சிறுகதை-ரிக்கி பாண்டிங் என்ற ஆன்டி இண்டியன்...



தேவாலயத்தில் காலை பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விக்டோரியாவோடு வெளியில் வந்தபோது, கத்தரி வெயில் முத்த ஆரம்பித்திருந்தது.

‘‘டீ சாப்பிட்டு போயிடலாம். அங்கே போனால் எவ்வளவு நேரம் ஆகுமோ...’’ ஆணை நிறைவேற்றப்பட்டது.‘‘நேரமாச்சு. 
எல்லாம் வித்து இருக்குமோ..?’’ விக்டோரியா கவலையை ஏற்றிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கவலை இல்லாமல் வாழ முடியாது. கவலையே இல்லாத நாளை தன் தினப்படியில் இருந்து கழித்துக் கட்டிவிடுவாள்.‘‘பேசாம வா...’’ எதிர் வெயில் முகத்தில் விழுந்த எரிச்சல் எனக்கு.

‘‘எரிஞ்சு விழறது எல்லாம் இங்கேதான். வேற பொண்ணுங்க கிட்டே பேசும்போது முகத்தைப் பார்க்கணுமே...’’தனிமனிதனின் அடிநாதத்தை எந்த மனசாட்சியும் இல்லாமல் அசிங்கப்படுத்த மனைவி என்ற பதவியே போதுமானது.பதில் பேசலாம். பதிலுக்கு பதில் பேசலாம். இப்படி மரத்துப் போய் தழும்பு விழுவதுதான் சம்சார வாழ்க்கைக்கு ஆதார் அட்டை.இருபது நிமிசத்துக்கு எல்லாம் காசிமேடு மீன் சந்தைக்கு வந்து விட்டோம். கூட்டம் களைகட்டி இருந்தது.

‘‘போன முறை வாங்கின பொம்பளைட்ட வாங்க வேண்டாம்...’’ விக்டோரியா முதல் கட்டளையை நழுவ விட்டாள்.‘‘நீ வேணும்னே வம்புக்கு வர்றே. ஒரு மாசம் முன்னாடி பார்த்த பொம்பளை கண்ணுக்குள்ளயே நிற்க, அது என்ன நயன்தாராவா..? எங்கேயோ போய் வாங்கு. நான் அந்த அருகம்புல் ஜூஸ் கடையில நிற்கிறேன்...’’பைபையும் பணத்தையும் விக்டோரியா கையில் திணித்துவிட்டு பெரும் துன்பத்தைக் கைகழுவிய சந்தோசத்தோடு ஜூஸ் கடைக்குச் சென்றேன்.

அங்குதான் ஆனந்தியை பார்த்தேன். மனசின் ஒரு ஓரம் திக்கென்று இருந்தது. திருமணத்திற்கு பிறகு சுதந்திரத்தை ஆண்கள் சொற்ப விலைக்கு விற்று விடுகிறார்கள்.
‘‘எட்வின்...’’ என்றாள் கள்ளமில்லாத அதே சிரிப்போடு. அன்று பார்த்தது போல் அப்படியே இருக்கிறாள் என்று என் மனசு அடித்துச் சொன்னது.

‘‘நீ... நீங்க எங்கே இங்கே..?’’

‘‘பெங்களூர்ல இருந்து சென்னைக்கு வந்தே ரொம்ப வருசம் ஆச்சு. அதான் ஒரு சுத்து சுத்திட்டு வரலாமேனு...’’‘‘ஓ...’’ விசாரிக்க ஊர்பட்ட விசயங்கள் இருந்தாலும் ஒரு ‘ஓ’வோடு நிறுத்திக் கொண்டேன், எந்நேரமும் விக்டோரியா வரும் ஆபத்து இருப்பதால்.என் ஆர்வமற்ற முகம் அவளுக்கு என்ன செய்தியை அறிவித்ததோ, அவளே சொன்னாள், ‘‘எட்வின், சங்கரண்ணா வந்திருக்கான். உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவான். 

ஒன் வீக் இங்கேதான் ஸ்டே பண்ணப் போறான். அதே பழைய வண்ணாரப்பேட்டை வீடுதான். அவசியம் வாங்க...’’ என்றாள்.அவ்வப்போது கடவுளும் டைமிங்கை சரியாக ஃபாலே செய்து ரத்தக் கொதிப்பை கூட்டும் சித்து விளையாட்டை செய்கிறார்.

‘‘வவ்வாலும், காரப் பொடியும்தான் வாங்கினேன்...’’ என்றபடி விக்டோரியா வந்து பக்கத்தில் நிற்க, கரணத்தில் மரணம் தப்பினேன்.தப்பே செய்யாமல் தண்டனைக்கு தலை தருவதற்குக் காரணம், பெண்கள் கோபத்தை கூர் தீட்டுவது நிம்மதியென்ற சாணைக் கல்லில்தான்.

வரும்போது இருந்த பேச்சுகள் கூட திரும்பும்போது இல்லை. மனசு முழுக்க பழைய நினைவு.பின்னால் அமர்ந்திருந்த விக்டோரியா மீது அடித்த மீன் வாடையைக் கூட மூக்கு உணரவில்லை.

