நேற்று சாராயம் காய்ச்சும் கிராமம்...இன்று கால்பந்து கிராமம்!



சில வருடங்களுக்கு முன்பு சாராயம் காய்ச்சும் கிராமமாக மட்டுமே அறியப்பட்டது, பிச்சார்பூர்.  கோண்ட் மற்றும் பைகா பழங்குடிகள் வசிக்கும் கிராமம் இது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சடோல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். உண்மையைச் சொன்னால் பிச்சார்பூரின் வாழ்வாதாரமே சாராயத்தை நம்பித்தான் இருந்தது. இங்கே உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சாராயம் காய்ச்சுவதைக் குடும்பத்தொழில் போல பல தலைமுறைகளாக செய்து வந்தனர்.

சாராயம் காய்ச்சுவது தவறு; சட்டவிரோதமானது என்று அந்த மக்களுக்குத் தெரியாது. நீண்ட காலமாக ஒரு கலாசாரம் போல பிச்சார்பூர் மக்களுடன் சாராயமும் கலந்திருந்தது. குழந்தைகள் கூட இந்தத் தொழிலில் ஈடுபட்டனர். பிச்சார்பூரில் வசித்து வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே தேநீர் போல சாராயத்தைப் பருகினர். அதை மருந்து என்றே கருதினர். மட்டுமல்ல, பிச்சார்பூரில் தயாரிக்கப்படும் சாராயத்துக்கு சுற்றியிருந்த கிராமங்களில் செம மவுசு.

ஆனால், இன்று மத்தியப்பிரதேசத்தின் ‘மினி பிரேசில்’ என்று அழைக்கப்படுகிறது பிச்சார்பூர். இங்கிருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு கால்பந்து வீரர் உருவாகிவிட்டார். இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் கால்பந்து விளையாடும் 45 வீரர்களை உருவாக்கியிருக்கிறது பிச்சார்பூர். 
சான்யா குண்டே, ரஜ்னி சிங், லக்‌ஷ்மி சாஹிஸ், அணில் சிங் கோண்ட், ஹனுமான் சிங் ஆகியவர்கள் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கே பிறக்கும் குழந்தை கால்களுடன் கால்பந்தைக் கட்டிக்கொண்டு பிறக்கிறதா என்று ஆச்சர்யமாக கேட்கும் அளவுக்கு பிச்சார்பூர் பிரபலமடைய காரணமானவர் ரயீஸ் அகமது.

யார் இந்த ரயீஸ் அகமது?

சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாடி வருகிறார் ரயீஸ். பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடியவர் இவர். 1995ம் வருடம் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, சடோல் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் ரயீஸ். 
விளையாட்டுகளைக் குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்காக, 1997ம் வருடம் கொல்கத்தாவில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் சேர்ந்தார். இங்கே பயிற்சி பெறுவதற்காக, தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டார் ரயீஸ்.

‘‘ஒரு விளையாட்டு வீரராக இருப்பதும், பயிற்சியாளராக இருப்பதும் வெவ்வேறானது. தேசிய அளவில் கால்பந்து விளையாட ஆரம்பத்ததிலிருந்து, விளையாட்டில் நான் ஒரு நிபுணன் என்று நினைத்திருந்தேன். நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்த பிறகுதான் நான் நினைத்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தேன். விளையாட்டைக் குறித்து குறைந்த அளவே தெரிந்து வைத்திருக்கிறேன் என்பதை அங்கே போன பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

நான் முன்பு நினைத்திருந்ததைப் போல நிபுணனாக இருந்திருந்தால் இந்நேரம் சர்வதேச போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பேன்...’’ என்கிற ரயீஸின் பயிற்சி 1999ல் முடிந்தது. மீண்டும்  பழைய வேலைக்கே திரும்பினார்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அதாவது 2001ல் பிச்சார்பூருக்கு சென்றிருந்தார் ரயீஸ். அவர் வேலை செய்து வந்த பள்ளியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது பிச்சார்பூர்.

