சிறுகதை - வேம்பு
‘‘பாரு... அப்புடியே வெறும் தூசியாத்தேன் கெடக்கு...” விதை போட்டு முளைக்காமல் போன நிலத்தின் மண்ணை கைகளில் அள்ளி கண்ணீர் வடித்தாள் ராமுத்தாய். மழை வராமல் ஏமாற்றி விட்டு காற்றை மட்டும் அனுப்பி இயற்கை செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டை எப்படி ரசிக்க முடியும்..?
 ‘‘யக்கா... நீயும் காட்டுக்கு வந்து நெத்தம் பொலம்பிட்டு போயி என்னா செய்ய..? இந்த வட்டம் மழை இல்லயே...’’ கூட வந்த சீனியம்மாள் ஆறுதல் சொன்னாள். நீர்ப் பாசன வசதிகொண்ட சம்சாரிகள் சிரமப்பட்டு வெள்ளாமை வைத்திருந்தார்கள். வானம் பார்த்த பூமியில் விதைத்தவர்கள் எல்லாம் ஏமாந்து போயினர்... இயற்கையின் கால நிலை மாற்றம் எதிர் பாராத வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
 ‘‘எங்காட்டுலல்லாம் பாரு... சித்திரையில வெதச்ச தொவர... இன்னும் வளராம சித்துப் புள்ளையா இருக்கு. நாலாம் யார்ட்ட போயி என்னத்த சொல்ல..?’’ சீனியம்மாள் சொல்வதை ராமுத்தாய் காதில் வாங்கியவளாகத் தெரியவில்லை.விதைத்து விட்ட கடலைக்காட்டில் ஒன்றிரண்டாய் முளை விட்டிருந்த கடலைச் செடிகளைப் பார்த்து கண்ணீர் வடித்தாள். இயற்கையின் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்தில் நேரடி பாதிப்பு சம்சாரிக்குத்தான்.
‘‘ஆடியில இப்பிடியாக்கொந்த வெயில கண்டமோ... மெட்ராஸ்ல மழை பெய்யுதாம்... மருதைல பெய்யுதாம்... ஆனா, நம்மூருல மட்டும் பெய்யக் காணோம்...’’ சீனியம்மாள் புலம்பினாள். ‘‘ஆமா... நல்ல மகாராசனுங்க இருக்குற ஊரு பாரு... அப்பிடியே மழை பெஞ்சு பாலாப் பெருகி பன்னீரா ஓடிரும்... பிக்காலிப் பயக ஊரு... இதப் பத்தி என்னாத்துக்கு பேசிக்கிட்டு. நல்ல பேச்சு பேசுவோம்...’’ என்றாள் ராமுத்தாய்.
வெயில் அனல் கக்கிக் கொண்டிருந்தது. சீனியம்மாளும் ராமுத்தாயும் வேப்ப மரத்தடியில் ஒதுங்கி கொஞ்சம் தண்ணீர் குடித்தனர். வேப்பமர நிழல் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. வேப்பம் பழத்தை ருசித்து சாப்பிட்ட காக்கைகள் வேப்பங் கொட்டைகளை எச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன.சீனியம்மாள் மூன்று ஆடுகள் வைத்திருக்கிறாள். ராமுத்தாய் இரண்டு ஆடுகள் வைத்திருக்கிறாள்.
ஆடுகள் முட்புதரில் இருந்த ஒன்றிரண்டு இலைகளையும் மேய்ந்து கொண்டு இருந்தன. பசியைப் பற்றிக்கொண்டு சுழல்கிற உலகமே உயிர்த்திருத்தலுக்கான சாட்சி. தூரத்தில் சடச்சி ஆடுகளைப் பத்திக்கொண்டு போனாள்.அதில் ஒரு பெட்டை ஆடு மட்டும் ராமுத்தாயைப் பார்த்து கத்தியது. ராமுத்தாயும் அதற்கு எதிர்க் குரல் கொடுத்தாள். ஆடு மறுபடியும் கத்திக்கொண்டே ஓடியது. அன்பின் குரல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறும்போது வெளியெங்கும் பறப்பது அன்பின் துகள்கள்தானே.