பீச்சில் இளைஞர்கள் அந்த இளம் வெயிலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த காட்சி பயணத்தில் நழுவியது.இப்படித்தான் அந்த நாட்களும் இருந்தன. அலையும், கடலும், மணலும், வெயிலும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றின் மீது நின்றாடிய மனிதர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.ஒரு நாள் கல்லூரி விடுமுறை கிடைத்தால் போதும், வண்டிக்கு மூன்று பேர்கள் என்று படை கிளம்பிவிடும் கடற்கரைக்கு.உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் எங்கள் கிரிக்கெட் ஆட்டம் நிற்காது. அப்படித்தான் சங்கரோடு அறிமுகம்.

வண்ணையில் இருந்து வந்த டைகர் டீமில் அவன் முக்கிய ப்ளேயர். சச்சின் வெறியன். மணிக்கணக்காய் சச்சின் பெருமை பேசுவான்.கொஞ்சம் ஒல்லியாய் வெடவெடப்பாய் இருப்பான். அவன் முன்னே யாராவது திராவிட்டையோ, கங்குலியையோ புகழ்ந்து பேசி விட்டால் அவனுக்கு மனசு தாங்காது. பேசியவனை கட்டம் கட்டி அடுத்த முறை டீமில் இருந்து தூக்கி விடுவான்.

சச்சின் பேச்சுக்கும், சிரிப்புக்கும், ஆடுகளத்தில் செய்யும் தவறுக்கும் என்று அவனாகவே ஆயிரம் காரணம் கற்பித்து நியாயம் பேசுவான்.

டக் அவுட் ஆனாலோ, சதத்தை நெருங்கி எடுக்க முடியாமல் போனாலோ சச்சினுக்கு பந்து வீசியது ஷேன் வார்னேவோ, அக்தரோ, முத்தைய்யா முரளிதரனோ யாராக இருந்தாலும் கெட்ட வார்த்தையில் திட்டி காறிக் காறித் துப்புவான்.தனிமனிதன் மீது அவனுக்கு இருந்த அபிமானம் அபரிமிதமானது. ஆரம்பத்தில் அவனோடு பெரிதாய் இணக்கமில்லை என்றாலும், கிரிக்கெட் எங்களை இணைத்து வைத்தது.சிலநேரம் அவன் அழைப்பின் பேரில், பழைய வண்ணை வீட்டுக்குப் போயிருக்கிறேன். அப்படித்தான் ஆனந்தியைத் தெரியும்.

வீடு முழுக்க சச்சின் படமாய் ஒட்டி வைத்திருப்பான். உன்னி ஏட்டன் கடையில் ஒன் பை டூ டீயை வாங்கி, ‘பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ என்பான்.பெப்சி விளம்பரத்துக்கு சச்சின் வந்ததில் இருந்து, கோகோ கோலா அவனுக்கு போட்டி கம்பெனி ஆகித் தொலைத்தது.

ஏதோவொரு மரத்துக்குக் கீழே கண்ணுக்கு கற்பூரம் காட்டும் வேலையில் ஜகஜோதியாக நின்றபோது, தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை சச்சின் மணந்து கொண்டதைப் பற்றி பேச்சு வர, இரண்டு டீமுக்கும் சண்டையாகி எத்திராஜ் காலேஜ் வாசலில் உருண்டு புரண்டதை, ஊரே வேடிக்கை பார்த்தது.

விளையாட்டின் மீது இருந்த காதல் வேறு, வீரர்கள் மீது வைக்கும் அபிமானம் வேறு. ஏனோ சச்சினை விட எனக்கு ரிக்கி பாண்டிங்கின் ஆளுமையின் மீது அளப்பரிய காதல்.
இன்னொரு பக்கம் மாற்று வீரரைப் பற்றி சிந்திக்கவே விடாமல் ‘சச்சின் சச்சின்’ என்று எங்கள் விருப்பத்தின் மீது தன்னுடைய கருத்தை சர்வாதிகாரமாய் திணித்த சங்கராலேயே என் விருப்பத்தில் சச்சினை முந்திக்கொண்டு ரிக்கி பாண்டிங் ஸ்கோர் செய்தார்.

பாண்டிங்கை சங்கர் எனக்காகவே மட்டம் தட்ட, ஒரு கட்டத்தில் சச்சினும், பாண்டிங்கும் எங்களுக்குள் நின்று மோதிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.இந்தியாவுடனான தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி வருகை தர, தாஜ் ஹோட்டல் வாசலில் தவம் கிடந்து பாண்டிங்கோடு நான் போட்டோ எடுத்துக்கொண்டு வந்தபோது எங்கள் போர் உச்சகட்டத்தை அடைந்தது.

