லியோ பக்கா மாஸ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Exclusive
‘‘முதல் 10 நிமிடங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்க முடியுமோ பாருங்கள். அமைதியாக உட்கார்ந்து அந்தப் பத்து நிமிடங்களை முழுமையாக ரசிக்கணும்னு பார்த்து பார்த்து எடுத்திருக்கோம்... எனில் தாமதமாக்காமல் படம் ஆரம்பிப்பதற்கு முன் சீக்கிரம் வந்துவிடுங்கள்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் .
‘லியோ’ திருவிழாவுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கதை குறித்த யூகங்களாலும் கேள்விகளாலும் இணையம் நிரம்பி வழிகிறது. ஆனால், இது குறித்த எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து அமர்ந்தார் லோகேஷ் கனகராஜ்.
 ‘லியோ’... என்ன கதை... என்ன களம்..?
படத்தின் கதை எழுதத் துவங்கிய நாளிலிருந்து இந்தப் படத்திற்கு பெயர் ‘ஆண்டனி’ என்கிற தலைப்பில்தான் ஸ்கிரிப்ட் வேலை துவங்கி அத்தனையும் செய்துட்டு இருந்தோம். கூர்கில் கதை குறித்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது இன்னும் ஏதாவது பளிச்சென தலைப்பு கிடைக்குமா... என யோசித்துக் கொண்டிருந்த பொழுது இந்தத் தலைப்பை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவுதான் சொன்னார்கள்.
 ‘லியோ’ என்கிற பெயரும் சிங்கத்தைக் குறிக்கிற சொல்லும் சேர்ந்து இந்த கதைக்கும் தேவைப்பட்டதால் இந்த பெயர் ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. கதை... இதுவரையிலும் தமிழ் சினிமா பார்த்துப் பழகி அடித்துத் துவைத்த அதே பழைய ஹீரோயிசம் கதைதான். திரைக்கதையில் என்ன வித்தியாசம் காட்ட முடி
 யுமோ காட்டியிருக்கிறோம். இதற்கு ரொம்ப பெரிய சப்போர்ட்டா இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ரத்னகுமாரும் தீரஜ் வைத்தியும் இருந்தார்கள். முழுக் கதையிலும் வேலை செய்திருக்காங்க.
 ஆக்ஷன் + லோகேஷ்... அப்படி என்ன பந்தம்?
எனக்கு ஆக்ஷன் ரொம்ப பிடிக்கும். ஆக்ஷன் மூலமாக கதை சொல்கிற படங்களைத்தான் நானும் தேர்வு செய்து பார்ப்பேன். ஒரு ஹீரோவை, ஹீரோவாக காட்ட ஆக்ஷனை விட சிறப்பான வழி வேறு இல்லை என நினைப்பவன் நான். அதேபோல் உலகம் முழுக்கவே கமர்ஷியல் என்றாலே ஆக்ஷன்தான்.
 கதை குறித்த ஊகங்களையும் வதந்திகளையும் பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றும்?
 பொதுவாகவே இதையெல்லாம் நான் படிக்கிறதே கிடையாது. படிச்சா நாம நிறைய குழப்பங்களுக்கு ஆளாகிடுவோம். அது மட்டுமில்லாம இதற்கெல்லாம் ரியாக்ட் செய்தா கதைக்குள்ளேயும் தேவையில்லாமல் குளறுபடி செய்யணும்னு கூட தோணும்.அதனால பெரும்பாலும் படம் முடிகிற வரை எந்த வதந்திக்கும் செய்திகளுக்கும் செவி கொடுப்பதே கிடையாது.
விஜய், அர்ஜுன், சஞ்சய் தத்... இப்படி படம் முழுக்கவே பெரிய நடிகர்கள்... இதற்காக கதையில் மாற்றம் செய்தீர்களா?
நாங்கள் கதை எழுதத் துவங்கினப்ப என்ன கதை இருந்ததோ அதில் ஒரு வார்த்தை கூட நாங்க மாற்றம் செய்யவே இல்லை. அதேபோல் எனக்குக் கிடைத்த நடிகர்களும் கூட எனக்கு என்ன தேவையோ அதை அற்புதமா செய்து கொடுத்தாங்க.
‘மாநகரம்’ செய்யும் பொழுது சந்தீப் கிஷான் மற்றும் ஸ்ரீ ரெண்டு பேருடனும் எப்படி வேலை செய்தேனோ அதே மனநிலையில்தான் இந்த நடிகர்கள் கூடவும் வேலை செய்தேன். படத்தின் கதைக் கரு என்னனு புரிஞ்சுகிட்டு அவங்களும் எனக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தாங்க. விஜய் சார்... இரண்டு படம்தான் அவர்கூட வேலை செய்தேன். ஆனா, 10 படங்கள் வேலை செய்தால் என்ன எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குமோ அது ரெண்டே படத்துல எனக்கு கிடைச்சிருச்சு. படத்தின் ஒரு காட்சியில் தகாத வார்த்தை பேசணும்னு சொன்னப்ப ‘பேசணுமாப்பா... ஓகேவா’னு ஒரு முறைதான் கேட்டார். ஆனால், கதைக்குத் தேவை என்பதைப் புரிஞ்சுகிட்டு யோசிக்காமல் நடிச்சார்.
பெண்களின் வலிமையான பகுதிகளையே பெரும்பாலும் உங்கள் படத்தின் கதாபாத்திரங்களாக காண்பிப்பதற்கு காரணம் என்ன?
‘ஒய் பாய்ஸ் ஹேவ் ஆல் ஃபன்...’ இந்த வரிகள் மேல எனக்கு நம்பிக்கை அதிகம். பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்கிற டெம்ப்ளேட்டை உடைக்கணும்னுதான் நான் நினைப்பேன். அதனால் பொதுவாகவே மென்மையான, அமைதியான, தென்றல் மாதிரி இதெல்லாம் எனக்கு செட் ஆகாது.
அதற்காக காதல், ரொமான்ஸ்... இதெல்லாம் எனக்கு செட்டாகாதுனு இல்லை. வீட்டில் ஓய்வு நேரம் கிடைச்சா நான் பார்க்கிறதே ரொமான்டிக் படங்கள்தான். மணிரத்தினம் சார் படங்கள் எல்லாம் அவ்வளவு விரும்பிப் பார்ப்பேன். கான்செப்ட் சொல்லிவிட்டால் எந்த தலையீடும் நீங்கள் கொடுப்பதில்லை என அனிருத் சொல்லி இருக்கிறாரே?
ஒரே மாதிரியான எண்ண அலைகள்தான் காரணம். அவர் இசை மேலயும் அவர் வேலை மேலயும் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. கான்செப்ட் சொல்லிட்டோம், அவ்வளவுதான்...எப்படி படத்தை இயக்குவதுனு எனக்கு யாராவது சொல்லிக் கொடுத்தா எப்படி பிடிக்காதோ அதே மாதிரி இப்படி இசையமைக்கணும்னு ஓர் இசையமைப்பாளருக்கு நாம சொல்லத் தேவையில்ல.
அதனால்தான் இதுதான் கான்செப்ட்னு சொல்லிட்டு நான் நகர்ந்துடுவேன். நாம என்ன எதிர்பார்க்கிறோமோ அதைக் காட்டிலும் அதிகமாகவே வேலை செய்து கொடுப்பவர் அனிருத்.
முதல் படத்துக்கும் இப்போது ‘லியோ’ வரை என்ன மாற்றம் உங்க வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கு?
முன்பைக் காட்டிலும் இப்ப இன்னும் அமைதியாக மாறி இருக்கேன். நான் சந்திச்ச நடிகர்கள் துவங்கி டெக்னீசியன்கள் வரையிலும் அத்தனை பேரும் என்னைக் காட்டிலும் பெரிய சாதனைகள் படைத்தவங்க. அவர்களுடைய அமைதியும் பொறுமையும்தான் நான் கத்துக்கிட்டேன். அவங்களே அவ்வளவு சாதாரணமா இருக்கும் பொழுது நாம ஏன் இருக்கக்கூடாது..? அந்த அமைதிதான் என்னை தடையின்றி பயணிக்க வைக்குது.
‘லியோ’ அன்கட் வெர்ஷன் ஓடிடியில் வெளியாகுமா?
‘இதைத்தான் மக்களுக்குக் காட்டணும்’னு உறுதி செய்யத்தான் சென்சார் போர்டு இருக்கு. ‘லியோ’ படத்துக்கான சென்சார் சர்டிபிகேட் ஏற்கனவே வெளியாகிட்டது. அதிலும் ‘லியோ’வைப் பொருத்தவரை 40 விநாடிகள்தான் கட் கொடுத்திருக்காங்க. அது பெரிய நஷ்டம் எல்லாம் கிடையாது. அதே வெர்ஷன்தான் ஓடிடியிலும் வெளியாகும்.
ஒவ்வொரு முறையும் சென்சார் தரப்புக்கு படத்தை கொடுக்கும் பொழுது உள்ளே கொஞ்சம் பயமாதான் இருக்கும். 40 செகண்டுகள்தான் கட் கொடுத்திருக்காங்கனா நாம சரியா வேலை செய்து இருக்கிறோம் என்று அர்த்தம்.
படம் முழுக்கவே பான் இந்தியா நட்சத்திரங்கள்... ஒவ்வொருவருக்குமான முக்கியத்துவம் கொடுப்பதில் எவ்வளவு சவால் இருந்தது?
என்னுடைய கதையை நான் எழுதுவதே மல்டி ஸ்டார் என்கிற கான்செப்டில்தான். என்னுடைய முதல் படமான ‘மாநகர’த்திலேயே அத்தனை கேரக்டர்கள் இருப்பார்கள். அதேபோல் தேவையில்லாமல் வெறுமனே பட்டியலுக்காக கலைஞர்களை காட்சியில் பயன்படுத்துவதும் எனக்குப் பிடிக்காது.
படத்தின் கடைக்கோடி நடிகன் வரை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அப்படித்தான் கதை எழுதுவேன். அதேமாதிரி கதை எழுதும் பொழுது இந்த ஆர்ட்டிஸ்ட்னு முடிவு செய்து எழுதுவதே கிடையாது. ஒரு பெரிய ஸ்டார் வந்துட்டதால கதையில் மாற்றம் செய்கிற பழக்கமும் எனக்கு கிடையாது. ‘ஹீரோக்களுக்கு வில்லன் ஹீரோக்கள்தான்’ என்னும் டிரெண்டை உருவாக்கியவர் நீங்கள்தான்... இதற்குப் பின்னணி காரணம் என்ன?
‘தனோஸ்’ அந்த அளவுக்கு வலிமையாக இருந்ததால்தான் இன்றும் ‘கேப்டன் அமெரிக்கா’ முதல் மற்ற ‘அவெஞ்சர்கள்’ உலகப் புகழ் பெற்றார்கள்; பிரபலமானார்கள். அப்படித்தான் என்னைப் பொறுத்தவரை வில்லனுக்கு வில்லன்... ஹீரோவுக்கு ஹீரோ என்பது போல ஒரு ஹீரோவுக்கு இன்னொரு ஹீரோவே வில்லனாக நிற்கும்போதுதான் எந்த மெனக்கெடலும் இல்லாமல் அந்த கேரக்டர் மேலும் ஸ்ட்ராங் ஆகும்.
கதை உருவாக்கங்களில் மேலும் ரெண்டு இயக்குநர்களை இணைத்ததன் காரணம் என்ன?
