ஷங்கருக்கு கதை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!



எஸ்... எஸ்... எஸ்... தலைப்பில் நீங்கள் படித்தது சரிதான்!இயக்குநர் ஷங்கர் பொதுவாகவே ஒரு படத்தை இயக்கும் போது மற்றொரு படத்தை இயக்கமாட்டார்.
கமல் நடிப்பில் அவர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படம் பல காரணங்களால் இடையில் தடைப்பட்டது. இதனால் முதல் முறையாக நேரடி தெலுங்குப் படமொன்றை இயக்க ஹைதராபாத் பக்கம் பறந்தார் ஷங்கர். அந்தப் படம்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’.

ஆனால், கமலின் ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றி பெற்றதால், கிடப்பில் இருந்த ‘இந்தியன் 2’ படத்திற்கு மீண்டும் உயிர் வந்தது. இதனால் ஓரே நேரத்தில் இந்த இரண்டு படங்களையும் இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் ஷங்கர்.

‘இந்தியன் 2’ பட வேலைகளால், ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங் இழுத்துக்கொண்டே போனது. இப்போது ஒரு வழியாக தனது கவனத்தை ‘கேம் சேஞ்சர்’ படம் பக்கம் திருப்பியிருக்கிறார் ஷங்கர்.‘கேம் சேஞ்சர்’ படக்கதையின் கரு, ஷங்கருடையது அல்ல. உண்மையில் இப்படக்கதையானது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடையது.

‘‘நான் டைரக்ட் பண்ண, உங்ககிட்ட ஏதாவது ஒரு கதை இருக்கா என்று ஷங்கர் கேட்டபோது ஓர் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அப்பதான் ‘கேம் சேஞ்சர்’ கதையை ஷங்கரிடம் சொன்னேன். அவருக்கு கதையைக் கேட்டதும் பிடிச்சுப் போச்சு.அந்த கதைக்களத்துக்கு பெரிய பட்ஜெட் தேவை. 

பிரம்மாண்டமாக எடுத்தால்தான் நல்லா இருக்கும். அதனால அந்த கதையை ஷங்கர் மாதிரி ஒரு மிகப்பெரும் இயக்குநர் எடுத்தால்தான் அந்த கதைக்கு நியாயமானதாக இருக்கும். ‘கேம் சேஞ்சர்’ ஒரு ஷங்கர் படமாக இருக்கும்...’’ என்று உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஷங்கர் பக்காவான கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி. கமர்ஷியல் படங்கள் என்றாலும் அதில் சமூகக் கருத்தை பின்னிப்பிணைந்து எடுப்பதால், இந்தப்படமும் ஷங்கரின் பாணியில் வரும் ஒரு படமாக இருக்கும் என்பதால் ராம் சரண் சந்தோஷத்தில் இருக்கிறார்.

மிகப்பிரம்மாண்டமான இயக்குநராக இருந்தாலும், மற்றொரு இயக்குநரின் கதையை இயக்க ஷங்கர் முனைப்பு காட்டியது, திரைப்பட உலகிற்கு ஆரோக்கியமான ஒன்று. இதுபோல் எல்லா இயக்குநர்களும் முன்வந்தால், நல்ல திரைப்படங்களோடு வசூலும் களைகட்டும்
என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா