அதிகரிக்கும் டெங்கு என்ன செய்யவேண்டும்?



கடந்த செப்டம்பர் மாதம்தான் தமிழ்நாட்டில் டெங்கு பற்றிய ஒரு பீதி கிளம்பியது. ஆனால், மாதந்தோறும் தீபாவளி மாதிரி ஆண்டின் முதல் மாதமான ஜனவரி முதலே டெங்குவின் வீர விளையாட்டு ஆரம்பித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. உதாரணமாக ஜனவரி - 866, ஃபெப்ரவரி - 641, மார்ச் - 512, ஏப்ரல் - 302, மே - 271, ஜூன் - 364, ஜூலை - 353, ஆகஸ்ட் - 535, செப்டம்பரில் முதல் இருவாரங்களில் 204.

இந்த புள்ளிவிவரத்தைப் பார்த்தால் ஜனவரி முதல் மார்ச் வரை ஒரு ஏறுமுகமும்; ஜூலை வரை இறங்குமுகமும் பின்னர் ஆகஸ்டு முதல் மறுபடியும் ஏறுமுகமாகவும் டெங்கு நோயாளிகள் இருந்ததைப் பார்க்கலாம். 
இப்படி விட்டு விட்டு டெங்குவின் தாக்குதலுக்கான காரணம் விட்டுவிட்டு மழை பெய்த தட்பவெப்ப நிலைதான் என்று சில ஆய்வாளர்கள் விளக்கம் சொன்னாலும் செப்டம்பரில் எகிறிய டெங்குவை ஆராய்ச்சி செய்ய தமிழக அரசும் சில முயற்சிகளில் இறங்கியது. இதன் ஒருபகுதியாக கடந்தவாரம் தமிழக அரசு, பூச்சியியல் நிபுணர்களின் ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

பொதுவாக ஒரு டெங்கு கொசு பறக்கும் நிலையில் 14 நாட்களே உயிர்வாழும். அப்படியிருக்க செப்டம்பர் மாத தாக்குதலுக்குக் காரணம் கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்ததா... அந்த வாழ்நாள் அதிகரிப்புக்குக் காரணம் டெங்கு கொசு மேலும் தீவிரமான ஒரு பூச்சியாக மாறியதா... என்பதைக் குறித்து அறியத்தான். 
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் பாதி வரை தமிழகத்தில் டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4148 என்று அரசு சொன்னாலும் இதையும்விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சில இந்திய அளவிலான ஆய்வுகள் சொல்கின்றன.

உதாணமாக, 2014ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு ஒன்று இந்தியாவில் டெங்கு நோயாளிகளின் கண்டுபிடிப்பு வெறும் 0.35 என்று சொல்கிறது. அதேபோல 2016ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு அந்த ஆண்டில் மட்டுமே அரசு எண்ணிக்கையை தாண்டி சுமார் 1 லட்சத்தி 30 ஆயிரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டதாக சொல்கிறது வேறொரு அரசு சார் நிறுவனம் ஒன்று.

பொதுவாக டெங்கு என்றாலே 4ல் ஒருவருக்குத்தான் நோய் அறிகுறிகள் இருக்கும். இந்தப் பிரச்னைதான் நோயாளிகளை மருத்துவமனைகளை நாடாமல் சுய மருத்துவம் பார்க்க வைக்கிறது.

சுய மருத்துவத்தின் ஆபத்தை உணர்ந்துதான் மாநிலங்கள் ஒவ்வொன்றும் பல சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி நோய்களை கண்டுபிடிப்பதற்கான கிளினிக்குகளை இயக்குகின்றன.
அப்படியிருந்தும் அறிகுறிகள் தெரியாததால்தான் அரசு வெளியிடும் டெங்கு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

பொதுவாக டெங்கு பரவலுக்குக் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கம், பொதுப்போக்குவரத்தின் அதிகரிப்பு, பொது சுகாதார சீர்கேடு... எனச் சொல்லப்பட்டாலும் தனிப்பட்ட ஒருவரின் உடல் நிலையும், வாழிடங்களும் கூட இந்தப் பிரச்னையை பூதாகரமாக்கிவிடும். உதாரணமாக, விட்டுவிட்டு மழை பெய்தால் டெங்கு கொசு துள்ளித் திரியும். இந்தக் காரணத்துக்காகத்தான் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பது அரசின் கடமை எனச் சொல்கிறோம்.