‘‘ஏக்கா... அழகு பெத்த ஆட்டை போயிப் போயி வித்துப்புட்டியே... எம்புட்டு அறிவு... ஒன்னய கண்டதும் கொரலு குடுக்குது பாரு..!’’ அன்பும் மௌனமும் யாவரும் அறிந்த உலகப் பொது மொழிகள்தானே.‘‘என்னா செய்யுறது... நாம்பெத்த பொட்டைப் புள்ளைய வெளியேத்தனுமே... நாத்தனாக்காரி நல்லவதேன். வேற நகை நட்டெல்லாம் வேணாம். தோடு மூக்குத்தி மட்டுமாவது போட்டு புள்ளய கெட்டிக்குடு போதும்ன்ட்டா. அதுக்குத்தான அத்தன குட்டியும் வித்தேன்...’’ ஏதாவது ஒரு சமாதானத்தின் பேரில்தானே திருப்தி வந்து பூரணமாக அமர்ந்து கொள்கிறது.
‘‘பரவாலயே நீயி சம்மந்தக்காரிய விட்டுக் குடுக்காம பேசுறியே...’’‘‘அடப் போத்தா... உண்மையிலேயே அவ நல்லவதேன். அண்ணம் போன பிறகு இந்த மதனி கைம்பொண்டாட்டியா இருந்து எப்புடி புள்ள வளக்குது பாருன்னு தெருப்பூறா வாயாறுவா. இப்ப எம்புள்ளையும் மகனுக்கு கெட்டிட்டு போயிட்டா. இப்ப சொல்லு ... அவ நல்ல மனுசி தான..!’’ ‘‘நீ கும்புடுற சீலக்காரிதேக்கா ஒனக்குகூட நிக்குது...’’ சீனியம்மாள் வாயை விரித்து அங்கலாய்த்தாள்.
காற்று செங்காட்டுப் புழுதியை இஷ்டத்துக்கு வீசி அடித்துக் கொண்டிருந்தது. செந்நிற சூரியன் கரட்டைத் தாண்டி மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். சூரியன் அன்றைக்கான பிரியமென பொழியும் கடைசி ஒளியை முள்செடிகளின் தலையில் கிரீடமென சூட்டி மகிழ்ந்தான்.
‘‘ஏட்டி... பொழுது விழுக ஆரம்பிச்சுருச்சு. ஆட்ட வெரசா பத்திக்கிட்டு வீடு சேரணும்...’’ ‘‘க்கும்..கா...’’ ‘‘காட கவுதாலில்லாம் இப்பிடிக் கத்தி ஊர கூட்டுது...’’ ராமுத்தாய் தன்னுடைய ஆடுகளின் வயிறைப் பார்த்தாள். ஆடுகளின் வயிறு ஒட்டிப் போய் இருந்தது.
‘‘இம்புட்டு நேரம் மேச்சும் இதுகளுக்கு வயிறு நெறையல. அதுக என்னா செய்யும்... இந்த காட்டுல பச்ச இல்ல... புல்லு இல்ல. நாளைக்கு விடிஞ்சதும் ரெண்டு வேப்பங் கொலய ஒடிச்சுப் போடணும்...’’இருவரும் ஆடுகளைப் பத்திக்கொண்டு பள்ளத்தில் கிடக்கும் ஊரைப் பார்த்து நடக்க ஆரம்பித்தனர்.வீடு நெருங்க நெருங்க ராமுத்தாய்க்கு அடுத்த பிரச்னையின் கனம் அழுத்த ஆரம்பித்தது.
கட்டிக் கொடுத்த மகளையும் மருமகனையும் மறுவீட்டுக்கு அழைக்க வேண்டும். ஏற்கனவே வாங்கிய பண்ட பாத்திரங்கள் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் பொருட்கள் எடுக்க வேண்டும். டவுனிலிருந்து வரும் பவுன்ராசண்ணனிடம் கந்துக்கு எடுக்கவேண்டும். பவுன்ராசண்ணன்தான் கந்துப் பணத்தை திரும்ப கட்டும்போது கொஞ்சம் முன் பின் ஆனாலும் கெடுபிடி காட்டாமல் நீவு சூவா வாங்கிக் கொள்ளும். ஆனால், வட்டி குறைக்காது.