‘‘‘பேட்டிங் பண்ணும் போது எல்லாரும் ஃபீல்டர் எங்கே நிற்கிறார்னு பார்ப்பாங்க. நான் மைதானத்தில் எங்கே கேப் இருக்குன்னு பார்ப்பேன்’னு சொல்லி இருக்கார்டா பாண்டிங். என்னவொரு வித்யாசமான பார்வை. அதனாலதான்டா அவர் சக்சஸ்ஃபுல் கேப்டனா இருக்கார்...’’நண்பர்களோடு நான் இயல்பாய் பேச, ‘தலைமைப் பண்புக்கு லாயக்கில்லாதவர் சச்சின்’ என்று நான் ஜாடை பேசியதாய் கற்பனை செய்து என்னை பீச் ரோட்டில் புரட்டி எடுத்ததோடு எங்கள் பீச் கிரிக்கெட் நட்பும் முடிந்து போனது.

‘‘டேய்... நீ ஆன்டி இந்தியன்டா. நம்ம நாட்டு ப்ளேயரை விட்டுட்டு அந்த கங்கார் பயலை தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறன்னா, எல்லோரும் சிலுவை தூக்கிக தானே...’’ கோபத்தில்  காறித் துப்பினான்.கோபத்தில் விழுந்த வார்த்தை என்று ஜீரணம் பண்ண முடியாதபடி எங்கே என்னைப் பார்த்தாலும் ‘என் உரிமையுணர்வின் மீது பழிச்சொல்’ என்ற கல்லை அடுக்கிக் கொண்டே இருந்தான்.

‘‘இவனுகளை வளர்த்தி விடறது எல்லாம் நமக்கு நாமே வச்சுக்கிற சூன்யம்டா. உலகமே கொண்டாடுற வீரன் நம்ம நாட்டுல இருக்கான். ஆனா, இவருக்கு பாண்டிங்கை பிடிக்குமாம். ஆன்டி இண்டியன்ஸ்...’’ கையை மடக்கி அசிங்கமாய் சைகை செய்தான்.சுதந்திர தின அணிவகுப்பைப் பார்க்க குழுமியபோது ஏளனமாய் ஒரு சிரிப்பு சிரித்தான். தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற போது, எள்ளல் ஒன்று உதட்டில் துளிர்க்க பார்த்தான்.

என்னை அறியாமல் நான் தடுமாற ஆரம்பித்தேன். என் தேசிய உணர்வின் மீது அவன் வலுக்கட்டாயமாய் ஆஸ்திரேலியக் கொடியை ஏற்றி வைத்திருக்க, நான் என்னையறியாமல் அந்நியனாய் உணர ஆரம்பித்தேன்.அவனும் அவன் நண்பர்களும் என்னை கட்டம் கட்ட ஆரம்பித்திருக்க, நான் ஒதுங்கத் தொடங்கினேன்.காலம் ஓடியது. சங்கரை மட்டுமல்ல கிரிக்கெடடையும் வாழ்க்கை என்னைவிட்டு வலித்துக் கொண்டு போய்விட்டது.

பழைய வண்ணை பக்கம் வருவதே இல்லை. போகன்வில்லா மரம் சங்கரின் வீட்டை அடையாளம் காட்ட, உள்ளே போனேன்.வரவேற்ற ஆனந்தி என்னை ஹாலில் அமரச் சொல்லிவிட்டு சங்கரை போய் அழைத்து வந்தாள்.பீர் தொப்பையும், வெளீர் முகமுமாய் வந்தவனிடம் நட்பின் சாயல்கூட இல்லை.‘‘ஹவ் ஆர் யூ மேன்..?’’ என்று முதுகில் தட்டினான்.வேலை, குடும்பம் குழந்தைகள் என்று பரஸ்பரம் பேசிக் கொண்டோம்.

குடும்பத்தோடு மெல்போர்னில் இருப்பதாகச் சொன்னான். அங்குலம் அங்குலமாய் வெளிநாட்டு வாழ்க்கையை விவரித்தான்.இங்கே சூடு... அவனாலும் குழந்தைகளாலும் இருக்கவே முடியவில்லை என்று சொன்னான். அங்குள்ள மக்களின் பண்பாடு, நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்று வரிக்கு வரி புகழாரம் சூட்டினான்.அப்பாவின் மரணத்திற்கு வந்திருப்பதாய் சொன்னவன் வாயில் மறுபடியும் அப்பா வார்த்தையில் கூட வரவே இல்லை.விடைபெற்று வெளியில் வந்தேன்.

‘‘ஃபேமிலியோட ஒரு தடவை வந்துட்டு போ மேன். டிக்கெட் பத்தி எல்லாம் கவலைப்படாதே, ஐ வில் அரேன்ஜ். வந்து பார், அங்கே நாகரீகம் எவ்வளவு உயரத்துக்கு போயிருக்குன்னு. அப்புறம் நானே கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினாலும் இந்தியா வரமாட்டே...’’‘‘கண்டிப்பா சங்கர்... வர்றேன். ரிக்கி பாண்டிங்கை பார்க்கணும் இல்ல...’’ சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
சங்கரின் முகத்தில் இருந்த புன்னகையை யாரோ ஸ்டம்பிங் செய்திருந்தார்கள்.

எஸ்.பர்வின் பானு