‘‘நிறைய குழந்தைகள் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு அத்லெட்டுக்கு உண்டான ஃபிட்னஸுடன் அவர்கள் இருந்தார்கள். ஆனால், விளையாட்டைக் குறித்த நுட்பமோ, பயிற்சியோ அவர்களிடம் இல்லை. பந்தை மற்றவர்களுக்கு எப்படி பாஸ் பண்ணுவது என்பது  கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு அடி அடித்தால் கோலில் போய்  விழ வேண்டும், எல்லோருமே கோல் போட வேண்டும் என்ற நோக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். வெளி உலகைப் பற்றி அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியவில்லை. இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது...’’ என்கிற ரயீஸ், தினமும் வேலை முடிந்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பிச்சார்பூருக்கு வந்துவிடுவார். முதலில் 8 வயது முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்குப் பயிற்சியை ஆரம்பித்தார். ஆனால், கால்பந்து விளையாடுவதற்குத் தேவையான மைதானம் இல்லை. தவிர, அந்தக் குழந்தைகளிடம் காலணி, ஜெர்ஸி என்று எந்த விளையாட்டு உபகரணங்களும் இல்லை.

தன்னுடைய சம்பளத்தில் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான காலணிகளையும், ஜெர்ஸிகளையும் வாங்கித் தந்து பயிற்சியை ஆரம்பித்தார் ரயீஸ். அத்துடன் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு மைதானத்தையும் தயார் செய்தார்.ரயீஸின் தன்னலமற்ற செயலுக்குக் குழந்தைகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் பெரியவர்களுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சும் வேலையில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலணி, ஜெர்ஸி வாங்கித்தந்து, கால்பந்து பயிற்சி அளித்ததுடன் அந்தக் குழந்தைகளை சாராயம் காய்ச்சும் தொழிலிலிருந்து மீட்டு, வேறு வேலைக்குச் செல்வதற்கான உதவிகளையும் செய்திருக்கிறார் ரயீஸ்.தினமும் ரயீஸின் பயிற்சி தொடர்ந்தது. 2003ம் வருடத்தில் பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பிச்சார்பூர் சிறுவர்களும் பங்கு பெற ஆரம்பித்தனர்.

2004லிருந்து பிச்சார்பூரின் பெண் குழந்தைகளும் கால்பந்து விளையாடத் தொடங்கினர். குறைந்தபட்சம் 1,500 குழந்தைகளுக்கு ரயீஸ் பயிற்சி அளித்திருப்பார். இதில் 45 பேர் மாநில மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனர்.ரயீஸின் மாணவிகளில் ஒருவரான லக்‌ஷ்மி சாஹிஸ் 12 வயதிலிருந்து கால்பந்து விளையாடி வருகிறார். அவர் சிறுமியாக இருந்தபோது பள்ளி முடிந்ததும் தனது சகோதரர்களை அழைத்துக்கொண்டு கால்பந்து மைதானத்துக்கு விளையாட வந்து விடுவார்.

“ஆரம்பத்தில் ஜாலிக்காக ஃபுட்பால் விளையாடத் தொடங்கினேன். ரயீஸ் சார்தான் பெண்களுக்காக நடக்கும் கால்பந்து போட்டிகளைப் பத்தி சொன்னார். 2007ல் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டேன்...” என்கிற லக்‌ஷ்மிக்கு வயது 27. தேசிய அளவிலான ஒன்பது போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இப்போது பிச்சார்பூர் மற்றும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 40 குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சியளித்து வருகிறார். லக்‌ஷ்மியிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தட்டியிருக்கின்றனர்.

லக்‌ஷ்மியைப் போல ரயீஸிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் இன்று கால்பந்து விளையாட்டில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
பிச்சார்பூரில் உருவான கால்பந்து வீரர்கள், சடோல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 1,200 கால்பந்து கிளப்புகளை உருவாக்கியிருக்கின்றனர். சடோல் மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக ரயீஸின் பயிற்சி  இன்றும் தொடர்கிறது. சாராயம் கிடைக்கும் மையமாகத் திகழ்ந்த பிச்சார்பூரை, கால்பந்து என்றாலே நினைவுக்கு வரும் பிரேசிலுக்கு நிகராக அடையாளம் காண ஆரம்பித்துவிட்டனர்.

த.சக்திவேல்