ஹமாஸ்...யார் இவர்கள்?



இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பத்து நாட்களாக நடந்துவரும் போரில் இதுவரை சுமார் 2,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 700க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இஸ்ரேல் தரப்பில் 1,300 பேர் இறந்துள்ளனர்.தற்போது காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது. ஹமாஸ் படையினரை ஒழிக்கும்வரை விடப்போவதில்லை என கங்கணம்கட்டி நிற்கிறது இஸ்ரேல்.

இந்நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனம் வரலாறு பற்றி படிப்பவர்கள், யார் இந்த ஹமாஸ்... அவர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன சம்பந்தம்... என்பதையும் நெட்டில் தேடித்தேடி படித்து வருகின்றனர். பொதுவாகவே, பாலஸ்தீனம் என்றாலே நம் நினைவுக்கு வரும் பெயர் யாசர் அராஃபத். ஆனால், அவர் மறைவிற்குப்பிறகு அவர்போல் முகம் அறிந்த தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. ஹமாஸ் அமைப்பின் பெயரே பெரிதாக அறியப்படுகிறது.

யார் இவர்கள்?

Harakat al-Muquwamah al-Islamiya (Hamas) என்பதன் சுருக்கமே ‘ஹமாஸ்’. இதன் அர்த்தம் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் என்பதாகும். இதற்கு அரேபிய மொழியில், ‘வைராக்கியம்’ எனப் பொருள்படும். ஆனால், இஸ்ரேலியர்களின் ஹீப்ரு மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ‘தீய’ எனப் பொருள்படுகிறது. எப்படி இப்படியொரு பெயரை யோசித்தார்களோ தெரியவில்லை.  
இதனை 1987ம் ஆண்டு ஷேக் அகமது யாசின் என்பவர் உருவாக்கினார். இவர் அப்போது பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தின் அஷ்கெலோன் நகருக்கு அருகே உள்ள அல்-ஜூரா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நகரம்.

1948ம் ஆண்டு இஸ்ரேல்- அரபு போரின்போது காஸாவிற்கு அகதியாக வந்தவர்தான் அகமது யாசின். தன் 12வது வயதில் நண்பருடன் மல்யுத்த விளையாட்டு ஆடியபோது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட, வாழ்நாள் முழுவதும் அவர் சக்கர நாற்காலியில் இருக்கும்படி ஆனது. இதிலிருந்தபடியேதான் அவர் ஹமாஸ் அமைப்பை உருவாக்கி, செயல்படுத்தினார் என்பதை எல்லோரும் நம்புவது சிரமம்.   

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் பயின்றார் யாசின். ஆனால், உடல்நிலை பிரச்னை காரணமாக வீட்டிலேயே படிக்க வேண்டியதானது. மதம், தத்துவம், அரசியல், சமூகவியல் சார்ந்து படித்தார். பின்னர் ஆசிரியராகவும், போதகராகவும், சமூக சேவகராகவும் பணியாற்றினார். ஆனாலும் அவர் எப்போதும் மதத் தலைவராகவே அறியப்படுகிறார். அவர் கெய்ரோவில் படிக்கும்போது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார்.

அதன் கிளையை பாலஸ்தீனத்தில் அமைக்க தீவிரமாக செயல்பட்டார். இதற்கிடையில், 1973ல் அல்-முஜாமா அல்-இஸ்லாமியா என்ற மதத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். அதாவது இஸ்லாமிக் சென்டர் என்பது இதன் அர்த்தம். இந்த மையத்தை 1979ல் இஸ்ரேல் அங்கீகரித்தது. இதனால், யாசர் அராஃபத்தின் அரசியல் கட்சியான ஃபதா இயக்கத்தின் செல்வாக்கு மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் குறையும் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை.

யாசின் மதச் செயல்பாடுகள் மூலமாகவும், சமூக சேவை மூலமாகவும் இஸ்ரேல் ஆளும் மேற்குக்கரை மற்றும் காஸா பகுதியில் ‘இஸ்ரேலியர்கள் இஸ்லாமிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்’ என்பதைத் தொடர்ந்து தெரியப்படுத்திக் கொண்டே இருந்தார். இந்நேரம் 1984ல் அவரும், சிலரும் ரகசியமாக ஆயுதங்கள் வாங்கியதற்காக கைதுசெய்யப்பட்டனர். 