அதேபோல தனிப்பட்ட மனிதர்களான நமக்கும் கடமை இருக்கிறது. நம் வீட்டில் நாம் நன்னீர் தேங்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும். இதேபோல் வேறு என்னென்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவின் முன்னாள் தலைமை மருத்துவரான ஜேக்கப் ஜான்.

‘‘டெங்கு பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேருக்கு 3 நாளில் இருந்து 7 நாள் வரை காய்ச்சல் வந்து அதுவாகவே விலகி குணமாகிவிடும். ஆனால், சுமார் 1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரையான நபர்களுக்கு தீவிரமான டெங்கு ஏற்படும். அதுவும் சில வருடங்களில்தான் இந்த 5 சதவீத்தினருக்கு தீவிர டெங்கு வருகிறது...’’ என ஆறுதலான வார்த்தை சொல்லும் ஜேக்கப், டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்களைப் பற்றிப் பேசினார்.

‘‘கொசுக்களால்தான் மலேரியா, சிக்குன் குனியா, ஜப்பான் என்செஃபாலிட்டிஸ் (encephalitis) போன்ற நோய்கள் ஏற்படுகிறது. கொசுவில் இருக்கும் ஒரு விதமான வைரஸ்களால்தான் நோய்களிலும் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் டெங்குவை ஏற்படுத்தும் கொசுவை ஏடஸ் எகிப்டி ( aedes aegypti) என்றும், அதில் உள்ள வேறுபாடான வைரஸை ஃபிளேவிவைரஸ் (flavivirus) என்றும் அழைக்கிறார்கள்.

டெங்கு வைரசும் 4 டைப்புகளில் இருக்கிறது. இதை denv 1, denv 2, denv 3, denv 4 என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த டைப்புகளை செரோடைப் (serotype) என்கிறார்கள்...” என்று அறிமுகம் கொடுக்கும் ஜேக்கப்பிடம் டெங்கு கொசு எந்த நிலையில் அதிகமாகப் பரவுகிறது என்று கேட்டோம்.‘‘பரவலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

பொதுவாக இரண்டு வகையாக சொல்லலாம். முதலாவதாக சுற்றுச்சூழல். இரண்டாவதாக நம் உடல் நிலை. சுற்றுச்சூழலைப் பொருத்தளவில் விட்டுவிட்டு மழை பெய்வது டெங்கு கொசுவின் பெருக்கத்துக்கு தோதான சூழ்நிலையாக இருக்கும். பலபேர் நம்புவது போல அது ஏரிகள், குட்டைகள் மற்றும் குளம் குப்பைகளால் எல்லாம் அதிகரிப்பதில்லை.

மிருகங்களை வீட்டு மிருகம் என்று சொல்வதுபோல டெங்கு கொசு ஒரு வீட்டுப் பூச்சி. வீடுகளிலும் வீட்டைச் சுற்றிய பகுதிகளிலும்தான் மழை பெய்ததும் தண்ணீர் தேங்கும். அதுவும் அந்த தண்ணீர்தான் அழுக்குப் படியாத தண்ணீராக, நன்னீராக (fresh water) இருக்கும். நன்னீராக இருந்தால் மட்டுமே இந்த டெங்கு கொசு முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும்.

ஒரு டெங்கு கொசு முட்டை போட்டு குஞ்சாக பறக்கும் நிலைக்கு வருவதற்கு 4லிருந்து 7 நாள் பிடிக்கும். 4லிருந்து 7 நாளைக்குள் பெய்த மழை நன்னீராக இருக்கும் என்றால் மட்டுமே டெங்கு கொசு ஓர் இடத்தில் முட்டை போடும், குஞ்சு பொரிக்கும்.

ஒருநாள் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்தால் நல்ல தண்ணீர் கிடைக்காது. ஆகவே ஒருவாரத்துக்குள் முட்டையைக் காப்பாற்றப் போராடும் டெங்கு கொசுவுக்கு நம் வீடுகளும் வீட்டைச் சுற்றிய பகுதிகளுமே பாதுகாப்பானது. 