‘‘யக்கா போய் வாறேன்...’’ சீனியம்மாளின் குரல் கேட்டு ராமுத்தாய் யதார்த்தத்துக்கு வந்தாள்.‘‘சரித்தா...’’‘‘உனக்கு ஒம்மக நெனப்பு வந்தா இந்த ஒலகத்தயே மறந்துர்ர...’’ “என்னாத்தடி செய்ய..? அப்பன் இல்லாத பிள்ளய எங்குட்டும் அனுப்பாம பிடி குஞ்சா வளத்துப்புட்டேன். அதனால கொஞ்சம் மெதந்துர்றேன்...’’ “நெம்ப ஓவியமாத்தே பிள்ள வளக்குற...” சிரித்துக்கொண்டே சீனியம்மாள் கிளம்பி விட்டாள்.
வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வீட்டுக்குள்ளிருந்து வரும் வேப்பங்கொட்டை நாற்றம் வயிறைப் பிரட்டியது.வீட்டு அறை மூலையில் கூன்முதுகுடன் கிழவி காலை நீட்டி உட்கார்ந்து கொண்டிருந்தாள். ராமுத்தாயின் அம்மா.‘‘ஏம்மா இப்புடி என்னோட உசுர வாங்குற... வீடு பூரா வேப்பங்கொட்ட மூடைய அடஞ்சு வச்சிருக்க. வீச்சம் கொடலப் புடுங்குது. ரெண்டு நாள்ல ஓம் பேத்தியாள மறு வீட்டுக்கு கூப்புடணும்.
யாவுகம் இருக்கா...’’‘‘அதுங்குள்ள வித்துப்புடுவேன். கவலப்படாதம்மா... ஒனக்கு கைச் செலவுக்கு ஆகும்ல...’’“ஆமா... இத வித்து லச்சமும் கோடியும் வரப் போகுது... ஒன்னய வேப்பங் கொட்ட பெறக்க போவேணாம்னு சொன்னா கேக்க மாட்ர. விடியங்காட்டி வெறும் நீச்சத் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு போனவ இப்பதே வாற... வயசான கெளவிக்கு கஞ்சி ஊத்த வக்குல்லாம இப்பிடி வேப்பங் கொட்ட பெறக்க பத்தி விடுறான்னு என்னயத்தே ஊர்க்காரிக ஏசப் போறாளுக...’’‘‘அவுளுக சொன்னா சொல்லிட்டு போறாளுக...
நம்ம படுற கருமாயம் நம்மளுக்குத்தான தெரியும்...’’ கிழவி இந்த எண்பத்து ஐந்து வயதிலும் நடக்க முடியாத கூன் முதுகுடன் ராமுத்தாய்க்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறாள். காய்ச்சி ஊத்தும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு ஜீவிக்கிறாள். நடக்க முடியாத இந்த நிலையிலும் தினமும் வேப்பங் கொட்டை பொறுக்கப் போகிறாள். அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது ராமுத்தாய்க்கு. இவள் சிறு வயதில் இருக்கும்போது மொட்டக்கரடு தாண்டி கஸ்பா மலைக்கு விறகெடுக்கப் போவாள். அம்மா பச்சை மரத்தை வெட்ட மாட்டாள். அந்த விறகை பாரஸ்ட்காரன் கண்ணில் படாமல் வீடு வந்து சேர்ப்பதுதான் அம்மாவின் திறமை. பிடரி வலிக்க விறகுக் கட்டின் சுமை அழுத்த அம்மாவின் நடைக்கு கூட வரும் பெண்கள் யாரும் போட்டி போட முடியாது. அம்மா தன்னுடைய கால்களை மெதுவாக நீவி விட்டுக் கொண்டாள்.
சதையற்ற எலும்பாய் நீண்டு கிடக்கின்றன அந்தக் கால்கள்.‘‘அம்மா... செத்த இரு. வென்னி காய வச்சு ஊத்துறேன்...’’ என்றபடி அவசரமாக அடுப்பு பற்ற வைத்து சுடுதண்ணி போட்டாள். ராமுத்தாய்க்கு கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. வெந்நீர் காய்ந்ததும் அம்மாவின் கால்களையும் முதுகையும் நீவி விட்டு குளிக்க வைத்து, துவட்டி, தரையில் ஒரு கிழிந்த சேலையை விரித்துப் படுக்க வைத்தாள். விறுவிறுவென்று கருவாட்டுச் சாறு வைத்து கீரை கடைந்து கிழவியை எழுப்பி வட்டியில் சோறு போட்டு நீட்டினாள்.
‘‘வேணாம்த்தா...” ‘‘ஆத்தே... நாலஞ்சு பருக்கை சோறுதான் போட்டிருக்கேன். தின்னு தாயி...’’ கிழவி மெதுவாகச் சாப்பிட ஆரம்பித்தாள். ராமுத்தாய்க்குப் பிரச்னைகளோ, கவலைகளோ இல்லாத நாளில்லை. ஒரு குடிகாரனின் கிறுக்கு மயக்கத்தைப் போல, உடல் அயற்சியால் வருகிற தூக்கத்தின்போதுதான் அவள் தன்னை மறந்து கவலை மறந்து தூங்குகிறாள்.
கோழிகூப்பிட எழுந்து ஆடுகளுக்குத் தண்ணீர் வைத்தாள். ‘ஆத்தா சீலைக்காரி... நான் என்னா செய்யப் போறனோ...’ என்று அரற்றினாள். இன்னொரு நினைப்பு ஒரு கல்யாணத்தையே நடத்தி முடித்தவளுக்கு மறுவீடெல்லாம் பெரிய விஷயமா என்கிறது.
நல்லவேளை... சுப்பக்கா கடை திறந்திருந்தாள்.‘‘என்னாக்கா... பவுன்ராசண்ணன் வந்துச்சா..?’’ ‘‘என்னாடி ஒனக்கு விஷயம் தெரியாதா... அவரத்தே காருக்காரென் அடிச்சு போட்டு போயிட்டானாம். கானா வெலக்கு ஆசுபத்திரில கொண்டி வச்சுருக்காகளாம்...’’ இடிந்து போனாள் ராமுத்தாய்.‘‘உயிருக்கு எதுவும் சேதாரம் இல்லையாம்...’’ சுப்பக்கா சொல்வதை காதில் வாங்காமல் நடக்க ஆரம்பித்தாள்.கடைசி நம்பிக்கையாய் பவுன்ராசண்ணனை நம்பியிருந்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்...
‘‘யக்கா நில்லு...’’
தோள் பிடித்து நிறுத்தியவளை நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் சீனியம்மாள் நின்றிருந்தாள்.‘‘நீ கவலப்படாதக்கா... நான் ஒரு ரோசன சொல்றேன். நம்ம மகளிர் குழு சீட்டுப் பணம் இந்த வட்டம் செல்விக்கு விழுந்துருக்கு. அவ என்கிட்ட நீயே வச்சுரு ரெண்டு நாச் செண்டு வாங்கிக்குறேன்னு சொல்லிருக்கா. அத தாறேன்.
அத வாங்கி இந்த செலவ சமாளி. ஆனா, கண்டிப்பா ரெண்டு நாள்ல தந்துரணும்...’’ராமுத்தாயிக்கு அப்படியே கண்ணு பூத்துப் போனது. அறியாமல் கைகளைக் கூப்பினாள். ‘‘ஆத்தி நீ தெய்வம்டி... நா வேண்டாத சாமியில்ல... ரெண்டு நாள்ல பெரட்டி தந்துர்றேன்...’’ ‘‘கண்ண தொடச்சுக்கக்கா...’’வீட்டுக்குக் கூப்பிட்டுப் போய் பணத்தை எடுத்துக் கொடுத்தா சீனியம்மாள், ‘‘கொஞ்ச ரூவாய என்னுட்ட குடு. கறிவுளி எடுத்து சமைக்க ஆரமிச்சுர்றேன். நீ போயி மகள மறுவீட்டுக்கு கூட்டி வா. ..’’ என்றாள்.ராமுத்தாய்க்கு இந்த யோசனை நல்லதாகப்பட்டது.‘‘இந்தா ரூவா... நீ வேணுங்கிறத வாங்கி சோறாக்கு. நா போயி பொண்ணு மாப்பிள்ளைய பணம் பாக்கு வெத்தல வச்சு மறு வீட்டுக்கு கூப்ட்டு வந்துர்றேன்...”“சரி சரி... வெரசா கிளம்பி ஓடுக்கா...” ராமுத்தாயை விரட்டினாள் சீனியம்மா.
