறது.

இதனால் கோபமடைந்த கருத்து சுதந்திர ஆதரவாளர்கள் ஒன்று கூடி உருவாக்கிய தொழில்நுட்பத்தின் ஒரு பகுதிதான் டார்க்நெட்.  இன்றும் அரசுகளும் தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் மக்களை கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் உலகம் முழுவதிலும் இயங்கும் இந்த குழுவினர் அவைகளுக்கு எதிரான புதுப்புது தொழில் நுட்பங்களை டார்க்நெட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அதேநேரம் இன்று உலகம் முழுவதும் சைபர் பாதுகாப்புக்கு உதவும் தொழில்நுட்பங்களையும் இந்த குழுவினர் கண்டுபிடித்தது; கண்டுபிடிப்பது என்பது ஒரு நகைமுரண்தான்!
அரசுகள் டார்க்நெட்டை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன; அதேசமயம் கருத்து சுதந்திர ஆதரவாளர்கள் டார்க்நெட்டை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.சரி; டார்க்நெட் என்பது சைபர் குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறதே...

இதற்கு கருத்து சுதந்திர ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள்?

மக்களைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்களும், அரசும் முயற்சிக்கின்றன. இதைத் தடுப்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதைக் கட்டுப்படுத்தா விட்டால் மனிதகுலத்துக்கு சுதந்திரமே இல்லாமல் போய்விடும்.இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சமூக கிரிமினல்கள் குளிர் காயவே முயற்சிப்பார்கள். எப்படி பயிர் செய்யும்போது களைகள் வருகின்றதோ அப்படி.

இந்த சமூக விரோதிகளால் நீண்ட காலம் குளிர்காய முடியாது. டார்க்நெட்டில் எப்பொழுது மக்கள் அதிகளவில் புழங்க ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுது இந்த சமூக விரோதிகள் இனம் காணப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார்கள். காலில் இருக்கும் புண்ணை குணப்படுத்த காலையே வெட்டக் கூடாது அல்லவா..? அப்படித்தான் டார்க்நெட்டில் சைபர் குற்றவாளிகள் புழங்குகிறார்கள் என்பதற்காக டார்க்நெட்டையே நாம் முடக்கக் கூடாது... இதுதான் கருத்து சுதந்திர ஆதரவாளர்களின் வாதம்.

இவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது, அதிகமான மக்கள் டார்க்நெட்வொர்க்கில் நுழைந்துவிட்டால் சைபர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதுதான்.
இந்த கான்செப்ட் அரசுக்கு புரியாமலா இருக்கும்?!புரிந்து கொண்டார்கள். அதனால் இதன் ஒரு சாராம்சத்தை மட்டும் எடுத்து இன்று டார்க்நெட்டை முடிந்த அளவு கட்டுப்படுத்த அரசு முனைகிறது.எப்படி?விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

வினோத் ஆறுமுகம்