16 வயதில் ஆசிய பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆரத்தியுடன் (பக்கம் 52ல் இவரது பேட்டி பிரசுரமாகியுள்ளது) இணைந்து வெண்கலப் பதக்கம் வென்ற கார்த்திகா ஜெகதீஸ்வரன் கூறுகையில்.
‘‘நான் ஐந்து வயசுல மேடவாக்கத்துல நீச்சல் வகுப்புக்காகப் போனேன்.  அப்ப அங்கிருந்த ஸ்கேட்டிங் ரிங்ஸ்ல சிலர் ஸ்கேட்டிங் பண்ணிட்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்குள் ஆர்வம் வந்திடுச்சு. அப்படியாக ஸ்கேட்டிங் கத்துக்கிட்டேன். இப்ப ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாங்கினது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார். கார்த்திகாவுக்கு சொந்த ஊர் சென்னை சிட்லபாக்கம்.  ‘‘என் அப்பா ஜெகதீஸ்வரன், சொந்தமாக பிசினஸ் செய்றார். அம்மா சித்ரா ஹவுஸ்வொய்ஃப். நான் ஒரே பொண்ணு. அப்பாவும், அம்மாவும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டு வர்றாங்க. முதல்முதலாக 2015ல் தேசிய அளவு போட்டியில் கலந்துக்கிட்டேன். அப்ப எனக்கு எட்டு வயசு. அண்டர் 8 டூ 10 தனிநபர் பிரிவுல 1000 மீட்டர் ரிங் ரேஸ்ல வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சேன். ரோடு ஒன் 500 மீட்டர்ல வெண்கலப்பதக்கம் வென்றேன். இதுல ரோடு ரேஸ், ரிங் ரேஸ்னு இருக்கு.
ரிங் ரேஸ் எல்லாம் குறிப்பிட்ட ரிங்ல நடக்கும். ரோடு ரேஸ் சாலைகள்ல நடத்துவாங்க. அப்புறம், 2015ல் இருந்து ஒவ்வொரு தேசிய அளவு போட்டியிலும் பதக்கம் வாங்கினேன். 2021ம் ஆண்டு அண்டர் 11 டூ 14 பிரிவுல 5000 மீட்டர், 3000 மீட்டர் ரெண்டிலும் தங்கப்பதக்கம் வென்றேன். இதுல 3000 மீட்டர் ரோடு ரேஸ். 5000 மீட்டர் ரிங் ரேஸ்.
பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதிப் போட்டி - செலக்ஷன் ட்ரையல்ஸ் - நடந்தது. அதுல தேர்வாகி ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் போனேன். ஆனா, இதுல 1000 மீட்டர் தனிநபர் பிரிவுல ஐந்தாவதாகவே வரமுடிஞ்சது. பிறகுதான் எல்லோரும் சேர்ந்து 3000 மீட்டர் ரிலேயில் வெண்கலம் வாங்கினோம்.
என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டி ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு. ஏன்னா இதுல தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வாங்கின எல்லோரின் வயதும் 20 ப்ளஸ் இருக்கும். எல்லோருமே அனுபவம் வாய்ந்தவங்களும்கூட. தவிர, உலக சாம்பியன் பட்டம் வென்றவங்களும் இருந்தாங்க.
அவங்களுடன் போட்டிபோடுறது சிரமமாக இருந்தது. ஆனாலும், எங்க பெஸ்ட்டை நாங்க தந்தோம்...’’ என்கிற கார்த்திகா, இதுவரை தேசிய, சர்வதேச போட்டிகளில் 3 தங்கப் பதக்கமும், 6 வெள்ளிப் பதக்கமும், 4 வெண்கலமும் வென்றிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
‘‘ஆசிய விளையாட்டுல வென்ற வெண்கலப் பதக்கம் நிறைய பாராட்டுகள் வாங்கித் தந்திருக்கு. இதுல நம் தமிழக முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் எங்களைப் பாராட்டினது ரொம்ப ஊக்கப்படுத்தியிருக்கு. குறிப்பாக தமிழ்நாட்டுல இருந்து போனவர்கள் 19 மெடல் வாங்கினாங்க. அதுல ஒன்றாக எங்க பதக்கமும் இருந்தது பெருமையான தருணம்.
இப்ப நான் கௌரிவாக்கத்துல உள்ள போவாஸ் பப்ளிக் ஸ்கூல்ல 11ம் வகுப்பு படிக்கிறேன். என்னுடைய இந்த வெற்றிப் பயணத்துல என் பள்ளியின் பங்கு மிக அதிகம். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னாடி நான் உலக சாம்பியன்ஷிப்பிற்காக இத்தாலி போயிட்டு வந்தேன். அதுக்கு என் பள்ளிதான் ஸ்பான்சர் செய்தாங்க.
ஆரம்பத்துல எனக்கு பயிற்சி அளித்தவர் பழனிவேல் சார். பிறகு நான் இன்-லைன் பிரிவுக்கு மாறினதுல இருந்து சத்தியமூர்த்தி சார் பயிற்சி அளிக்கிறார். இவங்க எல்லோருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்...’’ நெகிழ்கிறார் கார்த்திகா ஜெகதீஸ்வரன்.
பேராச்சி கண்ணன்
|