‘‘அப்புறம் மறந்துட்டனே... அந்த குள்ளக்காளய வந்து நம்ம ஆட்ட மேய்ச்சலுக்கு கூட்டிப் போகச் சொல்லு. சமையக்கார கருப்பையா மாமாட்ட போயி பொண்ணு மாப்பிள்ளைக்கு குடுத்து விட மறுவீட்டு பலகாரம் ரெடியான்னு கேட்டு வச்சிரு...’’சொல்லிக் கொண்டே ராமுத்தாய் கிளம்பிப் போனாள். வேகு வேகென்று போனதில் குப்பிநாயக்கன்பட்டி வண்டியைப் பிடித்து விட்டாள்.கண்டக்டரிடம் ‘‘இது துட்டுல்லாம போற வண்டிதான..?’’ என்று கேட்டாள்.
‘‘ஏன் துட்டு நெறய வச்சிருந்தா தம்பிக்கு குடுத்துட்டு போக்கா...’’ கண்டக்டர் சிரித்தார்.ஊருக்குப் போயி மதினி கையில் பணம் பாக்கு வெற்றிலை வைத்து பெண் மாப்பிள்ளையை கையோடு மறு வண்டியில் அழைத்து வந்து விட்டாள்.சீனியம்மாள் ஆலாத்தி எடுத்து மணமக்களை வீட்டுக்குள் அழைத்தாள். அல்லு அசல் என்று ஒரு பத்து பேர் வந்து விருந்து சாப்பிட்டார்கள். மறுவீடு விருந்து சிறப்பாய் முடிந்தது.
மறுநாள்.ராமுத்தாய் ஐந்தாறு பானையில் மறுவீட்டுப் பலகாரம் தயார் செய்தாள். சீனியம்மாள் ஒவ்வொரு பானைக்கும் காசு முடிந்த மஞ்சள் துணி கட்டி வைத்தாள். குட்டியானையில் சாமான்கள் ஏற்றப்பட்டன. மஞ்சள் துணி முடிந்த பணியாரக் குடத்தை மகளின் இடுப்பிலேற்றினாள். இந்த அழகைப் பார்க்கத்தானே இத்தனை நாள் காத்திருந்தோம் என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
மணமக்களைக் கொண்டு விட உறவுக்காரப் பெண்கள் சில பேரை உடன் அனுப்பி வைத்தாள். குட்டியானை சந்தோசமாய் கிளம்பிப் போனது.மகளை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தவளின் கழுத்துக்கு அடுத்த கத்தி காத்திருந்தது.‘‘யக்காவ்...’’ சீனியம்மாள் அழைத்தாள்.
‘‘என்னத்தா..?’’
‘‘செல்வி போன் போட்டா. அவளுக்கு ரூவா வேணுமாம். நான் சாயந்திரம் வாங்கிக்கச் சொல்லிட்டேன். குடுத்துராம்ல..?’’
ராமுத்தாய் அசைவற்று நின்றாள். சட்டென சமாளித்துக் கொண்டாள். ‘‘செத்த பொறு ஆத்தா. காட்டு நெலத்துப் பத்திரத்த கொண்டு அடகு வச்சு பணம் கொண்டு வாறேன்...’’ இந்த காட்டு நிலம்தான் மிச்சமிருக்கிற வாழ்க்கைக்கு ஒரை மோர் மாதிரி. ‘‘கை கால் விழுந்துக்குச்சுன்னா எனக்குன்னு இதான இருக்கு...’’ ராமுத்தாய் எல்லோரிடமும் அவ்வப்போது இப்படிச் சொல்வாள்.
இந்த ஊரில் நிலம் அடகு வைத்தவர் யாரும் மீட்டவர் இல்லை. ‘‘சரிக்கா... போயி அடகு வச்சு பணத்த வெரசா கொண்ட்டு வா...’’ என்றாள் சீனியம்மாள்,‘‘ஏங்க்கா... நீ பணத்துக்கு இம்பூட்டு தவுதாயப் படுறதுக்கு ஒம்மக கல்யாணத்துக்கு செய்முறை வாங்கீருக்கலாம்ல..? ஒத்தக் காசு வாங்க மாட்டேன் னுட்ட...’’ என்று கேட்டாள்.
