சர்ச்சையை கிளப்பும் வீடியோ இதற்கெல்லாமா டைவர்ஸ்..?!
விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடு எது தெரியுமா?
போர்ச்சுகல்!
இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில் போர்ச்சுகல்லுக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. இங்கு 85 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். பெல்ஜியம், ஃபிரான்ஸ், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து செய்துவரும் நிலையில், இந்தியாவில் இன்னும் அந்த எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இங்கு ஒரு சதவீத தம்பதிகள் மட்டுமே விவாகரத்து செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 வாழ்க்கைத் துணை தங்களுக்கு துரோகம் செய்வது, பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாமல் போனது, பொருளாதார அழுத்தம் ஆகியவை விவாகரத்துக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.இந்த சூழலில் வினோதமாக என்னென்ன காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்கின்றனர் என்று வித்தியாசமான ஒரு வீடியோ பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மும்பையைச் சேர்ந்த தான்யா அப்பு கவுல்.
இவர் விவாகரத்து தொடர்பான வழக்குகளில் அதிகம் ஆஜராகுபவர். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.‘‘மற்ற பெண்களைக் கவர்ச்சிகரமாகப் பார்க்க விரும்பும் ஆண்கள், தங்கள் மனைவி கவர்ச்சிகரமாக உடை அணிவதை விரும்புவதில்லை. ‘மனைவி ஆபாசமான முறையில் உடைகளை அணிகிறார்’ என்ற காரணத்துக்காக சில ஆண்கள் விவாகரத்து வழக்கு தொடர என்னை அணுகியுள்ளனர்.
அதுபோல் ‘கணவர் முழு நேரமும் யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்து வருகிறார். என்னை கவனிக்க அவர் நேரத்தை செலவிடுவதில்லை’ என்று சொல்லி ஒரு கட்சிக்காரர் கணவரிடம் இருந்து டைவர்ஸ் கேட்டார்.கணவர் தனக்கு ஷவர்மா வாங்கித் தராததால், மனைவி அவரை டைவர்ஸ் செய்த சம்பவம்கூட நடந்திருக்கிறது..!’’ என்கிறார் தான்யா அப்பு கவுல். இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர், “எகிப்து நாட்டில் திருமணமாகி 40 நாட்களே ஆன நிலையில் ஒரு தம்பதி ஷாப்பிங் சென்றிருக்கின்றனர். அப்போது தனது கணவரிடம் ஷவர்மா வாங்கித் தருமாறு மனைவி கேட்டிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்திருக்கிறார். அத்துடன் மனைவி தனது பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதாக விமர்சித்துள்ளார். இதனால் அந்த மனைவி கணவரை விவாகரத்து செய்தார்...” என்று தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்!
காம்ஸ் பாப்பா
|