எல்லாமே எல்லோரும் சரியா செய்திட மாட்டோம். எல்லோருக்கும் எல்லாமே சரியாகவும் வந்திடாது. அதேபோல் எல்லோரும் தவறு செய்யாமலும் இருக்க மாட்டோம். நான் செய்கிற தவறை சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும். அதேபோல் மூணு பேர் ஒண்ணா சேர்ந்து ஒரு கதையை உருவாக்கும் பொழுது மூன்று விதமான ஐடியாலஜி... மூணு விதமான காட்சிகள்... எது பெஸ்ட் என்கிற சாய்ஸ்... இப்படி கதை மேலும் மேலும் மெருகேறும்.
அதனால்தான் என் கூட என்னைப் போலவே சிந்தனை உள்ள ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ரெண்டு பேரையும் நண்பர்களாகவும், டெக்னீஷியன்களாகவும் சேர்த்துக்கிட்டேன். ‘லியோ’..?‘எல்.சி.யூ.’வில் (லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ்) இப்படம் சேருமா இல்லையா என்கிற கேள்வி நீங்க கேட்கவே இல்லை! பலரும் அதைத்தான் திரும்பத் திரும்ப கேட்கறாங்க. அதற்கே நன்றி. இந்தப் படம் என்னுடைய கதைக்களத்தில் உருவான இன்னொரு படம்... பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படம்.
அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். ஒரே ஒரு வேண்டுகோள்... எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படத்திற்கு வந்திடுங்க. முதல் 10 நிமிடங்கள் எந்த சப்தமும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படத்தை அமைதியா பார்த்து என்ஜாய் பண்ணுங்க. அதற்குதான் நிறைய மெனக்கெட்டு வேலை செய்திருக்கோம். நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக ‘லியோ’ இருக்கும். ‘ரஜினி 171’... ஒரு எக்ஸ்க்ளூசிவ் ப்ளீஸ்!
அந்த சந்திப்பு திடீர்னு நடந்ததுதான். இதற்கு முன்பு கூட ரஜினி சார் கூட நிறைய முறை பேசி இருக்கேன்; சந்திச்சிருக்கேன். அப்ப எதுவும் நடக்கலை. ‘லியோ’ படத்தின் வேலைகளில் இருந்தப்ப அனிருத் கிட்ட ஒரு கதை சொன்னேன். ‘ப்ரோ... இது ரொம்ப நல்லா இருக்கு... தலைவர் செய்தா மாஸாக இருக்கும்’னு சொன்னார்.
‘நல்லாதான் இருக்கும்... ஆனா, எப்படி...’னு நான் யோசிச்ச அடுத்த கனமே அனிருத் போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்துட்டார். கதையைக் கேட்டவுடன் தலைவர் உடனே ஓகே சொல்லிட்டார். ‘என்னப்பா... அப்பாயின்ட்மென்ட் கேட்டீங்க... அதுக்குள்ள கதை ரெடியா’னு கேட்டார். ‘இது ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதை. அதைத்தான் உங்களுக்கு சொன்னேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா அடுத்த வேலைகளில் இறங்கலாம்’னு சொன்னேன். ‘செமையா இருக்கு’னு பாராட்டிட்டு ஓகே சொல்லிட்டார். இதுவரையிலும் வெளியான என்னுடைய படங்களில் இருந்து முற்றிலும் வேறு கதை, வேறு ஒரு களம். ரஜினி சாரையும் எந்த அளவுக்கு வித்தியாசப் படுத்திக் காட்டமுடியுமோ அப்படிக் காட்டுவதற்கு எல்லா வேலைகளும் செய்திட்டு இருக்கோம்.
‘பத்து படங்களில் சினிமாவுக்கு பை பை சொல்லி விடுவேன்...’ என சொல்லிட்டீங்களே?
ஆக்சுவலி என்னுடைய ஐடியாலஜி எப்ப தீர்ந்து போகுதோ அல்லது எப்ப என்னிடம் கதையே இல்லை என்கிற நிலை வருதோ... அப்ப அடுத்து வர இளைஞர்களுக்கு வழி விட்டுட்டு நகர்ந்திடுவேன். அதைத்தான் அப்படிச் சொன்னேன்.
ஷாலினி நியூட்டன்
|