‘‘ஆமா... செய்முறை வாங்கி என்னா செய்ய? ஒண்ணுக்கு ரெண்டா திருப்பிச் செய்யணும்ல... திருப்பிச் செய்ய நான் என்ன ஆம்பளப் பிள்ளையா பெத்து வச்சுருக்கேன்? அதெல்லாம் வேண்டாத்தா...’’‘கல்யாணத்துக்கு எல்லோரும் வாங்க... வாயார வாழ்த்தி சாமிய கும்புட்டு பிள்ளைகளுக்கு துன்னூறு போட்டு நல்லா சாப்பிட்டு போங்க...’ இப்படி சொல்லித்தான் ராமுத்தாய் எல்லோரையும் மகள் திருமணத்துக்கு அழைத்தாள்.
சீனியம்மாள் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குச் சென்றாள். தகரப்பெட்டியில் சேலைக்குள் ஒளித்து வைத்திருந்த பத்திரத்தை ராமுத்தாய் தேடத் தொடங்கினாள். வீட்டு முன்னால் இருந்த அத்தி மர நிழலில் கிழவி வேப்பங் கொட்டை மூடையை ஒவ்வொன்றாகப் பிரித்துக் கொட்டினாள். அவளுக்கு முன்னால் ஒருவன் நின்று கொண்டு ஏதோ சொன்னான்.கிழவி கையசைத்து ராமுத்தாயைக் கூப்பிட்டாள்.
ராமுத்தாய் வந்தாள். வேப்பங் கொட்டை வாங்க வந்தவரிடம் ‘‘என்னா வெலைண்ணே..?’’ என்று கேட்டாள்.‘‘எல்லார்ட்டயும் வாங்குற வெலைதேமா... கிலோ நூத்திருவத்தஞ்சு ரூவா...’’ராமுத்தாயால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. சீப்பட்ட வேப்பங்கொட்டைக்கு இம்புட்டு காசா? ‘‘அம்புட்டுல்லாம் இல்ல... நூத்தம்பதுன்னா நிறுத்துக்க...’’ கிழவி கறாராகச் சொன்னாள்.ராமுத்தாய்க்கு பக்கென்று தூக்கிவாரிப் போட்டது.
யாவாரி தலையைச் சொறிந்தான். ‘‘கொட்டை தரமா இருக்குறதுனால ஒத்துக்கிறேன்...’’ராமுத்தாயிக்கு போன உசுரு திரும்பியது. கொட்டை எடை போடப்பட்டது. மொத்தம் நூற்றுப்பத்து கிலோ! கணக்குப் பார்த்ததில் பதினாறாயிரத்து ஐநூறு ரூபாய் வந்தது.ராமுத்தாயி கீழே விழுந்து விடாமல் இருக்க கிழவியின் மெலிந்த தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டாள்.வியாபாரி ஐநூறு ஐநூறாக எண்ண எண்ண... ராமுத்தாயிக்கு நெஞ்சு விம்மியது.
பணத்தைக் கொடுத்து கொட்டையை அவர் கொண்டு வந்த குட்டியானையில் ஏற்றிக் கொண்டு போனார்.கையில் இருந்த பணம் மெல்லிய காற்றில் படபடத்தது. ராமுத்தாய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. யாரைக் கும்பிடுவது என்று தெரியவில்லை. காட்டுநிலத்தின் புழுதி சுதந்திரமாக காற்றில் பறப்பது கண்ணுக்குள் விரிந்தது. வாங்கிய ரூபாயை அம்மாவிடம் நீட்டினாள்.
“எனக்கு எதுக்குத்தா துட்டு... நீ மொத போயி கடன அடை...’’ ராமுத்தாய் தன் அம்மாவை அணைத்துக்கொண்டாள். அழுகை வந்தது. அழுதாள். சீனியம்மாளை வரவழைத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாள்.ராமுத்தாயின் கரங்கள் நடுங்குவதைக் கண்ட சீனியம்மாள் தன் கைகளால் அவளை அணைத்தாள். அருகில் நிற்கும் வேப்பமரம் பழங்களை உதிர்த்தபடி இருந்தது. கிழவி உட்கார்ந்து தன் கால்களை நீவி விட்டுக் கொண்டாள்.
- கிஷ்கிந்தா பாலாஜி
|