அப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஜிஹாத் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத ஆர்வலர்களின் அமைப்பை நிறுவியதாக யாசின் ஒப்புக்கொண்டார். இதனால், 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ஜிப்ரில் என்கிற ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக அவர் 1985லேயே விடுவிக்கப்பட்டார்.

பிறகு, 1987ம் ஆண்டு முதல் பாலஸ்தீன மக்கள் கிளர்ச்சியான இன்டிஃபாடா நடந்தது. அப்போதுதான் ‘ஹமாஸ்’ அமைப்பை யாசின் உருவாக்கினார். இதன் ஒரே நோக்கம் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்தொழித்து, இஸ்லாமிய அரசை உருவாக்குவதுதான். இதனை ஒரு ராணுவ அமைப்பாகவே வளர்த்தெடுத்தார் யாசின். 

1989ல் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கடத்திச் சென்று, அவர்களைக் கொன்று புதைக்க ஹமாஸ் அமைப்பினருக்கு உத்தரவிட்டார் யாசின். அப்போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் வீரர் கொல்லப்பட்டதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார்.

1997ம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். அவர் சிறையில் இருந்தநேரம் இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய எதிர்ப்பு வலுவாக வளர்ந்து வந்தது. கூடவே ஹமாஸும் வளர்ந்தது. இருந்தும் யாசர் அராஃபத்தின் புகழுக்கு முன் யாசினின் புகழ் எடுபடவில்லை. ஆனாலும், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு போர்களைத் தொடுத்து வந்தது.

1993ம் ஆண்டு ஹமாஸ் முதல் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியது. அன்றிலிருந்து தற்கொலை குண்டுவெடிப்புகள் மற்றும் பிற பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய தூண்டுகோலாக ஹமாஸ் இருந்து வருகிறது. குறிப்பாக, தற்கொலைப் படைத் தாக்குதல்களை ஹமாஸ் போல் யாராலும் உலகில் செய்யமுடியாது எனவும் பெயரெடுத்தது.

இந்நிலையில் 1997ம் ஆண்டு அமெரிக்கா ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இதை மற்ற மேற்கத்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டன. தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீண்டது. 2003ல் ஜோர்டானில் நடந்த அகாபா உச்சிமாநாட்டின்படி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டது. 

இதனால், ஹமாஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் போர்நிறுத்தத்தை அறிவித்தன.ஆனால், சிலநாட்களிலேயே இந்தப் போர்நிறுத்தம் கானல்நீரானது. அந்த ஆண்டு ஜூலை மாதம் ஜெருசலேம் பேருந்து மீது தற்கொலை குண்டுத் தாக்குதலில் 21 பேரைக் கொன்றது ஹமாஸ். இதற்கு இஸ்ரேலியப் படைகள் இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களைக் கொல்ல, மீண்டும் போர் ஆரம்பமானது.

இந்நிலையில், அதே 2003ம் ஆண்டு ஹமாஸ் தலைவர்கள் கூடியிருந்த காஸா கட்டடத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வெடிகுண்டை வீசியது. ஆனால், யாசின் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். 2004ல் அவருக்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை. வடக்கு காஸா பகுதியில் ஒரு மசூதியிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அவரின் கார் மீது இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் யாசின் கொல்லப்பட்டார்.

அத்துடன் ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கை முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கிருந்துதான் இன்னும் அதிவேகத்துடன் ஹமாஸ் படையினர் செயல்படத் தொடங்கினர். 1996ம் ஆண்டின் பாலஸ்தீனிய பொதுத் தேர்தலையும், 2005ல் நடந்த பாலஸ்தீனிய அதிபர் தேர்தலையும் புறக்கணித்த ஹமாஸ் அமைப்பினர் 2006ம் தேர்தலில் பங்கேற்றனர்.

யாசர் அராஃபத்தின் மறைவிற்குப் பிறகு நடந்த அந்தத் தேர்தலில் ஹமாஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹமாஸின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவரானார்.