எனவே வாரத்துக்கு ஒருநாளாவது நம் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் அல்லது தேங்கியிருக்கும் நீர் பாத்திரங்களை காலி செய்வது அல்லது மூடிவைப்பது போன்ற செயல்களை மேற்கொண்டால் இந்த கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியும்...’’ என்ற ஜேக்கப், டெங்கு கொசுவால் பாதிக்கப்படுபவர்களின் நோய் அறிகுறிகள் பற்றியும் அது தீவிரமாவதைத் தடுக்கும் முறை பற்றியும் விளக்கினார்.

‘‘சாதாரண ஃப்ளூ காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் பொதுவான சில அறிகுறிகள் இருக்கின்றன. இரண்டிலுமே காய்ச்சல், உடம்பு வலி இருக்கும். ஆனால், டெங்குவில் இதையும் தாண்டி கண்வலி, நமைச்சல் போன்றவை இருக்கும். அத்தோடு பெரிய வித்தியாசம்- ஃப்ளூ காய்ச்சலில் மூக்குச் சளி, தொண்டை வலி எல்லாம் இருக்கும். டெங்குவில் இவை இருக்காது.

பொதுவாக டெங்கு வந்தவர்களுக்கு 3 நாள் முதல் 7 நாளில் காய்ச்சல் வந்து அதுவாக 95 சதவீதத்தினருக்கு சரியாகிவிடும் என்று சொன்னேன் அல்லவா... இந்த 3 நாள் மற்றும் 7 நாளுக்குப் பிறகு காய்ச்சல் விட்டதும்தான் டெங்குவின் மற்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் டெங்கு வந்தவர்கள் காய்ச்சல் மறைந்ததும் மருத்துவர்களை நாடத் தேவையில்லை எனும் மனநிலைக்கு வருகிறார்கள். காய்ச்சல் விட்டதும் அடுத்த சில நாட்களில் ஓய்வு எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த ஓய்வு நாட்களில்தான் மயக்கம், சோம்பல் எல்லாம் உடல் வலியால் ஏற்பட்டு டெங்குவை ஒரு தீவிர நோயாக மாற்றிவிடும் அவலம் நிகழும். ஆகவே, காய்ச்சல் ஆரம்பித்ததுமே மருத்துவரை நாடி அது சாதாரண காய்ச்சலா அல்லது டெங்கு காய்ச்சலா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது...’’ என்ற ஜேக்கப், 4 வகையான டெங்கு வைரஸ் பற்றியும் விளக்கினார்.

‘‘ஒருவருக்கு ஒரு டைப் வந்து அதை எதிர்க்க நம் உடலில் அந்த டைப்புக்கான எதிர்ப்பு சக்தி இருந்தால் பிரச்னை வராது. ஆனால், டைப் ஒன்று வைரஸ் தாக்கி டைப் 2 எதிர்ப்பு சக்தி இருந்தால் நோய் தீவிரமாகலாம். அதுவும் ஒன்றிலிருந்து 5 சதவீத மக்களுக்குத்தான் அது ஏற்படும்.

இதனால்தான் யாரை டெங்கு தாக்கும், யாருக்கு தீவிரமாகும் என்று யாராலும் கணிக்கமுடியாது. இதனால்தான் இந்த டெங்குவுக்கான தடுப்பூசி (வாக்சினேசன்) மருந்துகளுக்கும் பெரிய வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. 

ஆனாலும் ஜப்பானும் அமெரிக்காவும் இதில் சில வெற்றிகரமான முயற்சிகளில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. மொத்தத்தில் நம் சுற்றுச்சூழலையும், நம் உடலையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் இந்த கொசுத் தொல்லையிலிருந்து நாம் இலகுவாகத் தப்பித்துவிடலாம்.

கொரோனோ வைரஸ் முதன்முறையாக உருவானதால்தான் அது உருமாறி உருமாறி வந்துகொண்டிருந்தது. ஆனால், டெங்கு கொசு பல காலமாக உலகத்தில் இருக்கிறது. ஆகவே டெங்கு கொசு உருமாறியிருக்கிறது; அதனால் அது தீவிரமாக பாதிக்கிறதா என்று கேட்பது எல்லாம் தேவையற்றது. சூழல் மற்றும் உடல் பாதுகாப்பே இதை விரட்டுவதற்கான சரியான வழி...’’ என்று முடித்தார் ஜேக்கப்.

டி.ரஞ்சித்