இவர், 1997ம் ஆண்டு யாசின் சிறையிலிருந்து வந்தபிறகு அவரின் அலுவலகத் தலைவராக நியமிக்கப்பட்டவர். அப்போதிலிருந்து அவரின் முக்கியத்துவம் ஹமாஸில் ஓங்கி வளர்ந்து வந்தது. பாலஸ்தீனிய அதிகாரத்திற்கான குழுவின் பிரதிநிதியாகவும் இருந்து யாசின் மறைவிற்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இப்போது தேர்தல் மூலம் பாலஸ்தீனப் பிரதமரானார்.

இதன்பிறகு, 2007ல் ஹமாஸ் காஸா ஸ்ட்ரிப் பகுதியை வன்முறை மூலம் கைப்பற்றியது. இந்தப் பகுதி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய அதிகாரத்திடம் இருந்தது. அதாவது, யாசர் அராஃபத்தின் ஃபதா இயக்கத்தால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இதனால், ஹமாஸ் கையகப்படுத்துதலுக்கு பதிலளித்த இஸ்ரேல் காஸாவை முற்றுகையிட்டது. இதுமட்டுமல்ல. மக்கள் மற்றும் பொருட்களின் நடமாட்டத்தை எல்லைக்குள்ளும் வெளியே வருவதையும் கட்டுப்படுத்தியது. இந்த முற்றுகை காஸாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. 

கத்தார் மற்றும் துருக்கி போன்ற அரபு நாடுகளின் ஆதரவை ஹமாஸ்  பல ஆண்டுகளாகப் பெற்று வந்தது. சமீபத்தில், அது ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் நெருக்கமாக மாறியது. இதனுடன் சில பயங்கரவாதக் குழுக்களும் ஹமாஸிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்குவதை விட காஸாவை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் தலைவர்கள் லெபான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து குழுவை வழிநடத்துவதாகச் சொல்லப்படுகிறது. 2017ம் ஆண்டு ஹமாஸ், 1967 போருக்கு முந்தைய நிலையில் இருந்த இடைக்கால பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதை இஸ்ரேல் அரசு மறுத்தது.

இப்போதைய போர் உருவாகக் காரணம் இஸ்ரேலின் புதிய வலதுசாரி அரசாங்கம், பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுதான். இதனால், ஹமாஸ் தன் தாக்குதலை கடந்த அக்டோபர் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத நிலையில், அதாவது உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு என வர்ணிக்கப்படும் இஸ்ரேலின் மொசாட்டிற்கே தெரியாமல் தொடங்கியது.

அந்தளவுக்கு இப்போது இன்னும் பலம்வாய்ந்த அமைப்பாக ஹமாஸ் வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேலின் கணக்குப்படி ஹமாஸில் 40 ஆயிரம் போராளிகள் இருப்பதாகவும், இதில் 30 ஆயிரம் பேர்களிடம் துப்பாக்கிகளும்  ராக்கெட்டுகளும் இருப்பதாகவும், இதில் சில ராக்கெட்டுகள் 250 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளது. இதனாலேயே ஹமாஸை ஒழிக்காமல் ஓய்வதில்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

காஸா...

பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு இதுபோன்ற போர்கள் புதிதல்ல. 1917ல் முதல் உலகப் போர் முடிந்து ஓட்டோமான் பேரரசு வீழ்ந்ததிலிருந்தே அந்தப் பகுதி சண்டைப் பகுதியாகத்தான் இருந்து வருகிறது.  ஓட்டோமான் பேரரசு வீழ்ந்ததுக்குப் பிறகு பாலஸ்தீனம் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948ல் இஸ்ரேல் என்ற நாடு அங்கே உருவானது. இஸ்ரேலை ஒட்டியிருந்த காஸா பகுதி எகிப்து ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்குதான் பாலஸ்தீனியர்கள் குடியேறினர்.  

1967க்குப் பிறகு காஸா பகுதியிலிருந்து எகிப்து ராணுவம் விலகிக் கொள்ள அந்தப் பகுதி முழுமையாக பாலஸ்தீனியர்கள் கைகளுக்கு வந்தது.அந்தப் பகுதி அந்தப் பகுதி என்றதும் அதிகமாய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். 41 கிலோமீட்டர் நீளம், 8 கிலோமீட்டர் அகலம். இதுதான் இப்போது இஸ்ரேல் குண்டுகளால் பிளக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காஸா பகுதி. இங்குதான் 24 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பேராச்சி கண்ணன்